போரின்போது சிறிலங்கா இராணுவம் ஒரு பொதுமகனைக்கூட கொல்லவில்லை: அல்ஜஸீராவுக்கு மகிந்த தெரிவிப்பு

Source:http://www.puthinamnews.com/?p=10787

“சிறிலங்கா இராணுவம் போரின்போது பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை. அவ்வாறு கொலை செய்திருந்தால் மூன்று லட்சம் மக்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்திருக்கமாட்டார்கள். மக்கள் அனைவரும் இராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்தார்கள்” – என்று சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அல் ஜஸீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் எதனையும் புரியவில்லை. நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்திருக்கிறது. அவ்வாறு பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக – சர்வதேச சமூகம் கூறுவதைப்போல – எவர் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது. நிச்சயமாக அதற்கு நான் அனுமதிக்கமாட்டேன் என்றும் மகிந்த தனது செவ்வியில் கூறியிருக்கிறார்.

சிறிலங்கா இராணுவத்தினர் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றால் அரசு ஏன் விசாரணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது என்று செய்தியாளர் கேட்டபோது – அது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம் என்றும் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை தான் விரும்பவில்லை என்றும் மகிந்த கூறியுள்ளார்.

அப்படியானால், அந்த விசாரணைக்குழு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யுமா என்று கேட்டதற்கு – அது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை செய்யும் என்று மகிந்த தெரிவித்தார்.

இந்த விசாரணைக்குழுவின் செயற்பாடு எவ்வளவு தூரம் வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையாகவும் இருக்கும் என்று கேட்டதற்கு உடனடியாக குறுக்கிட்ட மகிந்த – இந்த கேள்வியை நீங்கள் அமெரிக்காவிடமோ பிரிட்டனிடமோ கேட்டீர்களா? ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் என்ன செய்தீர்கள் என்று நீங்கள் அவர்களை கேட்டீர்களா? அவர்களால் செய்யமுடியாததை நாம் செய்திருக்கிறோம். ஆம். பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் – என்றார்.

போர் முடிவுற்று இவ்வளவு காலமான பின்னரும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தீர்த்துவைக்கப்படவில்லை என்று கூறப்படும் கருத்து குறித்து கேட்டதற்கு – இது அரச சார்பற்ற அமைப்புக்களும் அரசியல்வாதிகள் சிலரும் தெரிவிக்கும் கருத்துக்கள். முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களை கேளுங்கள். அவர்கள் கூறுவார்கள். எனது வீடு எனக்கு மீண்டும் வேண்டும். எனது பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும். அவற்றை தவிர வேறு எதனையும் அவர்கள் கேட்கமாட்டார்கள். ஆகவே. அவர்களை முதலில் மீள்குடியமர்த்தவேண்டும். அவர்களுக்குரிய வசதிகளை வழங்கவேண்டும். அதன்பின்னர், அவர்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றுக்கும் மாகாணசபைக்கும் தெரிவுசெய்யலாம். அந்த பிரதிநிதிகளுடன் நாம் பேசலாம்.

கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிவந்தவர்கள். பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளே ஆவர். அவர்கள் தற்போது யதார்த்தத்தை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் அரசை நம்பவேண்டும். நாங்கள் அவர்களை நம்புகின்றோம். அரசுக்குள்ள பிரச்சினைகளை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். சமரசத்தின் ஊடாகவே தீர்வினை காணமுடியும் – என்றார் மகிந்த.

தமிழ் மக்களுக்கு எதுவுமே நீங்கள் செய்யவில்லை என்று புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு இங்கு என்ன நடைபெறுகிறது எதுவும் தெரியாது. அவர்களுக்கு இங்கு வருவதற்கு விருப்பமில்லை. தமது சுகபோகங்களை அனுபவித்துவருகிறார்கள். அவ்வாறு இங்கு வந்தாலும் கொழும்புக்கு அப்பால் செல்வதில்லை. வட பகுதிக்கு சென்றிருக்கமாட்டார்கள். அந்த மக்களுடன் பேசியிருக்கமாட்டார்கள். நான் இன்று சாதாரண மனிதனாக யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மக்களுடன் பேசுகிறேன – என்று கூறினார் மகிந்த.

உங்களது குடும்பத்தினர் 300 க்கும் அதிகமான முக்கிய அரச பதவிகளில் உள்ளார்களே என்று கேட்ட கேள்விக்கு மகிந்த பதிலளிக்கையில் – உங்களுக்கு யார் இந்த எண்ணிக்கையை தந்தது. நான் உங்களுக்கு ஒரு விடயத்தை கூறுகிறேன். இந்த நாடு முழுவதும் எனக்கு சொந்தம். அங்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் யாவரும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்கள் – என்றார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரா என்று கேட்டதற்கு – அவர் எனது சகோதரர். அவரை நான் நம்புகிறேன். அதனால் அவரை நான் அந்த பதவியில் நியமித்தேன் – என்றார் மகிந்த. அப்படியானால், அவர் ஒருவர்தான் குடும்பத்தில் உங்களது நம்பிக்கைக்கு பாத்திரமனவரா என்று கேட்டதற்கு – இல்லை. அப்படியென்றில்லை. அவர் அந்த பதவிக்கு தகுதியானவரும்கூட என்றார் மகிந்த.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire