'வணங்கா மண்' கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்




வீரகேசரி இணையம் 11/11/2009 9:29:05 AM
'வணங்கா மண்' கப்பல் மூலமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் சிக்கல்களுக்கு மத்தியில் கடந்த மாதம் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பொருட்களின் விநியோகத்தை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் செவ்வாயன்று ஆரம்பித்துள்ளது.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள், வேறு கப்பல் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டன.
சுமார் இரண்டு மாதத் தாமதத்தின் பின்னர் கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தன என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்தார்.
அரிசி, மா, பருப்பு, சீனி, குழந்தைகளுக்கான பாலுணவு வகைகள், தகரத்தில் அடைக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் இந்த நிவாரணப் பொருட்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
விநியோகத்திற்கு வசதியாக வவுனியா களஞ்சியத்தில் இந்தப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு முதல் தொகுதியாக மனிக்பாம் 4 ஆம் வலயத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால் குமார் தெரிவித்துள்ளார்.
முகாம்கள் மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும், அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களில் இந்தப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் நிமால் குமார் கூறினார்.
இன்னும் இரண்டொரு வாரங்களில் இந்த நிவாரணப் பொருட்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால் குமார் தெரிவித்துள்ளார்.
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=18931
மனிதத்தின் நன்றி:
வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, தமிழகம் வந்து முதல் வன்னி மக்களுக்கு போய்சேர்வதற்காக உழைத்த அனைத்து பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. வணங்காமண் நிவாரணப் பொருட்களை தமிழனுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாக இருந்தபோதிலும் நன்றி தெரிவிப்பது எமது முறையாகும். குறிப்பாய் தமிழக முதல்வர், அவரது புதல்வி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய செஞ்சிலுவை சங்கம், இந்திய வெளியுறவுத் துறை, தமிழக அரசு, சென்னை கப்பல் துறைமுக கழகம், வணங்காமண் கப்பலின் முகவர்கள், இலங்கை செங்சிலுவை சங்கம், ஊடகங்கள் என இன்னும் இதற்காக ஈடுபட்டோர் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
- மனிதம் - மனித உரிமை அமைப்பு, தமிழ் நாடு(வணங்காமண் நிவாரணப் பொருட்கள் இந்திய தொடர்பாளர்)

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire