சென்னை- எண்ணூர் இடையேயான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப் பணிகள்: தொடரும் பிரச்னைகள்... மீனவர்கள் எதிர்ப்பால் பணிகள் நிறுத்தம்
Source: http://dinamani.com/tamilnadu/article1459995.ece
BY முகவை க.சிவகுமார் -, திருவொற்றியூர்
பல்வேறு தடைகள் மற்றும் பிரச்னைகளால் சென்னை- எண்ணூர் இடையேயான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப் பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தடைகள், பிரச்னைகள் நீடிப்பதற்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வடசென்னை கன்டெய்னர் நெரிசல் பிரச்னை மற்றும் சென்னை, எண்ணூர் துறைமுகங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு அறிவிக்கப்பட்ட ரூ.600 கோடி மதிப்பீட்டிலான துறைமுக இணைப்புச் சாலை திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பொன்னேரி நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவு சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு சாலை உள்ளிட்ட சாலைகளில் பணிகள் ஒரளவு நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும் தொடர் பிரச்னைகளால் இணைப்புச் சாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மீனவர்கள் எதிர்ப்பால் பணிகள் நிறுத்தம்: துறைமுகத்தின் நுழைவு வாயிலிலிருந்து காசிமேடு மீன்பிடித் துறைமுகம் வழியாக என்.4 காவல் நிலையம் வரை 1.6 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி மீனவர்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீனவர்களின் கோரிக்கையை அடுத்து 186 மீன் கடைகள், மீன்பிடித் துறைமுகத்திற்கு வாகனங்கள் தங்கு தடையின்றிச் சென்று வர மேம்பாலம் அமைத்துத் தரப்பட்டது.
தற்போது மீன் ஏல விற்பனை நடைபெற்று வந்த இடத்தில் பாலம் வருவதால் அதற்கு ஈடாக 45 நாள்களில் துறைமுகத்தை ஆழப்படுத்தி உள்பகுதியிலேயே மேடு ஏற்படுத்தி அங்கு விற்பனைத் தளம் அமைத்துத் தரப்படும் என சென்னைத் துறைமுகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தடுப்புச் சுவர், சாலை அமைக்கும் பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் துறைமுக அதிகாரிகள் அளித்த உறுதிமொழி 6 மாதங்களாகியும் செயல்படுத்தப்படவில்லை. எனவே இனியும் சாலைப் பணிகளைத் தொடர அனுமதிக்க மாட்டோம் என மீனவர்கள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை பணியில் இருந்த ஒப்பந்ததாரரை சந்தித்து உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு வெளியேறும்படி மீனவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து திங்கள்கிழமைமுதல் பணிகள் நிறுத்தப்படும் என ஒப்பந்ததார் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
எண்ணூர் விரைவுசாலை-பவானியம்மன் கோயில்: இச்சாலையை ஒட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் பவானியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் 1.6 கி.மீ. சாலையும் எண்ணூர் விரைவு சாலையும் சந்திக்கிறது. இதனால் கோயிலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு மீனவர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருகிலேயே கோயிலை இடமாற்றம் செய்து தர துறைமுக நிர்வாகம் உறுதியளித்தது. இந்த உறுதிமொழியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் இப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.
குடிசை மாற்று வாரிய செரியன் நகர்: எண்ணூர் விரைவு சாலையில் செரியன் நகரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீட்டுமனைகள் தரப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் ஒதுக்கீடு பெற்றவர்கள் வீட்டு மனைகளுக்கு முழுத் தொகையையும் கட்டி விற்பனைப் பத்திரத்தை வாரியத்திலிருந்து வாங்கவில்லை. தற்போது சாலை விரிவாக்கத்தின்போது இடிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை பெறும் உரிமை யாருக்கு என்பதில் குடிசை மாற்று வாரியம், ஒதுக்கீட்டாளர்களிடையே ஆரம்பம் முதலே குழப்பம் இருந்து வந்தது.
அதிகாரிகளின் மெத்தனத்தால் இதுவரை இழப்பீட்டை வழங்க முடியவில்லை. இரண்டுபுறமும் சாலை அமைக்கப்பட்டுவிட்டாலும் சுமார் 300 அடி தொலைவுக்கு நடுவில் அப்படியே பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நல்லதண்ணீர் ஓடைக்குப்பம்: இப்பகுதியில் கடலோரத்தில் வசித்த மக்களுக்கு எர்ணாவூரில் அடுக்கு மாடி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் சாலைக்கான இடம் தவிர எஞ்சிய இடத்தில் தங்களை தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர இயலாது என மீனவர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் இப்பகுதியிலும் சுமார் 250 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒண்டிக்குப்பம் பகுதியில் ஒரு கிறிஸ்தவ அழைப்பு கூடம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பினர் 3 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். இத்தடையை நீக்க அதிகாரிகள் போதிய முயற்சி எடுக்கவில்லை. இதனால் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு பணிகள் தடைபட்டுள்ளன.
செவிமடுக்காத சென்னைக் குடிநீர் வாரியம்: திருவொற்றியூர் இடுகாட்டினை ஒட்டி பொதுமக்கள் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம் உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள பாதாளச் சாக்கடை குழாய்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணியை சென்னைக் குடிநீர் வாரியம் இதுவரை முடித்து தரவில்லை.
இதற்கான இழப்பீட்டுத் தொகையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செலுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டத்தை கைவிடப்போவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இங்கும் பாலம் அமைக்கப்படாவிட்டால் இறுதியாத்திரைக்கு இடுகாட்டுக்கு வரும் மக்கள் விபத்தில் சிக்க நேரிடும் அபாயம் உள்ளது.
அதிகாரிகளுக்குப் பொறுப்பு வேண்டும்: பொதுமக்கள் புகார் இத்திட்டம் வடசென்னை மக்களின் கனவுத் திட்டம். இதனை விரைவாக நிறைவேற்ற வேண்டிய துறைமுகம், குடிசைமாற்று வாரியம், மீன்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு இதில் மிகுந்த பொறுப்புகள் உள்ளன. ஒருவருக்கொருவர் இணைந்து தொடர்புடைய மக்களிடம் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு, தடைகளை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இதற்கு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்,
ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர்
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்வம் காட்ட
வேண்டும்.
இல்லையெனில் ஏற்கனவே பலமுறை உறுதி அளிக்கப்பட்ட இத்திட்டம் வரும் ஜூன் 2013 காலக்கெடுவுக்குள் நிறைவேறுவது சந்தேகமே என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
Comments
Post a Comment