7 ஆண்டுக்கு பின் சத்துணவு:"தினமலர்' செய்தி எதிரொலி
Source:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=171029
ராமநாதபுரம்:"தினமலர்' செய்தி எதிரொலியாக, ஏழு ஆண்டுகளுக்கு பின், குளத்தூர் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம், குளத்தூர் காலனியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 2002 செப்., 17ல் தொடங்கிய இப்பள்ளியில், சத்துணவு வசதி செய்து தரவில்லை. இதனால், குழந்தைகளின் சேர்க்கை விகிதம் கணிசமாக குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி 12 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளின் இந்த பாராமுகம் குறித்து, கடந்த ஜன., 19ல் "தினமலர்' நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக பள்ளிக்கு சத்துணவு வழங்குமாறு, மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னையிலிருந்து உத்தரவு பறந்தது. அருகில் உள்ள குளத்தூர் நடுநிலைப் பள்ளியிலிருந்து இப்பள்ளிக்கு சத்துணவு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து சத்துணவு கிடைத்த மகிழ்ச்சியில், குழந்தைகளும், பெற்றோரும் உற்சாகம் அடைந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் கூறியதாவது: ஏழு ஆண்டு போராட்டம், "தினமலர்' செய்தியால் நிறைவு பெற்றுவிட்டது. இதனால், பள்ளியின் சேர்க்கை வரும் ஆண்டில் அதிகரிக்கும், என்றார்
Comments
Post a Comment