Saturday, March 2, 2013

பாலச்சந்திரன் யுத்த சாட்சிமட்டுமல்ல!

Source: http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89192/language/ta-IN/article.aspx

குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்


இப்பொழுது உலகமெங்கும் ஒரு சிறுவனுடைய புகைப்படம்தான் மனித மனங்களை உலுப்பிக்கொண்டிருக்கிறது. இசைப்பிரியாவின் படத்தைப்போலவோ அல்லது வேறு போர்க்குற்றப் படங்களைப் போலவே இரத்தமும் சதையும் அற்ற ஒரு புகைப்படம். கொடும் யுத்த களமொன்றில் பாதை மாறி சிக்கியவனைப்போல ஏக்கம் நிறைந்த பார்வை நிரம்பிய சிறுவனின் முகம். அந்தப் பார்வைதான் உலகத்தின் முழுப் பார்வையையும் குவியச் செய்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பன்னிரண்டு வயது மட்டுமே நிரம்பிய பாலச்சந்திரனின் படங்கள்தான் அவை. 

யுத்தம் முடிந்து சில நாட்களிலேயே பாலச்சந்திரன் யுத்த களத்தில் கொல்லப்பட்டு கிடக்கும் படங்கள் வெளியாகியிருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்திலும் மிகவும் நெருக்கமாக நின்று பாலச்சந்திரன்;மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலைசெய்த படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. பாலச்சந்திரன் உயிருடன் இராணுவத்திடமிருந்த படங்களிலும் அவன் கொல்லப்பட்டுக்கிடக்கும் படங்களிலும் ஒரே காற்சட்டையையே அணிந்திருக்கிறான். 

லட்சம் மக்களை கொன்றது இலங்கை அரசு. பல ஆயிரம்பேரை சித்திரவதை செய்து கொன்றது. இசைப்பிரியா போன்ற பெண்போராளிகளையும் பெண்களையும் சிதைத்து கொன்றது. ஆண் போராளிகளை நிர்வாணமாக்கி கண்களை கட்டி கைகளை பின் பக்கமாக கட்டி சுட்டுக் கொன்றது இலங்கை இராணுவம். எல்லாக் கொலைகளையும் செய்துவிட்டு செய்யவில்லை என்று மறுத்து வந்த இலங்கை பாலச்சந்திரனின் கொலையில் வகையாகச் சிக்கியிருக்கிறது என்று நாம் கருதினாலும் இலங்கையும் இந்த படுகொலையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. 

பதற வைத்த படங்கள்

இலங்கையின் போர்க்குற்ற மீறல்கள் பற்றிய பல ஆவணப்படங்களை வெளியிட்ட பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பான இறுதிக்கணங்களில் எடுத்த படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் சனல் 4 தொலைக்காட்சியின் போர் தவிர்ப்பு வலயம் என்ற ஆணவப்படத்தில் அடங்குகின்றன. இந்தப் படங்கள் இரத்தமும் சதையுமற்ற படங்கள் என்ற பொழுதும் உலகில் பலரின் நெஞ்சை பதற வைத்துவிட்டது. பலரது கண்களை நனைத்துவிட்டது. 


இந்தப் புகைப்படம் ஒன்றில் பாலச்சந்திரன் வாயில் எதையோ கொறித்துக் கொண்டிருக்கிறான். இன்னொரு படத்தில் யாரையோ ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு இராணுவப் பதுங்குகுழியில் மண்மூட்டைகளுக்கு நடுவில் இருத்தப்பட்டிருக்கிறான். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறியாத பிஞ்சு மனதுடன் காணாமல்போன ஒரு சிறுவனாக அவன் குந்தியிருக்கிறான். அவனுக்கு அருகில் ஒரு கோப்பையில் குடிநீரும் மடியில் ஒரு பிஸ்கட்டுப் பைக்கற்றும் இருக்கிறது. ஒரு சரத்தினால் (லுங்கி) தன்னை முடியிருக்கிறான். அந்தப் படத்தில் பாலச்சந்திரனை ஒரு இலங்கை இராணுவ சிப்பாய் பார்த்துக்கொண்டு நிற்கிறார். அவரின் கையின் சிறிய பகுதியும் இலங்கை இராணுவச்சீருடையின் சிறிய பகுதியும் படத்தில் பதிவாகியுள்ளது. 

இதற்குப் பின்னர் அவனுக்கு என்ன நடந்தது என்பதை உணர்த்தும் படங்கள் கடந்த காலத்திலேயே வெளியாகிவிட்டது. அந்தப் படங்களில் பாலச்சந்திரனின் பிஞ்சு உடல்மீது இருப்புத் துப்பாக்கியினால் சுடப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் தாக்க முடியாததும் அதை விபரிக்க முடியாததுமான அக்கொலை நடந்தேறியிருக்கிறது. 

ஒப்புக்கொள்ளும் சவேந்திரசில்வா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு தீவிரவாதி என்று சொல்லியுள்ள இந்தியாவின் ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி பாலச்சந்திரனும் ஒரு தீவிரவாதி என்று சொல்லியுள்ளார். அவர் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் உற்ற நண்பராவார். ஒரு குழந்தையை தீவிரவாதி என்று சொல்லி அவனது கொலையை நியாயப்படுத்தி ராஜபக்சவை காப்பற்றுமளவில் அவர் ராஜபசக்சவுக்கு விசுவாசமாக இருக்கிறார். கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்று வந்த ஒரு சிறுவனைத்தான் இப்படிச் சொல்லியுள்ளார் சுவாமி. 

இதைப்போல இப்பொழுது யுத்தக்குற்றத்தில் முக்கிய பங்குடையவரும் தற்போதைய ஐ.நாவின் வதிவிட பிரதிநிதியுமான சவேந்திர சில்வா பாலச்சந்திரன் விடுதலைப் புலிகளின் சிறுவர் பிரிவில் இருந்தவர் என்று சொல்லியுள்ளார். இதன் மூலம் நாங்கள்தான் பாலச்சந்திரனை படுகொலை செய்துள்ளோம் என்று இலங்கை சார்பாக சவேந்திரசில்வா ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுநாள்வரை செய்த குற்றங்களை மறைத்து வந்தது இலங்கை. பாலச்சந்திரன் ஒரு சிறுவர் போராளி என்பதன் மூலம் அவரை நாங்கள்தான் கொலை செய்தோம் என்பதை போர்க்குற்றத்தில் முக்கிய பங்குடைய போர்க்குற்றவாளியான சவேந்திரசில்வா ஒப்புக்கொண்டிருக்கிறார். 

இதுபோல கொல்லப்பட்டவர்கள்

பாலச்சந்திரனைப்போலவே மரணத்திற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் தளபதி ரமேஸின் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. அவர் இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக விசாரணை செய்யப்படும் வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. பின்னர் அவர் கொல்லப்பட்டுக் கிடக்கும் புகைப்படமும் எரிக்கப்படும் புகைப்படமும் வெளியானது. 

இதைப்போல இன்னொரு போராளி இராணுவத்தால் கத்தியால் குத்தி சித்திரவதை செய்யப்படும் புகைப்படமும் பின்னர் கொலை செய்யப்பட்டு புலிக்கொடி போரத்திய புகைப்படமும் வெளியானது. சனல் 4 முதன் முதலில் வெளியிட்ட ஆவணப்படத்தில் இராணுவத்திடம் உயிருடன் பலர் இருந்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. அதில் பாலச்சந்திரனைவிட வயது குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அவனுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது. இதைவிட உயிருடன் பிடிபட்டு கொன்று சிதைக்கப்பட்ட பலரது புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. 

இலங்கை இராணுவத்திடம் பல ஆயிரம் பேர் சரணடைந்துள்ளார்கள். இவர்களில் பலருக்கு நடந்த கதிதான் இந்தப் புகைப்படங்கள். சரணடைந்தவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் என்ன நடந்திருக்குமோ என்ற பதைபதைப்பை இந்தப் புகைப்படங்கள் இப்பொழுது மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் யுத்தகளத்தில் இன்னும் என்னென் நடந்தன என்ற பலவிதமான கேள்விகளை எழுப்புகின்றன. 

உலகெங்கும் எழுந்த எதிர்ப்பு

குழந்தையைப் பார்த்து இரங்காதவர்கள் யாருமில்லை. குழந்தைகள் எந்தப் பகையையும் உடையவர்களில்லை. உலகத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளையும் எல்லோரும் விரும்புவார்கள். பாலச்சந்திரன் என்ற சிறுவனின் மரணத்திற்கு முன்பான கணங்களைப் பார்த்த பொழுது உலகெங்கும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏனைய ஈழ ஆதரவு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். 

தமிழர்கள் வாழும் நாடுகள் எல்லாம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மலேசியாவில் இலங்கை தூதரகத்தை தமிழர்கள் தாக்கியுள்ளார்கள். தமிழகத்தில் இலங்கை தூதரகம், உள்ளிட்ட பல இடங்களில் எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் சுமார் 350 சிறுவர்கள் பாலச்சந்திரனின் முகத்தை மூடியாக அணிந்து வந்து நெஞ்சை உருக்கும் விதமாக கேள்வி எழுப்பிப்போரடினார்கள். இலங்கை அரசு உலகில் எந்தவொரு நாடும் ஈடுபடாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தெட்டத் தெளிவாகியுள்ளது. 

ஓடி ஆடிய கிளிநொச்சி 

பாலச்சந்திரன் பிரபாகரனின் இளைய மகன். பாலச்சந்திரன் கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றான். பாலச்சந்திரன் போருக்குள் பிறந்து வளர்ந்த பிள்ளை. அவன் வாழ்வு முழுக்க முழுக்க பதுங்குகுழிக்குள்ளாகவே இருந்தது. அவன் கிளிநொச்சி நகரத்தில் உள்ள கனிஷ்;;ட மகாவித்தியாலயத்தில் கல்வி கற்க வந்த பொழுதுதான் பதுங்குகுழிக்கு வெளியலான வாழ்க்கையை மிகவும் ஆர்வத்துடன் அனுபவித்தான். 
சக மாணவர்களுடன் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினான். அது அவன் காணாத ஒரு உலகமாக இருந்தது. கிளிநொச்சி நகரத்தில் உள்ள முற்றவெளி என்ற மைதானத்தில் விளையாட விடும்படி தன்னை பாடசாலைக்கு அழைத்து வரும் போராளிகளிடம் அவன் கேட்டிருக்கிறான். அங்கு கொண்டு போய்விட்டதும் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடியிருக்கிறான். இந்தப் பச்சைப் பாலகனைத்தான் தீவிரவாதி என்றும் சிறார் போராளி என்றும் இலங்கை சொல்லுகிறது. 

அமெரிக்காவின் அரசியலா?

தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் தேவையான உதவிகளை எல்லாம் வழங்கியிருந்தன. இலங்கை இழைத்த போர்க்குற்றத்திலும் மனித உரிமை மீறலிலும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பங்கியிருக்கிறது. அதனால் இலங்கைமீது ஏன் அமெரிக்கா இத்தகைய தீர்மானத்தை கொண்டுவரத் துடிக்கிறது என்று சந்தேகம் பரவலாகவே நிலவுகிறது. இது அமெரிக்காவின் அரசியலா? என்றும் கேள்விகள் எழாமலில்லை. 

இலங்கைக்குள் இப்பொழுது இந்தியாவும் சீனாவும் கால் பதித்து போட்டியில் ஈடுபடுகின்றன. இதனால் இலங்கைக்குள் யார் என்று இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலும் நிழல் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இப்பொழு அமெரிக்காவும் இலங்கையை நெருக்கத் தொடங்கியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்களை தமது அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் மனித சமூகத்திற்கு இந்த குற்றங்களுக்கு நீதி வேண்டும் என்பதும் தமிழர் அவா. 

என்ன செய்யும் ஐ.நா? 

ஒரு இனததை அழித்த போர்க்குற்றத்தில் இத்தனை சாட்சிகள் வந்துமா உலகம் உறங்கிக்கொண்டிக்கிறது? என்பதுதான் அனைவருக்கும் எழும் கேள்வி. இதுமட்டுமல்ல போர் நடந்து கொண்டிருந்த பொழுதே போர் அவலம் உடனுக்குடன் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் புலிகளை அழிக்க வேண்டும் என்கிற செய்தியை தவிர வேறு எதையும் உலகம் கணக்கெடுக்கவில்லை. அவைகளினால்தான் இலங்கை அரச படைகள் இந்தளவு போர்க்குற்ற மீறல்களில் தைரியமாக ஈடுபட்டிருக்கின்றன. 

விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியது ஐ.நா அந்தச் செயல் கண்டணத்திற்கு உரியது. அப்படியானால் பன்னிரண்டு வயதான ஒரு சிறுவனின் நெஞ்சில் மிக்க கொடுமையாக துப்பாக்கிகளால் சுட்டுக் கொலை செய்த போர்க்குற்றத்திற்கு என்ன செய்யப்போகிறது? 

இலங்கை அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் வலிமையற்ற ஒரு தீர்மானம். அது இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் மென்மையான தீர்மானமே. இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எந்தத் தீர்மானம் கொண்டு வந்தாலும் போதாது என்று தெரிவித்துள்ன மனித உரிமை ஆர்வலர் கலாநிதி நிமல்கா பெர்பாலச்சந்திரன் யுத்த சாட்சிமட்டுமல்ல!னாண்டோ இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதுதான் மிகச் சரியான விடயம். 

யுத்த சாட்சிமட்டுமல்ல

ஈவிரக்கம் இன்றி எத்தனையோ பாலச்சந்திரன்கள் கொல்லப்பட்டதற்கும், அழிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கும் பாலச்சந்திரன் சாட்சி. இந்தக் குற்றங்களுக்கான தண்டனை என்பது அறுபது ஆண்டுகளாக நீதிமறுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதாகும். மனித இனத்திற்கு எதிராக இலங்கை அரசு இழைத்த குற்றங்களை தட்டிக்கேட்காது விட்டால் பாதிக்கபட்ட இளைய தலைமுறை மீண்டும் புரட்சியில் ஈடுபடும் என்று சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கொலம் மாக்ரோ சொல்லுகிறார். 

பாலச்சந்திரன் இப்பொழுது ஒரு யுத்தத்தின் சாட்சியாக மட்டுமல்ல எதிர்கால ஈழத் தலைமுறைகளுக்கு ஒரு கருத்தை கடத்தும் கருவாகவும் உருவாகியிருக்கிறான். இக் கொடுமை இன்னொரு வரலாற்றின் இன்னொரு தலைமுறையின் தொடக்கமாகிறது. அது பிரபாரகனின் மகன் என்பதற்காக அல்ல. ஏனென்றால் பாலச்சந்திரன் ஒரு பாலகன்! அதனால்தான் உலகின் முன்பாக அவனொரு வலிமையான சாட்சியாகவும் இருக்கிறான். 


ஒரு இனத்தின் குழந்தைகளுக்கு எதிரான அநீதி, பூமியில் ஒரு புரட்சியின் 
விதையாக உறைக்கூடியது என்பது நம் முன்னால் அழுத்தத்தைத் 
தந்துகொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...