ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. முடிவு.


தலைவர் கலைஞர் அறிவிப்பு - 19-3-2013
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தந்தை செல்வா அவர்களின் காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும் - தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும் - தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் -
குரலெழுப்பி வந்துள்ளது.
அறிஞர் அண்ணா அவர்களின் காலத்திலேயே 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது
திராவிட முன்னேற்றக் கழகம்.
தந்தை செல்வா அவர்கள் காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு; அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல் பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட; அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல  நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும்.
தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர் களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்ஷே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும். 
இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு
மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள்
என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது.
 எனவே “குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire