முகவை.க.சிவகுமார் -, திருவொற்றியூர்
Source:http://dinamani.com/edition_chennai/chennai/article1468900.ece
திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்ற வீடு ஒன்றுக்கு ரூ. 200 கட்டணம் செலுத்தியும் 20 நாள்கள் வரை காத்திருக்கும் அவல நிலையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 1-வது மண்டலத்தில் உள்ள 14 வட்டங்களில் கத்திவாக்கத்தில் 2 வட்டங்கள், திருவொற்றியூரில் 5 வட்டங்கள் என 7 வட்டங்களில் பாதாளச் சாக்கடை வசதிகள் கிடையாது. இப்பகுதியில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சிகளாக இருந்தபோது இப்பகுதிகளில் கழிவுநீர் லாரிகள் மூலம் இலவசமாக அகற்றப்பட்டன. கழிவு நீரை அகற்ற கத்திவாக்கத்தில் ஒரு லாரியும், திருவொற்றியூரில் 2 லாரிகள் மட்டுமே இருந்தன. இதனால் கழிவுநீரை அகற்றுவதில் தேக்கநிலை இருந்து வந்தது. மேலும் குடிசைப் பகுதிகளில் கழிவு நீரை அகற்றுவதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.
இப்பணி குடிநீர் வாரியத்துக்கு மாற்றம் ஆனதால் கூடுதலாக லாரிகள் வரும், தேக்கநிலை நீங்கும், வசதிகள் பெருகும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டு ஆண்டுகளாகியும் ஒரு லாரிகூட கூடுதலாக ஒதுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, திருவொற்றியூர் மண்டலத்தில் இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே கழிவுநீர் அகற்றப்படும் என சென்னைக் குடிநீர் வாரியம் கடந்த டிசம்பர் 10-ம் தேதி புதிய உத்தரவை வெளியிட்டது.
காத்திருக்கும் அவலம்: இதன்படி ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்ற லாரி அனுப்ப வேண்டுமெனில் வீட்டின் உரிமையாளரோ அல்லது வாடகைதாரரோ பகுதி அலுவலகத்துக்கு நேரில் வந்து ரூ.200 கட்டணம் செலுத்தி ரசீது பெற்று எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு கடந்த டிசம்பர் 15 அன்று முதல் உடனடியாக கண்டிப்பான முறையில் அமலுக்கு வந்தது. இதற்கு மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும் குடிநீர் வாரியம் இந்த எதிர்ப்பினைக் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து வேறு வழியின்றி பொதுமக்களும் கட்டணம் செலுத்தும் நடைமுறைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்படி டிசம்பரில் 158 பேரும், ஜனவரியில் 213 பேரும், பிப்ரவரி 15-ம் தேதிவரை 162 பேரும் கழிவுநீரை அகற்ற கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் ஜனவரி 27 ஆம் தேதிவரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே கழிவு நீர் அகற்றப்பட்டுள்ளது. இதனால் கட்டணம் செலுத்தியும் 20 நாள்களாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான கழிவு நீர் வாகனங்கள் இல்லாததும், இருக்கின்ற மூன்றில் இரண்டு வண்டிகள் பழுதடைந்துள்ளதுமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தங்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் உள்ளதாக புகார் கூறப்படுகிறது.
பொதுமக்கள் புகார்: ராமசாமி நகரைச் சேர்ந்த வேணு கோபால், பாரதியார் நகரைச் சேர்ந்த முத்துக் கோகிலா ஆகியோர் கூறியது: கட்டணம் செலுத்தி 20 நாள்களாகியும் கழிவு நீர் அகற்றப்படவில்லை. இது குறித்து தொடர்ந்து வற்புறுத்த வேண்டிய நிலையும் உள்ளது. வீடுகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீரை நாங்கள் எப்படி அகற்ற முடியும். உடனடியாக கட்டண முறை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அதுவரை கூடுதல் லாரிகளை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.
அதிகாரி விளக்கம்: இப்பிரச்னை குறித்து பகுதி பொறியாளர் முத்துசாமி கூறியது: கழிவு நீர் அகற்றும் இரண்டு வண்டிகளும் பழுதடைந்துள்ளது என்பது உண்மைதான். கழிவு நீர் அகற்றப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தற்போது எங்களிடம் இல்லை. கட்டணம் செலுத்தும் புதிய விதிமுறை குறித்து எனது அதிகாரத்துக்கு உள்பட்டது அல்ல. இது குறித்து வாரியம்தான் முடிவு செய்ய முடியும் என்றார்.
சுகாதாரம், கல்வி, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்பது மட்டுமல்ல, கட்டாயமும், அவசியமும்கூட என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ளவேண்டும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment