www.tamilwin.com |
தமிழீழ தேசிய மாவீர தினத்திற்காக விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. |
மாவீரர்நாள் அறிக்கை 26-11-2010 தமிழீழம் எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது. சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமிழினம் ஆராதிக்கும் இந்த நாட்களில் தனியரசுப் பாதையில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை வேண்டி நாமனைவரும் உறுதிபூண்டு நிற்கின்றோம். மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திரநாயகர்கள். எமது மாவீரர்களின் வாழ்வும், வரலாறும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்தபரிமாணங்கள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும். காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, இருண்ட பூமியாக இன்று எமது மண் மாற்றப்பட்டுள்ளது. அடங்காப்பற்றாக வணங்காது தலைநிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத்தமிழினத்தின் வரலாற்றுப் பெருமைகூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன. தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலைபேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத்தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது. யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்து நிற்கும் சிங்களம், ஆணவத்தின் உச்சத்தில் ஏறிநின்று தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும், தமிழ் மொழியையும் துடைத்தழிக்கும் வெறிகொண்டு இனவழிப்பை அரங்கேற்றுகின்றது. தென்னிலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் காட்டாட்சி நர்த்தனமாட, தமிழீழ தாயகத்தில் சிங்களத்தின் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது. அதியுச்ச படைவலிமையுடனும், ஈவிரக்கமற்ற படைக்கலப் பிரயோகத்துடனும் எமது மக்களைக் கொன்றுகுவித்து எமது தாய்மண்ணை ஆக்கிரமித்த சிங்களம், எமது மாவீரர்கள் நித்தியத் துயில் கொள்ளும் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லை. மாவீரர் நினைவாலயங்களை இடித்து வீழ்த்திய சிங்களம், மாவீரர் துயிலும் இல்லங்களை உழுதெறிந்து மாவீரர்களின் உறைவிடங்கள் மீது படைத்தளங்களையும், விமான ஓடுபாதைகளையும் நிறுவிக் குரூரத் திருப்தியடைந்துள்ளது. துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத்துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை. எமது தேசத்தை ஆகர்சித்து நிற்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையை முடக்கவும் இயலவில்லை. கல்லறைகளில் கண்ணீர் சொரிந்து, வாசமலர்களைப் பொழிந்து, மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றும் எமது மக்களின் உரிமையை ஆயுதவலிமையால் இன்று சிங்களம் தடுத்து நிறுத்தினாலும், தமது இதயங்களில் மாவீரர்களுக்கு எமது மக்கள் அகச்சுடரேற்றுவதை சிங்களத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகெங்கும் ஒரேநேரத்தில் தமிழினம் அணிதிரண்டு அக்கினிப்பிழம்பாக மாவீரர்களைத் தரிசிப்பதையும் சிங்களத்தால் முடக்க இயலவில்லை. எமது அன்பார்ந்த மக்களே, வரலாறு காணாத மிகப் பெரும் சோதனையை இன்று ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றிகொண்டு அமைதியை நிலைநாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர்தொடுத்துள்ளது. படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம்சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது. அபிவிருத்தியின் பெயரால் எமது வளங்கள் அந்நியர்களிடம் தாரைவார்க்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பெயரால் எமது மண் கபளீகரம் செய்யப்படுகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் எமது குடிநிலங்கள் வல்வளைப்புச் செய்யப்படுகின்றன. இன நல்லிணக்கத்தின் பெயரால் கடுகதியில் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் வேரூன்றுகின்றன. பௌத்த தர்மத்தின் பெயரால் எமது மக்களின் பண்பாட்டு வாழ்வு சிதைக்கப்படுகின்றது. தன்னாட்சியுரிமைக்கும், அதனடிப்படையிலான தனியரசுக்கும் உரித்தான எமது இனம், சிறுபான்மையினமாக சிறுமைப்படுத்தப்பட்டு எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், உரி மைகளும் பறிக்கப்படுகின்றன. மறுபுறத்தில் தனது ஆயுதப் படைகளின் ஆட்பலத்தைப் பெருக்குவதிலும், படைக்கல வலிமையை தக்கவைப்பதிலும் கவனம்செலுத்தித் தனது யுத்தப்பாதீட்டிற்குப் பெரும்தொகையில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் சிங்களம், தமிழீழ தாயகப் பகுதிகளை முழுஅளவில் படைவலயங்களாகக் கட்டமைத்து வருகின்றது. இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தால் அணைத்துவிட முடியவில்லை. எமது பாசத்துக்குரிய மக்களே, சிங்களம் எக்காளமிடுவது போன்று நாம் அழிந்துவிடவில்லை. எமது இலட்சியப் பயணம் ஓய்வுக்கு வந்துவிடவுமில்லை. காலநதியின் ஓட்டத்திற்கேற்ப, வரலாற்றின் வழிகாட்டலுக்கு இணங்க எமது போராட்ட வடிவம் புதுமெருகூட்டப்பட்டுப் பரிணமித்துள்ளதே தவிர எமது இலட்சியம் மாறிவிட வில்லை. நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்தமண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம். ஆயுதத்தின் மீது அலாதிப்பிரியம் கொண்டு எமது இனம் ஆயுதப் போர்புரியவில்லை. தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அறவழி தழுவி அன்று எமது மக்கள் போராடினார்கள். அன்று சமவுரிமை கோரிய எமது மக்கள் மீது குண்டர்களின் அடக்குமுறையை ஏவிச் சிங்களம் கலகம்புரிந்தது. பின்னர் சுயாட்சி கோரி அறப்போரை தீவிரப்படுத்திய எமது மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை ஏவி அரச பயங்கரவாதத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அன்றைய எமது இளைய தலைமுறை ஆயுதமேந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது. இருந்த பொழுதும் அமைதிவழியில் எமது உரிமைகளையும், தேசிய விடுதலையையும் வென்றெடுப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு இடைவழியையும் நாம் தவறவிட வில்லை. திம்புவில் இருந்து ஜெனீவா வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு அமைதி முயற்சிகளிலும் நாம் பங்குபற்றினோம். போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழியில் தீர்வு காண்பதற்கு முன்னர் இந்தியப் பேரரசும், பின்னர் நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்களையும் இதயசுத்தியுடன் நாம் அணுகினோம். இறுதியாக நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல விட்டுக்கொடுப்புக்களை எமது மக்களும், நாமும் புரிந்தோம். எமது இலட்சியத்தில் உறுதியாக நாம் நின்ற பொழுதும், உலகின் வேண்டுகைக்கு செவிசாய்த்தும், மதிப்பளித்தும் நெகிழ்வுப் போக்குடன் நாம் நடந்து கொண்டோம். எனினும் எமது மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் எமது போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே சிங்களம் குறியாக நின்றது. போர்நிறுத்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி எம்மை சீண்டியிழுப்பதற்கு சிங்களம் முற்பட்டது. அரசியலமைப்பு என்ற சட்டகத்திற்குள் நின்றவாறு கடும்போக்கைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளுக்கான புறச்சூழலை படிப்படியாக சிங்களம் இல்லாதொழித்த பொழுதுகூட நாம் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் புரிந்திராத புதுமையாக நாமேயொரு இடைக்கால நிர்வாக வரைபைத் தயாரித்து உலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் முன்வைத்தோம். எமது நெகிழ்வுப் போக்கை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் எம்மால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிப் பேச மறுத்தது. ஒட்டுக்குழுக்களைக் கட்டமைத்து எமக்கு எதிராக நிழல் யுத்தத்தை தொடுத்தது. இருந்த பொழுதும் போர்நிறுத்த உடன்படிக்கையை நாம் முறித்துக் கொள்ளவில்லை. சமாதானத்தின் மீது கொண்ட எமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் நிமித்தம் உலகின் அழைப்பிற்கு மதிப்பளித்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம். எனினும் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணாக எமது தேசத்தின் மீது அறி விக்கப்படாத யுத்தத்தை சிங்களம் தொடுத்தது. பேசித்தீர்க்க வேண்டிய மாவிலாறு நீர்ப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி எமது மண் மீது நில ஆக்கிரமிப்புப் போரை சிங்களம் ஏவிவிட்டது. ஈற்றில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்களம் கிழித்தெறிந்தது. ஆயுதப் போராட்டமும், போரும் நாம் விரும்பியேற்ற தெரிவுகளல்ல. இவையிரண்டும் எம்மீது திணிக்கப்பட்டவை. வன்னிப் போர் உக்கிரமடைந்த பொழுதுகூட போர்நிறுத்தம் செய்வதற்கான பற்றுறுதியை மீண்டும் மீண்டும் நாம் வெளிப்படுத்தினோம். எமது மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடிய எமது வீரர்கள், மக்களுக்காக எந்தவொரு அதியுச்ச ஈகத்தையும் புரிவதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பால் எமது நிலப்பரப்பு சுருங்கிய பொழுதுகூட மக்களைக் காத்து, மக்களின் துயர்துடைப்பதற்காகவே எமது வீரர்கள் அரும்பணி புரிந்தார்கள். எமது மக்களுக்காக உயிரையே ஈகம்செய்யத் துணியும் எமது விடுதலை இயக்கம், எமது மக்களின் பாதுகாப்பை உலகம் பொறுப்பெடுக்கும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் அதியுயர் ஈகங்களைப் புரிந்தார்கள். எமது அன்பார்ந்த மக்களே, போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம். நாம் எடுத்திருக்கும் இந்தத் தெரிவு மிகவும் கடினமானது. நோர்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாம் புரிந்த விட்டுக்கொடுப்புக்களை விட இது உன்னதமானது. அக்காலப் பகுதியில் நாம் சந்தித்த இழப்புக்களை விட இது அதிக அளவிலானது. முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற எமது அரசியல் போராளிகளை நயவஞ்சகமான முறையில் சிங்களம் படுகொலை செய்தது. களத்தில் விழுப்புண்ணெய்தி குற்றுயிராகத் துடித்த எமது போராளிகளை சிங்களம் சிறைப்பிடித்தது. உலகை நம்பி முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் காத்துநின்ற எமது மக்களை வகைதொகையின்றி சிங்களம் நரபலிவேட்டையாடியது. எஞ்சிய மக்களை விலங்குகளை விடக் கேவலமான முறையில் வதைமுகாம்களில் அடைத்துக் கொடும்வதை புரிந்தது. எமது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏவிவிடப்பட்டது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை. அவலங்கள் அளவிட முடியாதவை. உலகின் மனச்சாட்சி மீது நம்பிக்கை கொண்டு, மென்வழி தழுவி நின்ற எமது மக்களுக்கு சன்மானமாக சாவையே சிங்களம் பரிசளித்தது. இருந்த பொழுதும் உலகின் மனச்சாட்சி மீதும், தர்மத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்து விடவில்லை. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது சொந்த மண்ணில் தமிழீழத் தனியரசை அமைத்து நாம் வாழ்வதற்கும் உலகம் வழிசமைக்கும் என்று நாம் நம்புகின்றோம். பொறுமையின் எல்லைக்கு இன்று எமது தேசத்தை சிங்களம் இட்டுச்சென்றாலும்கூட உலகின் நீதியான அணுகுமுறை மீதான எமது நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை. எமது தேசத்தின் தனியரசு உரிமையை உலக சமூகம் பகிரங்கமாக ஏற்க மறுத்தாலும்கூட, எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அடிக்கடி உலகத் தலைவர்கள் குரல்கொடுப்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எமது தேசத்தின் மீது இனவழிப்பை சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஒப்புக்கொள்வதற்கு உலக சமூகம் பின்னடித்தாலும்கூட, போர்க்குற்றங்கள் பற்றி உலகத் தலைவர்கள் பேசுவது எமக்குத் தென்பூட்டுகின்றது. இந்த வகையில் ஈழத்தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. சிங்கள தேசத்திற்கு உரித்தான மண்ணைப் பிரித்தெடுத்து அரசமைப்பதற்கு நாம் முற்படவில்லை. அன்றி பயங்கரவாத வெறிகொண்டு நாம் பிரிவினைவாதம் பேசவுமில்லை. நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச்சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப்பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம். முள்ளிவாய்க்கால் போரில் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகளையும், எமது விடுதலை இயக்கத்திற்கு உறுதுணை நின்ற மக்களையும் கண்காணாத இடங்களில் சிங்களம் சிறைவைத்துள்ளது. இதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால நடைமுறை யின் கீழும் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்ட எமது மக்களை நீதிவிசாரணைகள் இன்றி சிங்களம் சிறைவைத்துள்ளது. நீதிக்குப் புறம்பான முறையில் சிங்களம் சிறைவைத்துள்ள போர்க்கைதிகளையும், அரசியல்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம். உலக சமூகத்தின் நீதியான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டு நிற்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாது எமது தேசத்தின் அரசியல், சமூக, மனித உரிமைகளை உறுதிசெய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு. இத்தருணத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும்தூணாக விளங்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை தமது தேசியப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உரிமையுடன் நாம் கோருகின்றோம். தாய்மண்ணை விட்டுத் தொலைதூரம் புலம்பெயர்ந்தாலும், தமிழீழ தாயகத்திலேயே ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழர்களின் வேரும் ஆழப்பதிந்து நிற்கின்றது. தாயக மண்ணைவிட்டுப் பிரிந்த வலியை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில், தமிழீழ தேச விடுதலைக்காக ஓயாது குரலெழுப்பி உலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பித் தேச விடுதலையை வென்றெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழரையும் சார்ந்துள்ளது. இதுவரை காலமும் எமது விடுதலைப் போராட்டத்தையும், மக்களையும் தாங்கிநின்ற புலம்பெயர்வாழ் உறவுகள், தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுக்கான மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் அவலங்களைத் துடைத்து, இயல்புவாழ்வை தோற்றுவிப்பதற்கான பணிகளை தொடருமாறு வேண்டுகின்றோம். சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது. எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம். சத்திய இலட்சியத்தை உயிர்மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் ஆன்மீக வல்லமை மகத்தானது. அந்த சரித்திரநாயகர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாக முகிழ்க்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27ஆம் நாளன்று உலகத் தமிழினத்தை அணிதிரண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம். அன்றைய நாளில் அந்நிய ஆக்கிரமிப்பில் சுடரேற்றும் வாய்ப்புக்கள் மறுதலிக்கப்பட்ட எமது உறவுகளை தமது இதயங்களில் அகச்சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கின்றோம். எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக. நன்றி. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். |
Saturday, November 27, 2010
மாவீரர் தின உரையில் விடுதலைப்புலிகள்
Subscribe to:
Post Comments (Atom)
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
No comments:
Post a Comment