Thursday, November 17, 2011

விதைக்கப்பட்ட மாவீரர்களின் கனவுகள் புதைக்கப்படாமலிருக்க விட்டுக் கொடுப்புக்கள் தேவை

Source:http://www.tamilwin.com/view.php?232D22DG3eUQlc2BI3dSLfb3jC24ap3029E2


ஆண்டொன்று கடந்து நமது மாவீரர்களை நினைவு கூரும் அந்த நவம்பர் மாதம் பிறந்துள்ளது. மண்ணுக்குள் விதையாகிப்போன அந்த மனித தெய்வங்களை மறப்பதோ அன்றி புறக்கணிப்பதோ மனித தர்மத்திற்கு ஏற்புடையதான செயல்கள் அல்ல.
அவர்களைப் பூசித்து வணங்கும் ஒரு புனிதமான பணி நம்மவர்கள் முன்னே காத்திருக்கும் தருணத்தில் அந்த மாவீரர்களின் தியாகங்களை எம் கண்கள் முன்பாக கொண்டு வந்து நிறுத்தி அவர்களை வணங்குகின்ற விழாக்களை எடுப்பதிலே தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலே தோன்றியுள்ள கவலைக்குரிய விடயங்கள் பற்றி இந்த வாரம் ஆராய்வது ஒரு அவசியமான தேவையாக உள்ளது.
நாம் நமது கதிரோட்டம் பகுதியிலே ஆண்டுதோறும் குறிப்பிட்டு வருகின்ற முக்கியமான விடயங்களில் இந்த மாவீரர்கள் தொடர்பான கருத்துக்களும் அடங்குவதுண்டு.
அவர்களுக்குரிய மாதமாக நாம் கருதுகின்ற நவம்பர் மாதத்தில் வழமைபோல அவர்களைப் போற்றியும் பூசித்தும் கொண்டாட வேண்டிய தேவை நமது புலம் பெயர்ந்த மக்களுக்கு உண்டு.
அவ்வாறு நாம் மாவீரர்களின் நினைவுகளை கொண்டாடும் வகையில், அந்த விழாக்களை ஏற்பாடு செய்ய எங்கள் மத்தியில் தொடர்ச்சியாக இயங்குகின்ற அமைப்புக்களின் தேவை இன்னும் உண்டு என்றும் அவற்றில் கனடா போன்ற நாடுகளில் உலகத் தமிழர் இயக்கம் போன்றவை தொடர்ச்சியாக செயற்படுவதன் மூலமே இந்த புனிதப் பணி சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
அதிலும் இவ்வாறான அமைப்புக்கள் இங்கு வாழும் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட வேண்டுமே தவிர கடந்த காலங்களைப் போல பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கும் அமைப்புக்களாக இல்லாது அவற்றின் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
இவ்வாறான நேரத்தில்;தான் நாம் கொண்டாட வேண்டிய மாவீரர் நாள் தொடர்பாக சர்ச்சைகளும் அறிவிப்புக்களும் விமர்சனங்களும் எங்கள் மத்தியில் பரப்பும் வகையான செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை அந்த மண்ணுக்காய் அர்ப்பணித்த விடுதலைப் புலிகளின் போராளிகள் சுமார் முப்பதாயிரத்திற்கும் அதிகமானதாக இருக்கலாம் என்று கணக்கிடப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் வன்னி மண்ணில் தங்கள் நிர்வாகக் கட்டமைப்பை சீராக கொண்டு நடத்திய காலத்தில் ஒரு மாவீரரது மறைவு என்பது கூட மிகவும் புனிதமாகப் பேணப்பட்டு வந்தது என்பது உண்மை.
மண்ணுக்காய் மடியும் மாவீரர்களது மறைவு பற்றிய விபரங்கள் அனைத்தும் சரியாகப் பேணப்பட்டு அவர்களது வித்துடல் போராளிகளின் கைகளில் கிடைக்கும் போது தகுந்த மரியாதையோடு மண்ணில் விதைக்கின்ற ஏற்பாடுகள் எல்லாம் அந்த மண்ணில் மிகவும் சரியாகவே செய்யப்பட்டன.
ஆனால் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் அந்த திட்டம் தானாக இல்லாமற் போய்விட்டது. நாம் மேற்கூறிய பணிகளைச் செவ்வனே செய்து வந்த போராளிகளின் தியாக மரணங்கள் கூட மக்களால் மறக்கப்படுகின்ற அளவிற்கு அங்கு இலங்கை அரசின் கொடூரமான இராணுவ அணுகுமுறை காணப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
இது தொடர்பான இன்னுமொரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நமது மக்கள் தொடர்ச்சியாக வாழும் நம் தாயகத்தில் வெளிப்படையாக நமது மாவீரர்களை பூசிப்பதோ அன்றி அவர்களின் தியாகம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவதோ என்பது இலங்கை அரசைப் பொறுத்தளவில் ஒரு தேசத்துரோகம் என்று கருதப்படுகின்ற நேரத்தில் நாம் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்த மாவீரர்களின் தியாகங்களை நாம் மரியாதை செய்யும் நிகழ்வுகளை நடத்துவதில் நமக்குள் மோதும் நிலை ஏற்பட்டால் இலங்கை அரசின் இனவாத செயற்பாடுகளுக்கும் நமது அணுகுமுறைகளுக்கும் வேறுபாடுகள் இல்லாத ஒரு நிலை தோன்றும் என்பதே எமது கருத்து.
எனவே புலம் பெயர்ந்த நாடுகளில் இந்த மாவீரர்களின் தியாகங்களை மதிக்கும் விழாக்களை நடத்துவதில் உள்ள சவால்களை முறியடித்து விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படுவதே அவசியமான காரியம் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். 

இவ்வாறான நேரத்தில் எமது புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவப்பட்டுள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு உருத்திரகுமாரன் சர்வதேச ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பின் சில பகுதிகளை நாம் இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

திரு உருத்திரகுமாரன் தனது செய்திக்குறிப்பில் பின்வருமாறு கூறுகின்றார் “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் ஆகும். இக் காலகட்டம் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு என்ற கொள்கை நிலையினை உயிர்ப்போடு பேணி அந்த உயரிய இலட்சியத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் செயற்படும் தீர்மானகரமான காலகட்டம்.
இந்த இலட்சியப்பயணத்தில் நம்மை வழிநடாத்துபவர்கள் நமது மாவீரர்களே. இம் மாவீரர்களை மையமாகக் கொண்டுதான் ஈழத்தமிழர் தேசம் ஒன்றுபட்ட தேசமாக விளங்க முடியும்.
இவர்கள் விட்டுச் சென்ற இலட்சியச்சுவடுகள்தான் நமக்கான வழிகாட்டிகள். நமது மாவீர்களின் இலட்சியத்தை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களுக்கிடையே கொள்கையளவில் மாறுபட்ட கருத்துக்கள் கிடையாது.
அணுகுமுறைகள் சார்ந்து நமக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக செயற்பட முடியாமலும் போயிருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் ஒரு ஜனநாயகச் சூழலில் மிக இயல்பானவை.
நமக்கிடையே இருக்கக்கூடிய எவ்விதமான அணுகுமுறை வேறுபாடுகளும்; நமக்கிடையிலான உரையாடலுக்கூடாகக் கையாளப்படக்கூடியவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் ஒருவரையொருவர் மதிக்கவும் அங்கீகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
எனினும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் இவ் வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை இரு பிரிவுகளாக நடத்துவது தொடர்பான தகவல்கள் நம்மையும் நமது மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளன.”
மேற்படி கருத்துக்களைக் கூறியுள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்களை புலம் பெயர்ந்த நமது ஈழத்தமிழ் சமூகம் கவனத்திற்கு எடுத்து உடனடியாக தகுந்த முறையில் தீர்மானங்களை எடுப்பதே அவசியம்; என்று நாம் கருதுகின்றோம்.
நாம் முன்னர் கூறியது போல நமது அமைப்புக்கள் மத்தியில் தோன்றியுள்ள உள்ளக முரண்பாடுகளை களைந்து விட்டு மாவீரர்கள் மரியாதையோடு கொண்டாடுவதற்கு விடடுக்கொடுப்புக்களும் கலந்துரையாடல்களும் அவசியம் என்றே கருதுகின்றோம்.
நவம்பர் 27ம் திகதி கனடாவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் நமது மாவீர்கள் மிகுந்த மரியாதையோடு பூசிக்கப்படுகின்ற விழாக்களை காணவே நமது மக்கள் விரும்புகின்றார்கள் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். இது அவசியமான ஒரு விடயமாகும்.

கதிரோட்டம்- கனடா உதயன்

No comments:

Post a Comment

Mitsubishi Heavy Industries Appoints Eisaku Ito as Next President

Mitsubishi Heavy Industries, Ltd. (MHI) on 18 December announced executive-level personnel changes effective March 31 and April 1, 2025, and...