Monday, November 28, 2011

துறைமுக சாலையை மேம்படுத்த ஆலோசனை: இணைப்புச் சாலைகளைப் புறக்கணித்த பிரதமரின் ஆலோசகர்

Source: www.dinamani.com


http://news-views.in/t-k-a-nair-takes-the-chair-as-new-advisor-of-the-prime-minister-4013/
திருவொற்றியூர், நவ. 27: சென்னை, எண்ணூர் துறைமுகங்களின் சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சென்னை வந்த பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் மோசமான நிலையில் உள்ள இப்போதைய சாலைகளை பார்வையிடாமலே சென்று விட்டார்.

அவர் பார்வையிடுவதைத் தடுக்கும் வகையில் திட்டமிட்டு துறைமுக நிர்வாகம் செயல்பட்டதாக ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சென்னைத் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன.
 துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்தில் உள்ள பொன்னேரி சாலை, எண்ணூர் விரைவு சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்டவை போக்குவரத்துக்கு உதவாத நிலையில் உள்ளன. இதனால் கண்டெய்னர் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
 பிரதமரின் ஆலோசகர் வருகை: இந்நிலையில் இப்பிரச்னை குறித்து செய்தித் தாள்களில் தொடர்ந்த செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் சனிக்கிழமை சென்னை வந்தார்.
 சென்னை, எண்ணூர் துறைமுகங்களின் சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ஆலோசனைக் கூட்டம், எண்ணூர் துறைமுகம் வரை சாலை மார்க்கமாகச் சென்று ஆய்வு மேற்கொள்வது என அவரது நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாயர் தடையின்றி சென்று வருவதற்கு வசதியாக கண்டெய்னர் போக்குவரத்தும் இச்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் திட்டமிட்டபடி இச்சாலையில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மாறாக நாயர், துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா தலைமையிலான குழுவினர் ஜி.என்.டி. சாலை மார்க்கமாக செங்குன்றம், பஞ்செட்டி, பொன்னேரி, மீஞ்சூர் வழியாக எண்ணூர் துறைமுகம் சென்று ஆய்வு நடத்தினர்.
 படகில் சென்ற அதிகாரிகள்: இந்நிலையில் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திரும்பி வரும்போது மோசமான சாலைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் சாலைப் பயணத்தையே தவிர்த்துவிட்டு சென்னைத் துறைமுகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட விசேஷ படகு மூலம் நாயர் குழுவினர் எண்ணூர் துறைமுகத்திலிருந்து சென்னைத் துறைமுகம் திரும்பினர்.
 இதற்கே அதிக நேரம் ஆகிவிட்டதால் துறைமுக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த விரிவான ஆலோசனைக் கூட்டம் சிறிது நேரமே நடைபெற்றது.
இதனால் சென்னைத் துறைமுகத்தில் நீண்ட நாள்களாக நிலவி வரும் முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமரின் ஆலோசரிடம் விளக்க முடியும் என காத்திருந்த துறைமுக உபயோகிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 ஜி.கே.வாசன் தலையிடக் கோரிக்கை: சனிக்கிழமை கண்டெய்னர் போக்குவரத்தை நிறுத்தி வைத்ததால் ஞாயிற்றுக்கிழமை எண்ணூர் வரை சுமார் 16 கி.மீ தூரத்திற்கு லாரிகள் வரிசையில் நின்றன.
 நெரிசலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அதனை அதிகரிக்கும் வேலைகளில் துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது. இவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது கப்பல் துறை அமைச்சர் வாசன் உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலமே துறைமுகத்தின் எதிர்காலம் உள்ளது என்கிறார் இண்டர்ஸ்டேட் கண்டெய்னர் லாரிகள் சங்கத்தின் தலைவர் முத்து  கிருஷ்ணன்.
 

No comments:

Post a Comment

Kids enjoying evening in village