Sunday, November 15, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-166: நார்வேயின் சமாதான முயற்சி!

"ஈழ வரலாற்றில், சமாதானப் பேச்சுவார்த்தையில் நார்வே நாடு கலந்துகொண்டது தற்செயலாக ஏற்பட்ட ஒரு திருப்பம் என்றுதான் கூறவேண்டும். அமெரிக்கா-சோவியத் நாடுகளிடையே நிழல்யுத்தம் நிலவி வந்த நிலையிலும்கூட, மேற்கத்திய நாடுகளின் பக்கமே இருந்தபோதிலும், ரஷியாவுடன் நார்வேக்கு எந்தப் பிணக்கும் இல்லை. அதேபோன்று, ஸ்வீடன், பின்லாந்து போன்ற அண்டை நாடுகளுடனும் மோதல் கிடையாது.
உலகின் எந்தப் பகுதியிலும் ராணுவத்துறையிலோ, அரசியல்துறையிலோ தந்திரோபாய அக்கறை கொண்டிராத சிறிய நாடு. மத்திய கிழக்குத் தகராறு, பாலஸ்தீன-இஸ்ரேல் முரண்பாடு, குவாட்டமாலா பிரச்னை போன்றவற்றில் ஈடுபட்டதால் நார்வே உலகெங்கும் பேசப்படும் நாடாக மாறியது' என்கிறார் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைப் பணிகளில் ஈடுபட்ட எரிக் சோல்ஹைம் (இலங்கையில் சமாதானம் பேசுதல்-அடையாளம் வெளியீடு, பக்.436).
அந்நூலில் எரிக் சோல்ஹைம் தனது நாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நார்வே ராணுவரீதியாக ஒரு வல்லரசாக இல்லாவிடினும், உலகில் சமாதானச் சூழலை ஏற்படுத்த முனைந்த, செல்வாக்கைக் கொண்ட ஒரு வளமான நாடு' என்கிறார். நார்வே நாட்டின் அரசியலில் இவர் முக்கியமானவராவார். வெளிவிவகார அமைச்சகத்தில் பங்குபெற்று, அதன் ஆலோசகராக இலங்கை அலுவலகத்தில் பணிபுரிந்தவர் எரிக் சோல்ஹைம். இவரை, நார்வே அரசு, புலிகள்-இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும் ஒரு சமரசப் பேச்சாளராக அறிவித்தது.
இலங்கை இனப் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண்பதற்கான முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாக வன்னிப் பகுதியின் வடபகுதியிலுள்ள மல்லாவி என்கிற இடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை 31-10-2000 அன்று சோல்ஹைம் சந்தித்தார். அவருடன் இலங்கைக்கான நார்வே தூதுவரான ஜான் வெஸ்ட்போர்க், நார்வேயின் வெளியுறவுச் செயலக நிர்வாக அதிகாரியான செல்வி ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டல் ஆகியோரும் சென்றிருந்தனர். பிரபாகரனுக்கும் இவர்களுக்குமிடையே இரண்டு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையின்போது, "சந்திரிகா, இனப் பிரச்னையைப் போரின் மூலமே தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளவர். பொதுவாக சமாதானப் பேச்சு போர்ச்சூழலில் நடைபெற முடியாது. அங்கு அமைதி நிலவ வேண்டும். போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும். பொருள்கள் தாராளமாகக் கிடைக்கப் பெறவேண்டும். இதன் பின்னணியில் அமைகிற பேச்சே வெற்றி பெறும். இருந்தாலும் புலிகள் சமாதானப் பேச்சில் ஈடுபடத் தயாராக இருக்கிறார்கள்-நான் தயாராக இருக்கிறேன்' என்று பிரபாகரன் தெரிவித்தார்.
நன்றி கூறி விடைபெற்ற நார்வே குழு, நேரடியாகக் கொழும்பு சென்றது. அதிபர் சந்திரிகாவிடம் பிரபாகரன் கூறியதைத் தெரிவித்தனர். அவரோ, பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்த நிலையிலும், போர் நிறுத்தம் அறிவிக்க முடியாது என்றும், போருக்கிடையே பேசலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
இருப்பினும் நார்வே தூதர்கள் தங்களது முயற்சிகளில் இருந்து பின்வாங்காமல், பிரபாகரனுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரத்துக்கான துணையமைச்சர் ரேமண்ட் ஜான்சன் புரிந்துணர்வு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
அக் கடிதத்தில், "18 மாதங்களாக ஸ்ரீலங்காவின் அதிபர் சந்திரிகா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரிடமும், புலிகளின் பேச்சாளரான அன்டன் பாலசிங்கத்திடமும் தொடர்புகொண்டு பேசியதில், பேச்சுவார்த்தைக்கு இணக்கம் காட்டப்பட்டதற்கு நன்றி தெரிவித்ததுடன், மிகுந்த கவனத்துடன் மனிதநேயத்துக்கான புரிந்துணர்வு திட்டம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக' குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் சில திட்டங்களுக்கான குறிப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதில் பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழலை உருவாக்கும் யோசனைகள் இருதரப்பும் ஏற்கும் விதமாக பொதுவாகக் கூறப்பட்டிருந்தன.
அதில், வன்னிப் பகுதியில் ஆயுதக் குவிப்பு கூடாது என்றும், மக்களின் அன்றாடத் தேவைகளுக்குண்டான பொருள்கள் தாராளமாகக் கிடைக்க அரசு வழிசெய்ய வேண்டும் என்றும், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு செக் பாய்ண்டில் பொருள்கள் வந்து இறங்க வழி செய்யவேண்டும் என்றும், இவ்வாறு பொருள்கள் குவிக்கும்போதும், விநியோகிக்கும்போதும் புலிகள் ஆயுதப் பிரயோகம் செய்யலாகாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புலிகள் தரப்பில் வே.பிரபாகரன் 27, நவம்பர் 2000 அன்று தான் ஆற்றிய மாவீரர் தின உரையில், "நார்வே நாட்டின் புரிந்துணர்வை ஏற்பதாகவும், இந்த விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசின் எண்ணங்களுக்கேற்ப எங்களது செயலும் இருக்கும்' என்றும் கூறியிருந்தார்.
சந்திரிகா இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால், பிரதமரும் ராணுவத் தளபதியும் வெவ்வேறு குரல்களில் பேசி, பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
ஆனால், பிரபாகரன் சமாதானப் பேச்சில் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு, ஒரு மாதம் போர்நிறுத்தம் செய்வதாகவும் டிசம்பர் 24-ஆம் தேதி அறிவித்தார்.
சந்திரிகா, அப்போதும் எதுவும் பேசவில்லை. மாறாக சிங்கள ராணுவம் வழக்கம்போல் ஆங்காங்கு சிறுசிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருந்தது. இந்த வகையான எரிச்சல் மூட்டும் நடவடிக்கைகளை பிரபாகரன் சகித்துக்கொண்டதுடன், மேலும் 3 மாதம் போர்நிறுத்தம் என்றார் (வார் அண்ட் பீஸ்-அன்டன் பாலசிங்கம், பக்.344).
பிரபாகரனின் போர்நிறுத்த அறிவிப்புகளை அதிபரின் செயலகம் முற்றிலுமாக நிராகரித்து, போருக்கு இடையேதான் பேச்சு என்பதைத் தெரிவித்தது. போர்நிறுத்தம் முடிந்ததும் பிரபாகரன் 24, ஏப்ரல் 2001 அன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "போர்நிறுத்தம் அறிவித்த நான்கு மாதங்களில் 160 போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 400 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். முல்லைத்தீவு, திருகோணமலையில் மக்கள் வாழும் பகுதிகளில், தொடர்ந்து வான்வழியாக குண்டுவீச்சு நடத்தப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள ராணுவத்தின் இந்தச் செயல் எங்களை, எங்களது போராளிகளை உசுப்பிவிடத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தக் காலத்தில் சிங்களக் கடற்படை, வான்படைகளுக்கு ஏராளமான அளவில் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலும் நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளை மதிக்கும் வகையில் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். ஒத்துழைப்பு கொடுப்போம். அதே வேளையில், எங்களது போர்நிறுத்தத்தை இதற்கு மேலும் நீட்டிப்பது எவ்வாறு?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதே நாளில் (ஏப்ரல் 24) சிங்கள ராணுவம் "அக்னி ஜ்வாலா' என்ற பெயரில் ஆனையிறவுப் பகுதியில் முப்படைகளைக் கொண்டும் தாக்குதலைத் தொடுத்தது. ஆனையிறவுத் தளத்தை மீண்டும் கைப்பற்றுவது இத் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. சிங்கள ராணுவத்தின் 52, 53 மற்றும் 55-வது படைப் பிரிவுகளில் உள்ள 12 ஆயிரம் துருப்புகள் ஒருசேரத் தாக்கின.
இந்த நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குபவராக பாதுகாப்புத்துறை அமைச்சர் அநுருத்த ரத்தவத்தே பலாலி விமானதளத்தில் வந்து தங்கியிருந்தார். எதிர்பார்த்த எதிர்த் தாக்குதல் இல்லை. ராணுவத்தினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தனர். ராணுவத்தினரை முன்னேறவிட்டு, திடும்மென புலிகள் ராணுவத்தினரைத் தாக்கினர்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் திகைப்புற்று, சிதைந்து ஓடினர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திறங்கிய கடற்படையினர் மீதும் சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்டது. "அக்னி ஜ்வாலை' அணைந்து போனது என்று குறிப்பிட்ட பாலசிங்கம், 600 வீரர்களை இழந்து, 2 ஆயிரம் பேர் படுகாயமுற்று ஓடியதாகவும் தனது நூலான வார் அண்ட் பீஸில் (பக்.349) குறிப்பிட்டுள்ளார்.
www.dinamani.com

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...