தமிழ் மக்களின் முதுகெலும்பும் முறிகிறது…….!
Source:http://www.puthinamnews.com/?p=34969
முள்ளிவாய்க்காலின்
பின்னர் தமிழர்களின் பலமாகவும், சர்வதேசத்தின்முன்னால் தமிழர்களின்
பிரதிநிதிகளாகவும் இருப்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பே, தமிழ் தேசிய
கூட்டமைப்பு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்க
வல்லது.
தற்போது கிழக்கு மாகாணத்தில்
நடந்து முடிந்த தேர்தலானது தமி்ழ் மக்களிற்கு முக்கியமான ஒரு
அரசியற்போராகும், இதுபோலவே அரசிற்கும் கிழக்கு மாகாணத் தேர்தல் மிக
முக்கியமான ஒன்றாகும். பெரும் பரபரப்புக்கு மத்தியில் கிழக்கின் தேர்தல்
முடிவிற்கு வந்துள்ளது, கிழக்கின் தேர்தல் முடிவுகளின்படி எந்தக்கட்சியும்
பெரும்பான்மை வாக்கை பெறாததால் இன்னுமொரு கட்சியின் தயவில்தான் ஆட்சியமைக்க
முடியும் என்ற நிலையில் எல்லாக் கட்சிகளும் உள்ளன, இந்த நிலையில் தமிழ்
தேசிய கூட்டமைப்பும் தனது பங்கிற்கு ஏனய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள
முடிவெடுத்துக் கொண்டது. இந்த இடத்தில்தான் கூட்டமைப்பின் அரசியல் பாதையை
சற்று ஆழமாக பார்க்கவேண்டியுள்ளது
.
ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ்மக்கள்
தமக்கான சலுகைகளோ, உதவிகளோ, நிவாரணங்களோ, புனர்நிர்மான கட்டுமான உதவிகளோ
கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும்
கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முன்வரக் காரணம்,
இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் அரசியல்
அபிலாசைகளை பெற்றுக்கொள்ள போராடும் ஒரு தேசிய கட்சியாகவே தமிழ் தேசிய
கூட்டமைப்பை தமிழர்கள் பார்க்கிறார்கள். இதனாலேயே ஆளும் கட்சியின்
பிரதிநிதிகளிற்கு வாக்களிக்காது கூட்டமைப்பிற்கு வாக்களிக்க
முன்வருகிறார்கள் தமிழர்கள்.
இப்போது வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதோ சுயேற்சைக்குழுக்கள் செயற்படுவது போல் இன்று
செயற்படத் தொடங்கியுள்ளது, கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு முதலில் முஸ்லீம்
காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு
பகிரங்கமாகவே அறிவித்தது. அத்துடன் முஸ்லீம் காங்கிரஸ்சே முதலமைச்சராக
அமர்வதானாலும் அதற்கும் தாம் சம்மதம் என்று பகிரங்கமாக அறிவித்து. இது
அவர்களின் விட்டுக்கொடுக்கும் அரசில் பண்பை உணர்த்துகிறது.
ஆனால் இன்றுவரை முஸ்லீம் காங்கிரஸ் தனது
கடும்போக்கில் இருந்து கொஞ்சமும் இறங்கிவராது அரசுடன் கூட்டணி வைப்பது
தொடர்பில் பேச்சுவார்த்தை செய்து வருகிறது, இத்தனைக்கும் தேர்தல் காலத்தில்
அரசை எதிர்த்து பிரசாரம் செய்த கட்சிகளுள் முஸ்லீம் காங்கிரசும்
முக்கியமான ஒன்று. முஸ்லீம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் கூட்ணிவைக்காது ஆளும்
கட்சியுடன் கூட்டணி வைக்குமானால் அது தமிழ் மக்களிற்கு முஸ்லீம் காங்கிரஸ்
செய்யும் துரோகமாக கருதவேண்டும். ஆனால் கூட்டமைப்பு அரசுடன் கூட்டணி
வைத்துக்கொண்ட பின்னர் யாரும் முஸ்லீம் காங்கிரசை துரோகிகள் என்று சொல்ல
முடியாது.
இந்த இழுபறி நிலையில் தமிழ் தேசிய
கூட்டமைப்பு இப்போது எடுத்துள்ள அதிரடி முடிவு கூட்டமைப்பின் கொள்கைக்கு
முரணாகவும், அதன் மேல் வைத்துள்ள அபிமானத்தையும் குறையச் செய்துள்ளது.
அதாவது கூட்டமைப்பு இப்போது அரசியல் அடிமட்டத்திற்கு விழுந்து மகிந்தவின்
கால்களை பிடிக்கும் நிலையில் உள்ளது, என்பதை சிந்திக்கும் யாராலும்
ஜீரணிக்கமுடியாது.
அது என்னவெனில் முஸ்லீம் காங்கிரஸ்
கூட்டமைப்பை நெருங்கி வராது ஆளும் அரசின் பக்கம் கூட்டணி வைக்க
விரும்புவதால். இனியும் பொறுத்திருக்க முடியாது என்று கொதித்தெழுந்துள்ள
திரு. சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆழும் மகிந்த அரசுடன் கூட்டணி
வைத்துக்கொள்ள விரும்புவதாக அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதைக்கேட்கும்போதே கூட்டமைப்பின் அரசியல் பாதை தெளிவாக தெரிகிறது. சரி
இப்போது அரசுடன் கூட்டமைப்பு ஏன் கூட்டணி வைக்கக்கூடாது என்று கருதுகிறோம்
என்று பார்க்கலாம்.
இன்றைய நிலையில் இலங்கைத்தீவில் தமிழ்
மக்களின் உரிமைக்காக அரசுடன் பேரம் பேசும் வல்லமையும் மக்களின் பலமும் உள்ள
ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆகும். ஏனெனில் தமிழீழ
விடுதலைப்புலிகளின் முள்ளிவாய்க்கால் தோல்வியின் பின்னர் இன்று மூன்று
ஆண்டுகள் ஆனாலும் அந்த இடத்தில் இருந்து மீண்டு, மீண்டும் தமிழ் மக்கள்
தங்களிற்கான ஆயுத பலத்தில் நின்று கொண்டு பேரம் பேசும் அரசியல் நிலையில்
இன்று தமிழ் மக்கள் இல்லை,
இதை வேறுவிதமாக சொல்வதானால்
முள்ளிவாய்க்கால் தோல்வியிலிருந்து தமிழ் மக்கள் இப்போதும், இனி எப்போதும்
மீளக்கூடிய நிலையில் இல்லை என்று கூறலாம்.ஏனெனில் அவர்கள் ஒரு பிழையாக ஒரு
மாயையான ஒரு மனநிலையில் சஞ்சரிக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவீரர் தினங்களும், மற்றும்
வெற்றிச்சமர்களின் நினைவு நாட்களும், வெறும் சம்பிரதாயங்களாகவும் நினைவு
தினங்களாகவும் மட்டுமே இன்று மாறியுள்ளது. மாறாக அவர்களுடன் நினைவுடன் தாம்
தொடர்ந்து விடுதலைப்பாதையில் பயணிக்க தயாரான மனநிலையில் இன்று இல்லை.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான ஒரு காரணத்தை கூறலாம்,
அது சிறிலங்கா புலனாய்வு நிறுவனம்.
முள்ளிவாய்க்காலின் பின்னர் காலத்திற்கு காலம் தமிழ் மக்கள் மத்தியில்
புலிகள் தொடர்பான புனைகதைகளை திட்டமிட்டே அரச புலனாய்வுத்துறை பரப்பி
வருகிறார்கள், தமிழ் மக்களும் அதை உண்மை என்றே நம்பியும் வருகிறார்கள். இதை
விட எதிர்காலத்தில் இன்னும் மோசமான ஒரு சம்பவமும் நடக்க உள்ளது.
அது ஏற்கனவே ஒரு தடைவை சிறிலங்கா அரச
புலனாய்வு துறையால் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்றுதான்,
அது வேறொன்றுமில்லை, தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம். இன்று
தமிழ் மக்களிற்கு புலிகள் எவ்வளவு முக்கியமோ இல்லையோ ஆனால் சிறிலங்கா
அரசிற்கு புலிகளை மீண்டும் இயக்கவேண்டிய அரசியற் பின்னணி உள்ளது. இது
தொடர்பாக ஆராய்வதானால் அது வேறு ஒரு திசையில் செல்லும் என்பதால், இப்போது
விடத்திற்கு வருவோம்.
விடுதலைப்புலிகளின் பலம் இன்று இல்லை
என்பதாலும் இப்போது தமிழர்களிற்கான ஆயுத பலம் இல்லாததாலும். தமிழ் மக்கள்
விரும்பியோ விரும்பாமலோ அரசியற் பாதையில் சென்றே எமக்கான குறைந்த பட்ச
அதிகாரத்தையேனும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே ஆயுத பலம் இல்லை என்பதை
கருத்திற் கொண்டுதான் ஒவ்வொரு முடிவினையும் எடுக்கவேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு இருக்கும்
ஆதரவை வைத்துக்கொண்டு அரசுடன் பேரம் பேசும் அரசியல் நிலையில்
இருந்தால்தான் தமிழ் மக்களிற்கான ஒரு குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தையேனும்
பெற்றுக்கொள்ளலாம். மாறாக இணக்கப்பாட்டு அரசியல் என்பதை கூட்டமைப்பு
ஆதரிக்குமானால். கூட்டமைப்பிற்கும், E.P.D.P டக்ளஸ் தேவானந்தாவிற்கும் என்ன
வித்தியாசம்?.
டக்ளஸ்சும் அதையேதான் செய்கிறார். அரசுடன்
ஒட்டியிருந்துகொண்டு, தானும் தனது குழுக்களும் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு
அரசின் அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டு மக்களிற்கு சிறு உதவிகள் மற்றும்
வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துக்கொண்டு. மத்தியில் கூட்டாட்சி
மானிலத்தில் சுயாட்சி என்று கூறிக்கொண்டு, உண்மையிலேயே அந்த கொள்கையை
பிரதிபலிக்காது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு சலுகை அரசியல்
செய்து வருகிறார்.
இதையா கூட்டமைப்பும் விரும்புகிறது? இதை
செய்வதற்கு கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டிய தேவை இல்லையே. உண்மையில்
கிழக்கு மாகாண மக்கள் போரினால் பெரியளவில் பாதிக்கப்பட்டு மிகவும்
பின்தங்கிய நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆளும்
கட்சியினரிற்கு வாக்களித்திருந்தால் அவர்களிற்கு ஆளும் கட்சியும் தமக்கு
ஆதரவாக இருக்கும் மக்களிற்கு உதவிகள் புனர்நிர்மாண உதவிகள் மற்றும்
வேலைவாய்ப்புக்களை வழங்கியிருப்பர். பாதிக்கப்பட் மக்களும் மீண்டும்
பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருந்திருக்கும், இதையெல்லாம் அம்மக்கள்
செய்திருந்தால் அம்மக்களையும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஆழும்
கட்சி பிரதிநிதிகளையும் துரோகிகள் என்று அழைத்திருப்பர். உண்மையிலேயே தேவை
இருந்தும் அம்மக்கள் அரசியல் தீர்வை எதிர்பார்த்தே கூட்டமைப்பிற்கு
வாக்களித்தார்கள். சலுகைகளை எதிர்பார்த்து அல்ல.
அரசுடன் ஒட்டிக்கொண்டு ஒருபோதும் எந்த
உரிமைகளையும் பெறமுடியாது. பெரும்பான்மை பலத்தில் இருந்துகொண்டு
விட்டுக்கொடுப்புகள் செய்யாது நேர்மையான அரசியல் பாதையில் தொடர்ந்து
பயணிப்பதே ஒரு வெற்றிப்பாதையாக இருக்கும், ஏனெனில் இன்று சர்வதேசம் தமிழ்
மக்களின் பிரச்சனையை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறது.
ஆனால் கூட்டமைப்பு பிழையான வழிநடத்தலில்
செல்கிறது… இந்த முடிவுகளின் பின்னணியில் ஒரு வெளிநாட்டு புலனாய்வு
விறுவனம் உள்ளது இதன் வழிநடத்தலில்தான் இன்று கூட்டமைப்பு செல்கிறது. இது
சுயநல உலகம் கூட்டமைப்பு இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
நீங்கள் இருந்துபாருங்கள் இப்போதைய
நிலையில், கூட்டமைப்பின் அழைப்பை மகிந்த அரசு ஏற்றுக்கொள்ளும். இது மகிந்த
அரசிற்கு கிடைத்த மிகப்பெரிய அரசியல் வெற்றி , ஏனெனில் கூட்டமைப்புடன் ஒரு
இணக்கப்பாட்டுடனான அரசியல் நிலைக்கு அரசு வந்துள்ளது என்பதை
வெளியுலகத்திற்கு சிறிலங்கா அரசு காட்டிக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது. இதன்
மூலம் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிறிலங்கா மிகவும் சுலபமாக
வெளிவந்துகொள்ளலாம்.
கூட்டமைப்புடன் அரசு கூட்டணி
வைத்துக்கொள்வதாயின் சில நிபந்தனை அடிப்படையில்தான் சம்மதிப்பதாக அரசு
கூறும், அந்த நிபந்தனைகளில் முக்கியமாக இருக்கப்போவது, அரசிற்கெதிரான
பிரசாரங்களை கூட்டமைப்பு முன்வைக்ககூடாது அத்துடன் போர்க்குற்றம் பற்றி
வாய்திறக்கக்கூடாது என்ற நிபந்தனை இவற்றை விட தமிழர்களிடமிருந்து வரும்
தலையிடியான விடயங்கள் பலவற்றையும் நிபந்தனையாக முன்வைப்பார்கள்.
சம்பந்தனும், இது வெளியே தெரியவா போகிறது என்று, இவற்றிற்கு சம்மதிக்க
வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்.
இவர்கள் இதற்கு சம்மதிக்கா விட்டாலும்
அரசுடனான கூட்டணிக்கு அரசு ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும். அரசுடன்
ஒட்டிக்கொண்டு கூட்டணி வைப்பதால் கூட்டமைப்பை விட சிறிலங்காவிற்கே அதிக
நன்மை உள்ளது.
தூர நோக்குடன் சிந்திக்கும் அரசாக
இருந்தால் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று கூட்டமைப்புடன் சேர்ந்து கிழக்கில்
அரசு ஆட்சியமைக்கும்”. இனி தமிழ் மக்களின் நிலைதான் என்ன?
கிழக்கின் தொடர்ச்சியாக வடக்கையும் சிங்கள
தேசம் ஆயுத முனையில் தோற்கடித்து முள்ளிவாய்க்காலில் தமிழன் கட்டியிருந்த
கோவணத்தையும் இழந்தது போன்று, இனியும் கிழக்கின் தொடர்ச்சியாக
கூட்டமைப்புடன் இணைந்து வடக்கிலும் கூட்டணி அரசை நிறுவ சிங்கள ஆட்சிபீடம்
முடிவெடுத்துக் கொள்ளும். வடக்கில் கூட்டமைப்பிற்குத்தான் அதிக ஆதரவு என்று
எல்லோரும் நினைக்கலாம். ஆனால் உண்மை நிலைமை வேறுமாதிரி உள்ளது. அடுத்த
முறை வடக்கின் தேர்தல் முடிவு அரசிற்கு கணிசமான ஆதரவு நிலையே இருக்கும்.
இதற்கு பல காரணங்கள் உள்ளது,
ஒன்று இன்று இலங்கைத்தீவில் தமிழ் தேசிய
ஆதரவாளர்கள் வெகுவாக குறைந்து வருகிறார்கள். அதிகரித்த வெளிநாட்டு
மோகத்தாலும் மற்றும் விடுதலைப்புலி ஆதரவாளர்களிற்கான அச்சுறுத்தல்கள்
காரணமாகவும் வேகமாக இலங்கையில் இருந்து வெளிநாடுகளிற்கு செல்லவே எல்லோரும்
விரும்புகிறார்கள், அதுவும் முடியாத மக்கள் படகுமூலம்
அவுஸ்திரேலியாவிற்கேயாவது செல்கிறார்கள். இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு
வாக்கு வேகமாக குறைந்துவருகிறது.
இப்போது அங்கு அச்சமின்றி
வாழக்கூடியவர்கள் யார்? ஒன்று அரச ஆதரவு மக்கள். மற்றையவர்கள் அரச
புலனாய்வு மற்றும் அரச ஆதரவு கட்டமைப்புக்குள் உள்ள மக்கள். இவர்களை விட
விடுதலையான போராளிகள் கூட கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முடியாத சூழல்
ஏற்படும். இதனால் விரும்பியோ விரும்பாமலோ முன்னாள் போராளிகள் அரசின்
பிரதிநிதிகளிற்கே வாக்களிப்பர்.
இன்னும் பலர் எதற்கு வீண் வம்பு என்றும்
கூட்டமைப்பு இறுதியில் அரசுடன் ஒட்டிக்கொண்டால் தமது நிலைமை
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று அஞ்சியும் அரசிற்கே வாக்களிக்க
முன்வருவார்கள், இல்லையெனில் யாருக்கும் வாக்களிக்கமாட்டார்கள்.
இதைவிட வாக்கு நிலையங்கள் மற்றும் வாக்கு
எண்ணும் நிலையங்களில் மிக பெரிய மோசடி நடக்கும், இதை கிழக்கின் தேர்தலில்
அரசு வெற்றிகரமாக நடாத்தியுள்ளது,
எனவே வடக்கிலும் இதேபோன்று மோசடி செய்து
அரச பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்யலாம். பெரும்பான்மை பலம் பெறாவிட்டாலும்
இன்றய கிழக்கு மாகாண தேர்தல் முடிவு போன்று வடக்கிலும் யாருக்கும்
பெரும்பான்மையில்லாத ஒரு நிலையே நிலவும். அதன் பின்னர் கூட்டமைப்பும்
இன்றைய கிழக்கின் நிலையைத்தான் எடுக்கும். இதன் பின்னணியில் தான் அண்மையில்
இலங்கை ஜனாதிபதி வடக்கின் தேர்தலும் விரைவில் இடம்பெறும் என்று கூறினார்.
இனி தமிழரின் அரசியல் தீர்வைபற்றி யாரும்
வாய்திறக்க முடியாத ஒரு அரசியல் வெற்றிடத்தில் தமிழர்கள் நிற்கப்
போகிறார்கள் அதற்கான ஒரு பாதையைத்தான் கூட்டமைப்பு திறந்து வைத்துள்ளது.
ஒரு அரசுடன் இணைந்து ஆட்சியமைத்த பின்னர் யாரும் வாய்திறந்து பேசமுடியாது. அப்படி பேசினாலும் அதை சர்வதேசம் கருத்தில் எடுக்காது.
இனி மொத்தத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசில் பலமும் சரிகிறது, தமிழ்மக்களின் முதுகெலும்பும் முறிகிறது.
த. நம்பி.
t.nampi@gmail.com
t.nampi@gmail.com
Comments
Post a Comment