DINAMANI தலையங்கம்: நரியைப் பரியாக்கும் கபில் சிபல்

Source: www.dinamani.com
கபில் சிபல் இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவர் மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரானபோது, அறிவுஜீவியும் உலக விவரங்கள் தெரிந்தவரும், ஊழல்களில் ஈடுபட அவசியமில்லாதவருமான ஒருவரைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது.
இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்று!
அவரைத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக்கியபோது, அட, நம்ம ஊர் ஆண்டிமுத்து ராசாவால் ஊழல் மயமாக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறையைச் சுத்தப்படுத்த ஒரு நேர்மையானவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், தவறுகள் நிறுத்தப்படும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்தது.
 இப்போதல்லவா தெரிகிறது, ராஜிநாமா செய்த ஆ. ராசாவின் இடத்தில் அமர்த்த கபில் சிபலை ஏன் பிரதமர் தேர்ந்தெடுத்தார் என்று!
 திறமையான வழக்குரைஞர்களின் பணி, தனது கட்சிக்காரர்களைத் தப்ப வைப்பது. சட்டத்தை வளைத்தும் நெளித்தும், புதுப்புது விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் முன்வைத்து குற்றவாளியைக் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதுதான் என்பது தெரிந்த விஷயம். கபில் சிபல் இப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகச் செயல்படவில்லை. ஒரு வழக்குரைஞராகவும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் பத்திரிகைத் தொடர்பாளராகவும்தான் அமைச்சரவையில் செயல்படுகிறார் என்பதை அவரது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தெளிவாக்கி இருக்கிறது.
 தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை முற்றிலும் தவறான அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இப்போது பதவி வகிக்கும் வழக்குரைஞர் கபில் சிபலின் கருத்து. அதாவது, முறையாகத் தணிக்கை செய்து அதன் அடிப்படையில் ஓர் அரசியல் சட்ட அமைப்பு தாக்கல் செய்திருக்கும் அறிக்கை முழுமையாகத் தவறானது என்கிற வாதத்தை ஓர் அமைச்சர், பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
 தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை என்பது இப்போது நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான ஒன்று. அதை விவாதிக்கவோ, குறைகூறவோ, நிராகரிக்கவோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் முன் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ஆஜராகித் தனது கருத்துகளை ஏற்கெனவே கூறிவிட்டிருக்கிறார். இந்த நிலையில், அவரது செயல்பாடுகள் பற்றியோ, அறிக்கை பற்றியோ சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசுவதோ, குறைகூறுவதோ அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல் என்பதுகூடவா, மெத்தப் படித்த அமைச்சர் கபில் சிபலுக்குப் புரியாமல் போனது.
 தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி, ஆ. ராசா அமைச்சராக இருந்தபோது இரண்டாவது தலைமுறை (2ஜி) அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட 122 உரிமங்களாலும், 35 இரட்டைத் தொழில்நுட்ப உரிமங்களாலும் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் "உத்தேச' இழப்பு ரூ. 1,76,645 கோடி. இந்த இழப்பு, கடந்த ஆண்டு நடந்த மூன்றாவது தலைமுறை அலைக்கற்றை உரிம விற்பனையின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.
 முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வதுபோல, அமைச்சர் கபில் சிபல் எந்த இழப்பும் ஏற்படவே இல்லை என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தவறான அறிக்கையால் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருப்பதாகவும் கூறுகிறார். அதேநேரத்தில், சில நடைமுறைத் தவறுகள் நடந்திருப்பதாக ஒத்துக்கொண்டும் இருக்கிறார்.
 அது என்ன நடைமுறைத் தவறு? ஒருசிலருக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தந்து உரிமத்தைக் குறைந்த விலையில் பெற்று மிக அதிகமான விலைக்கு விற்று கோடி கோடியாகச் சம்பாதிக்க வாய்ப்பளித்ததுதான் அந்த நடைமுறைத் தவறு. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த மிகப்பெரிய மோசடியே அதுதானே. அதை ஏற்றுக்கொண்ட பிறகு, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அது வழக்குரைஞரின் விதண்டாவாதமாக இருக்கிறதே தவிர, ஒரு பொறுப்பான அமைச்சரின் விளக்கமாக இல்லை.
 நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் விசாரணை நடந்துவரும் நேரத்தில் அமைச்சர் கபில் சிபல் இப்படிப் பேசவேண்டிய அவசியம் என்ன என்கிற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் டி.ராஜாவின் கேள்விக்கும், இதுபோன்று அரசியல் சட்ட அமைப்பான தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியைத் குற்றப்படுத்துவதன் மூலம் நடைபெற்று வரும் பல விசாரணைகளில் அதிகாரிகள் முறையாகத் தகவல்களைத் தராமல் தடுக்க அமைச்சர் உதவுகிறார் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டனத்திலும் நியாயம் தெரிகிறது.
 அமைச்சர் கபில் சிபலின் பத்திரிகை நிருபர்களிடமான பேச்சு இடதுசாரிக் கட்சிகளும், பாரதிய ஜனதா கட்சியும் கோருகிற நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கான அவசியத்தை மேலும் அதிகரிக்கிறது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கபில் சிபல் பேசியிருக்க முடியாது. அப்படியானால், காங்கிரஸ் தலைமை முறைகேடாக உரிமம் பெற்று கோடிகளில் லாபத்தை அள்ளிக் குவித்த கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா?
 சில நாள்களுக்கு முன்னர்தான் இதே கபில் சிபல் - பாஜக கூட்டணியில் 1999-ல் இருந்து பின்பற்றப்பட்ட "முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' கொள்கையால் ரூ. 1.50 லட்சம் கோடி இழப்பு என்று கண்டுபிடித்து கூறியிருந்தார். அந்த நஷ்டம் ஆ. ராசா நடவடிக்கையில் லாபமானது என்கிறாரா அவர்? "நரி'யைப் "பரி'யாக்கிய கதையாக அல்லவா இருக்கிறது இது!

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire