சுதந்திரத் தமிழீழமும், விடுதலைத் தமிழர்களும்!


Source: http://www.tamilwin.com/show-RUmqzBRbNUls7.html


கடந்த கால துயரங்கள் கடந்துபோகும் போதெல்லாம் ஓன்று நாம் உடைந்து போகின்றோம். அல்லது உறைந்து போகின்றோம். பொதுவாக நவம்பர் மாதமென்பது மழையாலோ அல்லது பனியாவோ குளிர்விக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் அந்த முப்பது நாட்களும் தமிழர்களுக்கு மட்டும் வெப்பமாகவே வேதனையைத் தருகின்றது.
ஆம் .......... நவம்பர் மாதம் ........ மாவீரர் மாதம் எங்கள் மனங்கள் ரணங்களாகிய படியே மாவீரர்களை நினைவு கூர்கின்றோம்.
"மாவீரர்கள் " உயிரைக் கொடுத்து விடுதலையை கேட்பவர்கள் தம்மை அழித்து தமிழர்களுக்கு விலாசம் தந்தவர்கள். அவர்களை நினைத்து இப்போது புகழப்போறீர்களா? அல்லது அவலத்தை நினைத்து எப்போதும் புலம்பப் போறீர்களா? இந்த இரண்டைத் தவிர சாமான்யத் தமிழர்களால் இப்போது என்ன பெரிதாய் சாதித்துவிட முடியுமென்றால் "முடியும்" தமிழர்களே என்று முழக்கமிட்டுச் சொல்வேன்.
சரித்திரம் படைப்பதற்கு முன் சரித்திரம் படைத்த எல்லோருமே சாமான்யர்கள் தான். இன்றைய போராளிகளெல்லாம் நேற்றைய சாமான்யர்கள் தான். என்ன நீங்கள் எழுந்து விடாத அளவிற்கு உங்கள் மீது அடி விழுந்து கொண்டேயிருக்கும் தடுத்தபடியே நீங்கள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கவேண்டும்.
சுட்டு வீழ்த்துவதென்பது ஒருமுறை. சொற்களாலயே வீழ்த்தப்படுவதென்பது இன்னொரு முறை. சிலநேரங்களில் பீரங்கிகளை விட பொய்யான பிரச்சாரங்கள் பலமாகவே தாக்கக்கூடும். உடலைச் சாய்த்து ஒருபகுதி தமிழர்கள் சாகடிக்கப்படுகின்றார்கள். என்றால் உணர்வைச் சாய்த்து மறுபகுதித் தமிழர்களை மழுங்கடிக்கப் பார்க்கின்றார்கள்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் பெரும்பாலும் விலகி விட்டார்களாம். கிழக்கில் பாதை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். வடகிழக்கிலும் ஏறக்குறைய அப்படித்தானாம். ஏதோ வடக்கில் மட்டும் எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் மட்டுமே தமிழீழம்........... தமிழீழம் என்று முனங்கித் திரிகின்றனராம்.
இவ்வாறாக புனைக்கப்பட்ட எதிரிகளின் பொய் பிரச்சாரங்கள் தமிழ் மக்கள் மனங்களில் புகுத்தப்பட முயற்சி நடக்கின்றது. ஏனென்றால் "பலம் குன்றிய எந்த இனத்திற்கும் விடுதலை என்பது சாத்தியமில்லை. எனவே இது நம்மை பலவீனப்படுத்தும் முயற்சி சுதந்திரம் பெறுவதற்காக உச்சபட்சமாக உயிரைக் கொடுத்தவர்கள் தமிழர்கள் விடுதலைக்காக எதையும் செய்வோம். விடுதலையை எப்படி தியாகம் செய்வோம்"?
இட்டுக் கட்டுதலும் இல்லாததை சொல்லித் திரிதலும் பகைவர்க்கு கை வந்த கலை கண்டியை ஆண்ட தமிழ் மன்னன் வீரசிங்கத்தை வீரசிங்கே ஆக்கியவன் சிங்களவன். எனவே இந்த அற்பத் தாக்குதலுக்கெல்லாம் சொற்பம் கூட சோர்ந்து போகக் கூடாது நாம்.
ஏற்கனவே எரிக்கப்பட்ட எங்கள் உடலின் சாம்பலை அள்ளி கரைக்கத் துடிக்கின்றது. கயவரின் கரங்கள் ஆனால் உலகமோ கடந்த காலத்தை மறந்து விடுங்களென்று சொல்லாமல் சொல்கின்றது. உலகிற்கு, நாங்கள் சொல்கின்றோம். எங்களுக்கு கடந்த காலமென்று எதுவுமேயில்லை காலம் தான் எங்களை கடந்து செல்கின்றது.
எந்தக் காலத்தையும் ஈழத் தமிழர்கள் இதுவரை கடக்கவேயில்லை. எங்கள் காலம் என்பது ஒரே காலம் தான். அது எங்களின் போராட்ட காலம் விடுதலைக்காக நேற்றும் போராடினோம், விடுதலைக்காக இன்றும் போராடுகின்றோம், விடுதலைக்காக நாளைக்கும் போராடுவோம்....
தமிழீழத்தை உருவாக்கி விடுவீர்களா? என்று யாரேனும் சிலர் எப்போதாவது கேட்டுப் போகின்றார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்வோம் உருவாதலுக்கும் காத்தலுக்கும் முதலில் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழம் என்பது உருவாக்கப்பட வேண்டியதல்ல. அது காக்கப்பட வேண்டியது. எங்கள் மண்ணையும் எங்கள் மக்களையும் எப்படி நாங்கள் உருவாக்கமுடியும்?
அது காலங்காலமாக ஈழமாகவும் ஈழத் தமிழர்களாகவும் கம்பீரமாகவே காட்சியளிக்கின்றது. அந்நியரின் அபகரிப்பிலிருந்து எங்கள் மண்ணையும் எங்கள் மக்களையும் காக்கும் போராட்டம் தான் எங்கள் ஈழ விடுதலைப் போராட்டம் என்பது.
தெற்காசியாவில் தமிழர் விடுதலை என்பதும் தமிழர் தேசம் என்பதும் பல பிரச்சனைகளோடு பொருத்திப் பார்த்து பரிசீலிக்கப்படுகின்றது. எங்கள் விடுதலையில் ஆசிய அரசியல் உலக அரசியல் உள்ளே வருகின்றது. தமிழீழம் உருவானால் தமிழ்நாடும் தனி நாடு ஆகிவிடுமோ என்ற இந்தியாவின் கவலை கவனத்தில் கொள்ளப்படுகின்றது.
தென்பகுதியதில் இருந்து இந்தியாவை அச்சுறுத்துவதற்கு சிங்கள அரசின் சிநேகத்தை நாடும் சீனாவின் திட்டம் சீரியலாகப்பார்க்கப்படுகின்றது. சீன, சிங்கள சக்திகளோடு கைகோர்த்தால்பலமான இந்திய எதிர்ப்பு நிலை கூட்டணியை உருவாக்கலாம் என்ற பாகிஸ்தான் கனவு கலந்தாலோசிக்கப்படுகின்றது.
இதைத்தாண்டி சில உலக வல்லரசுகளின் தெற்காசிய தளம் வியாபாரம் அவர்கள் விரும்பும் உலகளாவிய ஆளுமை அத்தனையும் ஆராயப்படுகின்றது தமிழர்களின் விடுதலையைத் தவிர " எங்கள் மொழி முதுமொழி எங்கள் கூட்டம் பழங்கூட்டம் எங்கள் நிலம் எங்களின் பூர்வீகம் இதனின்றும் இந்த உலகிற்கு வேறென்ன வேண்டும் நாங்கள் சுதந்திரமாய் வாழ்"
சுமார் 60 ஆண்டுகாலப் போராட்டத்தை எண்ணி நாங்கள் மலைக்கவில்லை. அளவற்ற தியாகங்களை எண்ணி நாங்கள் அயரவில்லை. எதிர்கால செயன்முறை பற்றியே இப்போதும் சிந்திப்போம் எப்போதும் சிந்திப்போம். அதுவே எங்களின் வலிமையான தொடர்ச்சி விடுதலைப் போராட்டத்திலிருந்து நாங்கள் விலகுவதென்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. விடுதலையை நோக்கியே எங்கள் எண்ணம் எங்கள் செயல் எங்கள் எதிர்காலம் எல்லாமே.
இப்போதைய ஈழநாட்டில் எதிரிகளால் காற்றுகூட கவனிக்கப்படுகின்றது குருவிச்சத்தத்தையும் கூர்ந்து கேட்கின்றார்கள். சராசரி வாழ்வினை இயற்கையும் தமிழர்களும் ஈழத்தில் செயற்கையாகவே நகர்த்தி வருகின்னறார்கள். வெறிச்சோடிக் கிடக்கின்றது. ஈழநிலம் வெறித்தபடியே பார்க்கின்றது ஈழவானம் இது விடுதலைப்போரின் இறுதிகாட்சி என்கின்றான் எதிரி.
இல்லை......... இல்லை.......... இது விடுதலைப்போரின் இடைவேளைக் காட்சிதான் கடைசிக் காட்சியென்று ஒன்று உண்டு. அப்போது இருக்கப் போவதென்ன "சுதந்திர தமிழீழம்" விடுதலைத் தமிழர்களும் தான் என்கிறது மனது.
ஆம் தமிழர்களே இடிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களின் இடியாத வார்த்தைகள் இவை.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
அ.திருநாவுக்கரசு 

Comments

Popular posts from this blog

PM Modi to lay foundation of SEZ at JNPT

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire