மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக நிலவிவரும் குழப்பநிலையைத் தெளிவுபடுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடக அறிக்கை


Source:http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=73:media-release-nov-14&catid=28:report&Itemid=2

"இயக்கத்தின் மரபுகளை மீறாமல் எமது தேசியத்தலைவரின் வழிகாட்டலின் கீழ் வழமைபோன்று இந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்த அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்."
தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/ஊ/அ/07/11
தமிழீழ விடுதலைப்  புலிகள்,
தமிழீழம்.
14/11/ 2011.
ஊடக அறிக்கை
அன்பான தமிழ்பேசும் மக்களே,
புலம்பெயர் நாடுகளில் இன்று தமிழ்த்தேசியத்துக்கான போராட்டப்பரப்பிலே விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக நிலவிவரும் ஐயங்களை - குறிப்பாக மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக நிலவிவரும் குழப்பநிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படுகின்றது.
தாயகத்தில் எமது அமைப்பு முழுமையான நிர்வாகத்தினை  நடாத்திக்கொண்டிருந்தபோது எமது போராட்டத்தைப் பலப்படுத்தவென புலம்பெயர் நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த கட்டமைப்பைச் சேர்ந்த குறிப்பிட்ட சில செயற்பாட்டாளர்களும், ஒருசில இயக்க உறுப்பினர்களும் தற்போது தன்னிச்சையாகவும் எமது போராட்டத்தை மழுங்கடிக்கும் விதத்திலும் செயற்படுகின்றனர்.
தாயகத்தில் எமது அமைப்பு ஆயுதங்களை மெளனித்த நிலையில் இவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கும் இயக்கத்திற்கும் பாதகமான விளைவுகளைத் தரக்கூடியவகையில் அமைவதோடு மக்களுக்கும் எமது அமைப்புக்குமிடையில் இடைவெளியை அதிகரிக்க வைக்கின்றன.
முள்ளிவாய்க்காலின் பின்னர் தன்னைத்தானே இயக்கத்தின் தலைவராக்கி கே.பி. (குமரன் பத்மநாதன்) இயங்க முயற்சித்தபோது அது எம்மால் தடுக்கப்பட்டது. அதன் பின்னர் இயக்கக் கட்டமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுகூடி குழு நிலையான முடிவெடுத்தலுடன் செயற்பாடுகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. நெருக்கடிகாலம் வரும்போது இவ்வாறான ஒழுங்குபடுத்தல்கள் நடைபெறுவது வழமையானதொன்றே. இந்த ஒழுங்குபடுத்தல்களின் கீழ்தான் 2009 ஆம் ஆண்டு மாவீரர் நாள் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. இதன்போது இயக்கத்தின் தலைமைச்செயலகத்தினால் மாவீரர்நாள் அறிக்கை வெளியிடப்பட்டதும், அது புலிகளின் குரல் வானொலி வழியாக வழமைபோன்று ஒலிபரப்பட்டதும், புலம்பெயர் நாடுகளில் நிகழ்ந்த மாவீரர்நாள் நிகழ்வுகளில் அவ்வொலிபரப்பு ஒலிக்கவிடப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.
முள்ளிவாய்க்கால் பேரழிவைத்தொடர்ந்து பல்வேறு நிர்வாகச் சீரமைப்புக்கள் எமது அமைப்பில்  நடைபெற்று வந்தன. குறிப்பாக, அனைத்துலகத் தொடர்பகத்திற்கு அதுவரை இணைப்பாளராக இருந்த நெடியவன், தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக கூறிச் செல்லவே, அவரின் சிபாரிசின் பேரில் செயற்பாட்டாளர் ஒருவரை இணைப்பாளராக நியமித்து அனைத்துலகத் தொடர்பகத்தைத் தொடர்ந்தும் இயக்கி வந்தோம். ஆனாலுங்கூட இப்படி நியமிக்கப்பட்ட இணைப்பாளர்கள் தாமாகவே காலத்துக்குக் காலம் ஒவ்வொருவராக ஒதுங்கிச் சென்றுகொண்டிருந்த நிலையில் நாமே போராளியொருவரை இணைப்பாளராக நியமித்து அனைத்துலகத் தொடர்பகத்தைத் தொடர்ந்தும் இயங்குநிலையில் வைத்திருந்தோம்.
முள்ளிவாய்க்கால் பேரழிவின்பின்னர் பாதிக்கப்பட்ட எமது மக்களையும், போராளிகள், போராளி -  மாவீரர் குடும்பங்களையும் பராமரிக்கும் பெரும்பொறுப்பு அனைத்துலகத் தொடர்பகத்திற்கே இருந்தது. அக்கட்டமைப்பு தக்கவைக்கப்படுவதன் மூலமே எமது போராட்டமும் தக்கவைக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே நாம் அக்கட்டமைப்பைத் தொடர்ந்தும் இயங்கவைக்க பெருமளவு முயற்சித்தோம். ஆனால் பொறுப்பு நிலையிலிருந்த சிலரின் தவறுகளாலும் மெத்தனத்தாலும் அக்கட்டமைப்பு செயலற்ற நிலைக்குச் செல்ல, சில நாடுகளின் கிளைகள் தன்னிச்சையாக தாமே செயற்படும் நிலைக்குச் சென்றன.
இதனிடையே விடுதலை அமைப்பின் ஊடகங்களாக மக்கள் மத்தியில் அறியப்பட்ட, அனைத்துலகத் தொடர்பக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த ஊடகங்கள் சிலவற்றின் போக்கு எமது போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் அமைந்தன. கீழ்த்தரமான வசவுகள், புனைவுகளை உண்மைபோன்று எழுதிக்கொண்டிருந்தமை உட்பட எமது போராட்ட மரபையே மீறும்வகையில் செயற்பட்டுக்கொண்டிருந்த அவ்வூடகங்களைச் சீரமைக்கும்படி நாம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தோம். கட்டுப்பாடற்ற முறையிலும் அடிப்படை ஊடகப்பண்பே அற்றவகையிலும் இயங்கிக் கொண்டிருந்த அவ்வூடகங்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் அப்போதைய அனைத்துலகத் தொடர்பக இணைப்பாளர் இருக்கவில்லை.
இந்நிலையில் அனைத்துலகத் தொடர்பகத்திற்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் இவ்வூடகங்கள் மூலம் ஏற்பட்ட கறையைப் போக்கும் வகையில் அவ்வூடகங்களை நிர்வகித்து வந்தவர்கள் இருவரையும் நேரில் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களிடமே நேரடியாக நாம் எமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தும் முடிவுக்கு வந்தோம். அவ்வாறு எமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தியபோது அவற்றுக்கு ஒத்துழைக்க மறுத்து, தாம் அவ்வூடகங்களை அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதாக அவர்கள் இருவரும் தெரிவித்துச் சென்றனர்.
ஆனால் சில மணித்துளிகளிலேயே எமது கட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்தும் அவதூறுகளை மேற்கொண்டும் ஓர் அறிக்கை அவ்வூடகங்களில் வெளியிடப்பட்டது. அதில் எமது போராளிகளின் விபரங்கள், அவர்களின் இருப்பிடங்கள் போன்ற தகவல்களையும் வெளியிட்டு வெளிப்படையான காட்டிக்கொடுப்பொன்றையும் செய்தார்கள். எவ்விதத்திலும் போராளிகள் செய்ய முடியாத கீழ்த்தரமான செயலையும் துரோகத்தையும் இவர்களிருவரும் நிகழ்த்தினார்கள்.
இயக்கத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமன்றி தாம் செயற்படும் அனைத்துலகத் தொடர்பகத்தின் கட்டுப்பாட்டிற்குள்கூட நிற்காமல் தன்னிச்சையாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஊடகத் தாதாக்களின் நடவடிக்கைகள் இன்றுவரை எமது தமிழ்மக்களை வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.
இந்த நபர்கள் தனியே ஊடகங்களுடன் மட்டும் நின்றுவிடாமல் சில நாடுகளின் கிளைக்கட்டமைப்புக்களையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியதாலும், சில நாடுகளிலிருந்த செயற்பாட்டாளர்கள் சிலர் தமது சுயநலத்துக்காக இவர்களுடன் இணைந்து செயற்படத் தொடங்கியதாலும் நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் இவர்களை தற்காலிகமாக ஒதுங்கி இருக்கும்படி எம்மால் பணிக்கப்பட்டதுடன் குறிப்பிட்ட இந்த நபர்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டாமென்றும் செயற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனாலும் தமது இருப்பைத் தக்கவைக்கவும், சுயநல அரசியலைத் தொடரவும் சிலர் தொடர்ந்தும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். விடுதலை அமைப்பின் இருப்பை ஏற்றுக்கொள்ளாமலும் கட்டமைப்பு ரீதியான கூட்டு முயற்சிகளை வரவேற்காமலும் தாம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிப்போம், கட்டுப்படுத்துவோம் என்ற நிலைப்பாட்டுடன் சிலர் சிலநாடுகளின் கிளைக்கட்டமைப்புக்களைத் தன்னிச்சையாக வழிநடத்தத் தொடங்கினர். தாம் தாயகத்திலிருந்து தலைமையால் வழிநடத்தப்படுவதாக உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுக் கொண்டு தமது நாட்டாமைத்தனத்தைத் தொடர்ந்தனர். இயக்கத்தின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமன்றி இயக்கத்தின் போக்குக்கு எதிரான நிலைப்பாடுகளையும் பல சந்தர்ப்பங்களில் எடுத்து எமது போராட்டப்பயணத்தில் பெருந்தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக 2010 ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் இந்தக் குழப்பவாதிகள் வழமைக்கு மாறாக  நவம்பர் 26 இல் தலைவர் பிறந்த நாளன்று ‘மாவீரர்  நாள் அறிக்கை’ என ஒன்றை எழுதி வெளியிட்டதுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் சிலவற்றிலும் வாசித்தனர்.  சிலவிடங்களில் சரியான விளக்கமின்மையால் தவறானமுறையில் வெளியான அவ்வறிக்கையை மாவீரர்நாள் நிகழ்வில் வாசிக்கும் நிலைக்குச் செயற்பாட்டாளர்கள் தள்ளப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாகவும் ஆன்மாவாகவும் எமது இனத்தின் வரலாற்றைத் தக்கவைக்கும் உன்னதமானவர்களாகவும் திகழும் மாவீரர்களையும், அத்தெய்வங்களை நினைவுகூரும் மாவீரர் நாளையும் கொச்சைப்படுத்தியதன் மூலம் இவர்கள் மிகப்பெரும் தவறைச் செய்துள்ளார்கள். சிங்களப் பேரினவாத அரசு எமது காவல் தெய்வங்களின் கல்லறைகளைச் சிதைத்ததற்கு ஒப்பான இழிசெயலை இந்தக் குழப்பவாதிகள் செய்துள்ளார்கள். இதற்கு மேலும் இப்போக்கைத் தொடரவிட முடியாது என்ற முடிவுக்கு வந்த பின்னரே எமது அமைப்பு குறிப்பிட்ட நாடுகளுக்குப் போராளிகளை அனுப்பி அங்கே போராட்டச் செயற்பாடுகளை நெறிப்படுத்தத் தொடங்கியது.
அவ்வடிப்படையில், தவறானவர்களின் கட்டுப்பாட்டில் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுவதைத் தவிர்க்கவே பொதுவான ஒரு கட்டமைப்பினை அமைத்துச் செயற்படுமாறு எம்மால் கூறப்பட்டது. நீண்டகாலமாகத் தேசியப்பணில் ஈடுபட்ட உணர்வாளர்களைக் கொண்டே இக்கட்டமைப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்த நடவடிக்கைகளை சில செயற்பாட்டாளர்களும் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களும் சேர்ந்து எதிர்ப்பதோடு, அமைப்பின்மீதும் எமது செயற்பாட்டாளர்கள் மீதும் சேறடிக்கும் வேலையைத் தொடங்கியுள்ளார்கள். மாவீரர்நாள் நிகழ்வு நடத்துவது தமது பரம்பரையுரிமை என்ற தொனியோடு இவர்கள் செயற்படுகிறார்கள். தமது இருப்பை ஆட்டங்காண வைக்குமென்ற பயத்தில் இந்தப் பொதுமையான மாவீரர்நாள் ஏற்பாடுகளை எவ்விலைகொடுத்தும் குழப்புவது என்று கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுகிறார்கள்.
தமது கட்டுப்பாட்டிலிருக்கும் ஊடகங்களில் ஊடக நடைமுறைகளை மீறி கீழ்த்தரமான விமர்சனங்களை – அதுவும் ஆதாரமற்ற வெறும் கட்டுக்கதைகளையும் ஊகங்களையும் வெளியிட்டு வருகின்றனர். தலைவரின் இருப்பினை மறுதலிப்பவர்கள் என்றும், கே.பி. குழுவென்றும், சிங்கள கைக்கூலிகள் என்றும், இந்திய உளவு அமைப்புடன் தொடர்பு என்றும், பிரதேச வேறுபாடு என்றும்  தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றார்கள். மக்கள் மத்தியில் இவ்வாறு பரப்புரை செய்தால் விடுதலைப்போராளிகளையும், புதிய நெறிப்படுத்தல்களையும் மக்கள் புறந்தள்ளிவிடுவார்கள் என்ற நப்பாசை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எமது அமைப்பைப் பற்றியும் போராளிகள் பற்றியும் உணர்வாளர்களைப் பற்றியும் அவதூறுகளைப் பரப்பிக்கொண்டும் காட்டிக்கொடுப்புக்களை மேற்கொண்ட வண்ணமும் இருக்கின்றவர்கள் பற்றி மக்களாகிய உங்களுக்கு எமது அமைப்பின் சார்பில் விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது தமிழீழ விடுதலைப்புலிகளின் கடமையாகும்.  அவ்வகையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வழிகாட்டலில் செயற்படாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கிளைக்கட்டமைப்புக்களைச் சேர்ந்த சிலரை விரைவில் வெளிப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளோம்.
முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட நிலையில் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாம் மிக உறுதியாகவுள்ளோம். எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமுடன் செயற்படும் அனைவரையும் அரவணைத்து, நிர்வாகச் சிக்கல்களில் தேவையான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு தமிழ்மக்களின் ஒன்றுதிரண்ட ஆதரவோடு நாம் எமது போராட்டத்தை முன்னெடுக்கவே விளைகின்றோம். அவ்வகையிலேயே மக்கள் மயப்படுத்தப்பட்ட மாவீரர்நாள் நிகழ்வுகளை ஊக்குவிக்கின்றோம்.
இதன் ஒருகட்டமாகவே மாவீரர் நாள் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி,  கனடா ஆகிய நாடுகளில் பொதுவான குழு அமைக்கப்பட்டு அதன்கீழ் நடைபெறுகின்றது. இயக்கத்தின் மரபுகளை மீறாமல் எமது தேசியத்தலைவரின் வழிகாட்டலின் கீழ் வழமைபோன்று இந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்த அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire