துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள் 4 நாள்கள் வரிசையில் நிற்கும் அவலம்...


...தொடர்ந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு: இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு
பிரச்னைக்கு யார் காரணம்?

"இத்தனைக்கும் கப்பல்த்துறை அமைச்சர் ஜி.கே.வாசன்நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இணை அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று அமைச்சர்களும் ஓரே நாளில் இப்பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு, தமிழக முதலமைச்சர் அளவில் ஆலோசனை செய்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும்."

முகவை.க.சிவகுமார்.
திருவொற்றியூர்: சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் 4 நாள்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.  துறைமுக இணைப்புச் சாலைகளான எண்ணூர் விரைவுசாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் தொடர்ந்து வரிசை கட்டி நிற்கின்றன. 
           இதனால் பயணிகள் பேருந்து உட்படட அனைத்து போக்குவரத்தும் அடியோடு ஸ்தம்பித்துள்ளன.  இதனால் பொன்னேரி, மீஞ்சூர், மணலி, மாதவரம், திருவொற்றியூர் இடையே பயணிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழக்கைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூரில் இருந்து மணலி புதுநகர் வழியாக  திருவொற்றியூர் வர 30 நிமிடங்கள் ஆகும் என்பது இயல்பானது. ஆனால் தற்போது மீஞ்சூரிலிருந்து பொன்னேரி, பஞ்செட்டி, காரனோடை, செங்குன்றம், மாதவரம் வழியே பணித்தால் சுமார் 2 மணி நேரம் ஆகும். கண்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால் பொதுமக்களுக்கு வேறு வழியில்லை. இவ்வழியே பயணிகள் பேருந்து இயக்கம் பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. மீஞ்சூர், பொன்னேரி செல்ல சாலை மார்க்கப் பயணத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதால் ரயில் பயணத்திற்கு பெரும்பாலோர் மாறிவிட்டனர். இச்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் கூட பயணிக்க முடியாத அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
ஓட்டுனர்கள் அவதி, பணி செய்ய மறுப்பு:
     துறைமுகம் செல்லும் லாரிகள் நான்கு நாள்கள்வரை காத்திருப்பதால் லாரி ஓட்டுனர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு போதிய உணவு வசதியில்லை. இயற்கை உபாதைகளைக் கூட செய்ய முடிவதில்லை. இதனால் சென்னையில் கண்டெய்னர் லாரிகளை ஓட்ட டிரைவர்கள் மறுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் 'கத்துக்குட்டி' டிரைவர்கள் லாரிகளை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிரழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.  
     மாதக்கணக்கினல் நீடிக்கும் இப்பிரச்னை குறி்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசு அதிகாரிகள்  ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவிப்பதிலேயே காலம் கடத்துவது இப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  இப்பிரச்னைக்கு யார் காரணம் என்பது குறித்த முழுமையான அலசல் இதோ:
கிழக்கு நுழைவு வாயில்:
     இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயில் என அழைக்கப்படும் சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு 6.5 கோடி டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்படுகின்றன.  துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் கண்டெய்னர்கள் ஏற்றி இறக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
ஆனால் இதற்கேற்ற வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் துறைமுக நிர்வாகம் மெத்தனமாகச் செயல்பட்டதால் தற்போது கண்டெய்னர் லாரிகள், கனரக லாரிகள் உள்ளிட்டவைகளைக் கையாள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் நிறைவேறுவதில் தாமதம்,  துறைமுகம்-மதுரவாயல் மேம்பாலத் திட்டத்திற்கு தடை உள்ளிட்டை பிரச்னைகளால் துறைமுகத்தில் தற்போதைய கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
மூடப்பட்ட நுழைவு வாயில்கள், தடை செய்யப்பட்ட சாலைகள்:
     சென்னைத் துறைமுகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனரக வாகனங்கள் வந்து செல்ல வேண்டும்.  ஒரு காலத்தில் 14 நுழைவு வாயில்கள் வழியே போக்குவரத்து நடைபெற்ற இத்துறைமுகத்தில் தற்போது ஒரிரு வாயில்களில் மட்டுமே கனரக வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. தினமும்  சுமார் 3 ஆயிரம் கண்டெய்னர் லாரிகளும்  30 அடி கொண்ட ஒரே நுழைவு வாயிலில்தான் சென்று வர வேண்டிய அவலநிலை உள்ளது.   தலைமைச் செயலக பாதுகாப்பு, குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு போன்றவைகளால் ஏற்கனவே நடைபெற்றுவந்த முக்கிய வாயில்கள் அனைத்து மூடப்பட்டன.
      அடுத்து சென்னை மாநகரில் இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்டு வந்த கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் மாநகருக்குள் நுழைய போக்குவரத்து போலீஸார் தடை விதித்தனர். இதனால் அனைத்து லாரிகளும் மாதவரம், மணலி. திருவொற்றியூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டன. ஏற்கனவே விழிபிதுங்கும் நிலையில் இருந்த தற்போதைய சாலை முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.  ஏற்கனவே நெருக்கடி மிகுந்த சாலையில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த முடிவு குறித்து கவலைப்படாத போக்குவரத்து துணை, இணை ஆணையர்கள் எல்லாம் குளறுபடியான உத்தரவுகளையே அளித்தனர்.
எதைப் பற்றியும் கவலைப்படாத சுங்கத்துறை:
     கண்டெய்னர் லாரிகள் நெரிசல் பிரச்னையில் முக்கிய பங்கு சுங்கத்துறையைச் சார்ந்தது.  சரக்குப் பெட்டக மையங்கள், தனியார் கிடங்குகளில் இருந்து கண்டெய்னர் லாரிகள் சுங்கத்துறை அதிகாரிகள் சீலிட்ட பிறகு துறைமுக நுழைவு வாயிலில் மீண்டும் சரி பார்க்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு புதிய விதிமுறைகளை சுங்கத்துறை ஆணையரகம் விதித்தது.  இதன்படி வெளியூர், தனியார் கிடங்குகளிலிருந்து வரும் கண்டெய்னர்கள் மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு சரக்குப் பெட்டக மையத்திற்கு வந்து அங்கு சீல் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும், இதற்கென 24 மணி நேரமும் சுங்கத் துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் எனக் கூறப்பட்டது.
               ஆனால் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று திரும்பும் அளவிற்கு இங்கு வசதிகள் கிடையாது.  24 மணி நேரம்மும் சுங்கத்துறை அதிகாரிகள் இருப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் சில மணி நேரங்கள் இருந்தாலே அதிசயம் என்பதுதான் எதார்த்த உண்மை.  இதனால் ஏற்படும் தாமதத்தால் மாதவரம் உள்வட்டச்சாலையின் ஒரு புறம் நூற்றுக்கணக்கான லாரிகள் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றன. எதிர் திசையில் துறைமுகம் நோக்கிச் செல்லும் லாரிகள் வரிசை கட்டி நிற்பதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இரு வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன.  இது குறித்து தெரிந்தவர்கள் யாரும் இச்சாலையில் செல்லும் வழக்கத்தைத் தவிர்த்தனர். தெரியாதவர்கள் நடுகாட்டில் சிக்கியவர்களைப் போல் பல மணி நேரம் நெரிசலில் சிக்குகின்றனர்.  
முதல் நுழைவுவாயிலே மூல காரணம்: 
        துறைமுகத்தின் நுழைவு வாயிலில் சுங்கம், பாதுகாப்பு, சர்வே உள்ளிட்ட சோதனை நடைமுறைகளைச் செய்யவேண்டும்.  வரிசையில் நிற்கும் லாரிகளை விரைவாக உள்ளே அனுப்ப வேண்டும் எனில் கூடுதல் நுழைவு வாயில்கள், கூடுதல் அதிகாரிகள் வேண்டும்.  பல கட்ட முயற்சிக்குப் பிறகு கூடுதல் நுழைவுவாயில்களை கப்பல்துறைச் செயலாளர் பி.கே.சின்கா 6 மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்படாததால் திறக்கப்பட்ட நுழைவு வாயில்கள் ஓரிரு நாள்களிலேயே மூடப்பட்டன. சுங்கத்துறையில் 40 சதவீத அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கூடுதல் அதிகாரிகளுக்கு வழியில்லை என சுங்கத்துறை கைவிரித்துவிட்டது.  எனவே கண்டெய்னர் லாரிகள் மெதுவாகவே உள்ளே, வெளியே செல்ல முடியும்.  பிறகு காத்திருக்கும் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக 30 கி.மீ. தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கின்றன. 
கவலைப்படாத அதிகாரிகள்:  
பல கி.மீ. தூரத்திற்கு தினமும் லாரிகள் வரிசைகட்டி நிற்கின்றன. போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவாக லாரிகளை உள்ளே அனுப்ப துறைமுக நிர்வாகமும் சரி, சுங்கத்துறையும் சரி தேவையான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை கண்டெய்னர் உள்ளே வந்தால்தான் அவர்கள் பிரச்னை. சாலைகளில் நிற்கும் லாரிகளுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம் என சுங்கத்துறை, துறைமுக நிர்வாக அதிகாரிகள் கேட்கின்றனர்.
    இத்தனைக்கும் கப்பல்த்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இணை அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று அமைச்சர்களும் ஓரே நாளில் இப்பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு, தமிழக முதலமைச்சர் அளவில் ஆலோசனை செய்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும். அதுவரை இப்பிரச்னைக்கு முடிவு சாத்தியமில்லை என்பதே எதார்த்த உண்மை.
கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படுமா?
துறைமுகத்தின் நடவடிக்களை மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ ஒரு நிறுவனத்தின் பிரச்னையாகத்தான் பார்க்கப்படும். ஆனால் இதன் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த தொழிற்துறை அனைத்தையும் பாதிக்கும்.  தொடர்ந்து தேக்கநிலை ஏற்பட்டால் பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்.  கண்டெய்னர் போக்குவரத்து நெருக்கடி பிரச்னையால் துறைமுக பணிகளில் தேக்க நிலை தொடர்கிறது.  
       ஆனால்  தீர்வு காண வேண்டிய அதிகாரிகளோ ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி சாக்குப் போக்குச் சொல்வதில்தான் குறியாக உள்ளனர். மந்திரத்தில் மாங்காய் காய்க்காது என்பதை உணர்ந்து பிரச்னைகளைத் தீர்க்கவும், மேலும் தொடராமலும் இருக்கும் வகையில் அனைத்து தரப்பினர் அடங்கிய உயர்மட்டத்திலான கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.   இதில் கால தாமதம் ஏற்பட்டால் இன்னும் இன்னும் சில மாதங்களில் சென்னைத் துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழக்கும் என்பதே தற்போதைய நிலைமை.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire