கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் பீகார் சட்டமன்றம் மற்றும் தொழிற்சங்கத் தேர்தல்கள்

முகவை.க.சிவகுமார், செய்தியாளர்/தினமணி


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடமும், பொதுமக்கள், தொண்டர்களிடமும் இருந்து வருகிறது.  அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ்-தி.மு.க கட்சிகளிடையே தொடர்ந்து இறுக்கம் நிலவுகிறது.    

   மதுரையில் நடைபெற்ற அழகிரி மகன் திருமணத்தின்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பேச்சுக்களால் கூட்டணி நெருக்கம் ஏற்பட்டாலும் உண்மைநிலை  இறுக்கமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

        தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற பாதயாத்திரையின் போது நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பெரும்பாலும் தி.மு.க. வின் நடவடிக்கைகளை விமர்சித்ததே அதிக அளவில் இடம் பெற்றன. 
இளங்கோவன்,  கார்த்தி சிதம்பரம் வரிசையில் தற்போது யுவராஜும் சேர்ந்து விட்டார்.  மத்திய அமைச்சர்களைப் போல் மாநில தி.மு.க அமைச்சர்களும் தங்களது சொத்துக் கணக்கினை சமர்ப்பிக்க வேண்டும் என யுவராஜ் கோரிக்கை வைத்தார். இதற்கு தி.மு.க சார்பில் எவ்வித பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை.
        மேலும் ராஜாவை பதவி விலக்க வைக்கும் முயற்சியில் தி.மு.க தரப்பில் தொடர்ந்து முரண்டு பிடித்ததை தமிழக காங்கிரஸார் ரசிக்கவில்லை என்கிறது. சத்தியமூர்த்திபவன் வட்டாரம்.  தமிழகத்தில் உள்ள தலைவர்களிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் இதனை மறைக்கும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி உள்ளிட்டவர்கள் மூலம் கூட்டணிக்கு ஆதரவு அறிக்கைகள் இரண்டொரு நாள்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. இது கடந்த வாரம்வரை உள்ள நிலவரம்.
         ஆனால் பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அரண்டுபோய் உள்ளது. இது தி.மு.க.விற்கு ஆறுதலை அளித்துள்ளது என்பதுதான் உண்மை. ஏனென்றால் பீகாரில் 243 தொகுதிகளில் தனித்து நின்று 4 தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸால் தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்து நின்று எத்தனையில் வெற்றி பெற்றுவிட முடியும்? என காங்கிரஸ் குடைச்சலால் நொந்துபோன் தி.மு.க  தலைவர்கள் சில கேள்வி எழுப்புகின்றனர். 
இது நவ.25 தேதியன்று நடந்த வேளாண்மைத் துறை ஊழியர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேச்சில் எதிரொலித்தது.
   தி.மு.க கூட்டணியில் சிக்கல்கள் தொடரும் நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 
     போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் தேர்தலில் அ.தி.மு.கவை தோற்கடிக்க தி.மு.க நடத்திய சதுரங்க விளையாட்டு தி.மு.கவிற்கு எதிராகவே திரும்பியுள்ளது.  ஊதிய ஒப்பந்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தை நிர்ணயிக்க தேர்தல் நடைபெற்றுள்ளது.  கடந்த முறை தேர்தலில் சங்கங்கள் பெற்ற ஓட்டுக்களின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
         இதில் தி.மு.க, அ.தி.மு.க சார்பில் தலா 2 பிரதிநிதிகளும், சி.ஐ.டி.யூ, பணியாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு பிரதிநிதியும் ஆக மொத்தம் ஆறு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. ஆனால் இந்த முறை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஏகோபோக அதிகாரத்தை உருவாக்கும் வகையில் ஒரே ஒரு சங்கம் மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும் என நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டது.  இதில் தி.மு.க நடத்திய சதுரங்க போட்டியினை எதிர்கொள்ளத அ.தி.மு.க.வும் தயாரானது. முக்கிய திருப்பமாக அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்கம் அதிகாரப்பூர்வமாக தே.மு.தி.க.வின் ஆதரவைக் கோரியது.
     சமீபத்தில் நடைபெற்ற  விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்,
தி.மு.கவை வீட்டிற்கு அனுப்புவதே முதல்வேலை. தி.மு.கவிற்கு எதிர் அணியில் நிற்போம் எனக் கூறியிருந்தார்.
        இந்நிலையில் தி.மு.கவின் அராஜகப் போக்கினை எதிர்க்கும் முகமாக தொழிற்சங்கத் தேர்தலில் ஆதரவு கோரிக்கையை கேப்டன் உடனடியாக ஏற்றதாக அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.  இப்பிரச்னையில் சி.ஐ.டி.யூ ஆதரவு அளிக்காதது அ.தி.மு.க -மார்க்சிஸ்ட் இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
       இந்நிலையில் தொழிற் சங்கத் தேர்தல் கூட்டணி பொதுத் தேர்தல் கூட்டணியாக மாறும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா- விஜயகாந்த் இடையே கடந்த காலங்களில் நடைபெற்ற சில கசப்பான நிகழ்வுகள் இந்த கூட்டணியின் மூலம் சமன் செய்யும் முயற்சி தொடங்கி உள்ளதாகவே தெரிகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியின் நலனைப் பலி கொடுப்பது சரியாக இருக்காது என இருவரும் உணர்ந்துள்ளதே இந்த முடிவிற்கு முக்கிய காரணம்.  இது தனித்து போட்டி என்ற தலைமையின் முடிவால் துவண்டு போய் இருந்து தே.மு.தி.க தொண்டர்களுக்கு இது உற்சாக 'டானிக்' காக மாறியுள்ளது என்பதே உண்மை. 
தொழிற்சங்கத் தேர்தல் கூட்டணி பொதுத் தேர்தல் கூட்டணியாக உருவெடுக்கும் என்பதில் இரண்டு கட்சியினரும் உறுதியாக நம்புகின்றனர் என்பதே இறுதி நிலை.
 

மின்னஞ்சல்: mugavaishiva@yahoo.co.in
 

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire