"மூன்றாவது ஈழப் போர்' என்று சொல்லப்படும் யுத்தம் திருகோணமலை துறைமுகத்தில் நின்றிருந்த போர்க் கப்பலை கடற்புலிகள் வெடி வைத்துத் தகர்த்ததில் ஆரம்பமாயிற்று. கடற்புலிகளின், தற்கொலைப் படையினர் ஏராளமான வெடி பொருள்களுடன் படகில் சென்று, போர்க் கப்பல் மீது மோதி, அதை அழித்தார்கள். இந்தக் கப்பல் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும். அடுத்து இன்னொரு கப்பல் 21 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டதாகும். அந்தக் கப்பலும் தகர்க்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அதிர்ந்த சந்திரிகா, பலாலியில் படைகளைக் குவித்தார். வான் வழியாகவும், கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் தாக்குதல் ஆரம்பமாயிற்று. யாழ்ப்பாணத்தை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின.
அமைதிப் பேச்சுக்கு எதிரானவர்கள் புலிகள் என்ற பிரசாரத்தை சந்திரிகாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தீவிரமாக முடுக்கிவிட்டார். கொழும்பில் இருந்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரை அழைத்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக சந்திரிகா உழைத்ததாகக் கூறினார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர்- என்று சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில், யாழ் மக்கள் மீது விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் பதுங்கு குழியை நோக்கி ஓடினர். "முன்னேறிய பாய்ச்சல்' என்ற பெயரை வைத்துக் கொண்டு சிங்களப் படை முன்னேறியபோது, "புலிப் பாய்ச்சல்' என்று புலிகள் தங்களது எதிர்த் தாக்குதலை தீவிரமாக்கினர். புலிகளைத் தாக்குவதாகக் கூறிக் கொண்டு, அப்பாவி மக்களைத் தாக்குகிறார்கள் என்று புலிகள் குற்றம் சாட்டுவதற்கு முன்பாகவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது குற்றச்சாட்டைப் பதிவு செய்தது.
ஆனால், லட்சுமண் கதிர்காமர் சொன்னதுதான் உலக அரங்கில் எடுபட்டது. பதிலுக்கு, புலிகள் வெளி உலகத் தொடர்பு கொள்ள முடியாதவாறு யாழ்ப்பாணத்தில், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் அரசு துண்டித்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், தங்களது உண்மைத் தகவல்களை கொழும்பில் உள்ள தலைமைக்குக்கூடத் தெரிவிக்க முடியவில்லை.
எனவே, பேச்சுவார்த்தை தோல்வியுற்றதற்குக் காரணம் என்ன என்று சில கடிதப் போக்குவரத்துகள் புலிகள் தரப்பில் வெளியிடப்பட்டன. அதன்மூலம் பேச்சுவார்த்தைக்குள்ளும் நடந்த அவர்களது போராட்டம் வெளியே தெரியவந்தது.
பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்களும் இனப் பிரச்னைகளை அறிந்தவர்கள் அல்ல; அரசு அதிகாரி, ஒரு வழக்கறிஞர், ஒரு கட்டடக் கலைப் பொறியாளர் உள்ளிட்டவர்களை அனுப்பி ஒரு சாதாரணப் பேச்சுவார்த்தையாக்கவே சந்திரிகா விரும்பினார். வேறு வழியின்றி புலிகளும் இவர்களுடன் பேச நேர்ந்தது. இவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதிபரிடம் தெரிவிக்கிறோம், கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம் என்று மட்டுமே இவர்களால் கூற முடிந்தது.
ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் முன்பும் அரசின் அல்லது ராணுவத்தின் நடவடிக்கைகளால் எழுந்த சிக்கல் குறித்துப் பேசுவதும், சென்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுகளில் அரசு கருத்து என்னவாயிற்று- முடிவு என்னவாயிற்று என்பது குறித்துப் பேச முடியாமலும் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டது.
பெரும்பாலான கடிதங்களில், சந்திரிகாவும் அரசு அதிகாரிகளும் வார்த்தைகளில் இனிப்பை சேர்த்திருந்தனர். அறிவிப்புகளை வெளிப்படுத்தினர். ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று கெடு விதித்தால், செப்டம்பர் 2-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறியதைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர்.
சந்திரிகா என்ன நினைக்கிறார் என்பது அதிகாரிகளுக்குப் புரியாது. அதிகாரிகள் செய்வது சந்திரிகாவுக்குப் போவதில்லை. சந்திரிகாவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் சிங்கள ராணுவத்துக்குப் பிடிக்கவில்லை என்பதால், அவர்கள் போர் நிறுத்தத்தை மீறி- தாக்குதலையும், நெருக்குதலையும் அளித்துக் கொண்டே இருந்தார்கள் என்றெல்லாம் புலிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
"யாழ்குடாவுக்கும் வன்னிப் பகுதிக்கும் இடையே போக்குவரத்துக்குத் தடையாக உள்ள முகாமையும், பொருள் போக்குவரத்துக்கு தடையாக உள்ள தாண்டிக்குளம் சோதனைச் சாவடியையும் நீக்க ஒவ்வொரு கடிதத்திலும் வலியுறுத்தியும், எங்களது முயற்சி வெற்றி பெறவில்லை. தாண்டிக்குளம் சோதனைச் சாவடியின் அட்டகாசத்தால், பொருள்கள் கொண்டுவர முடியாமல், படகுகளில் கொண்டு வந்து, அல்லது ரகசியமாக எடுத்து வந்து, பொருள்களை யாழ் பகுதியில் விற்கும்போது, அவற்றின் விலை பன்மடங்கு உயர்கிறது என்று சொல்லியும் சோதனைச் சாவடியை நீக்க சந்திரிகா விரும்பவில்லை.
கடும் நெருக்குதல் கொடுத்து, சந்திரிகா பொருளாதாரத் தடையை நீக்கினாலும், இந்த சோதனைச் சாவடி, ராணுவம் வசம் இருந்ததால், அங்கே ராணுவம் விதிப்பதுதான் உத்தரவு. இவை எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
அதேபோன்று, சிங்கள ராணுவம், பூநகரி முகாமை அப்புறப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆனையிறவு முகாம்களும் சேர்ந்து, யாழ் குடாவை வளையமிட்டன. வன்னிப் பகுதியை அடைய வேண்டுமானால் யாழ் மக்கள் கிளாலி கடல் வழியாக, படகுகளில் செல்ல நேர்கையில், கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி, பலர் மடியும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சங்குபிட்டி வழியைத் திறக்கவும், பூநகரி முகாமை அகற்றவும் புலிகள் கோரினர்.
அரசு உண்மையிலேயே அமைதித் தீர்வுகளை விரும்பினால், யாழ் மக்களின் க்குவரத்தைச் சுலபமாக்க வேண்டும். ஆனால், அரசு இக் கோரிக்கையை ஏற்கவில்லை' என்றும் பாலசிங்கம் தனது "வார் அண்ட் பீஸ்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறும் வெளிநாட்டுப் பிரதிநிதியே, இந்தக் குழுவின் தலைவராக இருப்பார் என்று முடிவு எடுத்த பின், விடுதலைப் புலிகள் தலைவரைச் சந்திக்கக்கூட அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டது. ஓயாத கடித வரைவு மூலம் இக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது என்றும் பாலசிங்கம் கூறியுள்ளார்.
அதிபர் பதவியில் அமர்ந்த நேரத்தில் அமைதியை விரும்பும் தேவதையைப் போன்று தோற்றம் காண்பித்த சந்திரிகா, உண்மையில் அந்தத் தோற்றத்துக்குப் பொருந்தாதவர் என்றும், அவரது ஆட்சியில் பைபிள் கதைகளில் வருவது போன்று கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேற்றப்பட்டதைப் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது என்றும், அவரின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்பின்போது இந்த அவலம் நிறைவேறியது என்றும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
யாழ்ப்பாணம் மீது 1995-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியன்று தாக்குதல் தொடங்கப்பட்டபோதிலும், முழு அளவிலான தாக்குதல் ஜூலையில்தான் தொடங்கியது. தாக்குதல் தீவிரமானதும், யாழ்ப்பாணவாசிகள் வழக்கமாக பதுங்கு குழிகளில்தான் பதுங்குவார்கள். ஆனால், தற்போது பெரும்பாலானோர் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துக்கொண்டு சாவகச்சேரியை நோக்கி, நகர்ந்தனர்.
ஓரிரவில் எடுத்த முடிவாக ஊரையே காலி செய்துகொண்டு போவது போன்று அவர்கள் சென்றனர். அதேபோன்று, புலிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கி, கிளிநொச்சிக்குச் சென்றனர். அவ்வப்போது புலிகளின் கொரில்லாக்கள் தாக்குதலைத் தொடுத்தவண்ணம் இருந்தனர்.
புலிகளின் தாக்குதலின்றியே யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.
தமிழகத்தில் 1996-ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கி வந்தபோது, கருத்து வேறுபாடு காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற அமைப்பினைக் கண்டார். மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை உடன்பாடு கண்டு தேர்தலைச் சந்தித்தன. தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 173 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி மீண்டும் நான்காவது முறையாக முதல்வரானார். அதேபோன்று, இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றிவாய்ப்பை இழந்து, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஐக்கிய முன்னணி 332 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பிரதமராக தேவகௌடா பொறுப்பேற்றார்.
www.dinamani.com
Subscribe to:
Post Comments (Atom)
New Maersk Vessel Class To Enter Service
A.P. Moller - Maersk (Maersk) has named the first vessel in a series of 17,480 TEU vessels equipped with dual-fuel methanol propulsion. Th...

-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
No comments:
Post a Comment