Saturday, December 18, 2010

சிறிலங்கா போர்க்குற்றங்கள்: அனைத்துலக விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

Source: http://www.puthinappalakai.com/

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணைகள் போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் 17 பேரும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 30 பேரும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கடிதம் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஹிலறி கிளின்ரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் அமெரிக்கா கோர வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

சிறிலங்கா அரசு அமைத்துள்ள விசாரணைக் குழுவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஐ.நாவின் பின்புலத்துடனான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று சமாந்தரமான முறையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். 

எந்தவொரு குற்றமும் உறுதிப்படுத்தப்படாது போனால் அங்கு நம்பிக்கை மற்றும் உண்மைத்தன்மை இல்லாது போகும் என்று ஜனநாயக்க் கட்சியின் மேலவை உறுப்பினரான செரொட் பிரவுண் மற்றும் குடியரசுக் கட்சியின் மேலவை உறுப்பினர் ரிச்சர்ட் பர் ஆகியோர் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர் 

“ உண்மைத்தன்மை இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சமாதான முயற்சியும் தோல்வியடையும் என்பதே வரலாறு. 

இந்தநிலையில் சிறிலங்காவில் இன்னொரு தோல்விப் படி ஏற்படுவதை ஏற்க முடியாது“ என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அதேவேளை இன்னொரு தனியான கடிதம் ஒன்றில் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், “ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி அமெரிக்கா இந்தமாதம் போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பிக்கையானதும், காத்திரமானதுமான நடவடிக்கைக்கு வலியுறுத்த வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Kids Enjoying in Village Pond