Monday, July 18, 2011

சமச்சீர் கல்வி தொடர வேண்டும் : சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர்பான புத்தங்கள் வழங்கிட வேண்டும் என்றும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ஆட்சி மாற்றம்- கல்வி முறையில் மாற்றம்: கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மெட்ரிக்., அல்லாத எல்லோருக்கும் சமமான கல்வி வழங்கும் நோக்கத்தில் சமச்சீர் கல்வி என்ற புதிய திட்டத்தை துவங்கியது. இதன்படி கடந்த கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு, மற்றும் 6ம் வகுப்பில் இருந்து கொண்டு வரப்பட்டு திட்டம் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏனைய வகுப்புகளுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்படவிருந்தது. இந்நிலையில் அ.தி.மு.க, ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சமச்சீர் கல்வியை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. எந்த பாடத்தை கற்பிப்பது, புத்தகம் அச்சிடுதல் உள்ளிட்ட காரணத்தினால் கடந்த ஜூன் 1 ம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் 15 ம் தேதி வரை தள்ளிப்போனது. பள்ளிகள் திறந்தாலும் பாடங்கள் எதுவும் நடத்தப்படாமல் உள்ளது.

சுப்ரீம் கோர்ட் வரை சென்ற வழக்குகள்: சமச்சீர் கல்வி ரத்து செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் பொது நலமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்தது சரியல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. ஜூன் மாதம் 14 ம் தேதி அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் ; தலைமைசெயலர் தலைமையில் ஒரு புதிய நிபுணர்குழுவை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய பணித்தது. இத்துடன் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கல்வியாளர்களை கொண்ட , தலைமை செயலர் தேபேதிரநாத் சாரங்கி தலைமையிலான குழு இந்த வழக்கில் கடந்த கால சமச்சீர் கல்வி தொடர்பான விஷயங்கள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்தது. இதில் இந்தக்கல்வி தரமானதாக இல்லை என்றும் மொழிப்பெயர்ப்பில் தவறுகள் உள்ளதாகவும், புத்தகம் திருத்தம் உள்பட முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டியிருப்பதால் சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டது.

சட்ட திருத்தமும் ரத்து: இந்த வழக்கில் இன்று சென்னை மதியம் (12. 45 மணியளவில் ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் கொண்ட நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டில் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர்பான புத்தங்கள் வழங்கிட வேண்டும் என்றும், பழைய பாடத்திட்டத்திற்கு தடை விதித்தது. மேலும் இன்னும் 3 மாதத்திற்குள் ஒரு குழுவை அமைத்து சமச்சீர் கல்வி குறைபாடுகளை தீர்த்துக்கொள்ளலாம். தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தமும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. புதிய பாடப்பபுத்தகம் வழங்குவதற்கான கால அவகாசம் போதாது என்று அரசு வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது .இது ‌தொடர்பாக தனி மனுவை தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

New Maersk Vessel Class To Enter Service

  A.P. Moller - Maersk (Maersk) has named the first vessel in a series of 17,480 TEU vessels equipped with dual-fuel methanol propulsion. Th...