Thursday, November 5, 2009

கூவம் நதியின் மிசை...







அக்மார்க் சென்னைவாசியான நான் சிறுவயதில் இருந்து கூவம் ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தான் அழுக்கோடும், துர்நாற்றத்தோடும் ஓடிக்கொண்டிருந்தாலும் அல்லது தேங்கி நின்றுகொண்டிருந்தாலும் அதன் மீது எனக்கு எப்போதுமே ஓர் பிரமிப்பு உண்டு. சென்னையில் பெரும்பாலும் எங்கு சென்றாலும் திடீரென குறுக்கிட்டு ஹாய் சொல்லும் இந்த பிரம்மாண்ட ஆறு? (சாக்கடை!) எங்கிருந்து வருகிறது என பல சமயங்களில் யோசித்ததுண்டு. ஆனால் இதற்காக ஒருநாள் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டி வரும் என்று அப்போது நிச்சயமாக கற்பனை கூட செய்ததில்லை.
சென்னையின் வரலாற்றை கூவத்தை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்பது புரிந்தவுடன், கூவம் தொடங்கும் இடத்தை நேரில் சென்று பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். ஒரு சனிக்கிழமை காலை நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு எனது மோட்டார் சைக்கிளில் கூவத்தின் ஊற்றுக்கண்ணைத் தேடிப் புறப்பட்டேன். அதற்கு முன்னர் அது பற்றி சில தகவல்களை சேகரித்தேன். கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் என்ற கிராமத்தில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த கிராமத்தில் பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள சிவனுக்கு பல நூற்றாண்டுகளாக கூவம் ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் நீரில் தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கூவம் ஆறு இவ்விடத்தில் தூய்மையாக இருக்கும். இவைதான் நான் சேகரித்த தகவல்கள்.
கூவம் கிராமத்திற்கு எப்படி செல்வது என நண்பர்கள் சிலரிடம் விசாரித்தேன். திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் டெல்ஃபை டிவிஎஸ் நிறுவனம் தாண்டியதும் வரும் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சில கிலோமீட்டர்கள் பயணித்தால் மப்பேடு என்ற இடம் வரும், அங்கிருந்து சுமார் 4 கி.மீ சென்றால் கூவம் கிராமம் வந்துவிடும் என்றார்கள்.
அதேவழியைப் பின்பற்றி மப்பேடு பகுதியை நெருங்கும்போதே சாலையோரத்தில் ஒரு புராதன கோவில் கண்களில்பட்டது. கூவம் கோவில் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என்ற சந்தேகத்துடன் அந்த கோவிலுக்குள் சென்றோம். ஆனால் அது மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் ஆலயம் என்றார் கோவில் சிவாச்சாரியார். ராஜராஜ சோழனின் தமையன் ஆதித்த கரிகாலன் கிபி 967இல் கட்டிய கோவில். பொன்னியின் செல்வனில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவாரே அதே ஆதித்த கரிகாலன்தான். கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு கூவம் நோக்கி வண்டியை விரட்டினோம்.
கூவம் எல்லையில் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிளைச் சாலை பிரிந்து ஊருக்குள் செல்கிறது. வழி நெடுகிலும் பசுமையான வயல்கள் எங்களை தலைசாய்த்து வரவேற்றன. ஒருவழியாக கூவம் திருபுராந்தக சுவாமி கோவிலை மதியம் 12 மணியளவில் சென்றடைந்தோம். கோவில் சிவாச்சாரியார் இப்போதுதான் நடையை சார்த்திவிட்டு கிளம்பினார் என்றார்கள். இந்த கோவிலில் உள்ள திருபுராந்தகசுவாமியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வது கிடையாது. எனவே அவர் தீண்டாத் திருமேனி ஆண்டவர் என்று வழங்கப்படுகிறார் என்றும், இந்த லிங்கம் காலநிலைக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மையுடையது என்றும் கேள்விப்பட்டிருந்தேன். எனவே திருபுராந்தகரை பார்க்க வேண்டும் என ஆவலுடன் சென்றிருந்தேன். தீண்டாத் திருமேனி ஆண்டவரை காணும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கோவிலை சுற்றிப் பார்க்கலாம் என்றது சற்று ஆறுதலாக இருந்தது.
சுற்றி வரும் போது கண்ணில்பட்ட கிணறும், அபிஷேக நீர் குடிக்காதீர்கள் என்ற அறிவிப்பும் லேசாக உறுத்தியது. சுவாமிக்கு கூவம் ஆற்றில் இருந்து வரும் நீரில்தான் அபிஷேகம் நடைபெறுவதாக கேள்விப்பட்டேனே என்று உள்ளூர்வாசி ஒருவரிடம் என் சந்தேகத்தை வெளிப்படுத்தினேன். 'அதெல்லாம் ஒருகாலத்தில அப்படி இருந்ததுங்க, இப்ப ஆத்துல தண்ணியே கெடையாது. அப்படி இருந்தாலும் 4 கிலோ மீட்டர் போய் தண்ணி எடுத்துவர ஆள் இல்லை. அதான் கோவில் கிணத்து தண்ணியையே பயன்படுத்துறோம்' என்றார். விசேஷ காலங்களில் மட்டும் ஆற்றில் மணலைத் தோண்டி ஊற்றெடுக்கும் தண்ணீரை எடுத்து வருவோம் என்றார். சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை. இது திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம்.
கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய அழகிய குளம் இருக்கிறது. இந்த குளத்தில் தவளைகள் இருக்காது என்பது இதன் சிறப்பம்சம் என்றார்கள். நானும் சிறிது நேரம் தவளைகளை தேடிப் பார்த்தேன். ஆனால் ஒன்று கூட கண்ணில்படவில்லை. தவளைகளை கணக்கெடுப்பதை விட்டுவிட்டு வந்த வேலையைப் பார்ப்போம் என்று கூவம் ஆற்றைப் பார்க்கப் புறப்பட்டோம். வழியில் ஒருவரிடம் கூவம் ஆறு எங்கு புறப்படுகிறது, அதன் தோற்றத்தை பார்க்க எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டோம்.
கூவம் ஏரியில் இருந்து தான் கூவம் ஆறு புறப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் கிடையாது. நரசிங்கபுரம் என்ற ஊருக்கு போனால் அந்த ஏரியைப் பார்க்கலாம் என்றார். உடனே அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்திற்கு போனோம். அங்கிருந்த சிலரிடம் கூவம் ஆறு இங்கிருந்துதான் தொடங்குகிறதா என்று கேட்டால் அதெல்லாம் தெரியாது, இங்க ஒரு ஏரி இருக்கு அவ்வளவுதான் என்று கூறிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். நாங்கள் ஏரியைப் பார்க்கப் போனோம். மிகப் பரந்த ஒரு பொட்டல்வெளி எங்களை வரவேற்றது. கூவம் ஏரிக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் வரிசையாக கம்பங்களை நட்டுவைத்திருக்கிறது. ஆடு, மாடுகள் மேய்கின்றன. எப்போதோ நிறைந்து கிடந்த பழைய நினைவுகளை அசைபோட்டபடி கூவம் ஏரி அமைதியாக எங்களைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தது. அதில் இருந்த வேதனை உள்ளுக்குள் என்னவோ செய்தது. நான் தேடி வந்த தூய்மையான கூவத்தின் பிறப்பிடம் இதுதான் என்று மனது நம்ப மறுத்தது.
கனத்த மனதுடன் வெளியில் வந்தபோது எதிர்ப்பட்ட சிலரிடம் கூவம் ஆறு எங்கிருந்து தொடங்குகிறது என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். ஆனால் இம்முறை வேறு ஒரு புதிய பதில் வந்தது. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு போனால் கேசவரம் அணைக்கட்டு வரும், அங்குதான் கொற்றலை எனப்படும் குசஸ்தலை ஆறும், கூவம் ஆறும் பிரிகிறது. அதுதான் கூவத்தின் பிறப்பிடம் என்றார்கள். கூவத்தின் ஊடாகவே பயணிக்க வேண்டுமென்றால் இங்கிருந்து மாரிமங்கலம் போய், அனக்கட்டாபுத்தூர் வழியாக உறியூர் என்ற ஊருக்கு போங்கள். அங்குதான் அந்த அணை இருக்கிறது என்றார் ஒரு பெரியவர்.
மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல கூவத்தின் பிறப்பிடத்தை பார்க்காமல் ஊர் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பயணத்தை தொடர்ந்தோம். வறண்டு பாலைவனமாகக் கிடக்கும் கூவம் ஆற்றின் கூடவே பயணித்தோம். ஆங்காங்கே ஆழ்துளைகளைப் போட்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே பயணித்து மாரிமங்கலத்திற்குள் நுழையும்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வந்துவிட்டதாக பெயர்ப் பலகைகள் அறிவித்தன. அடுத்து உறியூரைக் குறிவைத்து முன்னேறினோம். ஒரு இடத்தில் ஆற்றில் இறங்கி ஏறியதும் உறியூர் வந்துவிட்டது. அது வேலூர் மாவட்டம் என்றது அங்கிருந்த பெயர்ப் பலகை. மரத்தடியில் அமர்ந்திருந்த சிலரிடம் கூவம் இங்கிருந்துதான் புறப்படுகிறதா என்று கேட்டோம். 'ஐயையோ, அது கூவம் கிராமத்தில இருந்துல்ல வருது' என்று எங்களை பரிதாபமாகப் பார்த்தார்கள். 'சரிங்க, கேசவரம் அணை எங்கிருக்கு?' என்று கேட்டோம். இன்னும் 3 கிலோமீட்டர் போங்க என்றார்கள். உறியூரில் இருந்தும் 3 கிலோ மீட்டரா? வெயில் மண்டையைப் பிளந்தது, நாக்கு தள்ளியது. இருப்பினும் தொடர்ந்து முன்னேறினோம்.
கடைசியில் ஒருவழியாக கேசவரம் அணைக்கட்டை அடைந்துவிட்டோம். ஆனால் இங்கும் ஒரு சொட்டு நீரைக் கூடப் பார்க்க முடியவில்லை. மழைக்காலங்களில் குசஸ்தலை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் இங்கு இரண்டாகப் பிரித்துவிடப்படுகிறது. ஒன்று புழல் நீர்த்தேக்கத்திற்கும், மற்றொன்று பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் செல்கிறது. இதில் பூண்டிக்கு செல்லும் ஆறு, கூவம் கிராமத்திற்கு அருகில் வரும்போது கூவம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீருடன் சேர்ந்து கூவம் ஆறாக உருவாகி சென்னையை நோக்கி நகர்கிறது. கூவம் ஆறு என்பது கூவம் கிராமத்தில் தொடங்குகிறது என்றாலும், அதற்கான பிள்ளையார் சுழி கேசவரம் அணைக்கட்டில் போடப்படுகிறது என்பதுதான் அரசு ஆவணங்களிலும் கூறப்பட்டுள்ள தகவல். மொத்தத்தில், கூவத்தின் தொடக்கமாக கூறப்படும் இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டோம்.
திரும்பும் வழியில் தாகத்தை தணிக்க தண்ணீர் பாக்கெட் வாங்கிக் குடித்த போது, பல நூற்றாண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த ஒரு ஆற்றைத் தேடி வந்து தண்ணீரையே பார்க்காமல் திரும்பும் அவலம் முகத்தில் அறைந்தது.



The author can be contacted at parthibank2006@gmail.com



No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...