தினமணி தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ

Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=329497&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont+color%3d%22red%22%3E%u0ba4%u0bb2%u0bc8%u0baf%u0b99%u0bcd%u0b95%u0bae%u0bcd:%3C/font%3E+%u0bb8,+%u0bb7,+%u0b95%u0bcd%u0bb7,+%u0b9c,+%u0bb9%3f

கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகை செய்யும் டேஸ் 16 (TA​M​IL ALL CH​A​R​A​C​T​ER EN​C​O​D​I​NG​ 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதி இக் கடிதத்தை எழுதியிருப்பதோடு, தன் கடிதத்தின் மீது தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர்களின் குழுவை அமைத்து, கலந்து ஆலோசித்து, பின்னர் இது தொடர்பான வேறு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர்.
உலகம் முழுவதும் மின்அஞ்சல், குறுந்தகவல், தமிழ்ப் பதிப்புத்துறைக்குப் பயன்படும் இந்த ஒருங்குறி (யுனிகோட்) மென்பொருளைப் பரிந்துரைத்ததில் அப்படி என்ன இமாலயத் தவறு நேர்ந்துவிட்டது? ஒரு தவறும் இல்லை. இதில் பிரச்னை வெறும் ஐந்து எழுத்துகளின் வரிவடிவம்தான். அவை-ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ.
இந்த ஐந்தெழுத்துகளும் சம்ஸ்கிருத வார்த்தைகள் என்பதாக முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எழுப்பிய பிரச்னையின் காரணமாகத்தான் இப்போது இந்த டேஸ் 16 மென்பொருளுக்கான தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு கூறுகிறார் முதல்வர்.

இந்த ஐந்து வரிவடிவங்களும் தமிழர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட வரிவடிவங்கள். தமிழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்து மணிப்பிரவாளம் புழங்கிய காலத்தில், சம்ஸ்கிருதத்தில் இருந்த, ஆனால் தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்கான வரிவடிவம்தான் இவை. இந்த வரிவடிவம் வேறு எந்த வடமொழியிலும், அல்லது திராவிட மொழிக் குடும்பத்திலும்கூட கிடையாது. தமிழில்தான் இந்த ஐந்து எழுத்துகளும் துல்லியமான ஒலிப்புமுறைக்காக வரிவடிவம் தரப்பட்டன.
இன்றைய நடைமுறையை உதாரணமாகச் சொல்வதென்றால், ஆங்கில எழுத்து ஊ-ல் தொடங்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது இப்போது நாம் முன்னொற்றாகப்  ஃ பயன்படுத்தி ஃபெயில், ஃபெலோஷிப், ஃபிரன்ட்ஸ் என்று எழுதுவதைப் போன்ற ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் மேற்சொன்ன 5 வரிவடிவங்களும். "பஸ் மோதி பசு மரணம்' என்பதை "பசு மோதி பசு மரணம்' என்று எழுதினால் எத்தனை பொருள் மாறுபாடு ஏற்படும்? அக்காரணம் கருதி, தமிழர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த வரிவடிவம்.
சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லாத ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவது வரவேற்கத்தக்கதுதான். பாராட்டுக்குரியதுதான். தமிழ் உணர்வு உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்தான். இன்றைய நாளில் "பேருந்து மோதி பசு மரணம்' என்று எழுதவும் அதைப் பாமரரும் புரிந்துகொள்ளவும்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.  "காமாக்ஷியம்மன் கோயில்' என்பதுபோய், இப்போது "அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம்'  என்று எழுதும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சம்ஸ்கிருத ஒலிப்புக்கான தமிழ் வரிவடிவங்கள்  தானே வழக்கொழிந்துபோகும் நிலை உருவாகலாம். ஆனால், இந்த வரிவடிவங்களுக்காகத் தமிழ் மொழியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிறுத்திவைப்பது எந்த வகையில் சரியானது? மேலும், தமிழில் பஞ்சாங்கம், ஜோதிடநூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, இவை கணினியில் இடம்பெறாமல் தடுப்பது முறையாகுமா?
மேலும், முந்தைய தலைமுறையின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த வரிவடிவங்களை நீக்கிவிட்டு வெளியிடுதல் சரியானதாக இருக்குமா? ஒரு படைப்பில் "ஜன்மபூமி' என்றிருந்தால் அதை "சன்மபூமி' என்றும், "அருட்பெரும்ஜோதி' என்பதை "அருட்பெரும்சோதி' என்றும் வெளியிட்டால் அது செம்பதிப்பு ஆகுமா? ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுத முடியுமா? ஸ்டாலினை ச்டாலின் என்று அழைப்பதா? ரஜினி காந்தை ரசினி காந்த் என்றும், ஐஸ்வர்யா ராயை ஐசுவர்யா ராய் என்றும் அச்சிடுவதா?
சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?

Comments

  1. இந்த தலயங்கம் பிரச்சினையை திசை திருப்பும் ஒரு முயற்சியே . ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ என்பவை யூனிகோடில் வருவது குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . ஆனால் சர்மா என்பவர் அளித்திருக்கும் பரிந்துரை சற்று குதர்கமானது . இவை அல்லாமல் இன்னும் பல கிரந்த எழுத்துகளை (21+5) extended Tamil Block என்று அங்கீகரிக்க வேண்டும் என்பதாகும் , இதில் அந்த 21 எழுத்துக்கள் இன்றுவரை தமிழர்கள் யாரும் கண்டிராதது பயன்படுத்தாதது . எதிர்ப்பு இந்த 21 கிரந்த எழுத்து களுக்கு தான் . இந்த கிரந்த எழுத்துகள் வெறும் சமஸ்க்ருத சுலோகங்களை எழுத , படிக்க மட்டுமே உதவும் இவர்கள் அதை சமஸ்க்ருததில் அல்லது தேவநாகரியில் எழுதி படிக்கலாம் என்பது எமது கருத்து . தினமணி , தினமலர் போன்ற நாளிதழ்களில் இது போன்ற கருத்து வருவதில் எந்த வியப்பும் இல்லை .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire