கனவு மெய்ப் பட வேண்டும்..!
முகவை.க.சிவகுமார், திருவொற்றியூர்
தி.மு.க வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். மிக்சி, கிரைண்டர், லாப்டாப் அடுக்கடுக்காய் இலவசங்கள்.... ஒரு கணம் மயக்கமே வந்துவிட்டது. அப்படியே தூங்கியும் போனேன்.
வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியின் முக்கிய தலைவர்கள் கூடிப் பேசுகிறார்கள். தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
அதில், ஒரு சந்ததியே மதுவிற்கு அடிமையாகும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக ஐந்து ஆண்டுகளில் முற்றிலும் மூடப்படும். ஆண்டுக்கு 1,500 கடைகள் மூடப்பட்டு 2015-ல் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும். டாஸ்மாக் வருமானம் குறைவதால் வண்ணத் தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு போன்ற இலவசங்கள் தொடர வாய்ப்பில்லை. இருப்பினும் பொது விநியோகத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு உண்மையிலேயே ஏழ்மை நிலையில் உள்ள வர்களுக்கு குறைந்த விலையில் அரிசி. மற்றவர்களுக்கு நியாயமான விலையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள். இதனை சிரமம் இன்றி ஊர்தோறும் வழங்க நியாயவிலை வணிக வளாகம் அமைக்கப்படும்.
காவிரி-வைகை-தாமிரபரணி ஆறுகளை கால்வாய் மூலம் இணைத்து அனைத்து ஏரிகளுக்கும் ஆற்றுநீர் செல்ல ஐந்தாண்டு திட்டம். 50 பேர் கொண்ட பல தரப்பு நிபுணர் குழு அமைக்கத் திட்டம். திட்ட அறிக்கை அளிக்க கால அவகாசம் ஓராண்டு.
விவசாயம் தமிழர்களின் பாரம்பரியத் தொழில். ஆனால் எதிர்காலத்தில் இது வரலாறுகளில் மட்டும் இடம் பெறும் அவல நிலை. படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட நவீன திட்டம். படித்தவர்கள் விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட தேவையான அளவு வங்கிக் கடன். அனைத்து விளை பொருள்களையும் கட்டுபடியாகும் விலையில் அரசே கொள்முதல். பற்றாக்குறையால்தான் பொருள்களின் விலை உயர்கிறது. எனவே முறையாகச் சேமித்தால் விலைவாசியைக் கட்டுப்படுத்தலாம். எனவே குளிர் சாதன வசதிகளுடன் கூடிய நவீன சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவில் அமைக்கப்படும். விவசாயம் பொய்த்தால் நட்டத்தை அரசே ஈடுகட்டும். ஏற்றுமதி உள்ளிட்ட சந்தை வாய்ப்புள்ள பணப்பயிர்களைப் பயிரிடுதல் என விவசாயத்தை நவீன பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம் கிராம மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்கும் சிறப்புத் திட்டம்.
கடன் வாங்குவதை மட்டுமே தொழிலாகக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் முற்றிலும் ஒழிப்பு. மேலும் கிராமங்களில் சிறிய அளவிலான அரசு வங்கிகளைத் திறந்து தேவைப்படுவோருக்கு திறன் அறிந்து நேரடி கடன். வங்கிக் கடன்கள் எக்காரணம் கொண்டும் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. சேமிப்பு, மதுவிலக்கு, கல்வி, சுகாதாரம் குறித்து கிராம மகளிருக்கு பயிற்சி.
வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட மாவட்டங்கள் தோறும் அரசு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள். இங்கு பயின்று ஓராண்டு கனரக ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பொது வாகனங்கள் இயக்கவும், அரசு வேலைகளிலும் சேரும் வகையில் போக்குவரத்து சட்டங்கள் திருத்தப்படும். விவசாய தொழில் நுட்பம், ஆடு, மாடு, கோழிப் பண்ணைகள் அமைக்க கடனுடன் கூடிய பயிற்சி, சமையல் வேலை, உணவகங்களில் வேலை, முடி திருத்தகம், சலவையகம், கட்டுமானத் தொழில், துப்புரவு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் குறித்து முறையான பயிற்சி அளித்து பட்டயம் வழங்க பல்துறை பயிற்சி மையங்கள். இத்தகைய பட்டயங்கள் பெற்றவர்கள் மட்டுமே பணியில் அமர்த்த தொடர்புடைய நிறுவனங்களுக்கு உத்தரவிடுவதன் மூலம் அனைத்து தொழில்களிளும் ஒரு வித தரக் கட்டமைப்பில் கொண்டுவர முடியும். இது போன்ற திட்டங்கள் வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
நாடு வளர ஊழலை முற்றிலுமாக ஒழிய வேண்டும். அது ஆட்சியின் தலைமைப் பீடத்திலிருந்து துவங்க வேண்டும் என்பது இக்கூட்டணியின் முக்கிய கொள்கையாகும். எனவே நேர்மையானவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளித்தல். ஊழல் எங்கு நடைபெற்றாலும் நடவடிக்கை எடுக்கும் வகையில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்ட நடவடிக்கை குழு அமைத்தல். ஊழல் ஒழிப்பி்ற்கென தனித் துறை ஏற்படுத்துதல்.
தமிழகத்தின் நடப்பாண்டு ஒட்டுமொத்த உத்தேச வருவாய் ரூ.79,413 கோடி. மொத்தக் கடன் 1,05,000 கோடி. இக்கடனை 5 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்கும் வகையில் வரிசீரமைப்பு, சிக்கன நடவடிக்கை, விற்பனை வரி, மத்திய வரிகளில் நிர்வாக சீர் திருத்தம், இலவச திட்டங்கள் மூலம் வீணாகும் நிதியைத் தடுத்தல் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். நீர்பாசனம், அணைகள் கட்டுதல், புதிய தொழிற்சாலைகள் உள்ளி்ட்ட திட்டங்களுக்கு நிதி பொதுமக்கள் பங்களிப்பு மூலம் திரட்டப்படும். மேலும் லஞ்சத்தை ஒழிப்பதன் மூலம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடியை அரசு கஜானாவிற்கு திருப்ப நடவடிக்கை.
கல்வித் துறை: தேவையைக் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தார் போல் கல்வி நிலையங்களை அரசே நடத்துதல். ஒரே பாடத் திட்டம், பத்தாம் வகுப்பு தாய்மொழியில் மட்டுமே கல்வி. கூடுதல் பாடமாக ஆங்கிலம், இந்தி கற்கலாம். நர்சரி பள்ளிகள் அடியோடு ஒழிப்பு. விளையாட்டு, நீதி போதனை வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளை விகிதாச்சார அடிப்படையில் அரசே நடத்தும். போலி டிரஸ்ட்டுகள் மூலம் நடத்தப்படும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அரசுடைமையாக்கப்படும். நீண்டகாலமாக சேவை நோக்கில் நடைபெறும் கல்வி நிலையங்களக்கு இதில் விலக்கு அளிக்கப்படும்.
போக்குவரத்து துறை: 5 பேருந்துகளுக்கு 100 இளைஞர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு், அவர்களே நிர்வகிக்கத் திட்டம். இதன் மூலம் தொழிலாளர்களே முதலாளிகளாக மாற்றப்படுவர். எனவே பேருந்துகள் லாபத்தில் இயங்கும். தற்போது ஓடிக் கொண்டிருக்கும் சுமார் 25 ஆயிரம் பேருந்துகளும் இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் சுமார் 5 லட்சம் இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம். தற்போது இதில் பணியாற்றும் ஊழியர்கள் இவர்களை வழிநடத்துவார்கள். இதேபோல் வாடகை ஆட்டோ, வேன்களை ஓட்டுவதிலும் இளைஞர்களுக்கு உதவியுடன் கூடிய உரிமம் வழங்குதல்.
அதிக அளவு வருவாயை ஈட்டக் கூடிய சுற்றுத்துறையைத் சீர்படுத்த தீவிர நடவடிக்கை. தமிழக சுற்றுத்தலங்களை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் திட்டம். இதில் சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு சுய தொழில், வேலை வாய்ப்புக்கள். அறநிலையத் துறை கோயில்களின் சுற்றுச் சூழல், பாரம்பரியத்தை காப்பாற்ற சிறப்புத் திட்டம். அரசியல் அறங்காவலர்களை அறவே ஒழித்தல்.
மின்சார உற்பத்தியைத் பெருக்குதல், சிக்கத்தை ஊக்குவித்தல், மின் இழப்பு, திருட்டுகளை ஒழித்தல் ஆகியவை குறித்து விரிவான திட்டம். இலவச மின்சாரம் மூலம தண்ணீர் விற்பனைதான் நடைபெறுகிறது. பெரும்பான்மையாக சிறு விவசாயிகளுக்கு பயன் இல்லை. எனவே இத்திட்டம் அறவே ஒழிக்கப்படும்.
உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தேர்வாணையம் போல் காவல்த்துறை ஆணையமும் தன்னாட்சி நிர்வாகமாகச் செயல்படும். முதலமைச்சர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பதவியில் இருக்கும் காவல்த் துறைத் தலைவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலம் காவல்த் துறை ஆணையத்தின் தலைவர் தேர்வு செய்யப்படும். இதன்மூலம் நேர்மையான காவல்த் துறையை பொதுமக்கள் உணர முடியும்.
நெடுஞ்சாலைகள் அனைத்தும் சர்வதேச தரத்திலான சாலைகளாக மாற்றும் பணியை அரசே தொடரும். இதற்கான நிதியை பொதுமக்களிடம் பங்கு வர்த்தகம் மூலம் திரட்டப்படும். சாலையை உபயோகப்படுத்த நியாயமான கட்டணம் விதிக்கப்படும். இதன்மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம் மூலம் மாநிலத்தின் இதரச் சாலைகள் பராமரிக்கப்படும்.
ஒருங்கிணைந்த நிர்வாகம்:அனைத்து திட்டங்களை நிறைவேற்றுதில் உள்ள சிகப்பு நாடா நடைமுறைகளை எளிமைப்படுத்தி ஒருங்கிணைந்த நிர்வாகம் அமைக்கப்படும். உதாரணமாக ஒரு வீடு விற்கப்படுகிறது எனில் பதிவுத் துறை அலுவலகமே உள்ளாட்சி, வருவாய், மின்னிணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு தகவல்களை அனுப்பி வைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு துறையாக பொது மக்கள் ஏறி இறங்குவது தவிர்க்கப்படும். லஞ்சத்தின் புழக்கமும் கட்டுப்படுத்தப்படும். இதேபோல் ஒவ்வொரு திட்டத்திலும் தொடர்புடைய துறைகளின் பணிகளை விரைவுபடுத்த திட்ட அறிக்கையிலேயே ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்......
கதவு தட்டப்படும் சப்தம் கேட்கிறது. தூங்கிக் கொண்டிருந்த நான் விழித்து விட்டேன். ஓ.. இவையெல்லாம் கனவுதானா?. தூக்கத்திலிருந்து விழித்தாலும் எண்ணமெல்லாம் இரவில் கண்ட கனவைப் பற்றியே இருந்தது. இந்தக் கனவு எனக்கு மட்டும்தானா வந்தது?. இல்லையில்லை... தமிழகத்தின் எதிர்காலம் குறி்த்து கவலைப்படும் லட்சக் கணக்கானோருக்கும் நிச்சயம் வந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை. இக்கனவு உங்களுக்கும் வந்ததா?
Contact the writer at mugavaishiva@yahoo.co.in
Comments
Post a Comment