ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 168: போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!

By Paavai Chandran and published in Dinamani.

இலங்கை அரசியல் சட்டப்படி அதிபர்தான் பாதுகாப்புக்கும் அமைச்சராவார். பாதுகாப்பு அமைச்சர் என்று சொல்லப்படும் அமைச்சர்கள் வெறுமனே துணை பாதுகாப்பு அமைச்சர் என்றுதான் அழைக்கப்படுவர்.

எனவே பிரதமர் ரணிலின் உத்தரவை, அதிபர் சந்திரிகா புறம் தள்ளினார். முப்படைகளுக்கும் தலைவர் என்ற முறையில் தளபதிகளும் சந்திரிகாவின் பேச்சையே கேட்டனர். போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடும் முன்பு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் சந்திரிகா குற்றம்சாட்டினார்.

ஆனால், சமாதானத் தேவதை என்றும், அமைதித் தேவதை என்றும் லட்சுமண் கதிர்காமரின் வெளியுறவுத்துறையால் பிரசாரப்படுத்தப்பட்டிருந்த சந்திரிகா உலகளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ரணில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், செய்த இன்னொரு நகர்வாக, "நார்வே நாட்டின் சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாக இருப்பேன்' என்று அறிவித்தது ஆகும். அதுமட்டுமன்றி தமிழர்கள் பகுதியில், சந்திரிகாவால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை 15, ஜனவரி 2002 முதல் நீக்குவதாகவும் அறிவித்தார்.


விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் நார்வே நாட்டின் புதிய பிரதமர் கே.எம். பாண்டெவிக்கிற்கு ஒரு கடிதம் எழுதி, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த இரண்டரையாண்டு காலமாக சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நார்வே நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, தமிழீழத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு நல்லது வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அக்கடிதத்தில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்திசைவாக விடுதலைப் புலிகள் அமைப்பு நடந்து கொள்ளும் என்றும் உறுதியளித்திருந்தார்.

ஜனவரி முதலாம் தேதி எழுதப்பட்ட இக் கடிதத்திற்கு நார்வே நாட்டின் பிரதமர் கே.எம். பாண்டெவிக் உடனடியாகப் பதில் எழுதி, சமாதான முயற்சிகளை அரசு சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பாட்டர்சன் மற்றும் அரசுச் செயலாளர் விதார் ஹெல்கசன் ஆகியோர் மேற்பார்வையிடுவர் என்றும் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் நார்வே நாட்டு சமாதானக் குழுவினர் புலிகள் மற்றும் அரசிடம் போர் நிறுத்தம் குறித்த தங்களது திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர் (ஜனவரி 7). இதனையொட்டி லண்டனில் இருந்த அன்டன் பாலசிங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான வரைவுத் திட்டத்தை எழுதவும், நார்வே நாட்டுக் குழுவினரிடம் தொடர்பு கொள்ளவும் பணிக்கப்பட்டார்.


வன்னிப் பகுதியில் இருந்த அன்டன் பாலசிங்கம் லண்டன் சென்றது எவ்வாறு என்பது இங்கு அறிவது அவசியமாகும். வன்னியில் இருந்த அன்டன் பாலசிங்கத்தின் இடது சிறுநீரகம் முற்றிலுமாகப் பழுது ஆனதால், அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவது அவசியம் என்று புலிகளின் மருத்துவரான சூரி கருத்து தெரிவித்தார்.

இதனையொட்டி லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நார்வே நாட்டு அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டனர். இறுதியில் எரிக் சோல்ஹைமையும் அணுகினர். இலங்கையின் நார்வே நாட்டுத் தூதரகமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் சந்திரிகா அரசைத் தொடர்பு கொண்டு, தாங்கள் அனுமதித்தால் அன்டன் பாலசிங்கத்துக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். சந்திரிகா மனிதாபிமானமற்ற முறையில், புலிகள் இயக்கத்துக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அவை:

1) வடக்கு-கிழக்கில் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபடக் கூடாது.
2) வான் மற்றும் கடல் வழியாக அந்தப் பிரதேசத்திற்கு முகாம்களுக்கு செய்யப்படும் விநியோகத்திற்குக் குந்தகம் இழைக்கக் கூடாது.
3) நாடு முழுவதும் உள்ள அரசு சொத்துகளைத் தாக்கியழிக்கக் கூடாது.
4) தடுத்து வைத்திருக்கும் எல்லாப் போர்க் கைதிகளையும் (செஞ்சிலுவைச் சங்கம் அறிந்த மற்றும் அறியாத) விடுவிக்க வேண்டும்.
5) புலிகள் படையில் 18 வயதுக்குள்ளான போராளிகளை அதிலிருந்து விலக்கி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டன.

"இந்தக் கோரிக்கைகள் ராணுவ ரீதியானவை. இதற்கும் நோயுற்ற பாலசிங்கத்தை சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே நானும் பாலாவும் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டோம்' (சுதந்திர வேட்கை- அடேல் பாலசிங்கம்) என்று தனது நூலில் குறிப்பிட்ட அடேல், மாற்று வழியில் கப்பல் மூலம், தென் கிழக்கு ஆசிய நாடொன்றில் யாருமறியாமல் ரகசியமாக சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் அங்கிருந்த லண்டன் தூதுவர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டது என்றும், அடேல் பாலசிங்கத்துக்கு ஆஸ்திரேலிய தூதுரகம் மூலமாக புதிய பாஸ்போர்ட் பெற்று, சிகிச்சை மேற்கொண்ட நாட்டின் உயர் அதிகாரிகளான நண்பர்களின் உதவியால் லண்டன் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் மருத்துவர்கள் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதை அங்கீகரிக்கவில்லை. இந்த சமயத்தில்தான் நார்வே நாட்டுச் சமாதானக் குழுவினர் லண்டனில் பாலசிங்கத்தைச் சந்திப்பது நேர்ந்தது.

இதன் பின்னர் நார்வே நாட்டு தூதுக் குழுவினர், தங்கள் நாட்டு மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்தலாம். ஆனால் அந்தச் சிறுநீரகத்தின் செயல்பாடு குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தனர்.

இதன்படி, வேறு வழியின்றி, பாலசிங்கத்துக்கு நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அங்கு சில மாதங்கள் தங்கி ஓய்வு எடுத்த பின்னர் பாலசிங்கம் தம்பதியினர் லண்டன் திரும்பினர்.

லண்டனிலிருந்த பாலசிங்கத்தை சமாதான முயற்சி தொடர்பாக விதார் ஹெல்கசன், எரிக் சோல்ஹைம், ஜான் வெஸ்ட்போர்க், ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டல் உள்ளிட்ட தூதுக் குழுவினர் சந்தித்தது இவ்வாறுதான். இருதரப்பிலும் பல தடவைகள் பேச்சு நடத்தி ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்தனர்.

22 பிப்ரவரி, 2002 அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கிளிநொச்சியில் இருந்தபடி இந்த ஒப்பந்தத்தில் வே. பிரபாகரன் முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வவுனியாவுக்கு வந்திருந்து கையெழுத்திட்டார்.

இதேநேரத்தில், நார்வே நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் குழுவினர் ஆஸ்லோ நகரில், பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள்- இலங்கை அரசுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதான செய்தியை உலகுக்கு அறிவித்தனர். இதுகுறித்து ஜான் பீட்டர்சன் விளக்குகையில் தெரிவித்ததாவது:

"இதுவரை நடந்த யுத்தங்களின் மூலம் இலங்கையில் 60 ஆயிரம் உயிர்கள் பலியாகி இருக்கின்றன. பல லட்சக்கணக்கானோர் பல்வேறு வகையில் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, இந்நிலையில் சமாதானப் பேச்சும், போர்நிறுத்தமும் அவசியமாகிறது. இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், சிங்களர்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் இயல்பு வாழ்க்கை வாழ உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க நார்வே நாட்டுத் தலைமையில் சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அக்குழு, போர் நிறுத்ததைக் கண்காணிக்கும்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள் எடுத்த மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும். அதாவது சமாதானத்துக்காக எடுத்திருக்கிறார்கள். சமாதானம் என்பது நீண்டபாதை. அது கரடு முரடானது. பார்க்க சுலபமானது. ஆனால் உண்மை அதுவல்ல. இருதரப்பினருக்கும் ஓர் அர்ப்பணிப்பு உணர்வும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே இந்த நீண்ட பாதையைக் கடக்க முடியும்.

ஒளிமயமான எதிர்காலம் எங்கள் முன் தென்படுகிறது. எங்களது பயணத்தில் வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த ஒப்பந்தம் மூன்று அம்சங்களை உள்ளடக்கி உள்ளது.
1) போராளிகளோ அரசோ ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது; அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்.
2) இலங்கையின் அனைத்து இன மக்களும் இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு, பேதமின்றி அனைத்துப் பிரிவினருக்கும் உண்டான உரிமைகள் சலுகைகளை அடையப் பாடுப்படுவது.
3) போர் நிறுத்தக் காலத்தில் இவைகளைக் கண்காணிக்க நார்வே தலைமையில் கண்காணிப்புக் குழு மேற்பார்வை இடுவது- ஆகியவை அடங்கும்.

புலிகள்- அரசுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அறிந்து தமிழர்கள் மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியிலும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது.

ஆனால் சந்திரிகாவோ இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை இது என்றும் இதுகுறித்த "முன் அனுமதி'யைத் தன்னிடம் பெறவில்லை என்றும் கடுமையான விமர்சனங்களில் இறங்கினார்.

இதுகுறித்து நார்வே நாட்டு சமாதானத் தூதுவர் எரிக் சோல்ஹைம் பின்னர் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிடுகையில், "அப்போதைய காலப் பகுதியில் பல்வேறு கஷ்டங்கள் இருந்த போதிலும் அரசுக்கும் புலிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையானது, 1983-ல் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு முதன்முதலாக ஏற்பட்ட உறுதியான- அமைதியான- சூழ்நிலையை உருவாக்கியது. அதுவே அப்போது எங்களது சாதனையாக இருந்தது.' (இலங்கையில் சமாதானம் பேசுதல்- குமார் ரூபசிங்கவுக்கு அளித்த பேட்டியில். பக். 443) என்று தெரிவித்துள்ளார்
www.dinamani.com

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire