Tuesday, September 11, 2012

"வடசென்னை என்றால் பாராமுகம்தானே"... திருவொற்றியூர் அரசு மருத்துவமனை மூடப்படும் அபாயம்

Source: www.dinamani.com

திருவொற்றியூர், செப். 10: திருவொற்றியூரில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி செலவில் புதிதாக அமைத்துத் தரப்பட்ட நவீன அரசு பொது மருத்துவமனை ஒன்றரை ஆண்டுகளாக போதிய டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படாததால் மூடப்படும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
டைம்ஸ் பவுண்டேசன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் ரூ.5 கோடி செலவில் நவீன மருத்துவமனை ஒன்றை கட்டி 2011-ல் அரசிடம் ஒப்படைத்தது. ஒட்டுமொத்த தேவையான 10 டாக்டர்களில் 3 பேர் மட்டும் மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மருத்துவப் பணியாளர்களும், ஊசி, மருந்து வகைகளும் இதேபோல் தாற்காலிக அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
புதிய மருத்துவமனையில் 50 உள்நோயாளி படுக்கைகள், பிரசவ அறை, அறுவை சிகிச்சைக் கூடம், ரூ.4 லட்சம் செலவில் எக்ஸ் ரே, சுமார் ரூ.15 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பரிசோதனைக் கூடம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்ட நாளில் இருந்தே சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
இது அதிக நாள்கள் நீடிக்கவில்லை. சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததாலும், தேவையான மருந்து வகைகள் விநியோகம் இல்லாததாலும் வருகை தந்த நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
காற்றில் பறக்கும் அமைச்சர் உறுதிமொழி: தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய இம்மருத்துவமனையின் அவல நிலை குறித்து தகவல் அறிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், கடந்த ஆண்டு ஜூனில் நேரடியாக ஆய்வு செய்தார்.  
இந்த மருத்துவமனை முழுவீச்சில் இயங்கும் வகையில் கூடுதலாக 5 டாக்டர்கள், 10 செவிலியர்கள் மற்றும் 31 இதர பணியாளர்கள் என 46 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள், மருத்துவமனையை நிர்வகிக்க ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவிடப்படும் என உறுதியளித்தார்.  மீண்டும் கடந்த மாதம் இந்த மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் விஜய் தனியார் நிறுவனம் அமைத்துக் கொடுத்த புதிய பெயர்ப் பலகையை மட்டும் திறந்து வைத்தார். அப்போது டாக்டர்கள், பணியாளர்கள் நியமனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
அலட்சியப்படுத்துகிறது அரசுத் துறை: இது குறித்து திருவொற்றியூர் பொது வர்த்தக சங்க கெரவத் தலைவரும், வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான ஜி.வரதராஜன் கூறியது:
திருவொற்றியூர் மக்களின் வரப்பிரசாதமாக அமையப்பெற்ற இந்த மருத்துவமனையை சிறப்பாக நடத்திட உள்ளூர் சமூக நல விரும்பிகள் தயாராகவே இருந்தனர்.
ஆனால் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி ஸ்கேன் உள்ளிட்டவைகளை இயக்க பணியாளர்கள் இல்லை. மேலும் நவீன உபகரணங்கள் அனைத்தும் தூசு படிந்த நிலையில் உள்ளன. பிரசவ அறை உண்டு. ஆனால் பிரசவம் பார்க்க பெண் டாக்டர்களே இல்லை. ஜெனரேட்டர் வசதி கிடையாது. 50 படுக்கைகள் இருந்தும் உறைவிட மருத்துவர் கிடையாது.
மொத்தத்தில் மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கப்பட்ட இம்மருத்துமனை ஒன்றரை ஆண்டுகளிலேயே மூடுவிழாவினை நோக்கி பயணிப்பதை என்னவென்று சொல்வது?  என்று வேதனை தெரிவித்தார் வரதராஜன்.
நோயாளி வருகையும், தேவையான கட்டமைப்பு வசதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே அனைத்து ஊழியர்களும் நியமிக்கப்பட்ட பிறகு மருத்துவமனையைத் திறந்திருக்க வேண்டும். அல்லது திறந்த பிறகாவது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டுமே நடைபெறவில்லை. தவறு யார் மீது என்றாலும் இழப்பு என்னவோ இப்பகுதி ஏழை மக்களுக்குத்தான்.
வடசென்னை என்றால் பாராமுகம்தானே என்பதில் இம்மருத்துவமனையும் சேர்ந்துவிட்டதுதான் யதார்த்த உண்மை என்றார் சமூக நல ஆர்வலர் ஒருவர்.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village