Tuesday, September 4, 2012

2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவொற்றியூர் நவீன மயானம்

 -முகவை க.சிவகுமார்-
Published in Dinamani on September 4, 2012:

திருவொற்றியூர், செப். 3: திருவொற்றியூர், நகராட்சியாக இருந்தபோது ரூ. 1.10 கோடி செலவில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையுடன்கூடிய நவீன மயானம் திறப்புவிழாக் கண்டு 20 மாதங்களாகியும் செயல்படாமல் மூடிக் கிடக்கிறது.
திருவொற்றியூர் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட நிலையில் இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
பட்டினத்தார் இடுகாடு: எண்ணூர் விரைவு சாலையில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் திருவொற்றியூர் மயானம் அமைந்துள்ளது. இங்குதான் துறவி பட்டினத்தார் ஜீவ சமாதியடைந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மயானம், பட்டினத்தார் இடுகாடு என்று அழைக்கப்படுகிறது. போதிய கவனிப்பின்றி புதர் மண்டிக் கிடந்த இம்மயானத்தை நவீனப்படுத்த வேண்டும் என பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் திருவொற்றியூரின் முக்கிய மயானமாக இது இருந்து வருவதால் தினசரி குறைந்தபட்சம் 2, 3 சடலங்களாவது எரிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இதன் காரணமாக மயானத்தில் சடலங்கள் எரிக்கப்படும்போது வெளியாகும் புகை, துர்நாற்றத்தால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்றனர்.
ரூ.1.10 கோடியில் நவீன மயானம்: இதையடுத்து பட்டினத்தார் மயானத்தை எரிவாயு தகன மேடையுடன்கூடிய நவீன மயானமாக மாற்றியமைக்க அப்போதைய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், தமிழக அரசு நிதி, நகராட்சி பொது நிதி என ரூ.1.10 கோடி செலவில் நவீன மயானம் அமைக்கப்பட்டு 2011 பிப்ரவரியில் அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமியால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) சார்பில் ரூ.10 லட்சம் செலவில் அமரர் ஊர்தியும் இலவசமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டினத்தார் சமூக சேவை அமைப்பிடம் மயானம் ஒப்படைக்கப்பட்டது.
துருப்பிடித்துப் பாழாகிய அமரர் ஊர்தி: ஆனால், திறப்பு விழா கண்டு ஓரிரு நாள்களிலேயே நவீன மயானம் மூடப்பட்டது. பழைய பகுதியிலேயே விறகு, ராட்டை போன்றவைகளைக் கொண்டு சடலங்கள் எரிக்கப்படும் அவலம் மீண்டும் தொடங்கியது.  இவ்வாறு சடலங்கள் எரியூட்டப்படும்போது பரவும் துர்நாற்றம் மிகுந்த புகையால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது. சி.பி.சி.எல் நிறுவனம் வழங்கிய அமரர் ஊர்தி இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் கடற்கரை உப்புக் காற்றால் துருப்பிடித்துப் போய்விட்டது. இன்னும் சில மாதங்கள் இப்படியே நின்றால் வாகனம் முற்றிலும் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  
அதிகாரிகள் அலட்சியம்: இது குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு சங்க அமைப்பாளரும், திருவொற்றியூர் பகுதி சமூக ஆர்வலருமான என்.துரைராஜ் கூறியது:
இந்த நவீன மயானம் அமைக்கக் கோரி ஆண்டுக்கணக்கில் போராடியுள்ளோம். நவீன மயானம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு விடிவுகாலம் பிறந்து விட்டது என்ற மகிழ்ச்சி கொண்ட நிலையில், திறந்த சில நாள்களிலேயே மயானம் மூடப்பட்டது. முன்பு பணியில் இருந்த மயான ஊழியர்கள் எதிர்ப்பு காரணமாக மயானம் மூடப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் முனைப்பாகச் செயல்படவில்லை. பெரும்பான்மையான மக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர். ரூ.6 ஆயிரமாக இருந்த எரியூட்டும் செலவு நவீன தகனமேடை அமைக்கப்பட்டதன் மூலம் ரூ.1,500 ஆகக் குறைந்தது. இதில் உள்ள பிரச்னைகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர், மாநகர மேயர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றார் துரைராஜ்.
காரணம் என்ன?
இப்பிரச்னை குறித்து திருவொற்றியூர் மண்டல அலுவலர் பழனி கூறியது:
நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 11 மாநகராட்சி மயான ஊழியர்களாக பணி நியமனம் செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையருக்கு குறிப்புகள் அனுப்பியுள்ளோம். மயான ஊழியர்கள் எதிர்ப்பினையடுத்து 20 மாதங்களாக தகனமேடை மூடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. எனினும் இம்மயானத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணப்படும் என்றார் பழனி.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village