முகவை.க.சிவகுமார், செய்தியாளர்/தினமணி
திருவொற்றியூர் : நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்து வரும் ரூ.600 கோடி மதிப்பீட்டிலான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. நவம்பர் 25 ல் நிறைவடைந்த டெண்டரில் ஒப்பந்த புள்ளிகளை ஆய்வு செய்து ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இந்த முறையாவது திட்டமிட்டபடி பணிகள் துவங்குமா என பல்வேறு தரப்பிலும் ஆவல் எழுந்துள்ளது.சென்னை, எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கவும், 25-க்கும் மேற்பட்ட கனரக தொழிற்சாலைகள் உள்ள வடசென்னை பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைச் செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் சிறப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் சென்னை, எண்ணூர் துறைமுகங்கள், மத்திய, மாநில அரசுகள் பங்குதாரர்களாக உள்ளன.
இத்திட்டத்தின்படி எண்ணூர் விரைவுசாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்சட்டி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை சர்வதேச தரத்தில் நான்கு வழிச்சாலைகளாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது.
திட்டமதிப்பீடு ரூ. 600 கோடியாக உயர்வு: 1996-ல் ரூ. 169 கோடியில் திட்டமிடப்பட்டாலும் 2005-ல்தான் இத்திட்டம் முக்கிய கட்டத்தை எட்டியது. அப்போது மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு இத்திட்டத்திற்கு ரூ. 329 கோடி திருத்திய மதிப்பீட்டில் 2005-செப்டம்பரில் அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்திருக்க வேண்டிய இத்திட்டம் நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மறுவாழ்வுப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் குறித்த காலத்தில் செயல்படுத்த முடியாமல் போனது. இதனால் திட்ட மதிப்பீடு ரூ. 600 கோடியாக உயர்ந்தது.வேலை நிறுத்தப் போராட்டங்கள்: இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் அறிவிக்கப்பட்டது.ஆனால் திருத்திய மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிப்பதில் கப்பல்துறை அமைச்சகம் காலதாமதம் செய்ததால் கடந்த ஆண்டு செப்டம்பரில் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
மேலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வந்ததால் இச்சாலைகள் அனைத்தும் போதிய பராமரிப்பின்றி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைகளாக மாறின. இச்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள், தொழிற்சாலை கூட்டமைப்புகள், பொதுநல சங்கங்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராடி வந்தனர். இச்சாலைகளைச் சீரமைக்கக் கோரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூட நான்கு நாள்கள் அனைத்து கனரக வாகனங்களையும் நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.
டெண்டர் போட்டியில் 13 நிறுவனங்கள்: இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த தீவிர கவனம் செலுத்தப்படும் எனவும், இதன் ஒரு பகுதியாக ரூ. 10 கோடியை கப்பல் துறை சார்பில் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.
இதனை அடுத்து மீண்டும் டெண்டர் விடும் பணிகள் துவங்கின. கடந்த அக்டோபரில் சாலைகள் அமைப்பதற்காக மட்டும் ரூ. 267 கோடிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 25 இறுதி நாளாக குறிப்பிடப்பட்டிருந்தது. இரட்டை உறை முறை என்ற அடிப்படையில் அறிவிக்கப்பட்ட இந்த டெண்டரில் 13 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் 8 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது இவற்றின் ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இயல்பாக இதுபோன்ற ஒப்பந்தகளில் ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்ய மூன்று மாதங்கள் வரை ஆகும். ஆனால் இத்திட்டத்தின் அவசரம் கருதி கூடுதல் பணிநேரம் ஒதுக்கப்பட்டு ஒரே மாதத்தில் ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்கிறார் தில்லியில் இப்பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலை ஆணைய முக்கிய அதிகாரி ஒருவர்.
இந்த முறையாவது நிறைவேறுமா? டிசம்பர் மாதம் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, வரும் ஜனவரி மாதம் பணிகள் துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் திட்டம் நிறைவேறும் என்பதே தற்போதைய நிலை.தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை, எண்ணூர் துறைமுகங்கள், தென் சென்னைக்கு நிகராக வடசென்னையை மாற்றும் சிறப்புத் திட்டம் போன்ற காரணங்களால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவும் சூழ்நிலையில் சாலைகளில் சாலை அமைக்கும் பணிகளைச் செய்வது என்பது பெரும் சவாலாகவே இருக்கும்.எனவே மத்திய, மாநில அரசுகள் போதிய ஒத்துழைப்பினை அளித்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.