Friday, May 28, 2010

ஐயோ! என்ர தங்கச்சி குடும்பம் முழுக்கச் சரி!

Source: http://www.tamilulakam.com/news/view.php?id=11519

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு பெப்ரவரி எட்டாம் தேதி என நினைக்கிறேன். எனது பத்திரிகைப் பணிக்கான கட்டுரையை எழுதுவதற்காகப் பதுங்கு குழிக்குள் அமர்ந்து கொண்டேன். காதைச் செவிடாக்கும் எறிகணை மழைக்குள் உயர்ந்த பட்சம் உயிக்காப்பை மேற்கொண்டு பணிசெய்ய எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பதுங்கு குழி மாத்திரமே.

பாதுகாப்பு வலயமாக அரசால் அறிவிக்கப்பட்ட மாத்தளன் கடற்கரைக்குச் சமீபமாக இருந்த பனைமரங்கள் நிறைந்த அந்தப் பகுதியே எனது அப்போதய இருப்பிடம். தரப்பாளால் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடில்களில் ஒன்று. அதற்குள் அமைத்திருந்த பதுங்கு குழிக்குள் அமர்ந்தவாறே அன்றைய படுகொலைகள் தொடர்பாகக் கிடைத்த தகவல்களை வைத்து கட்டுரை எழதத் தொடங்கியிருந்தேன்.

நேரம் காலை பத்து மணியிருக்கும். படீர் படீர் படீர் என அடுத்தடுத்து வந்து வீழ்ந்தன எறிகணைகள். வெளிக்கிளம்பும் வெடியோசை கேட்காமலேயே வந்து விழுந்த அந்த எறிகணைகள் மிகவும் அழிவை உண்டுபண்ணும் மோட்டார் எறிகணைகள் என்பதைப் புரிந்து கொண்டேன். மூன்று எறிகணைகளும் எனக்கு மிக அருகாகவே விழுந்தன. அதன் சிதறல்கள் என்னைத் தாண்டிக் காற்றைக் கிழித்தவாறே பரவிப் பறந்தன. கந்தகப் புகை காற்றில் கலந்து புகை மண்டலமாகியது.

அத்தனை எறிகணைகளும் மக்கள் மிக நெருக்கமாக இருக்கும் பகுதியில்தான் விழுந்தன என்பதை என் பதுங்கு குழிக்குள் இருந்தவாறே அவதானித்தேன். இருந்தும் அவ்வெறிகணை வீச்சுக்குப் பின்னதான வெளிப்பாடுகள் என்னைச் சந்தேகம் கொள்ள வைத்தன. அடுத்து எறிகணைகள் வந்தவிழும் அபாயம் இருந்த போதும் என் புகைப்படக் கருவியைக் கையில் எடுத்துக்கொண்டு சம்பவ இடம் நோக்கி நடந்தேன். எந்தவித அழுகுரலும் இன்றி அமைதியாகவே இருந்தது அவ்விடம்.

தயங்கியவாறே கிட்டவாகப் போனேன். என்ன கொடுமை அது! சற்று முன்வரை நிழல் கொடுத்து நின்ற தரப்பாள் கூடாரம் இருந்த இடமே தெரியவில்லை மனிதத் தசைத் துண்டங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன். உடமைகள் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தன. அக்கூடாரத்துக்குள் இருந்த அத்தனை பேரும் உயிரிழந்து விட்டார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது.

ஒப்பாரி வைக்கக்கூட அங்கு யாரும் மிச்சமில்லை. அக்குடும்பத்தில் எத்தனைபேர் இருந்தார்கள் என்பதை என்னால் அறிய முடியவில்லை. சம்பவத்தைப் புகைப்படக் கருவிக்குள் பதிவாக்கிக்கொண்டு சதைத்துண்டங்களை எடுத்து ஒன்றுசேர்க்கத் தொடங்கினோம். அயலில் உள்ள சிலரும் அக்கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் அலறியபடி ஒருவர் ஓடிவந்தார். `ஐயோ! என்ர தங்கச்சி குடும்பம் முழுக்கச் சரி` சம்பவத்தை ஓரளவு உறுதிப்படுத்திக் கொண்டேன். `ஐந்து பிள்ளைகளும் தாய் தகப்பனும் காலமதான் கஞ்சி குடிச்சுக் கொண்டிருந்ததுகள் எல்லாரும் அப்படியே சரி தம்பி` ஒப்பாரி நீண்டது. அவர் சொல்லும் தகவல்களை வைத்து ஒவ்வொருவராய் அடையாளம் காண முயன்றோம். இயன்றவரை சடலங்களை ஒன்று சேர்த்தோம்.

அப்போதுதான் எனது வலப்பக்க தோட்பட்டை இலேசாகக் குளிர்ந்து கொண்டுவருவதை உணர்ந்தேன். அதிர்ச்சியாகி தோட்பட்டையைப் பார்த்த போது நான் அணிந்திருந்த மேற்சட்டை இரத்தத்தால் தோய்ந்து கொண்டிருந்தது. எறிகணைச் சிதறல்பட்டால் அதன்வலி உடனடியாகத் தெரியாது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைவைத்து நான் காயப்பட்டு விட்டேனோ எனச் சந்தேகித்தவாறு தோட்பட்டையை அழுத்தினேன். எந்தக் காயமும் இல்லை ஆனால் இரத்தம் வடிந்துகொண்டே இருந்தது.

சந்தேகம் கொண்டு தலையை நிமிர்த்திப் பார்த்தபோதுதான் எனக்கு அந்த அதிர்ச்சி, அருகில் இருக்கும் பனைமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தலைப்பகுதியிலிருந்தே அந்த இரத்தம் என் தோள்பட்டையில் விழுந்துகொண்டிருந்தது. நான் அண்ணாந்து பார்த்த திக்கைப் பார்த்த அவர் `ஐயோ என்ர கடைசி மருமகள் தம்பி, அவள் சரியான செல்லம், சின்ன வயசிலேயே நீளத் தலைமுடி. நான் டொக்டரா வந்து உங்களுக்கு ஊசி போடுவேன் மாமா என்று அடிக்கடி சொல்லுவாளே`

பனைமரத்தை அண்ணாந்து பார்த்தவாறே அவரது ஒப்பாரி நீண்டது. சிறிது நேரத்தில் அந்த தலைப்பகுதி தொப்பெனக் கீழே விழுந்தது. அதைக்கண்டு அதிர்ந்த மனம் மறுகணம் உறைந்து போனது.

இவ்வாறாக எண்ணற்ற வலிநிறைந்த அனுபவங்கள் ஆறாத காயமாய், அணையாத கொதிநெருப்பாய் புதைந்து கிடக்கின்றன. அந்த நீண்ட அனுபவத் தொடர்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் என் மனம் ஒரு சிறிது ஆறுதல் அடையக்கூடும் என்றவகையில் நான் கூறும் ஒரு சிறிய பகுதியே இது.

சுமாராக அரைக் கிலோமீற்றர் அகலமும் ஆறு கிலோமிற்றர் நீளமும் கொண்ட முள்ளிவாய்க்கால் மாத்தளன் பகுதிக்குள் மூன்று இலட்சம் வரையான மக்களை முடக்கி நாளாந்தப் படுகொலைகளை அரங்கேற்றிய சிங்கள அரசு இன்று அந்தப் படுகொலைகளை நிகழ்த்திய இராணுவபலத்தை போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்காகத் தமிழர் தேசத்தில் வெற்றிச் சின்னங்களை அமைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. எம்மினத்தை படுகொலைக்கு உள்ளாக்கி இன அழிப்புச் செய்யப்பட்ட அந்தக் காலப்பகுதியை அது தன் இராணுவ வெற்றி நாட்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு நீதிமான்களின் தீர்ப்பு என்ன? நாகரீக உலகின் மனட்சாட்சி கூறும் தீர்ப்பு என்ன? நீதிக்காக ஏங்கி நிற்கிறது தமிழினம்!

‍-பொங்கு தமிழ் இணையத்திற்காக – க.ப.துஸ்யந்தன்

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...