ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-161: மாத்தையாவுக்கு மரண தண்டனை!

புலிகளுக்கும், சந்திரிகா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. சந்திரிகா அரசு, பொருள் போக்குவரத்தை மட்டுமே முக்கிய அமசமாகக் கருதியது. புலிகளோ, பொருளாதாரத் தடையை முற்றிலுமாக நீக்குவதை பிரதானமாக்க முடிவு செய்திருந்தனர். அரசு பொருள் போக்குவரத்தை சரிசெய்ய முயன்றாலும், தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ராணுவச் சோதனைச்சாவடி அப்பொருள்களைத் தமிழர் பகுதிக்கும் கொண்டு செல்ல தடை விதிக்க, அதிகாரம் பெற்றிருந்ததுதான் புலிகளின் அதிருப்திக்குக் காரணம்.
""தினசரி உபயோகமான தீப்பெட்டியும், சோப்பும், எண்ணெய் வகைகளும் கூட இவ்வாறு சோதனைச் சாவடியில் தடுக்கப்படுகிற நிலை. பாதுகாப்பு என்கிற பெயரில் குடையையும், ஷு பாலிஷையும் கூட தடுக்கிறார்கள். கடற்புலிகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறி, கடலில் மீன்பிடித் தொழில் செய்வதைத் தடுக்கிறார்கள். இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் வறுமையில் உழல்கிறார்கள். இவ்வாறான தடைகள் மூலம், மக்களை கூட்டுத் தண்டனைக்கு உள்படுத்துவது, மனிதநேயத்துக்கு எதிரானது'' என்பது புலிகளின் கருத்தாக இருந்தது.
""பொருளாதாரத் தடையை நீக்குவதையே பேச்சுவார்த்தையின் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சந்திரிகா தமிழர்களின்பால் அக்கறை கொண்டிருப்பதாகப் பேசுவது உண்மையென்றால், முந்தைய அரசு விதித்த அனைத்து தடைகளையும் நீக்குவதே சரியானதாகும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்'' என்று பிரபாகரன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு உத்தரவிட்டார்.
இதன்படி பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் யாழ்ப் பல்கலைக்கழகத் திறந்தவெளித் திடலில், அரசுப் பிரதிநிதிகளை வரவேற்று சுண்டிக்குளத்திலுள்ள தலைமையகத்துக்கு அழைத்து வந்தார்கள்.
புலிகளின் பிரதிநிதிகள், பொருளாதாரத் தடையை நீக்குவது, போர் நிறுத்தம், குடா நாட்டில் இருந்து சுலபமாக வன்னிப் பகுதி சென்று வர சங்குப்பிட்டி-கீரைத் தீவு சாலைப் போக்குவரத்தைத் திறந்து விடுவது, இதுதொடர்பாக பூநகரி முகாமை அகற்றுவது உள்ளிட்டவற்றை வலியுறுத்திப் பேசினார்.
முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், அடுத்த கட்ட பேச்சுக்கான திட்டத்தில் அது சேர்க்கப்பட்டது.
கரிகாலனும், பாலபட்டபெந்தியும் கையெழுத்திட்ட அறிக்கையும் அவற்றை உறுதிப்படுத்தியது. அறிக்கையில், கரிகாலன், சந்திரிகா அரசிடம் சுமுகமான நல்ல சூழலை நாடு எதிர்பார்ப்பதாகக் கூறியதுடன், வடக்கு - கிழக்கில் மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துரைத்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. பிரதமரின் செயலாளர் பாலபட்டபெந்தி, சந்திரிகாவின் நல்லெண்ணத் தூதுவர்களாக வந்துள்ள தாங்கள், நல்லது செய்ய முயல்வோம் என்றும் உறுதி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புலிகளின் பல்வேறு கோரிக்கைகள் உடனடியாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 24, 1994 என்று முடிவானது.
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை, குறிப்பிட்ட தேதியில் நடைபெறாமல் தள்ளிப் போனதற்கு காமினி திஸ்ஸநாயக்காவின் கொலை காரணமாக அமைந்தது. அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெறுவதையொட்டி, காமினி திஸ்ஸநாயக்கா மீண்டும் யுஎன்பி கட்சியில் இணைக்கப்பட்டு, அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். பிரதமராக இருந்த சந்திரிகா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார்.
அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காமினி திஸ்ஸநாயக்கா மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். யுஎன்பி என்கிற ஐக்கிய தேசியக் கட்சி, இக்கொலைக்கு புலிகளும் சந்திரிகா அரசுமே காரணம் என குற்றம் சாட்டியது. சந்திரிகா இக் கொலை குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காது இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குப் பயந்து, 24-ஆம் தேதி நடைபெற இருந்த புலிகளுடனான பேச்சு வார்த்தையைத் தள்ளி வைத்தார்.
காமினி திஸ்ஸநாயக்காவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி ஸ்ரீமா திஸ்ஸநாயக்கா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் அட்டவணைப்படி நவம்பர் 9-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தவிர்த்து நடைபெற்ற தேர்தலில் 62 சத வாக்குகளைப் பெற்று சந்திரிகா இலங்கையின் அதிபரானார். (நவம்பர் 12).
மக்களுக்கு சந்திரிகா விடுத்த செய்தியில், ""அமைதியை விரும்பும் பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உழைப்பேன்'' என்று அறிவித்தார்.

சந்திரிகா அதிபரான நிலையில், அதனை வரவேற்கும் விதமாக புலிகள் இயக்கம் நவம்பர் 12 முதல் 19-ஆம் தேதி வரை போர் நிறுத்தம் அறிவித்தனர். ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை சந்திரிகா கண்டுகொள்ளவில்லை. மாறாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாயிற்று. வன்னிப் பகுதியில் உள்ள நெடுங்கேணியில் நடைபெற்ற தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் அமுதன் கொல்லப்பட்டு, அவரது தலையைத் துண்டித்து, ராணுவத்தினர் எடுத்துச் சென்றனர்.
செஞ்சிலுவைச் சங்கம் மூலம், சுப.தமிழ்ச்செல்வன் அமுதனின் (மல்லி) துண்டிக்கப்பட்ட தலையை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியிருந்தார். "அதுமட்டுமன்றி சந்திரிகா அதிபரானதையொட்டி, நல்லெண்ண நடவடிக்கையாக ஒருவார போர் நிறுத்தம் அறிவித்தப் புலிகளுக்கு சிங்கள ராணுவம் அளித்த பரிசு இதுதானா?' என்றும் கேட்டிருந்தார்.
இதற்குப் பதலிளித்த துணைப் பாதுகாப்பு அமைச்சர் கர்னல் அனுருத்த ரத்தவத்தே, போர் நிறுத்தம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் சிதைந்த நிலையில் இருந்த அமுதனின் தலை எரியூட்டப்பட்டது என்றும், அதன் சாம்பலை அனுப்பியுள்ளதாகவும் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.
இந்தக் கடிதத்துக்கு வே.பிரபாகரனே பதில் எழுதினார். அந்தப் பதிலில், ""எங்களது ஒருவார போர் நிறுத்தம் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அதிபருக்குத் தெரிவித்துவிட்டு, பத்திரிகைகளுக்கு செய்தி அளித்து, அவை உள்ளூர் மற்றும் உலகப் பத்திரிகைகளிலும், ஊடகத்திலும் வெளிவந்துள்ளதை நினைவூட்டுகிறேன். அரசின் புதிய நிலை எங்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. அமுதன் தலை துண்டிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட செய்தி எங்களை கோபமூட்டச் செய்யப்பட்ட ஒன்றாகும். இது அமைதியை விரும்பும் அதிபரின் நிலைக்கு எதிரானதாகும். எனவே நடந்த சம்பவத்துக்கு உரிய விசாரணையை உடனே மேற்கொண்டு, எமக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்றும் அமைச்சர் அனுருத்த ரத்தவத்தேயிடம் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த துணை பாதுகாப்பு அமைச்சர் கர்னல் அனுருத்த ரத்தவத்தே சிங்களத் தலைவர்களின் கொலைகளுக்குப் புலிகளே காரணம் என குற்றம்சாட்டினார்.
இதனால் வெகுண்ட பிரபாகரன், சிங்களத் தலைவர்களின் ஒப்பந்த மீறல், 60 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது, பொருளாதாரத் தடை விதித்ததன் மூலம் அன்றாடம் பல சாவுகளுக்குக் காரணமானது எல்லாமே சிங்களத் தலைவர்கள்தான் என்று குறிப்பிட்டு, கடுமையான வார்த்தைகளில் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று பாலசிங்கத்திடம் வலியுறுத்தினார்.
பிரபாகரனை சமாதானம் செய்த பாலசிங்கம், ""அரசியல் ரீதியாக அவர்களை வெற்றி கொள்ள நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்படிதான் அவர்களுக்குக் கடிதம் எழுத வேண்டும்'' என்று கூறினார்.
அதன்படி எழுதப்பட்ட கடிதத்திற்கு, ""1995 ஜனவரி முதல் இரு வாரங்களுக்குப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கலாம்'' என்று அனுரத்த ரத்தவத்தே பதில் எழுதினார். அக்கடிதத்தில், ஜனவரி 2-ஆம் நாள், அரசுப் பிரதிநிதிகள் வந்து பேசி ஓர் ஒப்பந்தத்திற்கு வருவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மாத்தையா (மகேந்திரராசா) மீது பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், வேலூர் சிறையிலிருந்து தப்பியப் பிரபாகரனின் முன்னாள் மெய்க்காவலர் மூலம், பிரபாகரனைக் கொலை செய்யவும் திட்டம் இருந்தது என்றும், அதன் பிரகாரமே சிறையிலேயே தயாரிக்கப்பட்டு, அவர் ரகசியமாக விடுவிக்கப்பட்டார் என்றும், அவர் தப்பி வந்ததாகக் கூறியதை நம்பி அவர் மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்தார் என்பதும்கூட விசாரணையில் தெரிய வந்தது. மாத்தையாவின் கொழும்புப் பயணங்கள், இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் அவருக்குள்ள தொடர்பு எல்லாமே விசாரணையில் வெளிவந்தன. இறுதியில் மாத்தையாவுக்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. 1995, ஐனவரி 2-ஆம் தேதி, சிங்களக் கடற்படையின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.எஸ். பீரிஸ், காப்டன் பிரசன்னா ராஜரத்னே மற்றும் விடுதலைப் புலிகள் சார்பில் சுப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துபேசி, புலிகள், சிங்களப் படை இரண்டில் யார் யுத்தத்துக்கு முயன்றாலும் அதுகுறித்து 72 மணி நேரத்துக்கு முன்பே தெரிவித்து விட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அதுவே ஒப்பந்தமாக உருவாகி, யாழ்ப்பாணத்தில் இருந்தபடியே பிரபாகரனும், கொழும்பில் இருந்தபடியே சந்திரிகாவும் கையொப்பமிட்டனர்.
இதே ஒப்பந்தத்தில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க குழு அமைப்பது என்றும், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத் தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 6 பகுதிகளில் குழு அமையும் என்றும், இதில் அரசுத் தரப்பில் இருவரும், புலிகள் தரப்பில் இருவரும், உலக நாடுகளின் பிரதிநிதி ஒருவர் குழுவின் தலைவராகவும் இருந்து கண்காணிப்பார் என்றும் முடிவாயிற்று.
இந்த ஒப்பந்த நடவடிக்கைகளில் நடுவராகவும், கடிதப் பரிமாற்றத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே உதவி செய்தது.
www.dinamani.com

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire