தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரைச் சூட்டிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்கிற செய்தி இந்திய விடுதலை வேள்வி குறித்த கேள்வி ஞானம் இல்லாதவர்களுக்கும்கூட மனங்குளிரச் செய்யும் செய்தியாக இருக்கும் என்பது உறுதி. காரணம், "கப்பலோட்டிய தமிழன்' "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம்பிள்ளை என்பது தமிழினத்துக்கே பெருமை சேர்த்த பெயர்.
இந்தியர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை வ.உ.சி., இந்திய மண்ணில் வணிகம் செய்ய வந்த வியாபாரிகளாகத்தான் பார்த்தார். ஒரு வியாபாரியை எதிர்கொள்வது வியாபாரத்தால் மட்டுமே முடியும் என்று அந்த நேர்மையாளர் நம்பினார். அதன் விளைவுதான் சுதேசிக் கப்பல்! இந்நாளில் மட்டுமல்ல, அன்றைய நாளிலும்கூட கப்பல் என்பது மிகப்பெரும் மூலதனத்தை உள்வாங்கும் தொழில். இரண்டு கப்பல்களை வாங்கி, 1906-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.
இத்தகைய மிகவும் அசாத்தியமான துணிச்சல்தான் ஆங்கிலேயரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த ஆத்திரத்தின் வலி, வ.உ.சி.யின் உடல் வலிகொள்ளும் அளவுக்கு கோவைச் சிறையில் செக்கிழுக்கும்படியாகச் செய்தது.
சிறைத் தண்டனைகள் குறைக்கப்பட்டு அவர் வெளியே வந்தபோது, அவர் வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமம் இல்லாதவராக இருந்தார். அந்த உரிமத்தை மீண்டும் தனக்குப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் பெயரை தன் மகனுக்குச் சூட்டி (வாலேஸ்வரன்) நன்றிக்கடன் செலுத்திய மகான் அவர். அத்தகைய அப்பழுக்கற்ற தியாகச் சுடரின் பெயரை, பெருந்தன்மையின் அடையாளமானவரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமானது.
இந்த நற்செயல் எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே செய்திருக்கலாம். அதன்பின்னர் திராவிட ஆட்சிக் காலங்களிலும் இந்தப் பெயர் சூட்டல் நடக்கவில்லை. வ.உ.சி.-க்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசும்கூட, "பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்'தான் தொடங்கியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில், கப்பல் போக்குவரத்துத் துறைக்கு தமிழர்தான் அமைச்சராக இருந்தார். அவர்கூட இப்படியொரு முடிவை எடுத்து அறிவிக்க முடியவில்லை. ஆனாலும், இப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில், அவரது முயற்சியால் இது நடைபெற்றுள்ளது. காலங்கடந்து கிடைத்த பெருமை என்றாலும், பாராட்டுவோம்.
""வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ! வருந்தலை, என் கேண்மைக் கோவே!...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி! அவர் நினைவாகச் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கிறது.
சிறைவாழ்வின்போது அவர் ஜேம்ஸ் ஆலன் என்ற அறிஞர் எழுதிய நூல்களை, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம் என்ற பெயரில் மிக அழகாக மொழிபெயர்த்தார். மனிதனின் உயர்வு, தாழ்வு இரண்டுக்குமே அடிப்படை அவனது எண்ணங்கள்தான். எண்ணங்களை மாற்றினால் மனிதனின் வாழ்க்கைச் சூழல் தானே மாறும் என்கிற அடிப்படையான கருத்தைக் கொண்டிருக்கும் இந்த நூல்கள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகமிகத் தேவையானவை. மேனிலைப் பள்ளிப் பாடத்தில் தமிழ் துணைப்பாடமாக இந்த நூல்கள் இடம்பெறச் செய்தால், இளைய சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.
கோவையில் இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் செம்மொழிப் பூங்கா அமையவிருப்பதால், அங்கு வ.உ.சி. இழுத்த செக்கினை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இழுத்த செக்கு, மணிமண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டாலும், இப்போது கோவை மத்திய சிறையிலுள்ள அந்தச் சின்னம் ஓர் அடையாளம் என்பதால், அதையும் செம்மொழிப் பூங்காவின் ஒரு பகுதியாக அமைக்கலாம். தவறில்லை. அந்தச் செக்கு அங்கேயே இருக்கவும் அந்த வளாகத்தில் வ.உ.சி.யின் மிக அரிய குறள் விளக்கங்களை வைப்பதும்கூடப் பொருத்தமாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, "தென்னாட்டுத் திலகர்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாறு கட்டாயப் பாடமாக தமிழகத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சொல்லித் தரப்பட வேண்டும். இந்திய சரித்திரத்தில் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவி, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த தேசியத் தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தூத்துக்குடி "கோரல் மில்ஸ்' என்கிற நூற்பாலையில் தொழிற்சங்கம் வ.உ.சி.யால்தான் உருவாக்கப்பட்டது.
"சுதேசி' இயக்கத்தின் முன்னோடி வ.உ.சி. நாம், நம்முடைய, நமக்காக என்கிற சிந்தனையை நமக்கு விதைக்க முற்பட்ட வ.உ.சி.யின் வழித்தோன்றல்களாகிய நாம் அந்நியப் பொருள்களுக்கும், அந்நியக் கலாசாரத்துக்கும், அடிமைப்பட்டுக் கிடக்க முற்படுகிறோமே, இது சரிதானா என்று சிந்திக்க வேண்டிய வேளை இது. "சுதேசி' என்கிற கப்பலில் வ.உ.சி. என்கிற மாலுமி காட்டிய வழியில் பயணிக்க நாம் முன்வருவதுதான் நாளைய இந்தியா வலிமையான இந்தியாவாக உருவாக ஒரே வழி.
மத்திய அரசுக்கும், அமைச்சர் ஜி.கே. வாசனுக்கும், இந்த முடிவுக்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் வழிமொழிந்த தமிழக அரசுக்கும் "தினமணி' வாசகர்கள் சார்பில் நன்றிகள் பல!