Wednesday, October 27, 2010

புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து இந்தியாவின் ‘ஒப்பரேசன் பூமாலை 2′

Source:http://www.tamilkathir.com/news/4009/58/2/d,full_article.aspx

கடந்த வருடம் மே 18 முதல் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் சிக்கலில் இருந்து இந்தியா தன்னைத்தானே விடுவித்துக்கொள்ளும் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகிய இருவரது பெயர்களையும் நீக்குவதாக தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற அறிவிப்புடன் சிங்கள தேசம் வெளியிட்ட காட்சிப் பதிவுகளின் உண்மைத் தன்மை குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. உலகின் பல திசைகளிலும் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினர் இந்தக் காட்சிப்படுத்தல் சிங்கள அரச படைகளால் திட்டமிட்டு தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உளவியல் யுத்தம் மட்டுமே. இதில் நம்புவதற்கு எதுவுமேயில்லை என்று நிராகரித்தார்கள்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சிப் பதிவுகள் போலியானது. தேசியத் தலைவர் அவாகள் பாதுகாப்பாக உள்ளார் என்று அறிவித்த கே.பி., ஒரு வார காலத்தில் தடம் புரண்டு ‘தேசியத் தலைவர் அவாகள் வீர மரணம் அடைந்துவிட்டார்’ என்ற அறிவித்தலோடு தன்னைத்தானே விடுதலைப் புலிகளின் தலைவர் எனவும் பிரகடனப்படுத்திக்கொண்டர்.

கே.பி. மீதான புலம்பெயர் தமிழர்களின் கோபம் இந்தச் செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்த ஜி.ரிவி. தொலைக்காட்சி மீது திரும்பியது. நிலமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட ஜி.ரிவி. அந்தச் செய்தியை ஒளிபரப்பச் செய்ததற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

தேசியத் தலைவர் குறித்த இந்த அறிவிப்பு கே.பி. மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக் குறியாக்கியது. இதன் மோசமான விழைவு காரணமாகவே, கே.பி. மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற செய்தி புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் எந்தவொரு எதிர்வினைவையும் ஏற்படுத்தவில்லை.

ஆனாலும், புலம்பெயர் தேசங்கள் எங்கும் உள்ள கே.பி. குழுவினர் தொடர்ந்தும் தேசியத் தலைவரது இருப்புக் குறித்து அவ்வப்போது எதிர்வு கூறி வந்தாலும் அதனைப் புலம்பெயர் தமிழர்கள் இன்றுவரை நிராகரித்தே வந்துள்ளார்கள். ஆனாலும், நாடு கடந்த தமிழீழ அரசின் கே.பி. சார்பு உறுப்பினர்கள் அனைவரும் அவர்களால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.ருத்திரகுமாரன் அவர்கள் மூலமாக தேசியத் தலைவர் அவர்களது இருப்புக்கு ஒரு முடிவு கட்டும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்களின் மனவிருப்புக்கு எதிராகத் தான் எடுக்கும் எந்த நகர்வும் தனது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை திரு. ருத்திரகுமாரனும் நன்கு அறிவார். இதனால்தான், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தமிழக சஞ்சிகையான ஜுனியர் விகடன் செய்தியாளர் தேசியத் தலைவர் அவர்களது இருப்புக் குறித்துக் கேட்ட கேள்விக்கு ஆணித்தரமான பதில் எதுவும் சொல்லாமல் ‘காலம் பதில் சொல்லும்’ என்று நழுவியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வு நாள் நெருங்கிவரும் நிலையில், ‘இதுவரை சிங்கள அரசு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவாகளது மரணச் சான்றிதழை வழங்கவில்லை’ என்ற காரணத்தோடு அந்த விவாதத்திலிருந்து ஒதுங்கியிருந்த இந்தியா திடீரென ‘இலங்கைப் போரில் பிரபாகரன், பொட்டம்மான் இருவரும் கொல்லப்பட்டதால் அவர்களது பெயர்களை ராஜீவ் வழக்கிலிருந்து நீக்குவதாக’ சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1991 மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சிறீ பெரும்புதூர் வந்த ராஜிவ்காந்தி மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக பொட்டு அம்மான் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. கடந்த வருட இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் அந்த இருவரும் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசு தெரிவித்திருந்த போதும் இந்தியா இந்த வழக்கிலிருந்து அந்த இருவரது பெயரையும் நீக்கவில்லை.

கடந்த ஒன்றரை வருட காலமாக சிங்கள தேசத்தின் அறிவித்தனை உதாசீனம் செய்து வந்த இந்தியா தற்போது ராஜீவ் காந்தி படுகொலையின் முதலாவது குற்றவாளியான விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களும், இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மான் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் சிவசங்கரன் ஆகிய இருவரது பெயர்களையும் அந்த வழக்கிலிருந்து நீக்குவதாக சென்னை தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு கெடுதலையும், அழிவையும் தவிர வேறு எதையுமே இதுவரை செய்திராத இந்தியா தற்போது தேசியத் தலைவர் அவர்களது இருப்புக் குறித்த செய்தியை வெளியிட்டிருப்பதன் பின்னணியிலும் ஏதோ ஒரு நோக்கம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியா தனது நோக்கங்களுக்காக பாதுகாப்பாக வளர்த்துவரும் முன்னாள் வட-கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாளை புலம்பெயர் தமிழர்களின் நாடி பிடித்து அறிய ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. வழக்கம் போலவே பிரான்ஸ் – சார்சல் நகரில் சில பத்துப் பேர்களுடன் இவரும் இரகசிய ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளை அழித்து விடுவதன் மூலம் தனக்கு ஆதரவான தளம் ஒன்றை ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த இந்தியாவுக்கு இன்றுவரை அது கைகூடுவதாகத் தெரியவில்லை. தங்கள்மீது சிங்கள அரசு நடாத்திய பேரழிவுகளுக்கும், பெரும் அவலங்களுக்கும் பின்னணியில் இந்தியாவே உள்ளது என்று நம்பும் ஈழத் தமிழர்கள் இந்தியா மீது கொண்டுள்ள அதிருப்திகள் இன்றுவரை தொடர்கின்றது.

சீனாவின் பக்கம் வேகமாகச் சாய்ந்துவரும் சிறிலங்காவைத் தடுத்து நிறுத்த இந்தியா இன்றும் நம்பும் ஒரே துருப்புச் சீட்டாக ஈழத் தமிழர்களே உள்ளார்கள். அவர்களை முற்றாகத் தவிர்த்து விட்டு சிறிலங்காவை வழிக்குக் கொண்டு வருவது முடியாத காரியம் என்பதை இந்தியா உணர்ந்தே உள்ளது. யுத்தம் முடிந்த பின்னர், ஏதோ ஒரு அரைகுறைத் தீர்வைப் பெற்றுக்கொடுத்து ஈழத் தமிழர்களைத் தன்வசப் படுத்தும் இந்திய முயற்சிக்கு சிறிலங்கா இடம் கொடுப்பதாக இல்லை.

சிங்கள தேசம் தான் பெற்ற யுத்த வெற்றியின் மூலம் தனது நீண்டநாள் கனவான பௌத்த சிங்கள சிறிலங்கா என்ற இலக்கை நோக்கி வேகமாகப் பயணித்து வருகின்றது. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் தமிழர் பிரதேசங்கள் இராணுவக் குடியிருப்புக்களாலும், சிங்களக் குடியேற்றங்களாலும் நிறைக்கப்பட்டு வருகின்றது. இதனையும் இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியாது உள்ளது.

எனவே, சிங்கள தேசத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் சித்து வேலைகளுக்கு விடுதலைப் புலிகளோ, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களோ இணங்கி வரமாட்டார்கள் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே புரியும். தளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக நகர்வுகளை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு புலத்துத் தமிழர்களின் பலம் அசைக்க முடியாததாகவே உள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது இருப்புக் குறித்த புலம்பெயர் தமிழர்களது நம்பிக்கை, மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் இந்தியாவின் புதிய நகர்வுக்கும் தடைக் கல்லாக உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஊடான இந்திய நகர்வுக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது இருப்பு குறித்த புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையே ஆப்பு வைத்துள்ளது.

இதனால், மாவீரர் தினத்திற்கு முன்னதாக, விடுதலைப் புலிகளின் தலைவரது இருப்புக் குறித்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உளவியல் யுத்தம் ஒன்றை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது. இந்தியா போட்ட இந்தக் கோட்டின்மேல் ரோட்டுப் போடும் வேலைகளை கே.பி. குழுவினர் தொடர்வார்கள் என்பதே இந்தியக் கணிப்பாகும். அதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள விடுதலைப் புலிகள் பற்றிய நம்பிக்கையைத் தகர்த்து, தனக்கு ஆதரவான தளத்தினை நிர்மாணிப்பதே இந்திய விருப்பமாக உள்ளது.

ஆனால், விடுதலைப் புலிகளின் தியாகமும், தேசியத் தலைவர் குறித்த தமிழீழ மக்களின் நம்பிக்கையும் தகர்க்க முடியாததொரு சக்தியை ஈழத் தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளைத் தாண்டிச் சிந்திக்க முடியதவர்களாகவே உள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் பெயரை உச்சரிக்காமலும், தேசியக் கொடியை உயர்த்தாமலும் எந்த நகர்வையும் யாருமே மேற்கொள்ள முடியாது என்பதை நாடு கடந்த தமிழீழ அரசின் இரு அமர்வுகளும்கூடப் பதிவு செய்துள்ளது. இதுதான் யதார்த்தம். இதை இந்தியாவும் புரிந்து கொண்டே அடுத்த நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

- அகத்தியன்.

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...