வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் (9,10)

Source: http://www.mullai.org/tamil-ilakiyam/43/1157.html
அதுவரை பொறுமையாக இருந்த படையினன் கதிரையில் அமர்ந்தான். அந்தப் படையினன் உண்மையிலேயே என்ன கேட்கப்போகிறான் என்று தெரியாத தயக்கம் என்னை ஆட்டிப்படைத்ததைவிட தரையில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டு கிடக்கும் பையனின் பரிதாபக்கோலம்தான் மனதை துன்புறுத்தியது.
‘தங்கச்சி பேர் சொல்லுங்க’ என்று கேள்விகளை கேட்கத் தொடங்கினான். எனினும் அவனது பார்வை அடிக்கடி அந்த பையனில் நிலைத்தது. அந்த படையினனுக்கு இரக்கம் இருந்தாலும் அவனால் தனித்து எந்த முடிவையும் எடுக்கமுடியாது.
அந்தப் பையனின்மீது பாதிக்கண்ணும் எழுத்தின்மீது மீதிக்கண்ணுமாக பதிவைத் தொடர்ந்தான். எலும்பும் தோலுமாக படையினனின் அருகில்கிடந்த பையன் இன்னமும் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தான். அன்மை நாட்களில்தான் காயமடைந்திருப்பான் போலும்.
குருதியிழப்பே அவனை அவ்வளவு சோர்வடையச் செய்திருக்கிறது. அவனுக்கு அதிகமாய் வியர்த்துக்கொட்டிது. அவன் கண்களை மூடிவிடுவானோ என்ற அச்சம் எனக்கு எழுந்ததை போலவே அந்த படையினனுக்கும் எழுந்திருக்கலாம். ஒருவாறு நானும் பெயர், முகவரி அடங்கிய பதிவை கொடுத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு விலகினேன்.
சந்தியாவும் கங்காவும் பதிந்துவிட்டுவர நேரம் இரவு பத்து மணியை தாண்டிவிட்டது. மூவருமாகச்சென்று கூட்டத்திடையே ஒரு இடைவெளியை தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டோம். என்ன செய்வதென்று புரியவில்லை.
பசியோ தாகமோ களைப்போ எதுவுமே தெரியவுமில்லை. ஆனால் எல்லாம் இருந்தனதான். என் சுடிதாரின் தோள்துண்டை விரித்து மூவரும் நிலத்தில் சரிந்தோம். வானம் இருளாகவே இருந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை மின்குழிகள் எரிந்துகொண்டிருந்தன. இருந்திருந்துவிட்டு வட்டுவாகல் தாண்டிய பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தன. எனக்கு தலைவலித்தது. மூளை களைத்துப்போனதால் ஏற்பட்ட வலி. கண்களை மூடிக்கொண்டு அமைதியாக கிடக்கத்தான் முயன்றேன். ஆனால் முடியவில்லை.
அந்த இரவு மிகவும் கொடியதாய் இருந்தது. இப்போதைக்கு விடியமாட்டேன் என்றது. நித்திரையுமில்லாத விழிப்புமில்லாத அரைமயக்க நிலையில் கிடந்த என் கால்கள் வலித்தன. நாரி அறுந்துவிடுமளவுக்கு உளைந்தது.
ஒழுங்கான உணவில்லாத காரணமாய் ஏற்பட்ட சத்துக்குறைபாடுதான் காரணம் என்பதை அறிவேன். ஏனெனில் குருதிச்சோகையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவள்தான் நான் என்பது எனக்குத் தெரியும். சற்றே திரும்பக்கூட இடமற்று நெருக்கிக்கொண்டு கிடந்த என் உடலால் வேதனையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
vanni-valam-91
உடல் வேதனையைவிட மனவேதனை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. தூங்க இயலாமல் கண்களில் வழிந்த துயரத்தை துடைத்தபடியே அந்த நீண்டதான இரவை கழித்தேன்.
லட்சக்கணக்கான மக்களிடையே கிடந்தபோதும் யாருமே இல்லாத உணர்வு என்னை வாட்டியது. அது பெற்றோரையோ உறவுகளையோ நினைத்தபோது ஏற்பட்ட உணர்வல்ல. சரிவர இன்னதுதான் காரணம் என்று குறித்துச் சொல்லமுடியாத ஒரு மாபெரும் வெறுமை என்னை விழுங்கிவிட்டதைப்போல உணர்ந்தேன்.
அந்த வெறுமைதான் காலம் முழுதும் இனி என்னை ஆக்கிரமிக்கப்போவதாய் பயங்காட்டியது.
17.05.2009. பொழுது புலர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் வெட்டைவெளி முழுவதையும் நிறைத்துக்கிடந்தார்கள்.
அழுக்கு ஆடைகளோடும் குழப்பமான உணர்வுகளோடும் நின்ற அவர்களில் எவரும் எவருடனும் எதுவும் பேசிப்பகிரவில்லை. ஆளாளுக்கு தண்ணீர் தேடியும் உணவு தேடியும் அலைந்தார்கள்.
உடலால் இயங்கக்கூடிய மனிதர்கள் ஆயிரக்கணக்கானோரிடையே அடிபிடிப்பட்டு அவற்றை கொண்டுவந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் உணவுப் பொதிகளுடனோ தண்ணீர் போத்தில்களுடனோ போவதையும் வருவதையும் காணமுடிந்தது. சிலர் தம் உடைகளையும் நனைத்துக்கொண்டு சென்றார்கள்.
ஒரு போத்தில் தண்ணிக்காககூட இரத்தம் சிந்தவேண்டி இருக்கு’ என்றபடி எங்களை கடந்து சென்றவரை அவதாணித்தேன். அவரது கெண்டைக்காலில் இருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. கொஞ்சத் தண்ணீருக்கு தொகையானவர்கள் போட்டி போடுவதால் ஏற்படும் தகராறுகளை போக்க படையினர் வரிசையில் நிற்கச் சொன்னார்களாம்.
வரிசையில் நி;ன்றால் கிடைக்காதென்று அதை குழப்பிக்கொண்டு நின்ற அனைவருக்கும் மட்டையடி விழுந்ததாம். இப்படியான கதைகளை கேள்விப்படவே தண்ணீர் வேண்டாம் என்றுவிட்டது என் உள்ளுணர்வு.
இடிபட்டுப்போய் ஒரு குவளை தண்ணீரைகூட என்னால் எடுத்துவர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அடடா பதியும் இடத்தில் தந்த போத்திலையாவது கொண்டு வந்திருக்கலாமே என்று கவலையாக இருந்தது.
இவ்வளவு தொகையானதாக மக்கள் வருவார்கள் என்று படையினருக்கு தெரியாதாம். இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் இருந்ததுபற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லையாம்.
vanni-valam-91
அதனால்தான் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவும் தண்ணீரும் போதாமல் போய்விட்டதாம். சில ஆயிரம்பேர்தான் வருவார்கள் என்று அரசாங்கம் தமக்குச் சொன்னதாக படையினர் சொல்கின்றார்களாம் என்று மக்கள் கதைத்துக்கொண்டார்கள்.
யானைப்பசிக்கு சோளப்பொரி கிடைத்ததைப்போல சில ஆயிரம்பேருக்கு உணவு கிடைத்தது. பல்லாயிரம்பேர் பட்டினியோடு கிடந்து அழுந்தினார்கள்.
பரந்த புல்வெளியை பகுதி பகுதியாக முட்கம்பிகள் பிரித்திருந்தன. முட்கம்பியின் வெளிப்பகுதி எங்கும் படையினர் காவல் செய்தபடி நின்றார்கள். அவர்கள் எல்லோரும் என்னவெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதை புரிய முடியவில்லை. ஏனெனில் அவர்களது முகங்களில் எந்தவிதமான உணர்வுகளுமே இருக்கவுமில்லை.
‘அக்கா எங்களால் அடிபிடிப்பட்டு சாப்பாடு தண்ணியெல்லாம் எடுக்க முடியாதக்கா. அதோட ஆளாலுக்கு வந்து எழுப்பி கூட்டிக்கொண்டும் போறாங்கள். ஆமி வந்து வா எண்டு கூப்பிட்டால் வரமாட்டன் எண்டு என்னெண்டு சொல்ல முடியும். நாங்க தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசமும் பிரச்சினைதான். இண்டைக்கே உள்ள போவமா?’ என்றாள் சந்தியா.
அவள் சொல்வதும் சரிதான். மூவரும் சென்று உள்ளே செல்பவர்களது வரிசையில் நின்றோம். வரிசையோ ஆமையைவிட குறைந்த வேகத்தில் நகர்ந்தது. பல நேரங்களில் நகரவேயில்லை. அதிகாலை ஐந்துமணிக்கே வரிசையில் இடம்பிடித்துவிட்ட நாங்கள் பகல் பத்துமணிக்கு பிறகுதான் உள்நுழையும் வாயிலருகே வரமுடிந்தது.
ஆனால் அவ்விடத்தில் மூச்செடுக்கவே திண்டாடவேண்டி இருந்தது. குய்யோ முறையோ என்ற சத்தமும் கூக்குரலும் நெருக்கித்தள்ளலுமாக ஒரே களேபரம். சனங்களோடு முண்டியடித்துக்கொண்டு மணிக்கணக்காக நின்றும் அந்த நுழைவாயிலின் கம்பிகளை எட்டிக்கூட தொடமுடியவில்லை.
குழந்தைகளை தூக்கிக்கொண்டும் சிறுவர்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டும் நிற்கும் பெற்றவர்கள் படும்பாட்டை பார்க்க பரிதாபமாக இருந்தது.
மக்கள் அவ்வளவு நெருக்குவார பட்டுக்கொண்டு நிற்கையில் நானும் முண்டியடித்துக்கொண்டு நிற்பது ஈனத்தனமாகவே பட்டது. அப்படி நிற்பதை மிகுந்த அவமானமாக உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன்.
எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கத்துணிந்தவளாய்அத்தனைகாலம் உறுதியுடன் நின்றேனோ அந்த உறுதியெல்லாம்தொலைந்தவளாய் தவிக்கும் சனங்களுக்கு ஒரு வார்த்தைசொல்லக்கூட தகுதியற்றவளாய் நிற்பது கொடுமையானதாய்இருந்தது.
‘சந்தியா எனக்கு அந்தரமாக்கிடக்கு சந்தியா. சனம் போகட்டும் நாங்க ஆறுதலா போவம்’ என்றேன் அவளின் காதருகே.
vanni-valam-91
‘எனக்கும் ஒரு மாதிரித்தானக்கா இருக்கு. சனங்கள் என்ன நினைக்குதுகளோ எண்டு குற்ற உணர்வாகத்தான் இருக்கு’ என்றாள் அவளும்.
‘சரி. பின்னுக்குப்போவம்’ என்று நான் திரும்ப முயன்றேன். என்னால் உடலைக்கூட திருப்ப முடியவில்லை. நிற்கும் இடத்திலிருந்து காலை தூக்கினால் தூக்கியபடியே நிற்க வேண்டியதுதான். மீண்டும் இடம்பிடித்து ஊன்ற அரைமணிநேரம் தேவைப்படும் என்பதை இவ்விடத்தில் நின்ற எவராலும் மறுக்கமுடியாது. அத்தனைபேரும் அரைக்காலில்தான் நின்று தடுமாறினார்கள்.
சனங்களில் முட்டுப்பட்ட என் கைகள் எரிந்தன. அவ்வளவு உடல் வெம்மை. என்னால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. ஒவ்வொரு தடவை காலை நகர்த்தவும் நீண்டநேரம் முயற்சிக்கவேண்டி இருந்தது. சன வெக்கையால் அவிந்துகொண்டிருந்தேன்.
மற்றவர்கள் விடுகின்ற மூச்சு என்னில் சுட்டது. ஓவ்வொருவரின் உடலும் அனலெனச்சுட்டது. மற்றவர்கள் என்னில் முட்டும்போது என்னால் கட்டுப்படுத்த முடியாதளவு ஆற்றாமையும் சினமும் வந்தது. அப்படித்தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு இயலுமானளவு பொறுமை காத்தேன்.
சுமார் ஒரு மணிநேரம் முயன்று ஒவ்வொரு பாதமாய் எடுத்துவைத்து மக்கள் ஐதான பகுதிக்கு வந்தேன். ஓரிரு குடும்பங்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக குந்திக்கொண்டிருந்தவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஏனெனில் கொஞ்சம் நிதானமற்ற நிலையை உணர்ந்தேன். விழமுன் நிலத்தில் அமர்ந்துகொண்டேன்.
அப்படியே எனது பையின்மீது சரிந்து மேற்துணியால் மூடிக்கொண்டு அமைதியாக கிடக்க முயன்றேன். சற்றுநெரத்தில் ஓரளவு நிதானத்தை பெறமுடிந்தது.
vanni-valam-91
நான் எப்போதுமே அப்படித்தான். வலியை உணர்ந்து அதை தாங்கிக்கொள்வேன். அங்கம் முழுவதும் ஆயிரம் காயங்களை சுமந்துகிடந்த காலங்களிலும் குளறி அழுதவளில்லை.
வலியை மூளையால் கிரகித்து அதை உள்வாங்கி அநுபவித்துத்தானே தாங்கிக்கொண்டேன். இப்போது அதே பழைய காயங்களை வெய்யில் கடுமையாய் வறுத்தெடுத்தது. சற்றுநேரத்தின்பின் எழுந்து அமர்ந்துகொண்டேன். ஆனால் கண்களில் காட்சிகள் எதுவும் தெளிவாய் தெரியவில்லை.
‘என்னக்கா தனிய குந்திக்கொண்டு இருக்கிறிங்க?’ என்று பழக்கப்பட்ட குரலொன்று மெதுவாய் கேட்டது.
மின்னஞ்சல் அச்சிடுக PDF
vanni-10-1s‘என்னக்கா தனிய இருக்கிறிங்க?’ என்றது பழக்கப்பட்ட குரலொன்று.
‘ஆ சசியக்கா’ என்று வந்த வார்த்தையை அடக்கிக்கொண்டு மெதுவாக புன்னகைத்தேன். ஏனோ அவளை கண்டது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருந்தது. அப்போது அவளை தங்களுடன் அழைத்துக்கொண்டு வந்தவர்கள் தேநீர் அருந்துவதற்காக வரச்சொல்லி சைகைகாட்டி அவளை அழைத்தனர்.
என்னுடன் நிற்கும்போது அழைத்ததால் அவள் என்னை விட்டுவிட்டுச்சென்று எப்படி தேநீர் பருகுவதென்று தடுமாறினாள். ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூன்றுவேளையும் கஞ்சிகாய்ச்சி ஊற்றியவள் சசியக்கா.
போரின் இறுதி நாட்களில் தொடர்ச்சியாக கஞ்சிக்கொட்டிலை இயக்குவதற்காக அவள் எறிகணை மழைக்குள்ளும் படாதபாடு பட்டவள். நான்தான் அவளை வட்டுவாகலில் வைத்து போ போ என்று பலவந்தப்படுத்தி அனுப்பியவள். என் சொல்லை கேட்டுத்தான் உறவுகளை தேடிப்பிடித்து அவர்களுடன் வந்திருக்கிறாள்.
அவள் சேர்ந்து வந்தவர்களிடம் இருக்கும் கொஞ்சத் தண்ணீரையும் சீனி தேயிலையையும் தெரிந்துகொண்டு எனக்கும் தா என் சிநேகிதிக்கும் தா என்று அவளால் எப்படி கேட்க முடியும். ஆங்காங்கு நின்று அவதானிக்கும் படையினரும் காட்டிக்கொடுப்போரும் என்னை போராளி என்று இனங்கண்டுகொண்டு வந்துவிட்டால் அவர்களையும் அல்லவா விசாரிப்பார்கள்.
அந்த பயம் குடும்பமாக வந்துள்ளவர்களுக்கு எழுவதிலொன்றும் தவறில்லையே. என் கண்முன்னாலேயே பலர் படையினரால் விசாரணைக்கென்று அழைத்துச்செல்லப்பட்டதை பார்த்துக்கொண்டு மக்கள் ஆதரிக்கவில்லை என்று குறைசொல்ல முடியாது. அவர்களுக்கு மனதிருந்தாலும் இடமில்லாத சூழல்தான் அது. சசியக்காவின் திண்டாட்டத்தை புரிந்துகொண்டு சொன்னேன்.
‘பறவாயில்லையக்கா. நீங்க போய் குடியுங்க. சுடுதண்ணி இருக்குமெண்டால் என்னட்ட கோப்பியும் சீனியும் இருக்கு. அரை டம்ளர் எண்டாலும் தாங்க. நான் இதிலையே இருக்கிறன்.’ என்றேன். சசியக்கா சென்று அவர்களிடம் கேட்டுவிட்டு வந்து என்னிடமிருந்த சிறியபொதி சீனியையும் கோப்பியையும் வாங்கிச்சென்றாள்.
அக்குடும்பத்தின் தாயார் கோப்பியை ஆற்றி சசியக்காவிடமே கொடுத்தனுப்பினார். அமைதியாக இருந்து கோப்பியை அருந்தினேன். முதல்நாள் மதியம் அருந்திய தேநீருக்குப்பின்பு நான் குடித்த பானம் அதுதான்.
கோப்பி அருந்தியபின் தலைச்சுற்று குறைந்து விட்டது. கொஞ்சமாய் ஒரு உற்சாகமும் தெரிந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்திருந்தேன். கோப்பியை ஆற்றித்தந்த குடும்பமும் தலையாட்டிவிட்டு போய்விட்டது. பின்பு எழுந்தேன்.
யாராவது எங்களுடன் வா என்று அழைக்கக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்று நோட்டமிட்டேன். நன்றாகத் தெரிந்த ஆயிரம்பேர் இருந்தாலும் அவர்களில் எவரும் போராளிகளாய் இருந்தவர்களை தம்மோடு அழைத்துச்செல்ல துணியவில்லை. அதை தவறு என்றும் சொல்ல முடியாது. அறிந்தவர்கள் யாரும் அவர்களாய் தலையசைத்தால் மட்டுமே நானும் தலையசைத்தேன்.
திருவிழாவில் தொலைந்தபோன சிறுமியைப்போல அங்குமிங்கும் பார்த்தபடி அல்லது யாரையோ தேடியபடி அசைந்துகொண்டிருந்தேன். யாரோ என் போராளிப் பெயரைச்சொல்லி சத்தமாக அழைத்தார்கள். அட இவ்வளவு அச்சமான நிலையிலும் என்னை பெயர் சொல்லி அழைக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள்தான். குரல் வந்த திசையை பார்த்தேன். தெரிந்தவர்தான். தன் மனைவி பிள்ளைகளோடு இருந்தவர் தம்மருகில் வருமாறு கையை காட்டினார். சென்றேன்.
‘இருங்களன் அக்கா’ என்றாள் அவனது துணைவி. அவளருகே அமர்ந்துகொண்டேன். அந்த குடும்பத்தை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். என்னை கண்டவுடன் அவளது கண்கள் குப்பென கலங்கின. அவளை பார்க்க எனக்கும் அழுகை பொத்துக்கொண்டுதான் வந்தது. சற்றுநேரத்தில் எங்களை கட்டுப்படுத்திக்கொண்டோம். பின்புதான் அவள் - தான் காயப்பட்டிருக்கும் விடயத்தை சொன்னாள்.
vanni-10-1
‘எனக்கெல்லா அக்கா காயம்’ என்றாள். அப்போதுதான் அவளின் தோற்றத்தை அவதானித்தேன். கையில்லாத சட்டையை அணிந்திருந்த அவளுக்கு காயம் எதிலென்று தெரியவில்லை. அவளது விலாவின் மேற்பகுதியில் சிறிய காயமிருந்தது. பஞ்சை வைத்து கையால் அதை அமர்த்திக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. ஒட்டுவதற்கு எதுவும் இருக்கவில்லை.
‘ஒட்டிவிடக்கூடியமாதிரி ஏதுமிருந்தால் தாங்களனக்கா’ என்று பரிதாபமாக கேட்டாள். என்னிடம் சிறிதளவு குளிசைகள் தவிர மருத்துவத்திற்கான வேறு எதுவும் இருக்கவில்லை. தொடர்ச்சியாக சரியான உணவில்லாத காரணத்தால் இரத்தச்சோகையினால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு மருத்துவத் தோழிகள் விட்டமின் குளிசைகளை தந்திருந்தார்கள்.
அவற்றை நான் என் பையிலேயேதான் வைத்திருந்தேன். நான் என்னிடமிருந்த சத்துக்குளிசைகளில் கொஞ்சம் கொடுத்தேன். அதை ஒவ்வொருநாளும் குடிக்கச்சொல்லி அக்கறையோடு கொடுத்தேன். அப்போது என்னால் செய்யக்கூடியதாய் இருந்தது அவ்வளவுதான்.
அவர்களுடைய மூத்த மகன் தண்ணீர்போத்தலுடன் வந்துசேர்ந்தான். பதினான்கு வயதுடைய அச்சிறுவன் என்னை பார்த்து புன்னகைத்தான்.
‘அம்மா அக்காவுக்கு குடிக்க குடுங்க’ என்றபடி தன் தாயாரிடம் தண்ணீரை கொடுத்தான். அவள் மூடியை திறந்து போத்திலை என்னிடம் நீட்டினாள். அவர்களது பேரன்பை அப்போது புரிந்துகொண்டேன். அவ்விடத்தில் யாரும் தண்ணீரையெல்லாம் அறிந்தவர் தெரிந்தவர்களுக்காக தியாகம்செய்ய விரும்ப மாட்டார்கள்.
தண்ணீருக்கு அப்போதே விலை ஏறிவிட்டிருந்தது. இயக்கூடியவர்கள் எடுத்துவந்து அதை விற்று பணமாக்கிக்கொண்டிருந்தார்கள். நான் தண்ணீரை வாங்கி கொஞ்சமாய் குடித்தேன். சற்றுநேரத்தில் அவர்களும் புறப்பட்டு விட்டார்கள்.
உச்சி வெய்யில் மண்டையை பிளந்தது. கண்கள் தம்பாட்டில் சோர்ந்தன. அரை மயக்க நிலை என்னை கீழே சரித்தது. யாரோ கிழித்துப்போட்ட புகைப்படங்களடங்கிய அல்பம் ஒன்றை நிலத்தில் விரித்துவிட்டு கையில் தலையை வைத்துக்கொண்டு படுத்துவிட்டேன்.
நேரம் எப்படி கழிந்ததென்று புரியவில்லை. வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாய் என் சக்தியை உறிஞ்சிக்கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. தண்ணீர் குடிக்கவேண்டும் என்று தாகமாய் இருந்தது. ஆனால் என்னிடம் ஒருதுளி தண்ணீருமே இருக்கவில்லை. வயிறு புகைந்தது.
சொல்லிவைத்தாற்போல அந்த வெட்டையில் இருந்த முக்கால்வாசிப்பேரும் அரை மயக்கத்தில்தான் கிடந்தார்கள். வரவர மக்கள் தொகை பெருகுவதை உணரமுடிந்தது. என்னையும் நெருக்கிக்கொண்டு சிலர் என்னருகே சரிந்தார்கள். வானம் ஒருவித மங்கலாய் தெரிந்தது.
உண்மையிலேயே வானம் மங்கலாய்த்தான் இருந்ததா அல்லது என் உணர்வுக்கு அப்படி தெரிந்ததா என்று புரியவில்லை. ஆனாலும்கூட வெம்மையை தாங்க முடியவில்லை. கண்களை திறந்து பார்ப்பதும் மூடிக்கொள்வதுமாக நீண்டநேரத்தை போக்கினேன்.
vanni-10-2
என்னருகே அமர்ந்த காயப்பட்ட பையன் ஒருவனது தாயார் தண்ணீர் போத்திலொன்றுடன் வந்தார். தன் மகனுக்கு குடிக்க கொடுத்துவிட்டு என்னை போராளி என்று இனங்கண்டதால் எனக்கும்கூட ஒரு குவளை தண்ணீர் தந்தார். அந்தத் தாயாரில் ஏற்பட்ட நன்றியுணர்ச்சியை என்னால் வெளிக்காட்ட தெரியவில்லை. உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு அதை பருகினேன். பின்பு என்னைப்பற்றி என் குடும்பம் பற்றி விசாரித்தாள். பதில் சொன்னேன்.
‘எனக்கு உங்கட குடும்பத்தை தெரியுமடா? அம்மாக்கள் காயப்பட்டவையாமே உண்மையா?’
‘ஓமம்மா. கப்பலால அனுப்பினதால பறவாயில்லாம போயிட்டாங்க’ என்றேன்.
‘அதுதான் நல்லதடா. இப்பிடியொரு பயணத்தை உங்கட அம்மாவால தாங்கியிருக்கவே முடியாது என்று சொல்லிக்கொண்டே கோல்மன்ஸ் பை ஒன்றை உடைத்து தண்ணீர் போத்திலுக்குள் கொட்டினார். அதற்குள் கொஞ்சம் சீனியையும் போட்டுவிட்டு குலுக்கினார். குளிர்பானம் தயாராகிவிட்டது. அதில் அருகிலிருந்த சிறுமிக்கும் குடிக்கக் கொடுத்தார்.
பின்பு போத்திலை தனது மகனருகில் வைத்துவிட்டு
‘தாகமாய் இருக்கும்போது மட்டும் ஒவ்வொரு மிடறு குடிங்க ஐயா’ என்றார். மனசு கேட்கவில்லை போலும்.
குவளை ஒன்றில் முக்கால்வாசிக்கு ஊற்றி எனக்கும் தந்தார்.
‘தம்பிக்காக வையுங்க அம்மா. காயப்பட்டவன் பாவம்’ என்று அதை தியாகம் செய்யத்தான் விரும்பினேன். ஆனால் செய்யவில்லை. அதனை வாங்கி அவ்விடத்திலிருந்த சிறிய போத்திலொன்றில் ஊற்றி வைத்துக்கொண்டேன்.
நானும் தாகம் மேலிடும்போது அரைமிடறாவது குடிக்கலாம் அல்லவா? கண்களை திறந்து பார்க்கவே முடியாத வெய்யிலின் அகோரத்தில் நான் மயங்கித்தான் கிடந்தாலும் எவரும் உதவாமல்போகலாம் அல்லவா? அந்த பகல் என்னை வறுத்து எடுத்துவிடும் என்பதை புரிந்துகொண்டு அதை குடிக்காமல் வைத்திருந்தேன். அந்தத் தாய் அருகிலிருந்த சிறுமிய பற்றி சொல்லத் தொடங்கினார்.
‘இந்த பிள்ளைக்கு அப்பா அம்மா இல்லையடா. ஷெல்லடியில செத்திட்டுதுகள். ஊர் சனம், இந்தப்பிள்ளைய என்னை கூட்டிக்கொண்டு போகச்சொல்லி கெஞ்சினதுகள். நான் எங்கட ஊரில மாதர்சங்க தலைவியாக இருந்தனானம்மா. அதுகளின்ர வேண்டுகோள தவிர்க்க முடியேல்லை. அதோட இந்த பிள்ளையும் பாவம் தானேடா. இதுக்கு யார் இருக்கிறா? அழக்கூட தெரியாம அநாதையா நிக்கிது. வவுனியாவில இவட சொந்தக்காரர் இருக்கிறாங்க. கொண்டுபோய் அதுகளோட சேத்துவிட்டால் சரி. அதுகளும் அப்பா அம்மா இல்லாத இந்த பிள்ளைய ஏற்குதுகளோ மாட்டுதுகளோ யாருக்குத் தெரியும்.’ என்றுவிட்டு கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார்.
என்ர மகனுக்கும் காயம். இஞ்ச பாரம்மா விலா பிளந்துகிடக்கு. நான் என்ர பிள்ளைய பாப்பனா இந்த பிள்ளைய பாப்பனா? யாரையம்மா நான் தூக்கிக்கொண்டு வாறது? என்னை ஒருதரும் கொடுமைக்காரி எண்டு சொல்லாதிங்க. இந்தப்பிள்ளை தன்ர பிஞ்சுக்காலால நடையா நடந்துதானம்மா வந்தது. அதுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடாட்டிலும் அது என்ர பிழையில்லம்மா. உயிர் வாழ்றதுக்கு மட்டும்தான் தின்னக் குடுக்கிறன். என்னட்ட என்னம்மா இருக்கு? என்ர மகனுக்கே குடுக்க காணாது. அதில கொஞ்சத்தை பிச்சுத்தான் இவவுக்கு குடுக்கிறன். ஏதோ என்னால முடிஞ்சது’ என்று பெருமூச்சு விட்டார் அந்த தாயார்.
இப்படியொரு இக்கட்டான நேரத்தில் ஐந்து வயது சிறுமியை பொறுப்பெடுத்திருப்பதே பெரிய விடயம். குழந்தையின் நிலைமையையும் தாயாரின் இல்லாமையையும் நினைத்து வேதனைப்பட மட்டுமே என்னாலும் முடிந்தது.
எங்கள் நாட்டில் அநாதைகளே இருக்கக்கூடாது என்பதற்காக எத்தனைவிதமான ஏற்பாடுகள் இருந்தன. எத்தனை இல்லங்களும் காப்பகங்களும் செயற்பட்டன. இதோ கண்முன்னாலேயே அநாதைகள் அதிகரித்துக்கொண்டு செல்கிறார்கள். நினைக்க நினைக்க வேதனையும் வெறுப்புமாக இருந்தது. என் கையறு நிலையை நான் வெறுத்தேன். மரணம்கூட தீண்டாத மனுசியாக இருக்கிறேனே என்று என்னைநானே நொந்துகொண்டேன்.
‘அம்மாச்சி இந்த பிள்ளையையும் பைகளையும் கொஞ்சநேரம் பாத்துக்கொள்ளம்மா. நான் தம்பிய கொண்டே பனையடியில இருத்திப்போட்டு வாறன்’ என்ற அந்த தாய் தன் மகனை தோளில் சாய்த்து தூக்கி நிறுத்தி அணைத்துப்பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்தாள்.
நான் அந்த சிறுமியை அவதாணித்தேன். சூழ்நிலையின் தார்ப்பரியத்தை அறியாதவளாய் அந்தச்சிறுமி கள்ளங்கபடமற்று சிரித்தாள். நான்கு அல்லது ஐந்து வயதை தாண்டியிராத குழந்தை. பாவம் இந்த பிஞ்சுக் கால்களால் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறாள். எனது இதயம் இரும்பாய் கனத்தது. வேதனையுடன் பைமீது சாய்ந்துகொண்டேன். தாங்க மாட்டேன் என்று இதயம் விம்மிப்புடைத்தது. பற்களை கடித்துக்கொண்டு அழுகையை அடக்கினேன்.
‘அன்ரி அன்ரி’ என்று அணுங்கலாய் அழைத்தது ஒரு மழலை குரல். என்ன என்று கேட்கக்கூட தெம்பற்றவளாய் மயங்கிக்கிடந்தேன் நான். மீண்டும் என்னை அழைத்தபடி தோளில் தட்டினாள் அந்த சிறுமி.
‘என்னம்மா?’ என்றேன் இரக்கத்துடன்.
‘அன்ரி கொஞ்சம்போல இதில குடிக்கட்டா? பசிக்குது. சரியா பசிக்கிது’ என்றவள் நான் போத்திலில் வைத்திருந்த அந்த சிறிதளவு குடிபானத்தை தொட்டு காட்டினாள். நான் ம் என்றதுதான் தாமதம் அவள் ஆவலோடு போத்திலை எடுத்து திறந்து இரண்டு மிடறு குடித்தாள். அதில் கொஞ்சத்தை மூடி எனக்காகவும் என்று வைத்தாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த என்னைநோக்கி பளீரென புன்னகைத்தாள்.
அந்தப்புன்னகையில் நன்றியும் மகிழ்ச்சியும் மட்டுமல்ல கொஞ்சமாய் வெட்கமும் தெரிந்தது. முன்பின் அறியாதவர்களிடத்தில் கேட்டுவாங்கி குடித்தேனே என்பதால் ஏற்பட்ட நாணம்தான் அது என்பதை புரிந்துகொண்டு மெதுவாய் அவள் கையில் தட்டிக்கொடுத்தேன்.
சற்றே நேரத்தில் திரும்பிவந்த அந்த தாயார் மிகுதி பைகளையும் தூக்கிக்கொண்டு அந்த சிறுமியையும் விரல்பிடித்து அழைத்துச்சென்றார். செருப்புகளற்ற அந்தப் பிஞ்சுக் கால்கள் எட்டி நடைபோட்டன. விரைவிலேயே அந்தக்கால்கள் சனத்திரளுக்குள் மறைந்து என் கண்களிலிருந்து காணாமல்போய்விட்டன. ஆனால் மனசுக்குள்………………
தொடரும்………………
ஆனதி

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire