Wednesday, June 2, 2010

எப்படி இருக்கிறார் பிரபாகரனின் தாயார்? மருத்துவர் மயிலேறும்பெருமாள் பேட்டி..!

நன்றி : ஜூனியர்விகடன் 06-06-10

சென்னையில் சிகிச்சைக்கு அனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் இப்போது எப்படி இருக்கிறார்? என்பதையறிய வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். “தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சையளிக்கிறார்” என அவர்கள் சொல்ல.. வேகமாகவே மேலே விசாரித்தோம்.

பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். 1965-ம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். 1972-ம் ஆண்டுவரை பயிற்சி மருத்துவராகத் தமிழகத்தில் பணியாற்றிவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட பல போராளி இயக்கங்கள், தங்கள் வீரர்களின் சிகிச்சைக்காக இவரை அடிக்கடி கடத்திக் கொண்டு போனதுண்டு. ஒவ்வொரு முறை இவர் கடத்தப்பட்டுத் திரும்பி வரும்போதும் சிங்கள ராணுவத்தினர் வந்து இவரிடம் விசாரணை நடத்திச் செல்வதும் நடந்தது.

ஆகவே மயிலேறும்பெருமாள் 86-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்குச் சென்றுவிட்டார். பிறகு 92-ல்தான் இலங்கை திரும்பி வன்னியில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது கிளிநொச்சி அரசு அதிபர் இவரை அரசு வேலைக்கு அழைக்க இன்றுவரை இலங்கை அரசு மருத்துவராகப் பணியில் தொடர்கிறார்.

மயிலேறும் பெருமாளைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

“பார்வதி அம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடிகிறதா? தேவையான வசதிகள் இருக்கின்றனவா..?”

இது இலங்கை அரசாங்கம் நடத்தும் மாவட்ட மருத்துவமனை. தேவையைவிட இங்கே ஆட்கள் குறைவுதான். 87 படுக்கைகள் இருக்கின்றன. ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியாகவும், பிரசவத்துக்குத் தனியாகவும் விடுதிகள் உள்ளன.

சிறிய அளவில் அறுவை சிகிச்சைகளையும் செய்கிறோம். 22 மருத்துவர்கள் தேவைப்படும் இடத்தில் நான்கு மருத்துவர்கள்தான் இருக்கிறோம். ஒரு பல் மருத்துவர்.. 30 செவிலியர்களும் பணியாற்றுகின்றனர். இருந்தும் பார்வதி அம்மாளுக்குச் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறோம்.

பார்வதி அம்மாள் இப்போது எப்படி இருக்கிறார்..?

மோசம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வலது பக்கம் முழுவதும் பாரிசவாயு தாக்கியுள்ளது. மூன்று வேளைகளும் நான் அவரைப் பார்த்துச் சோதிக்கிறேன். மற்ற மருத்துவர்களும் கவனிக்கிறார்கள். காலையில் ஆப்பம், மதியம் சிறிதளவு சாப்பாடு, இரவு பால் ஆப்பம் அல்லது முட்டை ஆப்பம் சாப்பிடுகிறார்.

இடையிடையே வாழை, ஆரஞ்சுப் பழங்கங்கள் தருகிறோம். தானாகச் சாப்பிட முடியவில்லை. ஊட்டிவிடுகிறோம். உளுந்தும் களி, புட்டும் தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சாம்பலும் கேட்பார். வீட்டில் இருந்து எடுத்து வந்துதான் தருவோம்.

இயல்பாகப் பேசுகிறாரா? பிரபாகரன் குடும்பத்தினர் யாரும் தொடர்பில் உள்ளனரா..?

எங்களிடம் நன்றாகக் கதைப்பார். நான் அவரிடம் நீங்கள் கேட்கும் உணவுப் பதார்த்தங்களை எடுத்து வந்தால், என் மனைவி என்னை அடிக்க வருகிறாள் என்பேன் விளையாட்டாய்.. அவர், “அப்படியா.. நல்லா அடிக்கட்டும்..” என்பார் கஷ்டப்பட்டுச் சிரித்தபடி.

கனடாவில் இருந்து பிரபாகரனின் சகோதரி விநோதினியோ, டென்மார்க்கில் இருக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனோ அமெரிக்காவில் இருக்கும் விநோதினியின் மகளோ யாராவது தினமும் பார்வதியம்மாளிடம் பேசி விடுகிறார்கள்.

சுற்றியுள்ள அவருடைய உறவினர்களும் தினமும் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால் வரும் எல்லோருக்கும் ஆர்மி அல்லது போலீஸ் பார்த்துவிடுமோ என்ற பயம் அதிகம். சிறிது நேரம் இருப்பார்கள்.

அவருடன் யாராவது பேசிக் கொண்டேயிருந்தால் அவருக்கு நல்லது. வயோதிகத்தால் ஞாபக மறதி கூடிவிட்டது. சில சமயம் தாதியர்கள், “உங்கள் பேரன் பாலச்சந்திரன் எங்கிருக்கிறான்..?” என்று கேட்டால், “அவன் காட்டுக்குள்ள இருக்கான்..” எனச் சொல்வார். உறவினர்கள் வந்து பேசப் பேச, பழையவற்றை ஞாபகப்படுத்திப் பேசுகிறார்.

பார்வதி அம்மாளை பார்க்க பார்வையாளர் கூட்டம் வருமா..?

தமிழர்கள், சிங்களர்கள், செய்தியாளர்கள் எனப் பலரும் வருகிறார்கள். யாரையும் நாங்கள் தடுப்பதில்லை. வயோதிகமான ஒரு பெண்ணை விருப்பப்பட்டு பார்க்க வருவோரை மருத்துவன் என்ற முறையில் நான் தடுக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில் அவர் பார்க்கக் கூடாது.. இவர் பார்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டார் கலைஞர். மருத்துவன் என்கிற முறையில் சொல்கிறேன். வயோதிக நோயாளிகளுக்கு அவர்கள் கேட்பதைக் கொடுப்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகும். இல்லையென்றால் மனவருத்தம் அடைவார்கள்தானே..

அப்படி வருத்தப்படவைத்து சிகிச்சையளிப்பதில் அர்த்தமில்லை. அதே நேரம் பார்வதி அம்மாளைப் பார்க்க வருபவர்கள் அன்பு மிகுதியால் அவர் உடல் நலத்துக்கு ஒவ்வாத பலவிதமான உணவுப் பொருட்களைத் தந்துவிடுகிறார்கள். அதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். பார்வையாளர்கள் எந்தப் பொருளையும் அம்மாவுக்குக் கொண்டு வரக் கூடாது என்று உத்தரவிடப் போகிறேன்.

பார்வதியம்மாளுக்கு சிகிச்சையளிப்பதால் உங்களுக்கு பிரச்சினைகள் ஏதும்..?

81 வயதான நோயாளி அந்த அம்மா. நான் அவருடைய மருத்துவர். இதில் என்ன பிரச்சினை..? இனிமேல் என்ன பிரச்சினை வந்தால்தான் என்ன..? 70 வயதிலும் நான் இந்த வேலையில் இருக்கிறேன். தொழில் தர்மத்துடன் செயற்படுகிறேன். இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

முன்பு, நான்கு முறை துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியிருக்கிறேன். ஒரே நேரத்தில் புலிப்படையினருக்கும், ராணுவப் படையினருக்கும் சிகிச்சையளித்திருக்கிறேன். அப்போது அவர்களுக்குள் தாக்குதலும் நடந்துள்ளது. இப்போது அதையெல்லாம் கடந்து நெடுந்தூரம் வந்துவிட்டோம்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறா? இல்லையா..?

நான் மன்னாரில் மாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்தபோது பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை மாவட்ட நில அதிகாரியாக இருந்தார். எனக்குத் தெரிந்தவரை போராட்டம் என்று கையில் துவக்கு தூக்கிய பிறகு தன் குடும்பத்துடன் பிரபாகரனுக்குத் தொடர்பில்லை.

சமாதானக் காலத்தில்தான் பெற்றோருடன் இணைந்திருந்தார். என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு தெய்வப் பிறவி. அசாதரணமான மனிதர்.. ஆனால் அவர் எடுத்த வழிதான் வேறு.. அவர் எங்கோ உயிருடன் இருப்பதாகவே இங்குள்ள பெரும்பாலான மக்கள் சொல்கிறார்கள்.”

அழுத்தமாகவே சொல்லி முடிக்கிறார் டாக்டர் மயிலேறும்பெருமாள்.

பேட்டி : இரா.தமிழ்க்கனல்

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...