Monday, January 3, 2011

அடையாளங்களை இழக்கும் கிராமங்கள்

Source: www.dinamani.com
முகவை.க.சிவகுமார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த ஊருக்குச் சென்றேன். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நகரத்தார்குறிச்சி என்ற குக்கிராமம். சென்னையிலிருந்து மதுரை வழியாக கமுதி போகும் வழியில் முத்தனேந்தல் வாரச் சந்தை. பார்த்தவுடன் சந்தைக்குள் நுழைந்தேன். எனது பள்ளிப் பருவத்தில் கையிலிருக்கும் பாக்கெட் மணி 50 பைசா, ஒரு ரூபாய்க்கு ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே 6 கி.மீ. தூரத்தில் இருக்கும் கிராமத்துக்கு நடந்தே செல்வோம். வழிநெடுக சந்தைக்குச் செல்லும் மக்கள் எல்லாம் பைகள், ஓலைப்பெட்டிகள் நிறைய காய்கறி, மளிகைச் சாமான்களை வாங்கிக் கொண்டு நடந்தே வருவார்கள். இது வாராந்திர நிகழ்வு.
 இப்பகுதியில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வாரச்சந்தை கூடுகிறதென்றால் சந்தை களைகட்டும். கத்தரிக்காய், புடலங்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், அவரைக்காய், சுரைக்காய், பாவக்காய் என தோட்டத்துக் காய்கள் எல்லாம் மூட்டை மூட்டையாய் குவிந்திருக்கும். அத்தனையும் சுற்று வட்டாரக் கிராமங்களில் விளையும் காய்கறிகள்தான். சந்தையின் கூடுதல் சிறப்பு ராமேஸ்வரம் கருவாடு. இதனை வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும்.
 1980-85 களில் பெரும்பாலான காய்வகைகள் கிலோ ஒரு ரூபாய், 2 ரூபாய் என்றுதான் கூவிக்கூவி விற்பார்கள். இதில் வியாபாரிகளில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு. நேரம் ஆகஆக விலை குறையும். தரமும் குறையும்.


சந்தைக்குச் செல்வது அப்போதைய கிராம மக்களின் அன்றாட வேலைகளில் ஒன்றாக இருந்தது. கையில் பணம் இல்லாவிட்டால், வீட்டில் இருக்கும் நெல், நிலக்கடலை, பயறுவகைகள் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை தேவைக்கேற்ப எடுத்துச் சென்று நகரங்களில் விற்றுவிட்டு ஒரு வாரத்துக்குத் தேவையான வீட்டுச் சாமான்களை வாங்கிவருவார்கள். கூலி வேலைக்குச் செல்வோருக்கு சந்தை நாள்தான் கூலி வாங்குகிற  நாள். கிராமத்துச் சிறுவர்களுக்கோ தின்பண்டங்கள் கிடைக்கும் நாள்.  
 இவைகளை அசைபோட்டுக் கொண்டே சந்தையை வலம் வந்தேன். காய்கறிகள் மூட்டை மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிலோ கணக்கில்தான் காய்கறிகளைக் குவித்துவைத்து கூவிக் கொண்டிருந்தனர். பத்து ரூபாய், இருபது ரூபாய் என வியாபாரிகள் கூவினர். விசாரித்தபோது அவையெல்லாம் கால் கிலோவின் விலை என்றனர். ஒரு கிலோ கத்தரிக்காய் | 80-க்கு விற்கப்பட்டது.
 வழக்கமாகச் சென்னையில் பார்க்கும் பெங்களூர் தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு, கேரட், பீட்ருட், முட்டைகோஸ் என மேற்கத்திய காய்கறிகளாகவே இருந்தன. ஒரு மணி நேரம் சந்தையைச் சுற்றியும் வெறுமைதான் மிஞ்சியது. பின்னர் சொந்த கிராமத்தைச் சென்றடைந்தேன்.
 சிந்தனை சந்தையைப் பற்றியே சுற்றியது. 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை கத்தரிக்காய் | 20-க்கு விற்ற ஊரில் ஒரு கிலோ கத்தரிக்காய் 80 ரூபாயா? என்ன நடந்து விட்டது இந்த 25 ஆண்டுகளில். எங்கள் வீட்டில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு விடையாக அமைந்தன.
 அப்பொழுது வீட்டில் 15 எருமை மாடுகள், 2 ஜோடி காளை மாடுகள், 2 பசு மாடுகள் இருந்தன. ஐம்பது ஆடுகள் இருந்தன. கோழிக் கூண்டைக் காலையில் திறந்து விட்டால் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் வெளியே ஓடும். தினமும் 3 அல்லது 4 முட்டைகள் நிச்சயம் கிடைக்கும். ஆடிப்பெருக்கு என்றால் ஊரே கொண்டாட்டம்தான். அன்று பயிர் வைத்தால் விவசாயம் செழிக்கும் என்பது காலத்தை விஞ்சிய நம்பிக்கை. கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொல்லைகள் என அழைக்கப்படும் தோட்டம் இருக்கும். எங்கள் வீட்டிலும் கொல்லை இருந்தது. ஆடிப்பெருக்கில் சுரை, அவரை, புடலை, கீரை என அனைத்து வகைக் காய்கறிகளுக்கும் விதை ஊன்றுவோம். முதலில் காய்க்கும் புடலங்காய், கடைசியில் காய்க்கும் பரங்கிக்காய் என புரட்டாசி முதல் தை மாதம் வரை 5 மாதங்களுக்கு காய்கறிக்குப் பஞ்சமே இருக்காது.
 கோடைக்காலங்களில் நிலத்தைப் பண்படுத்த எருமைச் சாணமே உரமாகப் பயன்படுத்தப்பட்டது. பற்றாக்குறைக்கு ஆட்டுக்கிடை அமர்த்தல் மூலம் கூடுதல் உரம்.  ஆன்லைன் வர்த்தகம், பணவீக்கம், புதிய பொருளாதாரம் போன்றவை எல்லாம் எங்கள் கிராமத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கவே இல்லை.
 ஆனால், அதே இடத்தில் இன்று வேலிக்காத்தான் மரங்கள் வளர்ந்துள்ளன. முன்பு நகர மக்களுக்கு மட்டுமே தினசரி தேவையாக இருந்த காய்கறி இன்று கிராமத்தினருக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. எப்போதெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கத்தரிக்காய் Rs  80, வெங்காயம் Rs 100 மல்லிகைப் பூ Rs 1,200 என்பது இனி சர்வ சாதாரணமாகிவிடும்.
 ஒரு ஜோடி காளைமாடுகளின் விலை சுமார் Rs 30 ஆயிரம். ஆனால்  கிராமங்களில் மாடுகள் வளர்ப்பதென்பது அரிதாகிவிட்டது. வாங்கிய கடன் கையிலிருக்கும்வரை யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், பூச்சிக் கொல்லி மருந்துகள் என பயிர்களுக்குச் செலவழிக்கலாம். நாட்டுக்கோழி வளர்த்தால் வீடுகள் அசுத்தமாகிவிடும். அசைவத்திற்கு லக்கான் கோழிக்கறி வாங்கிக் கொள்ளலாம். காடு, கழனிகளில் உழைப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட திருப்பூர், கோவையில் கூலிவேலைக்குச் செல்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகம். பணத்தால் அனைத்தையும் வாங்கமுடியும் என்ற நம்பிக்கை. நகரத்தின் கலாசாரம் கிராமங்களை ஆக்கிரமித்துவிட்டது.
 முன்பு பொழுது சாயும் காலத்தில் கிராமத்து தெரு, மைதானங்களில் கிளித்தட்டு, கபடி, சடுகுடு, சிலம்பாட்டம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி, கும்மி, சதுரங்கம் என அவரவர் வயதுக்கு ஏற்ப இரவு வரை விளையாடுவார்கள்.
 தற்போது உறவினர் வீடுகளுக்கு நலம் விசாரிக்க  இரவு 7 மணியளவில் சென்றால் தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லை. கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. ஆனால் வீட்டுக்குள் சப்தம் கேட்கிறது. மெதுவாகத் திறந்து பார்த்தேன். பக்கத்து வீடு, அடுத்த வீடு என அனைவரும் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கி இருந்தனர். என்னைக் கண்டதும் இரண்டொரு வார்த்தைகள் பேசினார்கள். சில நொடிகளில் மீண்டும் சீரியல் சீரியஸýக்குச் சென்றுவிட்டனர். வெறுமையோடு வீடு திரும்பினேன். மனதில் பல்வேறு கேள்விகள். எப்படி இருந்த கிராமம், இப்படிச் சீரழிந்து போய்விட்டதே என்று.
 ஆற்றங்கரைகளில் தொடங்கி பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்த இந்த கிராம நாகரிகம் என்பது வாழ்க்கைமுறை மட்டுமல்ல. இவை மனித வாழ்வியலின் அடையாளங்கள்.
மது, புகையிலை பயன்படுத்தும் பழக்கங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், கேலிக் கூத்தாகும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள், கடன் வாங்க அசராத மனப்பான்மை, வாக்களிக்கப் பணம் பெறுவது எப்படி என கிராமங்கள் திசை மாறிவிட்டன. இதன் எதிர்கால நிலைமை என்ன? கடனில் மூழ்கும் கிராமங்களை மீட்க முடியுமா, சந்தேகம்தான். ஆனால் முடிவு ஒன்று நிச்சயம் வரும், மாற்றம் ஒன்றே மாறாதது!

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...