யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த கிட்டு!
Source:http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI34ei29202jQWdd3QjF20N922e4ILBcb3pGQ2 கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா? தெரியாது! சதாசிவம் கிருஷ்ணகுமார்? தெரியாது! கிட்டுவைத் தெரியுமா? ஓ தெரியுமே! யார் அவர்? கிட்டு மாமா! யாழ்ப்பாணச் சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா. நடுத்தர வயதினருக்கு அவர் கிட்டண்ணா. வயது வந்த முதியோருக்கு கிட்டர். இயக்கம் அவருக்கு வைத்த பெயர் வெங்கிட்டு. அதுவே நாளடைவில் சுருங்கி கிட்டு என ஆகியது. |
சுதந்திர தமிழீழத்தின் போராட்ட வரலாறு எழுதப்படும்போது தளபதி கிட்டுவுக்கு ஒரு முழு அதிகாரம் ஒதுக்கப்படும். தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக தமிழீழ மக்களது மனம் கவர்ந்த, நெஞ்சம் நிறைந்த வீரனாக கிட்டு திகழ்கிறார். யாழ்ப்பாண இராச்சியம் நான்கு நூற்றாண்டு காலம் (கிபி 1215-1619) நிலைத்திருந்தது. இந்தக் காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பட்டப் பெயர் தாங்கிய பத்தொன்பது தமிழ் அரசர்கள் அதனை ஆண்டார்கள். ஒரு காலத்தில் கோட்டை, கண்டி சிங்கள இராச்சியங்களைவிட யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் இராச்சியம் மிக்க பலத்தோடு விளங்கியது. ஐபின்; பத்தூத்தா (Ibn Batuta) என்ற அராபிய பயணி இலங்கை வந்தபோது யாழ்ப்பாண மன்னனே அவனை சிவனொளி பாதமலையைத் தரிசிக்க சகல வசதிகள் செய்து கொடுத்து பல்லக்கில் அனுப்பி வைத்தான். யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலி குமாரனை 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் தலைநகர் நல்லூரில் நடந்த போரில் தோற்கடித்து யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள். அதன் பின் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் யாழ்;ப்பாணத்தைப் பிடித்து ஆண்டார்கள், ஆங்கிலேயர் 1948ஆம் ஆண்டு வெளியேறியபோது முழு இலங்கையையும் சிங்களவர் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள். இவ்வாறு சங்கிலி வாள் முனையில் இழந்த யாழ்ப்பாணக் குடாநாட்டை துப்பாக்கி முனையில் மீட்டெடுத்து தமிழர் இறையாண்மையை நிலைநாட்டிய பெருமை தளபதி கிட்டுவையே சாரும். கிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். "ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்" என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும். கிட்டு காட்சிக்கு எளியவராக இருந்தார். வீதியோரத்தில் வெற்றிலை பாக்குப்போட்டுக் குதப்பிக் கொண்டிருக்கும் கிழவர்களோடு சேர்ந்து தானும் வெற்றிலை போட்டுக் கொள்வார். அவர்களோடு நாட்டு நடப்புக்களை அலசுவார். இந்தக் காலத்தில்தான் கிட்டு ஒரு சுத்த வீரன் என்ற படிமத்தோடு மக்கள் மனதில் உலா வரத் தொடங்கினார். காக்கிச் சட்டையைப் பார்த்தாலே பயந்து நடுங்கிய மக்களுக்கு கிட்டு ஒரு வித்தியாசமான, அதிசயமான பிறவியாகத் தெரிந்தார். சின்ன வட்டங்கள் கள்ளன்-போலிஸ் விளையாட்டுக்களைக் கைவிட்டு கிட்டுமாமா - ஆமி விளையாட்டு விளையாட ஆரம்பித்தார்கள். கிட்டுவைப் போல அவர்கள் இடுப்பிலும் ஒரு (போலி) மக்னம் 357 சுழற்துப்பாக்கி! 1987ஆம் ஆண்டு வடமராட்சியில் இராணுவத்துடன் நடந்த சண்டையில் கிட்டு விழுப்புண் பட்டார். புண்ணாற சில நாட்கள் எடுத்தன. அப்போதுதான் எதிரிகளால் அவர் மீது குண்டு எறிந்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டது. செய்தி கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற செய்தி வந்தபின்னர்தான் மக்கள் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள். இருந்தும் குண்டு வெடிப்பில் கிட்டு ஒரு காலை இழந்தது அவர்களுக்குக் கவலையை அளித்தது. 1971ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட தரப்படுத்தலுக்கு பலியான பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களில் கிட்டுவும் ஒருவர். தரப்படுத்தல் இல்லாவிட்டால் வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் படித்துப் பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்று வெளியேறி மற்றவர்களைப் போல் ஏதாவது அரச பணியில் அமந்திருப்பார். அல்லது வெளிநாடு சென்றிருப்பார். 1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிட்டு தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19 மட்டுமே. இயக்கத்தில் இருந்தவர்களது தொகை ஒரு நூற்றுக்கு மேல் இல்லாத காலம். பெரும்பான்மையோர் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள். 1983ஆம் ஆண்டு நிராயுதபாணிகளான தமிழர்கள் ஆயுதபாணிகளான சிங்களக் காடையர்களால் பலமாக்கத் தாக்கப்பட்டார்கள். உயிர் இழப்பு ஏராளம். உடமை இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் கருப்பு யூலை கிட்டுவின் ஆன்மாவில் பெரிய கீறலை ஏற்படுத்தியது. அவர் மனதுக்குள்ளே ஒரு பூகம்பம். பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வேகம் மேலோங்கியது! அதே ஆண்டு கிட்டு இயக்கத்தின் தாக்குதல் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு இந்தியா சென்று இராணுவப் பயிற்சிபெற்றுத் திரும்பினார். 1984 பெப்ரவரி 29, யாழ்ப்பாணக் குருநகர் சிங்கள இராணுவ முகாம் அவர் தலைமையில் சென்ற போராளிகளால் தாக்கித் தகர்க்கப்பட்டது. 1985இல் கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு யாழ்ப்பாணம் போலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் படிப்படியாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. புலிகளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் உருவாகியது. அதன் பொருளாதாரம் மறு சீரமைக்கப்பட்டது. உள்ளுர் உற்பத்தி ஊக்கிவிக்கப்பட்டது. சிறுவர்களது பொழுது போக்குக்கு பூங்காக்கள் நிறுவப்பட்டன. தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைகளின் மூலம் விடுதலை உணர்வு மக்களிடையே ஊட்டி வளர்க்கப்பட்டது. முதன்முறையாக நிதர்சனம்' தொலைக்காட்சி இயங்க ஆரம்பித்தது. களத்தில் என்ற செய்தி இதழ் வெளிவரத் தொடங்கியது. கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக இருந்த காலத்திலேயே போர்க்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரை விடுவிக்க கொழும்பில் இருந்து வந்த சிங்கள இராணுவ தளபதிகள் அவரோடு பேச்சு வார்த்தை நடாத்தினார்கள். கிட்டுதான் சிங்கள இராணுவ தளபதிகளுடன் கைகுலுக்கிக் கொண்ட முதல் புலித் தளபதி. கிட்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பெறும் பட்டத்தை விட திறந்தவெளி உலகப் பள்ளியில் படித்து சகலகலா வல்லவன் என்ற பட்டத்தை வாங்கியிருந்தார். தலைவர் பிரபாகரனால் நேரடியாக ஆயுதப் பயிற்சி பெற்ற சில வீரர்களில் கிட்டுவும் ஒருவர். தலைவரைப் போலவே குறிதவறாது சுடுவதில் மன்னன். நல்ல மேடைப் பேச்சாளி. இலக்கியவாதி. எழுத்தாளன். ஓவியர். படப்பிடிப்புக்காரன். எல்லாவற்றிற்கும் மேலாக மெத்தப் படித்தவர்களும் மதிக்கும் ஆளுமை அவரிடம் இருந்தது. 1989 ஆண்டு புலிகள் - ஸ்ரீலங்கா அரசுப் பேச்சு வார்த்தை தொடங்கியது. பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள கொழும்பு சென்ற கிட்டு அங்கிருந்து வைத்தியத்துக்காக இலண்டன் போய் சேர்ந்தார். அனைத்துலக வி.புலிகளின் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் கிட்டு பணியாற்றினார். அது இயக்கத்தைப் பொறுத்தளவில் ஒரு பொற்காலம். கிட்டுவின் பன்முகப்பட்ட ஆளுமைக்கு மேற்குலகம் களம் அமைத்துக் கொடுத்தது. அவரது வசீகரம் எல்லோரையும் கவர்ந்தது. அவரது நிர்வாகத் திறமை வைரம்போல் பளிச்சிட்டது. ஒவ்வொரு சின்ன விடயத்தையும் நேரடியாகக் கவனித்துக் கொள்வது அவரது பாணியாகும். வி.புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் என்ற ரீதியில் வெளிநாட்டு அரசியல் மற்றும் இராசதந்திரிகளைச் சந்தித்து தமிழ் மக்களது ஆயுதப் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு தேடினார். பிரித்தானியாவில் தொடர்ந்து இருக்க முடியாத ஒரு சூழ்நிலை 1992 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் உருவாகியது. சுவிஸ் நாட்டுக்குப் பயணப்பட்ட கிட்டு அங்கிருந்து தமிழீழம் நோக்கிய கடற்பயணத்தை ஆரம்பித்தார். அதுதான் அவரது கடைசிப் பயணம் என்பது அவருக்கோ அவரது தோழர்களுக்கோ மற்ற யாருக்குமோ அப்போது தெரிந்திருக்கவில்லை. அனைத்துலகக் கடலில் கிட்டு 'அகாத்' (யுhயவ) என்ற கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை இந்திய அரசு அறிந்து கொண்டது. அவர் மேற்கு நாடுகள் தயாரித்த அமைதித் திட்டத்தின் தூதுவனாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் இந்தியாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இருந்தும் கிட்டுவின் கப்பலை இடைமறிக்குமாறு இந்திய அரசு கடற்படைக்குக் கட்டளை இட்டது. 1993 ஆம் ஆண்டு 13ம் நாள் கிட்டுவின் கப்பல் இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த இரண்டு நாசகாரிக் கப்பல்களால் அனைத்துலகக் கடலில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டது. கிட்டு அந்தச் செய்தியை தொலைத் தொடர்பு கருவியின் மூலம் வி.புலிகளின் அனைத்துலகப் பணிமனைக்கு அறிவித்தார். கப்பல் இடைமறிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. இந்தியா மவுனம் சாதித்தது. அகத் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு நேரே, இந்தியக் கடல் எல்லைவரை கொண்டு வரப்பட்டது. தளபது கிட்டுவும் அவரது போராளிகளும் சரண் அடையுமாறு கேட்கப்பட்டனர். சரண் அடைய மறுத்தால் அகத் தாக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவீர்கள். எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரித்தது. கிட்டுவைக் கைது செய்து ராஜிவ் காந்தியின் கொலைக்கு அவர் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதே இந்திய அரசின் தந்திரமாக இருந்தது. அதே நேரம் கிட்டுவை உயிரோடு பிடிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சரணாகதி என்ற வார்த்தை புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை. வாழ்ந்தால் மானத்தோடு இல்லையேல் வீரமரணம் என்பது புலிகளின் தாரக மந்திரம் என்பது உலகறிந்த செய்தி. தளபதி கிட்டுவும் அவருடன் பயணம் செய்த ஒன்பது போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வங்கக் கடலில் சங்கமமானார்கள்! அந்தச் செய்தி உலகம் வாழ் தமிழ் மக்கள் தலையில் இடியென இறங்கியது! வங்கமா கடல் தீயினில் கொதித்தது! "அசோகச் சக்கரம்" குருதியில் குளித்தது! அகிம்சையின் அரிச்சுவடியை அறிமுகம் செய்த பாரதம் கிட்டு மற்றும் அவரது தோழர்களது செந்நீர் குடித்து மகிழ்ந்தது! இந்தியாவின் வஞ்சகத்துக்கு விடுதலைப் புலிகள் பலியானது இது மூன்றாவது தடவை. முதற் பலி தியாகி திலீபன். இரண்டாவது பலி இந்தியாவின் மத்தியத்தை நம்பி கடற்பயணம் செய்த தளபதிகள் குமரப்பா-புலேந்திரன் உட்பட்ட 17 வி.புலிகளை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்யது பலாலியில் இருந்த இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்களைக் கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது எல்லோரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். மூன்றாவது பலி வங்கக் கடலில் கிட்டுவும் அவரது ஒன்பது தோழர்களும். விடுதலை என்பது சும்மா கொண்டு வந்து தருவதற்கு அது சுக்குமல்ல மிளகுமல்ல என்பது உண்மைதான். அதற்கு ஒரு விலை இருக்கிறது. ஆனால் இந்தியாவின் வஞ்சகத்திற்கு, சூழ்ச்சிக்கு, காட்டிக்கொடுப்பிற்குப் பலிபோன கிட்டு, குட்டிஸ்ரீ, திலீபன், குமரப்பா, புலேந்திரன் போன்ற போராளிகள், தளபதிகள் இவர்களின் நினைவு தமிழீழ தேசத்தின் ஆழ்மனதில் ஆழமான வடுவாக, துடைக்க முடியாத கறையாகப் பதிந்த வரலாற்றுக் காயம் காலம் காலமாக அழியாது இருக்கும்! கிட்டு போன்ற மாவீரர்களுக்கு மரணமில்லை. அவரது 18 ஆவது நினைவு நாள் அந்தச் செய்தியைத்தான் சொல்லி நிற்கின்றது. எமது மாவீரர்களின் ஈகை வீண்போகக் கூடாது. அவர்களது தாயகக் கனவை நாம் என்றோ ஒரு நாள் நினைவாக்குவோம்! தளபதி கிட்டு காற்றோடு காற்றாகக் கடலோடு கடலாக மறைந்தபோது "கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு" இப்படிச் சொன்னவர் தேசியத் தலைவர் பிரபாகரன். வல்வைக் கரையெழுந்த புயல் ஓய்ந்ததோ? வண்ணத் தமிழீழ மலை சரிந்ததோ? வங்கக் கடல் மடியில் புலி தவித்ததோ? வஞ்சகரால் எங்கள் குயில் மடிந்ததோ? நக்கீரன் athangav@sympatico.ca |
தளபதி கிட்டு மீது கைக்குண்டு எறிந்த தேசத் துரோகி புளட்டை சேர்ந்த ரஹ்மான்யான் தற்போது கனடாவில் இருக்கிறான். மேலதிக தகவல்களுக்கு "கிட்டு கிறநைட்" என்று "கூகிள்" இல் தேடி பாருங்கள்
ReplyDelete