Statement by செந்தமிழன் சீமான்:
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை நகரத்தி்ன் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டுவிட்டதால், மும்பை தாக்குதல் வழக்கு முழுமையாக முடிந்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் சுசில் குமார் சி்ண்டே கூறியிருப்பது வியப்பாக உள்ளது.
மும்பையின் மீது நடத்தப்பட்ட அந்த பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் காவல்துறை அதிகாரிகள் உட்பட பல காவலர்களும் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் காவல்துறையினருடன் நடந்த மோதலில் அன்றைக்கே கொல்லப்பட்டனர், அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டவர். ஆனால் இந்த தாக்குதலை சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தின் தலைவர் அனிப் மொகம்மது சயீத், கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்த சகீர் உர் ரகுமான் ஆகியோரை இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களை சட்ட ரீதியாக நாடு கடத்தி இந்தியாவிற்கு கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்தும் எந்த ஒரு முயற்சியையும் மத்திய காங்கிரஸ் அரசு செய்யவில்லை. ஆனால் மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய இவர்களைப் பற்றிய வாக்குமூலத்தை அளித்த அஜ்மல் கசாபை அவசர, அவசரமாக தூக்கிலிட்டுவிட்டு, வழக்கே முடிந்துவிட்டது என்று கூறுகிறது மத்திய அரசு.
மும்பை தாக்குதல் வழக்கு மட்டுமின்றி, 2000ஆவது ஆண்டில் டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்து நடத்திய தாக்குதல், 2001ஆம் ஆண்டில் காஷ்மீர் தலைநகர் சிறீநகர் வானூர்தி நிலையத்தின் மீது நடந்த தாக்குதல், 2006ஆம் ஆண்டில் மும்பையின் புறநகர் இரயில்களில் குண்டு வைத்து நடத்திய தாக்குதல் என்று பல தாக்குதல்களை பின்னின்று நடத்தியது பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் லஸ்கர் தீவிரவாத இயக்கமே என்று பலமுறை குற்றம் சாற்றிவரும் மத்திய அரசு, அப்படிப்பட்ட தாக்குதல்களை சதி செய்து நிறைவேற்றிய லஸ்கர் இயக்கத்தினரை சட்டத்தின் முன் நிறுத்த மேற்கொண்ட முயற்சி என்ன? எய்தவன் இருக்க அம்பை மட்டும் தூக்கில் போட்டு கொன்று விடுவதால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நிகழாமல் தடுத்துவிட முடியுமா?
மும்பையில் நடந்தது தற்கொலைத் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள், துணிந்தே தங்கள் உயிரை பணயம் வைத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்ட தீவிரவாதிகள் சிக்கும்போது, அவர்களை வைத்து, தாக்குதலை திட்டம் தீட்டி நிறைவேற்றியவர்களை – சர்வதேசத்தின் உதவியுடன் பிடித்து வந்து நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டிப்பதை விட்டுவிட்டு, கையில் கிடைத்த ஒருவனை மட்டும் தூக்கிலிடுவதால் என்ன பயன்?
மும்பை தாக்குதல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல் உட்பட பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான எந்த வழக்கிலும், மூளையாக இருந்த சதிகாரர்களை பிடித்து வந்து சட்டத்தின் முன் நிறுத்தியது இல்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கூட, தாக்குதலில் ஈடுபடாதவரான அப்சல் குரு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ளார். அவரையும் உடனே தூக்கிலிடு என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட மதவாத அரசியல் கட்சிகள் கூக்குரலிடுகின்றன. குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை தண்டித்துவிட்டு, அத்தோடு வழக்கை முடித்துவிடுவது என்பது சதிகாரர்களை தப்பவிடும் நடவடிக்கையல்லவா? இது எப்படி நியாயமாகும்?
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கூட, சதித்திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்ரமணியன்சாமி ஆகியவர்களை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை! ஆனால், குற்றச்செயலில் தொடர்பற்றவர்களான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குரல்கொடுக்கிறது. தங்கள் தலைவரை சதித்திட்டம் தீட்டி கொன்றவர்கள் யார் என்பதை விசாரித்து நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு காங்கிரஸ்காரர் கூட அக்கறையுடன் குரல் எழுப்பவில்லை. இன்றுவரை அந்த சதிகாரர்கள் அதிகாரத்துடன் உலவி வருகின்றனர்.
இப்படி சதிகாரர்களை விட்டுவிட்டு, குற்றச்செயலில் ஈடுபடும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை மட்டும் தூக்கிலிட்டுக் கொல்வதால் தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் தடுத்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக, தங்கள் உயிரை கொள்கைக்காக பணயம் வைத்து தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை ஒருபோதும் அச்சுறுத்தல் ஆகாது. குற்றம் செய்த மனிதன் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை இருக்க வேண்டுமெ தவிர, கண்ணுக்குக் கண், கொலைக்கு மரணம் என்பது எந்த விதத்திலும் மானுடத்திற்கு பயனளிக்காது. அதனால்தான் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கருத்திற்கு உலக அளவில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்தான் மரண தண்டனை எனும் மனிதாபிமானமற்ற தண்டனையை ஆதரிக்கின்றன. மரண தண்டனை விதித்து கொன்றவனைக் கொல்வதை விட, அப்படிப்பட்ட கொலைக்கு சதித்திட்டம் தீட்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும், தண்டிப்பதும்தான் முக்கியம் என்பதை உணர வேண்டும்.
கசாப் தூக்கிலிடப்பட்டதில் கடைபிடிக்கப்பட்ட இரகசியமும் வினோதமாக இருக்கிறது. அவருடைய கருணை மனு நிராகரிக்கபட்ட விடயத்தைக் கூட இரகசியமாக வைத்தது ஏன்? அதுமட்டுமின்றி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளும் நெருடலாக இருக்கிறது. மரண தண்டனையை நிறுத்திட வேண்டும் என்கிற தீர்மானம் ஐ.நா. பொது அவையில் வாக்கெடுப்பு நடந்தபோது, அதனை 110 நாடுகள் ஆதரித்தன. 40 நாடுகள் மட்டுமே எதிர்த்தன. அதில் ஒரு நாடு இந்தியா. மனிதாபிமானமிக்க அப்படிப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட மறுநாளே கசாபின் மரண தண்டனையை நிறைவேற்றியிருப்பது, இந்திய மத்திய அரசின் மனிதாபிமானமற்ற எண்ணத்தையே வெளிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment