மாவீரர் தின அறிக்கை - சீமான்


Pic courtesy: www.alaikal.com

இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று மாவீரர் தினத்தில் உறுதியேற்போம்நாம் தமிழர் கட்சி

மானுடத்தின் மூத்த இனம், நாகரீகத்திற்கும், தொன்மைக்கும் சான்றாக உலக வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய இனமான தமிழினம், காலனி ஆதிக்கத்தினாலும், அயலவர் ஊடுறுவலினாலும் தனது தனித்தன்மையையும், தன்னாட்சியையும் இழந்து அடிமையுற்ற நிலையில், நம்மினம் வாழ்ந்த நிலப்பகுதிகள் அரசியல் ரீதியாக விடுதலைப் பெற்றும் அடிமை வாழ்வாகவே தொடர்ந்த நிலையில்தான், இலங்கையில் மேலாதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடி நிலைக்கு வீழ்த்தப்பட்டது.
 
நம் இனத்திற்கு நேர்ந்த அந்த இழிநிலையை மாற்ற, சிங்களர்களுக்கு இணையான அரசியல் விடுதலையைப் பெற ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட நிலையில்தான், நம் மண்ணைக் காக்க, நம்மினத்தின் மானத்தைக் காக்க, நமது இறைமையை மீட்க, தமிழீழத் தேசத்தில் தன்னாட்சியை படைக்க உருவானதே தமிழீழ விடுதலைக்கான ஆயுத வழிப் போராட்டமாகும். உன்னதமான அந்த விடுதலை இலட்சியைத்தை நோக்கிய போராட்டத்தை, அக, புற வலிமையுடனும் உறுதியுடனும் முன்னெடுத்தவர்தான் நவம்பர் 26ஆம் நாளான இன்று பிறந்த நாள் காணும் நமது தலைவர், தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகத் திகழும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

தனது பிறந்தநாளுக்கு நமது தலைவர் முக்கியத்துவம் அளித்திடவில்லை. அதற்கு மாறாக, நவம்பர் 27ஆம் நாளையே தமிழ்த் தேசியத்தின் எழுச்சிமிக நாளாக, நம் இனத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், இளமையையும், குடும்ப உறவுகளையும், மானுடம் எல்லாவற்றினும் பெரிதாகக் கருதும் உயிரையே ஆயுதமாக்கிய போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் மாவீரர் தினமாக அறிவித்து, அதனை தமிழினம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கடைபிடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதனைத்தான் நாம் தாய்த் தமிழ் நிலமான தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கடைபிடித்து வருகின்றோம்.
 
மாவீரர் தினமென்பது நமது மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகை செய்த அந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளல்ல, மாறாக, அந்த ஈகையின் நோக்கம் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க நாம் உறுதியேற்பதற்கேயாம். இதனை நமது தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரைகளில் இருந்து நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். நம் இனத்தை அடிமைப்படுத்தி, தமிழீழ தேசத்தை சிங்கள மயமாக்கிடும் நோக்கோடு நம் மீது இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள பெளத்த இனவாத அரசை எதிர்த்து, நம் இனத்தின் விடுதலைக்காக நமது மாவீரர்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் மெளனிக்கப்பட்டது. விடுதலைக் களத்தில் ஏற்பட்ட அந்த பின்னடைவைப் பயன்படுத்திக்கொண்டு, முடிந்தது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று இலங்கை அரசும், தம்மை இனத்தின் தலைவர்கள் என்று பீற்றிக்கொண்டவர்களும் கூச்சமின்றி பேசிய நிலையில்தான், நாம் தமிழர் கட்சி பிறந்தது. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழினத்தை தட்டி எழுப்பியது. இனத்தின் விடுதலை என்கிற அந்த உன்னத இலட்சியத்தை நிறைவேற்ற ஜனநாயக வழியில் தமிழ் மக்களைத் திரட்டி போராடுவது என்று உறுதிபூண்டு, நம்மினத்தில் முளைத்த துரோகிகளின் துணையுடன் இனப் பகைவர்கள் புணைந்த அரசியல் சதியை தொடர்ந்து முறியடித்து, தமிழினத்தின் விடுதலை வேட்கையை அணையாமல் காத்து வருகிறது.

இனத்தின் விடுதலை என்பது மற்றுமொரு பிரச்சனையல்ல, அது அரசியலும் அல்ல, அது எம்மினத்தின் புனிதமான உரிமை. அதனை விட்டுத்தந்துவிட்டால், பிறது நமக்கென்று அரசியல் என்பதற்கு எந்த  அடிப்படையும் இல்லை. எனவேதான் மாவீரர் தினத்தை கடைபிடிக்கும் நாம், அந்த நாளில், நமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வீரவணக்கம் செலுத்திடும் வேளையில், எப்பாடு பட்டாகினும், இன்னுயிரைத் தந்தாகினும் இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதியேற்கிறோம். இந்த உறுதியை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நாளில் மனப்பூர்வமாக எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒன்றிணைந்த திரட்சியே இனத்தின் விடுதலை வென்றெடுப்பதற்கான புரட்சியாகும் என்பதை தமிழர் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.

நம் இனத்தை பூண்டோடு அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசு தமிழீழ தேசத்தின் மீது தொடுத்த போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். போரின் கடைசி நாட்களில் மட்டும் முள்ளிவாய்க்கால், வட்டுவாகலில் நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நம் சொந்தங்கள் கொன்று புதைக்கப்பட்டனர். ஆனால் இதனை இன அழிப்பு என்று இதுவரை எந்த ஒரு நாடும் கூறவில்லை. தமிழினத்திற்கு எதிரான அந்தப் போரில் போர்க் குற்றங்கள்தான் நடந்துள்ளது என்று கூறுகின்றனவே தவிர, உண்மையில் நடந்த இனப் படுகொலையை பேச மறுக்கின்றன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அங்கு நடந்தது போர்க்குற்றமல்ல, அந்தப் போரே குற்றம் என்றும், அதில் எம்மினத்தின் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்றும், அது திட்டமிட்ட இன அழித்தலே என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காகவே சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.
 
இப்படிப்பட்ட சர்வதேச சூழலில்தான், தமிழீழ விடுதலையை முன்னெடுக்க முன்னணியில் இன்று உழைத்திடம் நம் இனத்தின் பெருமைமிக்க போராளிகளை, நம் இனத்தில் தோன்றிய துரோகிகளைக் கொண்டே அழித்திடும் வேலையை சிங்கள அரசு செய்து வருகிறது. அதுதான் நம் தலைவரால் பன்னாட்டு அரசியலிற்காக நியமிக்கப்பட்டு, அரும்பணியாற்றிவந்த மதீந்திரன் எனும் பரிதி பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர நிகழ்வாகும். தமிழினத்தின் ஆயுத போராட்டத்தை முடக்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்த நம் இனத்தின் எதிரியாக சிங்களம், அது சர்வதேச அளவில் கொழுந்துவிட்டு எரிவதை சகிக்க முடியாமல் மேற்கொண்ட நடவடிக்கைதான் பரிதியின் கொலையாகும். எனவே நமது இனத்தின் விடுதலையை முறியடிக்க எதையும் செய்த நம் எதிரிகள் முனைப்பாக செயலாற்றிவரும் நிலையில், அதனை முறியடித்து, விடுதலையை வென்றெடுக்க இனத்தின் ஒற்றுமை ஒன்றே ஒரே வழியும் வலிமையுமாகும். இலக்கை நோக்கிய ஒன்றிணைந்த செயல்பாடே அந்த ஒற்றுமையை உண்டாக்கும்.
 
ஒன்றுபடுவோம், இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம். மாவீரர்கள் நினைவு நாளில் அவர்களின் நினைவு சுமந்து கனவை நோக்கி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியேற்போம்.
 
நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

Comments

Popular posts from this blog

PM Modi to lay foundation of SEZ at JNPT

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire