Tuesday, July 5, 2011

கரும்புலிகள் நாள் - 2011

Source:http://www.viduthalaipulikal.net/
தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/ஊ/அ/05/11 
தமிழீழ விடுதலைப்  புலிகள்,
தமிழீழம்.
03/07/ 2011.

கரும்புலிகள் நாள்  - 2011
 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்பேசும் மக்களே,
 ஜூலை- 05 கரும்புலிகள் நாள்.
 எம் மக்களை அழித்து எம் மண்ணை ஆக்கிரமிக்க பெரும் படைப்பலத் துணையுடன் வந்த எதிரியை எதிர்கொள்ள தம் உயிரையே ஆயுதமாக்கி, உடலை வெடிமருந்தாக்கி மனபலத்தை எமது இனத்தின் கவசமாக்கிய உத்தமர்களின் நினைவு நாள்.
 கரும்புலிகள் காலத்தால் மறைந்து போகாத வரலாற்றைப்  பதித்து, இரும்பையொத்த வீரத்தை விதைத்து, எம்மினத்தின் வரலாற்றைப் புதுப்பித்த புனிதர்கள்.
 ஜனநாயகம் என்கின்ற போர்வையில் அரச பயங்கரவாத ஆட்சியாளர்களால் ஆயுத பலத்துடன்  தமிழினம்மீது  கட்டவிழ்த்துவிடப்பட்ட, மனித நாகரீகமே வெறுக்கத்தக்க தமிழர் படுகொலைகளுக்கும் நில ஆக்கிரமிப்புக்கும் எதிரான எமது போராட்டத்தின் அதியுச்ச எதிர்ப்பு ஆயுதமாகவே எமது  தற்கொடையாளர்கள்  களமிறங்கினார்கள்.
இன்று தமிழர் தாயகத்தில் எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டே வாழ்கின்றனர். எமது மக்கள் தமது பூர்வீகமமான வாழிடங்களில் ஆயுதம் தரித்த சிங்களப்படைகளின் அச்சுறுத்தலின் மத்தியில் அடிமைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். காலங்காலமாகச் சிறுகச்சிறுக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து ஏப்பம் விட்ட சிங்கள அரசு இப்போது தனது ஆக்கிரமிப்பை எந்தத் தடைகளுமற்று பெருமெடுப்பில்  சிங்கள பெளத்த  மயமாக மாற்றிவருகின்றது.
எமது  போராளிகள் தங்களைத் தற்கொடையாளர்களாக அர்ப்பணித்ததன் பின்னணி, சூழல்  ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்காமலும் அவர்களின் ஆத்ம உணர்வுகளின் ஆணிவேரைப் புரிந்துகொள்ளாமலும்  எமது இனவிடுதலை தொடர்பான எந்த ஆய்வுகளும் நிறைவடைய முடியாது. எம் இன விடுதலைக்கான தேவையினையும் அவசியத்தினையுமே கரும்புலிகளின் உணர்வுகள் பதிவு செய்துள்ளன.
 போர் முடிந்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு இன்னமும் தமிழர் தாயகத்தைப் போர்ச்சூழலிலேயே வைத்திருக்கின்றது. தினமும் கொலைகள், அச்சுறுத்தல்கள், காணாமற்போதல்கள், பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
 பெயரளவிற்கு விடுவிக்கப்பட்டதாகக் கூறும் எமது ஆண், பெண் போராளிகள்    நேரடியாகவும் மறைமுகமாகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் காணாமற் போவதும்  படுகொலை செய்யப்படுவதும் நாளாந்தம் நிகழ்ந்தேறி வருகின்றன.
 தமிழர்களால் ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்புக்களிற்கூட சிங்களக் கூலிப்படைகளின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நிகழ்வுகள்  நடந்தேறி வருகின்றன. இந்நிலைதான் கடந்த பல தசாப்தங்களாக  சிங்களப் பேரினவாத அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
 சிங்கள ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளானது உலக நாகரிகங்களையும்  மனிதவிழுமியங்களையும் தொடர்ச்சியாக அவமதிக்கும் செயலாகவே பார்க்க முடிகின்றது. மேலும் மனித உரிமை தொடர்பில் அனைத்துலகத்தின் அழுத்தங்களை சிங்களம் செவிமடுக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. காலங்காலமாக தமிழர்மேல் அடக்குமுறைகளை ஏவியே வளர்ந்துவந்த இப்பேரினவாத அரசு இன்றைய நிலையில் மென்மேலும் மோசமான நிலையை நோக்கியே நகர்ந்து செல்கின்றது.
 சிங்கள அரசின் இத்தகைய தொடர் செயற்பாடுகளால் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் எமது மக்களின் சுதந்திர உணர்வை  அழித்துவிட முடியாது. தொடர் ஆக்கிரமிப்புக்களால் சிங்கள பௌத்த பேரினவாத அரசிடமிருந்து எமது மக்கள் விடுதலை பெற வேண்டிய தேவை இன்னுமின்னும் வலுவடைந்து கொண்டே வருகின்றது.
 எமது போராட்டம் ஆயுதவழியில் ஆசை கொண்டோ  வெடிமருந்தில் மோகம் கொண்டோ  முகிழவில்லை. மாறாக சாத்வீக வழியிலான எல்லாப் பொறிமுறைகளும் தோற்றுப்போன பின்பே ஆயுதப்போராட்டம் உருவானது. இன்றைய உலக ஒழுங்கு எமது விடுதலைப்பயணத்திற்கான ஆயுதப்போராட்டம் எனும் பாதையினை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்ததோடு தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நின்ற எமது இயக்கத்தை அழித்துவிடும் கொடிய போர் குறித்து பாராமுகமாக இருந்ததையும் சில நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் எமது இனம் வேதனையுடன் பார்க்கின்றது.
 நாம் எமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து   எமது மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை  மாற்று வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்கள்.  அதேவேளை எமது மக்களோடு சேர்ந்து, எமது இனத்தின் மீதான உரிமை மீறல்களைப்  புரிந்துகொண்டு, அதற்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க அக்கறை செலுத்துகின்ற நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் நாம்  ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராகவேயுள்ளோம்.
 எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை  அனைத்துலக அரசியல்  நகர்வுகளுக்கு ஏற்ப எமது மக்களை அணிதிரட்டி  நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதற்கான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் சர்வதேசத்திடம் வேண்டி  நிற்கின்றோம்.
 காலத்தின் கட்டாயம் தான் கரும்புலிகளை உருவாக்கியது. தரையில் எதிரிகளின் இரும்பு கோட்டைகளை ஊடறுத்துத் தகர்த்தார்கள்; கடலில் எதிரிக்கலங்களை மூழ்கடித்தார்கள்; வான்வழி சென்று வரலாறு படைத்தார்கள். தமிழர் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற எம் காவிய நாயகர்கள்  என்றும் எம்மினத்தின் காவல் தெய்வங்களாய் நிலைப்பார்கள்.
 தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட எமது தற்கொடையாளர்களின் கனவை நாம் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் பூசிப்போம்.
 நன்றி.
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village