கொலைக் காட்சிகளின் நிழல்



01.
கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின்
சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

முதலில் எல்லோரையும் கைது செய்தார்கள்
சிலரது கண்களை கட்டினர்
சிலரது கைகளை கட்டினர்
இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன
வரிசையாக இருத்தப்பட்டனர்
புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும்
வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர்


மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில்
குருதியின் மேலாய் பூக்களை தூவ
தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள்

மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது
உருக்கிக் கொட்டுகிறது
சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது
கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன
துப்பாக்கிகள் விசாரணை செய்கின்றன
பிரிபடாத நிலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.

சடலங்களால் நிரம்பிய நிலத்தில்
கனவு முறியடிக்கப்பட்ட இரத்தத்தில்
அநியாயம் வென்று களிக்கும் வெறியில்
இனம் துடிக்கும் பெருங்கொலைகளின் தொடர்ச்சி நிகழ்ந்தன

அந்த இரத்தம் வெளியில் தெரிய வேண்டி வந்தது
அந்த கூக்குரல்கள் வெளியில் கேட்க வேண்டி வந்தன
அந்தக் காட்சிகள் வெளித்தெரிய வேண்டி வந்தன
சித்திரவதைகளினால் அந்தப் பெருநிலம் அதிர்ந்து கொண்டிருந்தது.

இரத்தம் வடிந்து நனைந்து போன நிலத்தில் இருத்தப்பட்டனர்
மண் சித்திரவதை செய்யப்பட்ட நிலத்தில் இருத்தப்பட்டனர்
மழை வெருண்டபடி மேலும் அழுகின்றது.

02
படைகளது உடைகள் இன்னும் பச்சை நிறமாகின்றன
அவர்கள் ஒரு நாட்டின் ஒரு தேசத்தின்
மனிதாபிமானத்திற்கான படைகளாக கௌரவிக்கப்படுகின்றனர்
துப்பாக்கிகளின் பிரியர்களாக
துருப்பிடித்த பல துப்பாக்கிகளை மீட்டு வைத்திருக்கின்றனர்
அவர்களது இராணுவப் புன்னகையிலிருந்து
வெளிப்பட்டுப் போகிறது பேய்களின் நடனத்தின் அதிர்வு.


அரசனின் பிரியத்தை அவர்கள் நிறைவேற்றுபவர்கள்
தளபதிகளின் உத்தரவை நடத்துபவர்கள்
இறுதியில் அரசனுக்கும் தளபதிகளுக்கும்
படைகள் இரத்தத்துடன் கூடிய சதைகளை படைக்கின்றனர்
தளபதி இன்னுமின்னும் வீங்குகிறான்
அரசன் இன்னும் இன்னும் வீங்குகிறான்
அரசனின் புன்னகை வீங்குகிறது
தளபதிகளின் நட்சத்திரங்கள் வீங்குகின்றன
படைகள் இன்னுமின்னும் வெறியூட்டி வளர்க்கப்படுகின்றனர்.

அவர்கள் யுத்தத்தின் தந்திரங்களை
வெற்றியின் குரூரங்களை பகிர மிக விரும்புகின்றனர்
இனஅழிப்பை அதற்கான படுகொலையை
மீள மீள விளக்கத் தயாராக இருக்கின்றனர்
வீரம் நிறைந்த அர்த்தத்தில்
சடலங்களின் முன்பாக கம்பீரமாக நிற்கவும்
சடலங்களை அள்ளி பெருங்கிடங்குகளில் நிறைக்கவும் விரும்புகின்றனர்.


03
வெள்ளைக் கொடிகள் கொலை பதுங்கியிருந்த
ஒற்றர்களாக மாறியிருந்தன
எதிர்வரும் எவரையும் ஏதோ ஒரு அடிப்டையில்
சுட்டுத் தள்ளுவதற்கு
அவர்கள் தயாராகவும் ஆர்வமாகவும் செயற்பட்டனர்
சரணடைந்தவர்கள் கொலைக்கு பரிசளிக்கப்பட்டனர்
கைது செய்யப்பட்டவர்கள்
சித்திரவதைகளுக்கு தெரிவுசெய்யப்பட்டார்கள்
கொன்ற பின்னர்
குழந்தைகளை வெள்ளை கொடிகளால் போர்த்தியிருந்தனர்
புணர்ந்து முடித்த பின்னர்
பெண்களையும் வெள்ளைக் கொடிகளால் மூடியிருந்தனர்.


மேல்சட்டைகளையும் கீழ் சட்டைகளையும்
கைகளில் விலங்காக்கியிருந்தனர்

கொலையின் தந்திரம் மிகுந்த கயிறுகளால்
கைகளை பிணைத்திருந்தனர்
ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே
தங்கள் குருதி வெளியேறிக் கொண்டிருந்ததை கண்டனர்
அவர்களது குருதி பிரட்டப்பட்ட மண்ணில் ஆழத்திற்கு
செல்லுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்
அவர்களுக்கு பலவிதமான சடலங்கள் காண்பிக்கப்பட்டன.

கொல்லவும் சித்திரவதை செய்யவும்
வேருடன் அழிக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்ட படைகள்
இறுதியில் சடலங்களின் முன்பாக நின்று
வெற்றியைப் பகிருவதுடன் தங்கள் கடமையை முடிப்பதில்லை

அழிவுக்கான புதிய புதிய கட்டளைகளை நிறைவேற்ற
அவர்கள் எப்பொழுதும் காத்திருக்கின்றனர்
குருதியின் கனவுகளை அவர்கள்
வளர்த்துக் கொண்டிருக்கவே விரும்புகின்றனர்


நிலத்தை கைபற்றவே படைகள் நடவடிக்கை செய்தன
மக்களைக்கொல்லவே படைகள் இறந்தனர்
அதனால் படைகள் மக்களைக் கொன்றனர்
அதனால் படைகள் போராளிகளை கொன்றனர்

அதனால் அரசன் நிலத்தை கொன்றான்.
குருதியாலும் சதையாலும்
அரசன் தன் மாளிகையை கட்டி வைத்திருக்கிறான்.

04
கொலையின் பயம் உறைந்த கண்களை
என்ன செய்தீர்கள்?
எல்லா முகங்களையும் பார்த்துக் தவித்துக் கொண்டிருக்கும்
ஏக்கம் உறைந்த முகங்களை என்ன செய்தீர்கள்?
தனித்து மாட்டுண்ட சிறுவனை என்ன செய்தீர்கள்?
கைதவறி விட்டுச் சென்ற குழந்தையை என்ன செய்தீர்கள்?



ஏன் சப்பாத்துக்கள் நெருங்கின?
ஏன் பயங்கரமான சீருடைகள் நெருங்கின?
ஏன் ஆழமாய் அழித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கிகள் நெருங்கின?
ஏன் அழித்து முடிக்கச் சொல்லிய கட்டளைகள் நெருங்கின?

சித்திரவதைகளால் உயிர் இழந்து கொண்டிருந்த
சிறுவனின் முகம்
கொலைக்காட்சிகளில் இன்னும் நெளிந்து கொண்டிருக்கிறது.
நிலத்திற்கிடையில் குழந்தைகள் அலைகின்றனர்.

______________________
19.05.2010

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire