மனநலம் பாதித்த குழந்தைகளுடன் பரிதவிக்கும் இலங்கை பெண் அகதி
Source:http://www.dinamani.com
கும்மிடிப்பூண்டி, அக். 4: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது 2 பிள்ளைகளுடன் போராடி வருகிறார் இலங்கை பெண்மணி தவமணிதேவி (60).
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன் பிரகாஷ் (25), மனநலம் பாதிக்கப்பட்ட மகள் சந்திரவதனா (30) ஆகியோருடன் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் இவர் தமிழக அரசின் உதவியை எதிர்நோக்கி இருக்கிறார்.
இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த வீரப்பபுரத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி தவமணிதேவி. சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அமிர்தலிங்கம் உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. அப்போது சுமார் 10 பேர் கொண்ட இலங்கை ராணுவத்தினர், தவமணிதேவியின் வீட்டுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இச் சம்பவத்தில் தவமணிதேவி, அவரது மகன் பிரகாஷ், மகள் சந்திரவதனா உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். பிரகாஷுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அவருக்கு வலிப்பு நோயும், மனநிலை பாதிப்பும் ஏற்பட்டது. சந்திரவதனாவுக்கும் மனநிலை பாதிக்கப்பட்டது.
அந்த நிலையில் தவமணிதேவி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக வீடு, நகைகளை விற்று குடும்பத்துடன் தமிழகத்துக்கு அகதியாக வந்ததாகக் கூறுகிறார். மண்டபம் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அங்கு பிரகாஷ் மற்றும் சந்திரவதனா உடல்நிலை மோசமானதால், கூடல்பூதூர் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு தவமணிதேவி, தனது 90 வயதான தந்தை, மகன் பிரகாஷ், மகள் சந்திரவதனா ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியிருக்கிறார்.
இதுகுறித்து தவமணிதேவி கூறுகையில், ""சொந்த வீடு, நிலபுலன், வயிறார உணவு, அமைதியான வாழ்க்கை என்று இலங்கையில் வாழ்ந்து வந்த நாங்கள் விதி வசத்தால் உயிரைக் காத்துக்கொள்ள அகதிகளாய் தமிழகம் வந்தோம். வயிறார உணவுக்கே போராடி வரும் இந்த சூழலில், எனது மகன், மகள் ஆகியோரின் மருத்துவம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு உதவிட எனக்கு யாருமில்லை. எனவே தமிழக அரசு உதவிட வேண்டும்'' என்றார்.
இந்நிலையில் தவமணிதேவி தனது குடும்ப சூழலை விவரித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் அகதிகள் முகாம் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.
தவமணிதேவியின் குடும்ப நிலையை உணர்ந்து, தமிழக அரசு உதவ முன் வரவேண்டும் என்பதே முகாம் மக்களின் கோரிக்கையாகும்.
Comments
Post a Comment