தமிழகமெங்கும் மே பதினேழு இயக்க தோழர்கள் காங்கிரெஸ் எதிர்ப்பு இயக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் இறுதி பகுதியாக ஏப்ரல் 11 - ம் தேதி சென்னை பகுதி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நேற்று சென்னை திரு.வி.க நகர் தொகுதியில், புளியந்தோப்பு பகுதியில் தமிழீழ படுகொலை செய்த ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் கட்சியினை புறக்கணிக்க வேண்டும் என தோழர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
தமிழீழப்படுகொலை, மீனவப் படுகொலை, காசுமீர படுகொலை, சட்டிஸ்கர் பழங்குடி படுகொலைகள் படுகொலை, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் ஒடுக்குமுறை சட்டங்கள், அணு உலை ஒப்பந்தம்- கூடங்குளம்-கல்பாக்கம் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விளக்கி கொண்டு இருந்த போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் பிரச்சார தோழர்களை சூழ்ந்து கொண்டு மிரட்ட ஆரம்பித்தார்கள்.
கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து தோழர்களை தகாத வார்த்தைகளால் பேச ஆரம்பித்து பின்னர் அவர்களை தாக்க ஆரம்பித்தார்கள். தோழர்களின் துண்டறிக்கைகள் பிடுங்கி எடுக்கப்பட்டன, சட்டைகள் கிழிக்கப்பட்டன, கேமரா, செல்பேசி பிடுங்கபட்டது.
தோழர் ஒருவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் அலுவலகத்திற்குள் இழுத்து சென்று தோழர்களை கடுமையாக மிதிக்கவும், அடிக்கவும் ஆரம்பித்தார்கள். தோழர்கள் ஒருவருக்கு மூக்கில் குருதி வரவும், மற்றொருவருக்கு மயக்கமும் வந்தது.
பிறகு அங்கு வந்த காவல் துறை தோழர்கள் ஐந்து பேரை மீட்டு சென்றது. பொதுமக்கள் மட்டுமே தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்து குறைத்தார்கள்.ஒரு விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர் எங்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன என்று வருத்தப்பட்டு கொண்டே காவல் நிலையம் வரை வந்தார்.
தோழர்கள் சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒரு அறையில் அடைக்கப்பட்டனர். காவல் நிலையத்தை முற்றுகை இட்ட காங்கிரஸ் கட்சியினர் காவல்நிலையத்தில் இருந்த தோழர்களை தொடர்ந்து தாக்க முற்பட்டனர். தோழர்கள் கையில் இருந்த கையிருப்பு, செல்பேசி, துண்டறிக்கைகள் உட்பட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த செய்தியை கேள்விப்பட்டு அங்கு வந்தார். தோழர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. தோழர் ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்து அவரை வெளியே இழுத்தனர். அது முடியாது போக அவரை காரினுள் வைத்து அடித்து மிதித்தனர். பிறகு அவரது சட்டையை கிழித்து காரில் மோதி அடித்து இழுத்து வந்தனர். இவை அனைத்தும் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதர தோழர்களையோ, வழக்கறிஞர்களையோ தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. தோழர்களின் நிலையை அறிய வந்த மற்றுமொரு தோழரையும் செல்பேசி உட்பட இதரவற்ரையும் பறித்து அறையில் அடைத்தனர். நூறு பேருக்கு மேல் கூடிய காங்கிரெஸ் குண்டர்கள் தோழர்களை உண்மைக்கு புறம்பான சட்டத்தில் கைது செய்ய சொல்லி வற்புறுத்தினார்கள்.
பணம் பட்டுவாடா அதிமுக கட்சி சார்பாக மக்களிடம் கொடுக்க வந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கலைஞர் தொலைக்காட்சி உட்படஇதர ஊடகங்களில் பொய் செய்தி பரப்பினார்கள்.
இதை கவனித்த தோழர் ஒருவர் மற்றுமொரு தொலைகாட்சியை வரவழைத்து உண்மைநிலையை விளக்கிய போது அவரையும் தாக்கினார்கள் காங்கிரஸ் குண்டர்கள். அவரது கண்ணாடி உடைக்கப்பட்டது. அவரை இதர தோழர்கள் மீட்டனர்.
ஒருகட்டத்தில் வழக்கறிஞர்கள் எவரையும் உள்ளே அனுமதிக்காதவாறு காங்கிரஸ் குண்டர்கள் தடுத்தனர். தவறான பொய் வழக்கை பதிவு செய்ய சொல்லி வற்புறுத்திய காங்கிரஸ் கும்பல் காவல் நிலையத்தில் அத்துமீறி நடந்து கொண்டு மிரட்டினார்கள்.
தோழர்கள் அடைத்து வைத்து இருந்த அறைக்குள் புகுந்து தாக்கவும் முற்பட்டது இந்த குண்டர்கள் கூட்டம். பயங்கரவாதிகள் என்றும் , விடுதலை புலிகளின் தூண்டுதலால் இவர்கள் இப்படி பரப்புரை செய்கிறார்கள் என்றும் புகார் செய்து அடிக்க முற்பட்டது.
தோழர்கள் கொண்டு வந்து இருந்த பைகளில் இருந்த அனைத்தையும் எடுத்து பின்பு அதில் இருந்த குறுந்தகடுகளையும் எடுத்து தொலைக்காட்சி பெட்டியில் போட்டு அவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அவர்களே சிறிது நேரத்தில் ஒரு தொலைக்காட்சி பெட்டியை எடுத்து வந்து குறுந்தகடுகளை போட சொல்லி பார்த்தனர். அனைத்தும் காவலர்கள் முன்னிலையில் நடந்தது . இரவு நெடுநேரம் மிரட்டி காவல்நிலையத்தில் தவறான புகாரை அளித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது காங்கிரஸ் குண்டர்கள் கும்பல். தாக்கியவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாக்கப்பட்டவர்களின் மீது வழக்கை பதிவு செய்ய வைத்தது காங்கிரஸ்.
பிரசார தோழர்களை காவல் நிலையத்தில் சந்திக்க வந்த தோழரின் காரும் காவல் நிலையத்தில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. கடுமையான விசாரணைகளுக்கு பிறகு , தாக்கியவர்களை பற்றிய எந்த வழக்கும் இல்லாமல் நள்ளிரவிற்கு பின் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment