Source: www.dinamani.com
By
சென்னைத் துறைமுகம் மீண்டும் நிலக்கரியைக் கையாள முயற்சிகள் மேற்கொண்டு வருவதால் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் கரித்தூள் மாசு படியும் அபாயம் உள்ளதாக பொதுநல அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி, இரும்புத்தாது கையாளப்படுவது கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு பரிந்துரை கருத்துருவை சமர்ப்பித்தது.
நிலக்கரித்தூள் மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கு செயல்படுத்த வேண்டிய கூடுதல் கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதன் மூலம் மீண்டும் நிலக்கரியைக் கையாளலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் சென்னைத் துறைமுகம் அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இதற்கு பொதுநல அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கரித்தூள் மாசுவால் திணறிய சென்னை: சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 2 கோடி டன் அளவிற்கு இரும்புத் தாது மற்றும் நிலக்கரி நீண்ட காலமாக கையாளப்பட்டு வந்தது.
இவை கையாளப்படும்போது எழும் கரித்தூளால் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், பாரிமுனையில் உள்ள முக்கிய கட்டடங்கள் மற்றும் வடசென்னை முழுவதும் இவ்வகை மாசுவால் பாதிக்கப்பட்டன.
உயர் நீதிமன்றம் தடை: இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கில் நிலக்கரி, இரும்புத் தாதுவை கையாள தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் 2011 மே மாதம் உத்தரவிட்டது.
இத்தடையை எதிர்த்து, துறைமுக நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், கப்பல் துறை செயலர் தலைமையில், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலர், மத்திய, மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாடு வாரியத் தலைவர்கள், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் (நீரி), ஐ.ஐ.டி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக்குழுவை அமைத்து உத்தரவிட்டது.
கடந்த மே மாதம் இக்குழு நேரில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் மீது சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற சென்னைத் துறைமுகத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துறைமுக நிர்வாகம் நடவடிக்கை: உயர்நிலைக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், நிலக்கரியை இறக்கும்போது மூடப்பட்ட கலன்களைப் பயன்படுத்த வேண்டும், தெளிப்பான்கள் மூலம் நிலக்கரி மீது தொடர்ந்து நீர் தெளித்தல், கப்பலில் இருந்து நிலக்கரியை திறந்த லாரிகளில் கொண்டுச் செல்லாமல், மூடப்பட்ட லாரிகளில் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன.
கப்பலில் இருந்து இறக்கி, சேமித்து வைத்து, வேகன்களில் எடுத்துச் செல்லுவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன நடைமுறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி, இரும்புத் தாது கையாளப்பட்டு வந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ. 250 கோடி வரை சென்னைத் துறைமுகத்திற்கு வருவாய் கிடைத்தது. உயர் நீதிமன்றத் தடையால் கடந்த ஓராண்டாக பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்த துறைமுக நிர்வாகம், உயர்நிலைக்குழு அறிக்கையால் தற்போது எழுச்சி பெற்றுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினைப் பெற முடியும் என துறைமுக நிர்வாகம் கருதி, இதற்கான வேலைகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு: இது குறித்து வடசென்னை பொதுநல அமைப்பு நிர்வாகி டாக்டர் ஜெயச்சந்திரன், நுகர்வோர் கூட்டமைப்பு அமைப்பாளர் என். துரைராஜ் தெரிவித்த கருத்துகள்:
நிலக்கரி மாசுவால் ஆயிரக்கணக்கானோருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை சிறிது நேரம்கூட திறந்து வைக்க முடியாது.
ஏற்கெனவே படிந்துள்ள கரித்தூள் படலங்கள்கூட இன்னும் விலகாத நிலையில் மீண்டும் நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வது என்ற முயற்சிக்கு அனைத்து தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள நிலையில், சென்னை மாநகர மக்களை பெருமளவில் பாதிக்கக் கூடிய இப்பிரச்னையில், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment