காவிரி ஆணையத்தின் முடிவை கர்நாடகம் ஏற்க மறுப்பது இறையாண்மைக்கு எதிரானதில்லையா? நாம் தமிழர் கேள்வி
Image Source:http://tcln.blogspot.in
கர்நாடகத்திலுள்ள அணைகளில் இருந்து குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அணி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுமாறு பிரதமர் தலைமையிலான காவிரி நதி ஆணையம் அளித்த உத்தரவை நிறைவேற்றப்போவதில்லை என்று கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய நான்கு அணைகளிலும் இன்றைய நிலையில் 76 டி.எம.சி. தண்ணீர் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் கர்நாடக முதல்வர், அடுத்த 25 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 20 டி.எம்.சி. தண்ணீரைக் கூட திறந்துவிட மறுப்பது அநியாயமாகும். தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை மறுப்பதற்கு அவர் கூறும் காரணமும் வினோதமானது. கர்நாடகத்தின் விவசாய, குடிநீர் தேவைகளுக்கு ஒட்டுமொத்தமாக 155 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது, ஆனால் அணைகளில் இருப்போது 76 டி.எம்.சி. தண்ணீர்தான். எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளார். கர்நாடகத்தில் காவிரியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த 4 அணைகளிலும் ஒட்டுமொத்தக் கொள்ளவு 100 டி.எம்.சி.க்கும் குறைவு என்கிறபோது, எப்படி 155 டி.எம்.சி. தண்ணீர் தேவையைப் பற்றி கர்நாடக முதல்வர் பேசுகிறார் என்று புரியவில்லை.
காவிரி நதி நீர் தகராறு தீர்ப்பாயத்தின்படி, அணைகளில் உள்ள நீரின் அளவைப் பொறுத்தே நதி நீர்ப் பங்கீட்டை செய்துகொள்ள வேண்டும் என்பதே. அதனடிப்படையில்தான், பற்றாக்குறை காலங்களில் அணைகளில் இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வது (டிஸ்டிரஸ் ஷேரிங்) எப்படி என்று வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறையைச் செய்தது காவிரி நதி ஆணையத்தின் ஒரு அங்கமாகவுள்ள தொழில்நுட்பப் பிரிவாகும்.
இந்த அடிப்படையில்தான் நாள் ஒன்றிற்கு 2 டி.எம்.சி. தண்ணீரை 24 நாட்களுக்கு திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் காவிரி நதி ஆணையக் கூட்டத்தில் கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக்கொள்ள கர்நாடக முதல்வர் மறுத்த நிலையிலேயே நாள் ஒன்றிற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதையும் ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர், இறுதியாக காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர், குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அடி நீரை அடுத்த 25 நாட்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டதையும் ஏற்க மறுத்தார். பிரதமரின் கோரிக்கையை மறுத்ததோடு மட்டுமின்றி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார் கர்நாடக முதல்வர். இப்போது 9,000 கன அடி நீரை வழங்குமாறு காவிரி நதி ஆணையம் (பிரதமர்) பிறப்பித்த உத்தரவையும் ஏற்க முடியாது என்று பெங்களூருவில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகும் அறிவிக்கிறார் என்றால், இது இந்திய நாட்டின் இறையாண்மையை மீறிய நடவடிக்கை இல்லையா? என்று கேட்கிறோம்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையால் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது காவிரி நதி ஆணையம். காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவே இந்த ஆணையத்தின் பணி. இந்த அளவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் படைத்த ஆணையத்தின் உத்தரவை ஏற்க மறுப்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். தனது அணைகளில் உள்ள நீரில் 4கில் ஒரு பங்கு நீரைக்கூட தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் அறிவிக்கிறார் என்றால், இயற்கையான காவிரி நதியின் மீது சொந்தம் கொண்டாட ஒரு மாநிலத்திற்கு உரிமை உள்ளதா என்று கேட்கிறோம். சட்டத்திற்குப் புறம்பான, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கக்கூடிய ஒரு முடிவை கர்நாடக முதல்வர் அறிவித்திருக்கிறார், மத்திய அரசு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். 1991ஆம் ஆண்டு முதல் இன்று வரை காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை ஒரு ஆண்டில் கூட முறையாக செயல்படுத்தவில்லை கர்நாடக அரசு. ஆனால், அந்த மாநிலத்தில் மத்தியில் ஆட்சி செய்த, செய்யும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம்தான் மாறி, மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் கர்நாடகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மாநில அரசியலை அடிப்படையாக வைத்தே காவிரியில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலை தொடர இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். எத்தனைக்காலம்தான் தமிழக விவசாயி ஏமாளியாக இருப்பான்? குட்டக்குட்ட குனிவது இதற்கு மேலும் தொடராது. ஒன்று, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கு உடனடியாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், அரசமைப்பு சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை நீக்க வேண்டும். இந்திய மத்திய அரசு இறையாண்மை உள்ளதென்றால், இரண்டில் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
Comments
Post a Comment