Thursday, November 11, 2010

"ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' அல்ல பிரச்னை...

Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=330463&SectionID=133&MainSectionID=133&SEO=&Title="ஸ,%20ஷ,%20க்ஷ,%20ஜ,%20ஹ

ம. இராசேந்திரன்

கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகைசெய்யும் டேஸ் 16 ((Tamil All Ch​ar​a​cter En​coding 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது'' என்கிற தவறான கருத்து, பிரச்னையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பரப்பப்படுகிறது.


தமிழ் ஒருங்குறியின் "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' என்கிற ஐந்து எழுத்துகளும் முன்பே உள்ளன. இவை அல்லாமல், மேலும் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று இரமண சர்மா என்பவர் ஒருங்குறி ஆணையத்துக்கும் இந்திய அரசுக்கும் கடிதம் எழுதியதன் விளைவுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சைக்கே காரணம்.


தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் எழுதியது "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ'  எனும் ஐந்து கிரந்த எழுத்துகள் தமிழில் இடம்பெறலாமா, கூடாதா  என்பது பற்றியன்று.


 ஒருங்குறி (unicode) அட்டவணையில் புதிதாகச் சேர்க்கக் கருதும் கிரந்த எழுத்துப் பட்டியலில் தமிழுக்கே உரியதான "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய எழுத்தொலி வடிவங்களையும் சேர்ப்பது பற்றியதுதான்.
 எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, முடிவை ஒத்திவைக்க வேண்டுமென்றுதான் முதல்வர் எழுதியுள்ளார்.


ஒருங்குறி ஆணையம் (unicode consortium) உலக மொழிகளுக்கான எழுத்து வடிவங்களை எல்லைகள் கடந்து அனைவரும் கணினியில் கட்டுப்பாடற்றுப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் ஓர் அமைப்பாகும். இதில் பல நாடுகளும் தனி நபர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை வாக்குரிமை பெற்ற உறுப்பினராக உள்ளது. 
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பளிப்புப் பெற்றுள்ள 22 மொழிகளின் எழுத்து வடிவங்களும் ஒருங்குறி ஆணையத்தின் அட்டவணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
வழக்கில் இல்லாத மரபுசார்ந்த வேதகால சம்ஸ்கிருதம், கிரந்த எழுத்துகள் ஆகியன ஒருங்குறி ஆணைய அட்டவணையில் இடம்பெற வேண்டுமென்று கருதப்பட்டன. கடந்த செப்டம்பர் 6-ம் நாள் கிரந்தப்புலமை மிக்கவர்களைக் கொண்டு நடத்தப்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக  ஒருங்குறி ஆணையத்துக்கு இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அனுப்பியுள்ளது.
கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. வடமொழிக்குத்  தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம். கி.பி. 4-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை. தேவநாகரி எழுத்து, பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது.
கிரந்த எழுத்துகளைக் கொண்ட ஏராளமான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும் உள்ளன. வரலாற்றாவணங்கள் மட்டுமன்றித் திவ்வியபிரபந்தம் போன்ற தமிழ் நூல்களுக்கான ஈடு உரைகளும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன.


வடமொழி ஒலிவடிவங்களுக்குக் கண்டெடுக்கப்பட்ட கிரந்த எழுத்து வடிவங்களைக் கொண்டே தமிழ் நூல்களை எழுதிக்கொள்ளும் நடைமுறையும் உருவானது. அப்போது வடமொழிக்கென்று உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தில் இடம்பெறாத தமிழ் ஒலிக்கான வரிவடிவங்களைச் சேர்த்துக்கொண்டு எழுதும் முறை, அதாவது கிரந்தமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை உருவானது.
கிரந்த எழுத்துகளை ஒருங்குறி ஆணைய அட்டவணையில் இடம்பெறச் செய்வதன் வழி, பழைய எழுத்துமுறை பாதுகாக்கப்படலாம். பாதுகாப்பதன் வழியாக பழைய, இலக்கிய வரலாற்று ஆவணங்களைப் புரிந்துகொள்ளவும் தரவுகளாக்கிப் பயன்படுத்திக் கொள்ளவும் இயலும். எனவே ஒருங்குறி ஆணைய அட்டவணையில் பழைய கிரந்த எழுத்துகள் இடம் பெறுவதில் யாருக்கும் மறுப்பில்லை.
ஆனால், பழைய கிரந்த எழுத்துப்பட்டியலில் இதுவரை இடம் பெறாத தமிழுக்கே உரிய எ,ஒ,ழ,ற,ன எனும் ஐந்து வடிவங்களை அப்படியே சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பயன்களும் விளைவுகளும் யாவை என்பதைப்பற்றி ஆய்ந்து பார்க்கக் காலம் தேவைப்படும் என்பதால்  தற்போதைக்கு முடிவை ஒத்திவைக்க வேண்டுமென்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 6-ம் நாள் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கிரந்தப் புலவர்கள் 14 பேர்களில் முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, ரமண சர்மா (காஞ்சி சங்கரமடம்) ஆகிய இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழறிஞர்களோ, கல்வெட்டுத் தொல்லியல் அறிஞர்களோ இக்குழுக்கூட்டத்தில் இடம்பெறவில்லை.
கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் தேவை என்று கருதும் ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதம் இதுதான்-
 ""கிரந்தம் தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமன்றி வடமொழிகளுக்கும் உரிய எழுத்தாகப் பயன்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாகக் கிரந்த எழுத்துகளை வளர்த்தெடுத்துக் கொண்டால், ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளையும் படிக்கமுடியும்.
 தமிழுக்கே உரிய தனி ஒலி வடிவங்களான ஐந்தும் தற்போது கிரந்தத்தில் இடம்பெறவில்லை என்பதால் தமிழைப் படிக்க முடியாது. எனவே தமிழுக்குரிய ஐந்து ஒலிவடிவங்களைக் ("எ,ஒ,ழ,ற,ன') கிரந்த எழுத்துப்பட்டியலில் புதிதாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வளம் சேர்க்கும்.
இனிவரும் காலங்களில் மின்-அஞ்சல், இணைய வலைப்பக்கம், மின்-இதழ்கள், இணைய நாளேடுகள் ஆகியவை, புதிதாக உருவாகும் கிரந்த எழுத்துகளிலேயே கணினியில் இடம்பெற வாய்ப்பு அமையும்''.
இந்த வாதம் நமக்கு ஏற்புடைத்தன்று.
தமிழில் புது கிரந்தம் வேண்டாம் என்பதைப் போலவே கிரந்தத்திலும் புதிதாகத் தமிழ் எழுத்துகளைச் சேர்க்க வேண்டாம் என்பதுதான் நமது கருத்து.
கடந்த காலத்து இலக்கிய வரலாற்று ஆவணங்களைப் படித்துப் பயன்படுத்திக் கொள்ளக் கடந்த காலத்துக் கிரந்த எழுத்துகளே போதுமானவை.
புதிதாகக் கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் ஐந்து சேர்க்கப்படுவதால் தமிழின் கடந்த கால நூல்களும், வரும் கால நூல்களும், இதழ்களும், பத்திரிகைகளும் தமிழ் கலந்த கிரந்த எழுத்திலேயே அமையும் நிலை ஏற்பட்டு, மீண்டும் மணிப்பிரவாள நடைக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மற்ற தமிழ் எழுத்துகள்  பயன்படாமல் மறைந்து போகும்.
வரிவடிவம் என்பதும் ஒலிவடிவம் போன்றே மக்கள் மனநிலை உளவியல் சார்ந்தது. செயற்கையாகச் செய்யப்படும் மாற்றங்கள் காலைவெட்டிக் கொள்வது போன்றதாகும்.
பிறமொழி ஒலிவடிவங்களுக்கு  உருவாக்கப்பட்ட வரி வடிவங்களைக் கொண்டு உருவாக்கியவர்களின் சொந்த வரிவடிவங்களைச் செயலிழக்கச் செய்யலாமா?
எல்லாவற்றுக்கும் மேலாக, உலகில் பேச்சு மொழிகளாக உள்ள எல்லா மொழிகளுக்குமான ஒரே எழுத்துவடிவம் (International Phonetic Alphabet (IPA)என்பதாகும். 
International Phonetic Association 1897 முதல் மேற்கொண்ட முயற்சியின் தொடர்ச்சியாக 2005-ல் இவ்வடிவம் இறுதியாக்கப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துகளைக் கொண்டே அமைக்கப்பட்ட இந்த வரிவடிவத்தை 
International Clinical Phonetics and Linguistics Association  ஏற்றுக்கொண்டுள்ளது. 


இன்றைக்கு உலக மொழிகள் அனைத்துக்குமான ஒரே வரிவடிவமாக IPA   உருவாகிப் பயன்பாட்டில் உள்ளது. இதன் வழி உலகின் எந்த மொழி நூலையும் IPA  வரி வடிவத்தில் எழுதலாம். அவ்வாறு எழுதப்பட்ட வரிவடிவத்தை உலகின் எந்த மொழியின் வரிவடிவத்துக்கும் மாற்றிக் கொள்ளலாம்.
இப்படியான இன்றைய வளர்ச்சி நிலையில் தென்னிந்திய மொழிகளுக்கென்று தனி எழுத்து வடிவம், இந்திய மொழிகளுக்கென்று தனி எழுத்து வடிவம் தேவை இல்லை.
மேலும் ஒருங்குறி ஆணைய அட்டவணையில் ஒரே எழுத்துக்கு இரண்டு இடங்களில் இட ஒதுக்கீடும் தேவையற்றது. க,உ போன்ற எண்கள் தமிழ் எழுத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் கிரந்த எழுத்துப்பட்டியலில் இடம் பெறவேண்டாம் என்று எடுக்கப்படும் முடிவு, எழுத்துகளுக்கும் பொருந்துமே.
எனவே உலகெங்கும் வாழும் தமிழர்களில் கணினியிலும் இணையத்திலும் புழக்கத்திலிருக்கும் தமிழர்களும், அமைப்புகளும் எழுப்பிய கருத்து வேறுபாடுகளைக் கருதிப் பார்த்துத்தான் முடிவை ஒத்திவைக்க மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இவை குறித்து, அறிஞர்களின் கருத்தறிய 3.11.2010 அன்று மாலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், 17 பேர் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவைப் பேராசிரியர் ஆனந்தகிருட்டிணனிடம் 4.11.2010 அன்று மாலை 4.30 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதற்கு உடன்படவே, முதல்வரிடம் 4.11.2010 அன்று மாலை 5 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.
உடனே அன்றே (4.11.2010 தீபாவளி இரவு 8 மணி முதல் 9.30 வரை) முதல்வர் தலைமையில் புதிய தலைமைச் செயலகத்தில் முனைவர் வா.செ.குழந்தைசாமி, முனைவர் ஆனந்தகிருட்டிணன் முதலியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வரும் கடிதம் எழுதியிருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற ஒருங்குறி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படாமல் இப்பொருண்மை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
 ஒருங்குறி அட்டவணையில் "ண,ன, ற' போன்ற தமிழ் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளோடு தனி இடத்தில் உள்ளீடு செய்வது என்பதும் ஆபத்தானது. 
ஒருங்குறியில் இப்போது தமிழ்ப் பகுதியில் உள்ள எழுத்துகளைக் கணிப்பொறியில், இணையத்தில் பயன்படுத்துவதில் அது குழப்பத்தை ஏற்படுத்தும். "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' ஆகிய ஐந்து எழுத்துகளும் ஒருங்குறியும், தமிழ்ப் பகுதியும் ஏற்கெனவே தமிழ் எழுத்துகளோடு உள்ளீடு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிரச்னை "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' பற்றியதல்ல. ஒருங்குறி அட்டவணையில் புதிதாகச் சேர்க்கக் கருதும் கிரந்த எழுத்துப் பட்டியலில் தமிழுக்கே உரித்தான "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய ஐந்து எழுத்துகளைச் சேர்ப்பது பற்றியதுதான். 
தமிழுக்கு நல்லது செய்ய நினைத்த முதல்வரை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்கு உள்படுத்துவது நியாயமல்ல!


(கட்டுரையாளர்: துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்).

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...