படிப்புக்கு வயது தடையல்ல: பொறியியல் படிப்பில் 38 வயதில் சேர்ந்த தியாகி மகன்

source: www.dinamani.com


சென்னை, ஜூலை 7: படிப்பதற்கு வயது தடையல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சுதந்திரப் போராட்டத் தியாகியின் 38 வயது நிறைவடைந்த மகன் ஒருவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ளார்.
 சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சிவக்குமார் அவர். இவர் சுதந்திரப் போராட்ட தியாகி டி.கே. ஜெயச்சந்திரனின் மகன் ஆவார்.
இவரது சொந்த ஊர் திண்டுக்கல் அருகில் உள்ள ஐயம்பாளையம். தீவிர காங்கிரஸ் தொண்டரான ஜெயச்சந்திரன், ஐயம்பாளையம் ஊர் தலைவராகவும் இருந்துள்ளார்.
வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றுள்ள ஜெயச்சந்திரன், 1940-களில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்ததற்காக மதுரை சிறையில் இரண்டு மாத சிறை தண்டனையையும் அனுபவித்துள்ளார்.
தீவிர சுதந்திரப் போராட்ட தியாகியான இவர், 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மூன்றாவதாக பிறந்தவர் சிவக்குமார். தந்தை மறைவுக்குப் பின் சென்னையில் இவர்கள் குடியேறியுள்ளனர்.
சென்னை பச்சயப்பன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் படித்த சிவக்குமார், 8-ம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 10-ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடனும், பிளஸ்-2 தேர்வில் 57 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
1991-ல் பிளஸ்-2 முடித்த இவருக்கு, குடும்பச் சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்ப வருமானத்துக்காக பல்வேறு வேலைகளில் பணிபுரிந்த இவர், 1996-ல் -சிட்டி மேன்- என்ற உள்ளூர் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் 2-ம் வகுப்பும், மகள் எல்.கே.ஜி.-யும் படித்து வருகின்றனர்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக தன்னுடைய பட்டப் படிப்பு தியாகம் செய்த இவர், 19 ஆண்டுகள் கழித்து தனது கனவை நனவாக்கியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற இவர், கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் பிரிவை தேர்வு செய்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் என்ற ஒதுக்கீட்டின் கீழ், இவருக்கு பி.இ. இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2011-12 பொறியியல் கலந்தாய்வில் சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசு ஒதுக்கீட்டின் கீழ் பி.இ. இடம் பெறும் ஒரே நபர் இவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சிவக்குமார் கூறியது:
பிளஸ்-2 முடித்த அடுத்த ஆண்டிலேயே எனது தந்தை இறந்துவிட்டார். இதன் காரணமாக குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இப்போது பொறியியல் படிப்பில் சேர்ந்ததன் மூலம், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளேன். எனது இரண்டு சகோதரர்களும் பட்டப் படிப்பை மேற்கொள்ள வில்லை. மூத்த சகோதரர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். ஜனனபிரியன் கலாசேத்திரா என்ற பெயரில் நடன பள்ளியை அவர் நடத்தி வருகிறார். அடுத்த அண்ணன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். தங்கை பிளஸ்-1 வரை படித்துள்ளார். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
சிறு வயதிலிருந்தே பட்டப் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்போதுதான் சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசுக்கு பி.இ. இடம் அளிக்கப்படுகிறது என்பதை அறிந்தேன்.
இந்த வயதில் படிப்பது கடினம் என்றபோதும், பட்டம் பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளேன். பத்திரிகை நடத்துவதால், பகலில் கல்லூரிக்குச் செல்வதில் பாதிப்பு இருக்காது என்றார்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire