அரசின் பெட்ரோலியப் பிரசாரம்!

"பெட்ரோல், டீசல் வாங்கியது போக மக்களிடம் மிகக் குறைவான பணமே இருக்கும். இதனால் மக்களின் வாங்கும் திறன் குறையும். பொருள்களின் தேவையும் படிப்படியாக குறையும். இதனால் பொருள்களின் விலையும் குறையும்" அலுவாலியா 
பி.எஸ்.எம். ராவ்
Published in Dinamani on July 15, 2011:


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தினால் காய்கறி உள்ளிட்ட எல்லா அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும். பணவீக்கம் அதிகரிக்கும். அதனால் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை மேலும் சிக்கலாகும் என்பதுதான் அனைவரது அச்சமும்.

ஆனால், நமது திட்டக்குழுவின் துணைத் தலைவரான மான்டேக் சிங் அலுவாலியா வேறு மாதிரி யோசிக்கிறார். பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதன் நோக்கமே பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தினால், சரக்குப் போக்குவரத்துக்கான செலவு உயரும். இடுபொருள்களின் விலை உயர்வதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.
இது ஒட்டுமொத்தமாக விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் அப்பாவி மக்கள் மீது சுமத்தப்படும். இதுதான் இதுவரையிலான அனுபவத்தில் நாம் கண்டது. தேர்ந்த பொருளாதார நிபுணர்கள்கூட இதை ஒப்புக் கொள்வார்கள். அதனால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். பணவீக்கம் அதிகரிக்கக்கூடாது என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பு.
அலுவாலியாவும் இதையேதான் விரும்புவார். அவருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்கிறது. ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் கூறும் நடவடிக்கைதான் பொருத்தமானதாக இல்லை. பணவீக்கம் உயர்ந்துவிடக்கூடாது என்பதற்காக வருமுன் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
ஆனால், அலுவாலியாவோ முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் போலும். அதனால்தான் பணவீக்கத்தை பணவீக்கத்தின் மூலமே கட்டுப்படுத்துவதற்காகப் புதிய கருத்தை முன்வைத்திருக்கிறார்.
எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்தால், பணப்புழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இது பணவீக்கம் மட்டுப்பட உதவும், இதுதான் அலுவாலியா கூறியது.
பெட்ரோல், டீசல் வாங்கியது போக மக்களிடம் மிகக் குறைவான பணமே இருக்கும். இதனால் மக்களின் வாங்கும் திறன் குறையும். பொருள்களின் தேவையும் படிப்படியாக குறையும். இதனால் பொருள்களின் விலையும் குறையும் என்பது அலுவாலியா சொல்லவரும் விஷயமாக இருக்கலாம்.
இது கிட்டத்தட்ட ஹோமியோபதி மருத்துவமுறையைப் போன்றதுதான். அதாவது நோய்க்கான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதையே மருந்தாகத் தருவது. இப்போது பணவீக்கத்துக்குக் காரணம் சில பொருள்களின் விலை உயர்வுதான். அந்தப் பொருள்களின் விலையையே மீண்டும் உயர்த்துவதுதான் அதற்குத் தீர்வாகவும் அமையும்.
இப்படித்தான், பெட்ரோல் விலைகளை உயர்த்தி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்று புதிய ஹோமியோபதி பொருளாதாரக் கொள்கையை அலுவாலியா கண்டுபிடித்திருக்கிறார்.
மான்டேக் சிங்கின் இந்தக் கண்டுபிடிப்பைப் பொருளாதார மேதைகளின் விவாதத்துக்கு விட்டுவிட்டு, நடைமுறை அனுபவம் எப்படியிருக்கிறது என்பதைப்பற்றி மட்டும் நாம் பார்ப்போம்.
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன; நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்கிற பல்லவியை அரசு தொடர்ந்து பாடிக்கொண்டேயிருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளால் அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தைக் குறைப்பதற்காகத்தான் அரசின் இந்தக் கழிவிரக்க நாடகம். மக்கள் மீது குறைந்தபட்ச விலையேற்றமே சுமத்தப்படுகிறது, பணவீக்கத்துக்கும் பெரிய பாதிப்பில்லை என்பதுபோல காட்டுவதற்குத்தான் முயற்சிகள் நடக்கின்றன.
அரசு எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அந்த நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை என்றும் அரசு கூறி வருகிறது. கச்சா எண்ணெய் விலையும் காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, உள்நாட்டுப் பெட்ரோலியப் பொருள்களின் விலை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலும், எண்ணெய் நிறுவனங்களின் ஆண்டு நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்தாலும், அரசு கூறுவது பொய் என்பது தெரியும். எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் நல்ல லாபத்தில் இயங்குகின்றன. கடந்த 2006-07-ம் ஆண்டிலிருந்து 2009-10-ம் ஆண்டு வரையில் இந்த நிறுவனங்களுக்கு ரூ.1,26,294 கோடி லாபம் கிடைத்திருக்கிறது.
இந்த லாபம் வானத்தில் இருந்து கொட்டிவிடவில்லை. எண்ணெய் வர்த்தகம் மூலம் சம்பாதித்ததுதான். அதிக லாபம் கிடைத்தது என்றால், மக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதாவது எண்ணெய் நிறுவனங்களின் லாபம், மக்களின் நஷ்டம். இப்படிக் கிடைக்கும் லாபம், பொதுத்துறை நிறுவனங்களின் கொள்கைகளுக்கே நேர் எதிரானது.
பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சமூக நலன் கருதியே செயல்பட வேண்டும் என்பது நமது நாட்டின் கொள்கையை வகுத்தவர்களின் நோக்கமாக இருந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் "லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை' என்கிற அடிப்படையில்தான் செயல்பட வேண்டும். சுகாதாரம், கல்வி போன்றவை கண்டிப்பாக அரசுக்கு நிதிச் செலவை மட்டுமே ஏற்படுத்த வேண்டும். அப்படியிருந்தால்தான் சமூக ரீதியிலான லாபம் கிடைக்கிறது என்று பொருள்.
இதுதான் அறிவார்ந்த சமூகம் அமைவதற்கும், வேலைவாய்ப்புகளைப் பெறும் அளவுக்கு மக்கள் தயாராவதற்கும் வழி. நமது நாட்டின் கொள்கையும் அதுவாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் நாட்டின் வருங்கால வளர்ச்சியில் பங்காற்றப் போகும் முக்கியத் துறையாக பெட்ரோலியத்துறை அடையாளம் காணப்பட்டது. அரசு இதைப் பொறுப்புடன் வழிநடத்த வேண்டும் என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது.
இப்போதைய அரசு நமது கருத்தில் இருந்து மாறுபடக்கூடும். பெட்ரோலியத் துறையைக் காப்பாற்றுவதற்காகப் பெரும் பணத்தை இழந்திருப்பதாகக் கூறக்கூடும். ஆனால், அரசு தரும் புள்ளிவிவரங்களைக் கொண்டே இதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
அரசு அளித்துள்ள தகவல்களின்படி, 2005-06 முதல் 2009-10 வரையிலான நிதியாண்டுகளில் பெட்ரோலியப் பொருள்கள் மூலமாக அரசுக்கு ரூ.3,91,486 கோடி வரிவருவாய் கிடைத்திருக்கிறது. இது தவிர, கம்பெனி வரி, பெட்ரோலிய லாபத்தில் பங்கு, ராயல்டி போன்றவை மூலமாகவும் வருமானம் அரசுக்கு வந்திருக்கிறது. பெட்ரோலியப் பொருள்கள் மூலம் மாநிலங்களுக்கும் கணிசமான வருவாய் கிடைத்திருக்கிறது.
குறிப்பிட்ட அந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.72 ஆயிரம் கோடி கிடைத்திருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மானியங்கள் தந்து கொண்டிருக்கிறோமே என்று கூறுவார்கள். ஆனால், இவ்வளவு வருமானத்தை கஜானாவில் கொட்டும் துறைக்கு மத்திய அரசு தரும் மானியம் எவ்வளவு தெரியுமா? வருமானத்தில் வெறும் 6.64 சதவீதம்தான். ஒட்டுமொத்தமாக அரசு வழங்கும் மானியத்தில் இந்த மானியத்தின் அளவு 6 சதவீதத்துக்கும் குறைவானதே.
அதாவது, குறிப்பிட்ட அந்த 5 ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் துறைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே அரசு மானியமாகத் திருப்பித் தந்திருக்கிறது. மற்றதெல்லாம் லாபம்தான். மாநில அரசுகளின் வருவாயையும் சேர்த்தால் லாபம் இன்னும் அதிகமாக இருக்கும்.
அதேபோல், சர்வதேச கச்சா எண்ணெய் விலையால் பெட்ரோல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்கிற அரசின் வாதத்தையும் ஏற்க முடியாது.
இந்தியாவிலுள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 80 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது உண்மைதான்.
அதேசமயம், மீதி 20 சதவீத கச்சா எண்ணெய் உள்நாட்டிலிருந்தே பெறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் கணக்கிடும்போது உள்நாட்டுக் கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச விலையே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கணக்கீட்டை ஏற்க முடியாது. உள்நாட்டுச் சரக்கு நிச்சயமாக விலை குறைவாகக் கிடைக்கக்கூடியதே.
அதுபோல, இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் தேவைக்குப்போக உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டுகின்றன.
இதையும் கணக்கில் கொண்டால், ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.20 முதல் ரூ.26-க்குள் விற்க முடியும். அப்படி விற்றாலும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதே உண்மை.
ஆனால், கொள்ளை லாபம் அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களும், அவற்றுக்கு ஆதரவாக அரசும் செயல்படுவதுதான் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம்.
உண்மை இப்படியிருக்க, முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும்விதமாக, "தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பெரு நஷ்டம்' என்று அரசும், எண்ணெய் நிறுவனங்களும் திட்டமிட்டே பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன.
மேலும் மேலும் விலை உயர்த்திக் கொண்டே போகவும், பெட்ரோலைப் போலவே, டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்து விடுவதற்காகவுமே இந்த பொய்ப் பிரசாரம் நடத்தப்படுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்தப் பிரசாரத்தில் மயங்கி, மக்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்பது அரசின் எண்ணம்.
இது ஒருபுறம் இருக்க, மானியங்களை முற்றிலுமாக ஒழித்துவிடும் வகையில் "ரொக்க மானியம்' வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பதில் அரசு முனைப்பாக இருக்கிறது.
இப்போது சலுகை விலையில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுவரும் ஏழை மக்களில் பலர் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பெட்ரோலியப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்கும்போது, "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்பதே தங்களது பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையாக இருக்கும் என்று அறிவித்திருந்தது.
இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் "பெரும்பாலானவர்களை வெளியேற்றும்' வெற்றுப் புள்ளிவிவர வளர்ச்சியே அரசின் உண்மையான கொள்கையாக இருக்கும் போலிருக்கிறது.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire