Dinamani Editorial on May 11, 2010:
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாகவும், ஒரு விடியலைக் காட்டியதாகவும் அமைந்த செய்தி- இரு நாள்களுக்கு முன்பு, தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயித்து அரசு வெளியிட்ட அறிக்கைதான்.
அறிக்கையோடு நின்றுவிடாமல், தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்வி மாவட்டங்களில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரக் கடிதம் வழங்கப்பட்டு வருகிறது என்பது மேலும் மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது.
கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய, நீதிபதி கே. கோவிந்தராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, இந்தக் கட்டணத்தை மிகவும் சரியாகவும், நியாயமாகவும் நிர்ணயித்துள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஏனெனில், இந்தக் கட்டணங்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமாக, ஒவ்வொரு பள்ளிக்குமாகத் தீர்மானிக்கப்பட்டவை என்பதுதான் இதன் சிறப்பு.
ஒவ்வொரு பள்ளியும் கொண்டிருக்கும் இடத்தின் பரப்பளவு, கட்டடங்களின் அளவு, உள்கட்டமைப்பு வசதி, தளவாட வசதிகள், ஆய்வுக்கூடம், நூலகம், பணியாளர், ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறித்து அந்தந்தப் பள்ளியிடமிருந்து தகவல் பெற்று அளிக்குமாறு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு படிவத்தை இக்கமிட்டி வழங்கியது. இந்தப் படிவங்களை 10,934 பள்ளிகள் பூர்த்தி செய்து தந்தன. 701 பள்ளிகள் இப்படிவங்களை இதுவரை பூர்த்தி செய்து தரவே இல்லை.
இந்தக் கமிட்டி செய்த மிக நல்லதொரு செயல், இவர்கள் தந்த விவரங்களைக் கொண்டு, அப்பள்ளிக்கு ஓராண்டுக்கு எவ்வளவு செலவாகக்கூடும் என்று கணக்கிட்டு, அதில் பள்ளி நடத்தும் தாளாளருக்கும் இழப்பு இல்லாத வகையில் ஒரு விகிதாசார லாபத்தைச் சேர்த்து, அதை அந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்விக் கட்டணங்களை வகுத்து அளித்துள்ளனர்.
இந்த நடைமுறை செலவினக் கணக்கின் அடிப்படையில், அதிகபட்சமாக மேனிலைப் பள்ளியில் ரூ. 11,000, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 9 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 8 ஆயிரம், தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ. 5 ஆயிரம், கிராமத் தொடக்கப்பள்ளிக்கு ரூ.3,500 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
ஆனால், நாம் எதிர்பார்த்ததைப் போலவே தனியார் பள்ளிகள் அரசின் இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறும் முயற்சியில் இறங்கிவிட்டன. இதற்காக அனைத்து தனியார் பள்ளிகளிடமும் சந்தா நிலுவை வசூல் படு வேகமாக நடந்து வருகிறது.
அரசின் கட்டணத்தை எதிர்க்கும் பள்ளி நிர்வாகிகள் சொல்லும் காரணம், இந்தக் கட்டணம் எங்களுக்குக் கட்டுப்படியாகாது என்பதுதான். இந்தப் பள்ளிகள் கொடுத்த வரவு, செலவு கணக்குகளின் அடிப்படையில்தான் இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் அந்தப் பள்ளிகள் தவறான அல்லது பொய்யான தகவல்களைப் படிவங்களில் பூர்த்தி செய்து தந்தனவா? இவர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வாங்கும், மறைவுவருவாய் குறித்து இக்கமிட்டியின் படிவத்தில் பூர்த்தி செய்து தர இயலவில்லை என்றுதானே பொருள்?
அரசு வெறுமனே கல்விக்கட்டணம் அறிவிக்கும்; நாம் வழக்கம்போல அதை பல வகையில் அதிகரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தனியார் பள்ளிகள் இருந்தன. ஆனால், அரசு தற்போது அறிவித்துள்ள நிபந்தனைகளின்படி, எந்தெந்த தலைப்புகளின் கீழ் கட்டணம் வாங்கினாலும், மொத்தக் கட்டணம், மேனிலைப் பள்ளிக்கு ரூ. 11 ஆயிரத்தைத் தாண்டக்கூடாது என்பதுதான் இவர்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது.
இதுநாள்வரை எல்கேஜி-க்கும்கூட கணினி கட்டணம், நூலகக் கட்டணம் வசூலித்த அக்கிரமங்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய முறை, தனியார் பள்ளிக்கு மிகப் பெரும் கடிவாளமாக இருக்கிறது. ஆகவே இப்போது இதை எதிர்க்கிறார்கள். நீதிமன்றத்தில் தடையாணை பெற முயல்கிறார்கள்.
விடுதிக் கட்டணம், பள்ளிப் பேருந்துக் கட்டணம் ஆகியவற்றில் அரசு தலையிடாது என்று அறிவித்த போதிலும், இதனால் கிடைக்கும் வருவாய் சில பள்ளிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. எல்லாத் தனியார் பள்ளிகளிலும் பேருந்துகள் இருந்தாலும், விடுதிகள் கிடையாது. எனவே அதிகம் சம்பாதிக்க வழி இல்லாததால் இந்த எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.,
இந்தக் கட்டணம் கட்டுப்படியாகாது என்று இப்பள்ளிகள் கருதினால், தங்கள் பள்ளிகளை அரசுக்கு ஒப்பளித்துவிட்டு, ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அல்லது இவ்வாறு பணிய மறுத்து, தமிழ்ச் சமுதாயத்தில் கல்விச் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தடையாக இருக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்க முன்வர வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணங்கள் குறித்து www.pallikalvi.in என்ற முகவரியில் வெளியிடப்படும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது என்றாலும்கூட, ஒவ்வொரு தனியார் பள்ளியும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரத்தை பள்ளிக்கூட வாசலில் மக்கள் பார்வையில்படும்வகையில் வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட வேண்டும். அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும். நீண்டகாலமாக இருந்த நடுத்தர மக்களின் மனக் குமுறலுக்கு துணிவுடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தமிழக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்தவித நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் இந்தக் கல்வி கட்டண முறையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும், தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தின் தடை உத்தரவைப் பெற்றுவிடாவண்ணம் அரசு முனைந்து செயல்பட வேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்.
தவறுக்குத் துணைபோகாமல் மக்கள் மன்றம் இந்தப் பிரச்னையில் அரசுக்கு ஆதரவாகத் துணை நிற்பது அவசியம்.
Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=239987&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
Subscribe to:
Post Comments (Atom)
ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal
Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...
No comments:
Post a Comment