யார் அஞ்சா நெஞ்சன்? ஜெ. ஆவேசம்
மதுரை, அக்.18: மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, "அஞ்சா நெஞ்சன்' என்ற பட்டம் யார் கொடுத்தது? 2006-ம் ஆண்டில் எங்கே இருந்தார் என்று தெரியாமல் இருந்த அவரா அஞ்சா நெஞ்சர் என்று ஜெயலலிதா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேசியது: மதுரை என்றால் அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன், சித்திரைத் திருவிழா, சமத்துவத்தைப் போதிக்கும் கோரிப்பாளையம் பள்ளிவாசல், திருமலை நாயக்கர் மகால், அறிவை வளர்க்கும் அமெரிக்கன் கல்லூரி போன்றவைதான் நினைவுக்கு வரும். கோயில் நகருக்கு யாத்ரீகர்கள் வருகை அதிகரித்ததால் மதுரை தூங்கா நகர் என பெயர்பெற்றது. ஆனால், தற்போது இவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ரௌடிகள் ஆதிக்கம், கட்டப் பஞ்சாயத்து, கொள்ளை போன்றவைதான் நினைவுக்கு வருகின்றன. இட்லிக் கடையிலிருந்து நகைக்கடை உரிமையாளர்கள் வரை மு.க. அழகிரிக்கு கப்பம் கட்டினால்தான் இங்கு தொழில் நடத்த முடியும்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பலமுறை ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை முன்னின்று கவனிப்பவர் அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ் என்பவர்.
கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர் என ஒரு அரசும், அழகிரியை தலைமையாகக் கொண்ட மற்றொரு அரசும் தமிழகத்தில் நடைபெறுகின்றன. தென் பகுதியில் ஸ்டாலின் வரவேண்டுமென்றால்கூட அழகிரியிடம் விசா பெற்ற பின்னரே வரவேண்டும் என்ற சூழ்நிலை. மதுரையில் குடிநீர்ப் பிரச்னைக்காக போராடியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் லீலாவதி 1997 ஏப்ரல் மாதம் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலின்போது அவர்களில் ஒருவர் தவிர (இறந்துவிட்டதால்) மற்றவர்கள் பரோலில் வெளிவந்து வன்முறையில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் 2003-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது மனைவி பத்மாவதி அளித்த பேட்டியில் மு.க. அழகிரிதான் அவருக்கு ஒரே எதிரி எனக் குறிப்பிட்டார். இதையடுத்து எனது ஆட்சியில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்கில் சாட்சிகள் மிரட்டப்பட்டு, பிறழ் சாட்சியானதால் குற்றவாளிகள் விடுதலையானார்கள். இக்கொலையில் தொடர்புடையவர்கள் தற்போது துணை மேயர், தி.மு.க செயற்குழு உறுப்பினர், ஆணையூர் நகராட்சித் தலைவர், மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர், நகர்ச் செயலர், திமுக பகுதி கழகச் செயலர்கள், உறுப்பினர்கள் போன்ற முக்கியப் பதவிகளில் உள்ளனர்.மதுரை என்ன அஞ்சா நெஞ்சன் கோட்டையா? மதுரை அவர் அப்பா வீட்டு சொத்தா? அஞ்சா நெஞ்சர் என்பது அவருக்கு யார் கொடுத்த பட்டம்?
எங்களைப் பார்த்தா மிரட்டுகிறார். நான் பயந்தவள் அல்ல. என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க எவ்வளவோ வழக்குகள் போட்டு கருணாநிதி சதித் திட்டம் தீட்டினார். இதற்கெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. பல மிரட்டல்களுக்குப் பின்னரும் இந்த பிரமாண்டக் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.இதைவைத்தே யார் அஞ்சுகிறார், யார் அஞ்சவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்வர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அஞ்சாத சிங்கங்கள் நாங்கள்.மரணம் என்பது ஒருமுறைதான் வரும். அது உங்கள் முன்னிலையில் ஏற்பட்டால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்.
ஹார்லிக்ஸ் திருட்டு:
முதல்வர் பிறந்த நாளுக்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜூலை 18-ல் நடைபெற்ற விழாவில் ஹார்லிக்ஸ் வழங்கினார் மு.க. அழகிரி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறந்தநாள் விழாவின்போது மருத்துவ முகாம், ரத்ததான முகாம், அன்னதானம் போன்றவை செய்யப்படும் என்றுதான் நான் கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால், விழா நடைபெறுவதற்கு முன் ஜூலை 12-ம் தேதி 8,700 ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் காணவில்லை என்ற புகாரை போலீஸôர் வழக்குப் பதிவு செய்ய முன்வரவில்லை. எனவே, ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட ஹார்லிக்ஸ் திருடப்பட்டதுதான் என புகார் எழுப்பப்பட்டது. அது திருடப்பட்டது அல்ல. அதற்கான ரசீது உள்ளது என அழகிரி பதில் அளித்தார். ஆனால் அந்த பில் பாலாஜி காட்டன் கம்பெனியில் வாங்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. யாராவது ஹார்லிக்ஸ் பெட்டிகளுக்கு காட்டன் கம்பெனியில் பில் வாங்குவார்களா? அழகிரியிடம் இங்கு யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் தில்லியில் கேள்விக்குப் பயந்து அவர் ஓடி ஒளிகிறார். அவரது கன்னிப் பேச்சே ஒருசில துளிகளில்தான் இருந்தது. மக்களவைக் கூட்டம் நடக்கும்போது தகவல் இல்லாமல் மாலத்தீவு சென்றுவிட்டார். அங்கு ரிசார்ட் ஒன்று அமைக்கிறார் என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.2009-ல் இந்தோனேஷியா சென்றார். அங்குள்ள தொழிலதிபர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க மு.க. அழகிரி அழைப்பு விடுத்ததின்பேரில் ஒரு நிறுவனம் சார்பில் 2,200 கோடி மதிப்பில் தொழில் துவங்குவதற்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் தெரிவிக்கப்பட்டது.இந்தோனேஷியாவில் வங்கிக் கடன் பெற்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் 2008-ம் ஆண்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அந்த நபரின் கம்பெனி பணத்தில்தான் தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போக போகத் தான் இப்பிரச்னை குறித்து தெரியவரும் என்றார் ஜெயலலிதா. கருணாநிதியின் நீதி!கருணாநிதி போன்ற ஒரு நீதிமானை பார்க்கமுடியாது.2009-ல் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, குண்டு வீசி எரிக்கப்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரக் காட்சிகள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன.பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு வந்த கலாநிதி மாறன், இச்செயலுக்கு அழகிரிதான் காரணம். நீதி கிடைக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.மே 10-ம் தேதி சட்டபேரவையில், இதுதொடர்பான சர்வே வெளியிடப்போவதாக தகவல் தெரிந்ததும், அதை வெளியிட வேண்டாம் என நான் தொலைபேசியில் தெரிவித்தேன் என கருணாநிதியும் பேசினார்.சிபிஐ -க்கு வழக்கு மாற்றப்பட்டு அட்டாக் பாண்டி என்பவர் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 86 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன. ஆனால், கருணாநிதி குடும்பத்தில் சண்டையிட்டோர் சமாதானம் செய்துகொண்டதையடுத்து இந்த வழக்கில் கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறினர். இதனால், வழக்கை சி.பி.ஐ.யால் நிரூபிக்க முடியாததால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இச்சம்பவத்தில் ஊழியர்கள் 3 பேரும் தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்களா?
அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்?
அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்?
தா. கிருட்டிணன் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவரை கொலை செய்தவர்கள் யார்? அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தித் தற்கொலை செய்துகொண்டாரா? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை.தா. கிருட்டிணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றால் அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்?
Comments
Post a Comment