Friday, August 17, 2012

மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களும் மிதக்கும் வெற்றுப் படகுகளும்: பூநகரான் குகதாசன்



“தெளிந்த நீரைக் கொண்ட ஊற்றுத் தான் முதலில் இறைக்கப்படும், உறுதியுடன் நேராக வளர்ந்த மரந்தான் முதலில் வெட்டப்படும்” இதன் படி இலட்சிய உறுதியுடைய பலமான கட்டுக் கோப்பைக் கொண்டிருந்த புலிகள் இயக்கம் வெட்டிச் சாய்க்கப்பட்டு விட்டது.
களத்திலோ தளத்திலோ போராட புலிகள் எவருமில்லை. வழி நடாத்த தளபதிகள் இல்லை. முகாங்களெதிலும் படைகளுமில்லை தலைவனும் இல்லை. ஈழப் போராட்டம் வெற்றுப் படகு போலாகிவிட்டது.
பல கப்பல்களைக் கொண்டிருந்த இயக்கத்தின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. இருந்தாலும் வெற்றுப் படகுகள் பல தாங்கள் போராட்டத்தை தொடர்வதாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருக்கின்றன. ஆக காகித ஓடப் பாட்டை அன்றெழுதிய கலைஞரின் டெல்லிக் கூட்டுத் தயாரிப்பே இந்த டெசோ மகாநாடாகும்.
1983 ஆடி அடியுடன் அரசிற்கு எதிராக போராடப் புறப்பட்ட இதர இயக்கங்கள் எல்லாம் தொடர்ந்து போராடாமலே அரசுடனே சேர்ந்து கொண்டன. அவை புலிகளுடன் தான் பின்னர் போராடிக் கொண்டிருந்தன. திரு பாலகுமாரனும் ஈரோஸ் இயக்கமும் தான் இதற்கு விதி விலக்கு. புலிகள் பலி கொள்ளப்பட்ட பின் எங்சியிருந்த இயக்கங்களும் சோர்ந்து போயின.
புலிகள் தான் தங்களை போராட விடாது தடுக்கிறார்கள் என்ற ஏனைய இயக்கத்தவர்கள் கூட இன்று புலியின் தேவையை உணர்கின்றனர். ஆம், ஈழப் போராட்டப் படகு இன்று வெறுமையாக்கப்பட்டு விட்டது.
தமிழ் ஈழ ஆன்மா மட்டும் சிலரின் சிந்தனைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அந்த உன்னத தமிழர் வாழ்வாதார இலட்சியத்தை மறக்க, கை விட முடியாது வெளிநாடுகளில் பலர் கொடிகளை ஏந்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களையே பேராசிரியர் பீரிஸ் தோல்வியை ஏற்றுக் கொள்ள இயலாத தமிழர்கள் என்று கேலி செய்துள்ளார். இருந்தும் உண்மையதைத் தெரிந்து கொண்டும், இந்தியாவுடன் சேர்ந்து கொண்டு அதோ! கொடி பறக்கிறது, புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்று தங்களது பழைய பரப்புரையை உலகில் தொடர்கின்றார்.
தமிழர்கள் எல்லாம் புலிகளோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் போராட்டம் என்றால் அது புலிகள் தான். அந்தளவு தீரத்துடன் அவர்கள் ஒவ்வொருவரும் போராரடினார்கள். ஒரு காலத்திற்கு பிற்பாடு மன உரம் மிக்கவர்கள் எல்லாம் அந்த இயக்கத்தில் தான் சேர்ந்தனரோ என்னமோ? ஆரம்பத்தில் கூட மனோ வைராக்கியம் மிக்கவர்களைத் தான் அந்த இயக்கமும் உள் வாங்கிக் கொண்டதே என்னமோ? போராட்டம் என்றால் அது புலிகள் தான்.
அதனாற் தான் இதே பீரீஸ் அவர்களுடன் சென்று பேச வேண்டியிருந்தது.  உலகில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருபவை. உலக வரலாற்றின் கடிகார ஊசல் என்றும் வெற்றி தோல்வி என்ற இரு துருவங்களிற்கு இடையிலேயே அசைகிறது.
இந்த அச்சத்தினாலேயோ என்னமோ, இனியும் யாராவது புலிகளிற்கு மாறான நேர் எதிரான வழியிற் போராடினாற் கூட, அவர்களை புலி என்றே முத்திரை குத்துவே இவர்கள் தயாராக நிற்கிறார்கள். ஏனென்றால் புலி என்றால் பயங்கரவாதிகள் என்றே உலகத்திற்கு அவர்கள் உரைத்திருக்கிறார்கள்.
எனவே தான் அவர்கள் தமிழர் தரப்பு நியாயத்தை ஆதரித்த சில வெளிநாட்டவர்களைக் கூட வெள்ளைப் புலி என்றனர். புலி என்றால் இலகுவாக எவரையும் அடக்கலாம் தேவைப்பட்டால் அழிக்கலாம் அடித்துக் கூட அதைச் செய்யலாம். உலகம் அதனைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது.
இனியும், யாராவது உலகம் ஏற்கும் வழியில் ஜனநாயக வழியிற் போராடினாற் கூட அவர்களையும் புலிகள் என்றே இந்தியா கூடக் கூறும். ஏனென்றால் யாரையும் தடுத்து நிறுத்த, தண்டிக்க அவர்களிற்கு புலிகள் என்ற சொல் தேவை. எனவே தான் அது இல்லாத புலிகளின் மீதான தடையை விதித்துள்ளது.
இந்தத் தடையின் பொருள் என்னவெனில் யாரும் இனி தமிழர் உரிமைக்காக எங்கும் போராடக் கூடாது. ஆர்ப்பாட்டங்களை கூட்டங்களை மகாநாடுகளை நடாத்தினாலும் ஈழம் பற்றி மூச்சே விடக் கூடாது.
இது தான் பெரிய தேசமான மகா பாரதத்தின் புலி இயக்கத்தின் மீதான தடை. இது எதிர் காலத்துடனும் தொடர்புடையது. இந்த நிலையில் விடயம் நீதி மன்றத்திற்கு உயர்த்தப்பட்ட போது ஈழம் என்ற சொல்லை நீங்கள் உங்களிற்குள் அரசியல் நடாத்தப் பாவிக்கலாம் ஆனால் மத்திய அரசு ஒரு போதும் ஈழத்தை அனுமதியாது என்று மத்திய இந்திய அரசு ஈற்றில் மீண்டும் உரைத்துள்ளது.
இதன் பொருள் யாதெனில் ஈழ வேட்கை தமிழரிடமுண்டு. ஆனால் ஈழத்தை எங்களால் அனுமதிக்க இயலாது. இருந்தாலும் கொதிக்கும் தமிழர்களின் மனத் திருப்திக்காக, அவர்கள் அமைதியடைய, குழப்பங்கள் மற்றும் உண்மையான விடுதலைப் போராட்டங்கள் முளைப்பதைத் தவிர்க்க, யாராவது அரசியல்வாதிகள் ஈழம், ஈழ ஆதரவு, தமிழ், நாடு, அரசு என்று பெயர்களையும் கோஜங்களையும் போட்டு தங்கள் ஆதரவை பெருக்க, கூட்டம் சேர்க்க ஈழம் என்ற சொல்லைப் தாராமாகப் பாவிக்கலாம் என்று தான் இந்தியா கூறியுள்ளது.
கொதிக்கும் தமிழ் நெஞ்சங்களை அடக்கி சாந்தபப்படுத்தும் கலைஞரிற்கு மத்திய அரசு நன்றி கூடக் கூறலாம். இது தான் வெளிநாடுகளிலும் நடைபெறுகிறது. நாங்கள் புலிகளைத் தடை செய்துள்ளோம். ஆசைப்பட்டால் கொடிகளை நீங்கள் பிடிக்கலாம் ஆனால் புலித் தடை அது கேட்கும் பிரிவிணைத் தடைகள் போன்றன நீடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் உங்கள் ஆசையை விருப்பத்தை கருத்துக்களை வெளிக்காட்டி விட்டு நீங்கள் நிம்மதியாக வீடு சென்று உறங்கலாம் என்று தான் மேற்குலக அரசுகளும் உள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை அதுவும் புலிகள் தடையை நீடித்துள்ளது.
எங்களது தூதரகத்திற்கு முன்பாக யாரும் வந்து எப்படியும் எவ்வளவு காலமும் எத்தனை தடவைகள் எத்தனை ஆயிரம் பேர் வந்தும் ஆரப்பாட்டம் செய்யலாம். அது உங்கள் சுதந்திரம். ஆனால் நாங்கள் புலிகளைத் தடை செய்திருக்கிறோம். எனவே நீங்கள் தெருவிலேயே நின்று விட்டு நீங்கள் போகலாம். ஆனால் எதுவும் நடவாது என்று தான் அமெரிக்காவும் எண்ணுகிறது. இத்தகைய உண்மை நிலைமைகளை நாங்கள் உணர வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, உண்மையாக நிஜத்தில் ,ஈழப் போராட்டம் எதுவும் இன்று உலகில் எங்கும் யாராலும் முன்னெடுக்கப்படவில்லை. எந்த நாட்டு அரசையும் சந்தியாத சிந்திக்க வைக்காத வெற்று ஆர்ப்பாட்டங்களில் நாம் காலத்தை வீணடிக்கிறோம் என்பதே உண்மை.
எனவே தான் தமிழகத்திலாகட்டும் பிற வெளி நாடுகளிலாகட்டும் அர்த்தமற்று எதவித பெறுபேறுமின்றி தொடரும் ஆரப்பாட்டங்களை வெறுமையானவையாகவே கருத வேண்டியுள்ளது.
அதனாற் தான் அங்கென்று இங்கொன்றாக அவ்வப்போது கூட்டப்படும் ஈழப் போராட்டங்களை வெறும் வெற்றுப் படகுகள் என்கிறேன். எல்லாம் வெறும் பேச்சிற்கும் திருப்திக்கும் தமிழரை இந்தச் சொற்களால் வசப்படுத்தி கூட்டம் சேர்த்து தங்கள் அரசியலை தொடரவுமே ஈழக் கோஜ அரசியலை அநேகர் பாவிக்கின்றனர். சிலர் தெரிந்தும், பலர் தெரியாமலும் இந்தத் தவற்றைத் தொடர்கின்றனர்.
ஈழத்தை தேடும் தமிழகத் தமிழர்கள் கலைஞர் என்னமோ ஈழத் தமிழரிற்காகச் செய்கிறார் என்று நம்பி அமைதி அடைந்து ஈழத்தை நோக்கி ஒரு அடியைக் கூட உண்மையாக எடுத்து வைப்பதைத் தடுக்க மத்திய இந்திய அரசு மேற் கொள்ளும் தந்திரமாகவே இதனை நான் பார்க்கிறேன்.
அதாவது கலைஞரின் டெசோ மநாட்டைத் தடுத்தால், தமிழக மக்கள் சீமான் ,வை கோ போன்றவர்களின் பின்னால் சென்று குழப்பங்களையும் கலகங்களையும் விளைவிக்கலாம் என்ற அச்சத்தில் தான் இந்த டெசோ மாநாட்டை கலைஞர் நடத்த மத்திய அரசு தடை போடாது அனுமதியளித்துள்ளது.
இது ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் ஆடப்பட்ட ஒரு மாநில மத்திக் கூட்டு நாடகம். செல்வி ஜெயலலிதா இறுக்கமாகவும் ,விவேகமாகவும் இலங்கைப் பிரச்சனையைக் கையாள்வதால், குறிப்பாக சிறீ லங்கா சென்று வந்த இந்திய அதிகாரியைச் சந்திக்க மறுத்தமை மற்றும் இந்திய பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்காமை போன்ற காரணஙகளினால் விசனமடைந்துள்ள மத்திய அரசின் கபடச் செயல் இது.
இலங்கைத் தமிழர் விடயத்தில் எள்ளளவும் விட்டுக் கொடாமல் நடந்த ஜெயலலிதாவின் கையிலிருந்து தமிழர் விவகாரத்தை பறித்து கலைஞரிடம் தள்ளிவிட ஆடப்படும் ஆரியக் கூத்து இது. இதனை நாங்களும் புரியவில்லை அங்கே கொழும்பில் கலைஞரின் கொடும்பாவியை எரித்தவர்களும் புரியவில்லை.
தமிழராகிய நமது நோக்கமோ ஜெயா அம்மாவையும், அப்பா கருணாநிதியையும் உள்ளடக்கி உலகளாவிய ரீதியில் ஒரு பரந்து பட்ட டெசோ போன்ற ஒரு ஜனநாயக உலக தமிழ் வலைப்பின்னலை அமைப்பதாக இருக்க வேண்டும். முடிவெடுக்கும் அதிகாரங்களை புத்திஜீவிகளிடமும் விட்டு விட்டு இந்த இரண்டு தலைமைகளையும் வெளியேறாது பார்த்துக் கொண்டால் அது இன நலன் மிக்க நகர்வாக அமையலாம்.
இதனை மனதிற் கொண்டே, இங்கு கனடாவில் ராதிகா அவர்கள் கனடாப் பாராளுமன்றத்திற்கு தெரிவான போது உலகளாவிய தமிழர் ஜனநாயக வலைப்பின்னல் ஒன்றை வலியுறுத்தியிருந்தேன். அவ்வாறான ஒரு அமைப்பால் இலகுவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ நா வைச் சென்றடைய வைக்க இயலும் என்றே இன்றும் நம்புகிறேன்.
உண்மையான உறுதியான ஈழப் போராட்டம் என்பது புலிகளுடன் முள்ளி வாய்க்காலுள் ஆழத் தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. அதனை உறுதியற்று செய்த இயக்கங்களை இரண்டு அரசுகளும் உயிருடன் விட்டுள்ளன.
இலட்சியத்தை கை விடவே மாட்டோம் என்ற இயக்கத்தை இரணடு அரசுகளும் கூட்டுச் சேர்ந்து அழித்து விட்டன. அதற்காக அவை தொடர்ச்சியாக கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்து வந்தன. அரசியலாகவும் ஆசைக்காகவுமே தேவை என்பதாலுமே பலரும் ஈழப் போராட்டக் கப்பலை கடலில் விடுகின்றனர்.
அவை வெறும் தீர்மானங்கள் எழுதப்பட்ட காகித ஓடங்களாக, பலமானதாக இல்லாது போனாலும் உறுதியானதாக உண்மையானதாக இவை அமையாமையினாலேயே இவற்றை மிதக்கும் வெற்றுப்படகுகள் என்கிறேன். இந்தக் காகிதக் கப்பல்களை கடல் நடுவே விடுபவர்களிடமே எந்த நம்பிக்கையும் அறவே கிடையாது.
ஆனால் புலிகளிடம் அதிக நம்பிக்கை இருந்தது. அந்த எல்லை மீறிய அதீத அபார நம்பிக்கைகள் தமிழர் மனங்களில் மிகவும் ஆழமாகப் பதிந்து விட்டதானாலேயே புலிகள் வருவார்கள் என்று இன்னொரு சாரார் காத்துக் கொண்டு கரையில் நிற்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் விடும் காகித வெற்றுக் கப்பல்களே இந்த ஈழக் கோஜங்கள்.
இவை உண்மையும் உறுதியுமற்றவை என்றாலும் சிங்க அரசுகள் இவற்றை பெரிதாக்கி புலிகள் என்பர். இதன் மூலம் உலகத்திடமிருந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பை அனனியப்படுத்தவே சம்பந்தரது உருவத்தையும் சேர்த்து எரித்தனர்.
எனவே தான் சிறீ லங்கா தவிர்ந்த இந்தியா அடங்கலான அரசுகள் மறுக்க இயலாத வகையில் ஒரு உலகாளவிய தமிழர் ஜனநாயக அமைப்பின் தேவை உணரப்பட வேண்டியதாகிறது. அங்கு இயலுமான அளவு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஐ நா சாசனம் மற்றும் மனித உரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்வது பற்றி ஏற்கனவே உள்ள அமைப்புக்கள் சிந்தித்தால் அது இனப் பாதுகாப்பானதான மாற்ற மடையலாம்.
தமிழக உள்ளக கட்சி அரசியலைத் தாண்டி கலைஞர் மற்றும் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை பெயரளவிலாவது உள்ளடக்கிய ஒரு பொது தமிழர் ஜனநாயக அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தினாவது அதற்கு ஒரு பெறுமதியும் கணதியும் இருக்கும். இல்லாவிடின் திமுக அதிமுக போட்டியை மத்திய அரசே பாவித்து தனது தேவைகளை நிறை வேற்றிக் கொள்வது தொடரும்.
இதை விடுத்து, அங்கென்று இங்கொன்றாக வெற்று ஓடங்களை காட்சிக்கு மிதக்க விடுவதில் அர்த்தமில்லை. இதனை அறிஞர் கலைஞரே வருமாறு கூறியுள்ளார். அவர் டெசோ மாநாடு வெற்றி என அறிவித்துள்ளார்.
அங்கு நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒன்று கூட அமுலாகாத நிலையில் அவர் மாநாடு வெற்றி என்றால் அதன் பொருள் என்ன? தீர்மானம் நிறைவேறுமோ இல்லையோ மக்களை கூட்டி ஒரு மாநாடு நடாத்திவிட வேண்டுமஎன்பதிலேயே அவர் குறியாக இருந்தள்ளார் என்றே கணிக்க வேண்டியுள்ளது. ஜெயலலிதாவின் ஆதரவை குறைத்து விட வேண்டும் என்ற அந்த நோக்கம் நிறைவேறியுள்ளதால் அது தனக்கு வெற்றி என அறிவித்துள்ளார்.
அங்கு வநதிருந்த ஒரு பேச்சாளி 1944 இல் ஜே. ஆர் பிரதமாராக இருந்தார் என்று மேடையில் பேசினார். 13 வது திருத்தச் சட்டத்தின் வலுவின்மை பற்றி கருணாநிதியோ கனிமொழியோ அறிந்திருக்கவில்லை.
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரின் உரையைக் கூட யாரும் இவர்களிற்கு அனுப்பி வைக்கவில்லை. இதனாற் தான் ஒரு பொது உலக அமைப்பு வேண்டும் என்கிறேன். இந்தக் கனிமொழி 13 வது சட்டம் வலுவற்றது என்பதற்கு ஒரு காரணத்தையாவது கூறும்படி கேட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது என்றால் இவர்களால் எவ்வாறு சிக்கலான நமது தமிழர் பிரச்சைனயை புரிந்து கையாண்டு தீர்வைப் பெற்றுத் தர இயலும்?
இதில் அவ்வப்போது நடப்பவற்றை அங்காங்கே உலகெலாம் தெரிவிக்க ஒரு அமைப்பும் நம்மிடமும் இல்லை. உலகத் தமிழரிடையே ஒருங்கிணைப்பும் இல்லை. ஒன்றிற்கும் மற்றதிற்கும் தொடர்பும் இல்லை.
இது தீவிற்கு வெளியே ஒரு பாரிய ஜனநாயக வலைப்பின்னலின் அவசியத்தையும் தேவையையும் உணர்த்தி நிற்கின்றது எனலாம். இது கடினமாக போதும் சாத்தியமானதே. பண்டார வன்னியனின் கற்சிலைமடு வரை புத்தர் சிலை வைப்பது ஒரு திட்ட மிட்ட இன வரலாற்று ஆதார அழிப்பின் வெளிப்பாடே.
இதனை ஒரு முழுமையான இன அழிப்பெனலாம். பாலஸ்தீனம் அபகரிக்கப்பட்ட அதே பாணியில் தொடரும் நில இன அழிப்புக்களை தடுப்பது மிகவும் கடினம். அதற்காக எதையாவது செய்து பலனை பெற வேண்டுமானால் உலக அனவிலான ஜனநாயக மனித உரிமை விடயங்கள் மட்டும் முன் வைக்கப்பட்டு ஒரு உலகளாவிய தமிழர் அமைப்பு அதனை முன்னெடுக்க வேண்டும்.
இதற்கான மாற்றங்களையும் முயற்சிகளையும் வெளிநாடுகளில் உள்ள மிதவாத அமைப்புக்களே தொடங்க முடியும். இல்லாவிடின் ஆங்காங்கே தொடர்டபுகள் எதவுமற்ற வெற்றுப் படகுகளே மிதந்து கொண்டிருக்கும். அதை யாரும் மூழ்கடிக்கவும் முயலமாட்டார்கள் எனென்றால் அங்கு நிறைந்திருப்பது வெறுமை மட்டுமே. தமிழ் இனி மெல்ல அல்ல, விரைந்தே புலிகளின் கப்பல்கள் போல் மூழ்கடிக்கப்படும்.

Thursday, August 16, 2012

வீழ்ச்சியின் விளிம்பில் டாமின்நிறுவனம்

Source: www.dinamani.com

சென்னை, ஆக. 15: "டாமின்' எனப்படும் தமிழ்நாடு கனிம நிறுவனம் இப்போது மோசமான நிலையில் இருப்பதற்கு குவாரிகளில் கல் எடுக்க தனியாரை அனுமதிப்பதே காரணம் என்று டாமின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
முறைகேடாக கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ. 16,000 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இப்போது மதுரையில் செயல்பட்டு வந்த சில தனியார் கிரானைட் நிறுவனங்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளிலும் தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்கள் வெளிவருவதற்கான வாய்ப்புள்ளது.
இவ்வளவு பெரிய முறைகேடு அதிகாரிகளுக்கும் அந்தப் பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் நடந்திருக்குமா என்பதே பல்வேறு மக்களின் கேள்வியாக உள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள் மீது மட்டுமல்லாமல், இதற்கு துணைபோன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் விசாரிக்க வேண்டும் என்று டாமின் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு கனிம நிறுவனம்: தமிழகத்தில் இயற்கையாக கிடைக்கும் கனிம வளங்களை வெட்டியெடுத்து விற்பனை செய்ய தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) 1979-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.
அரசு புறம்போக்கு நிலங்களில் கிடைக்கும் கனிமங்களை வெட்டியெடுத்து விற்பனை செய்வதே இந்த நிறுவனத்தின் பணி. டாமின் நிறுவனத்தின் முக்கிய வருவாயாக கிரானைட் கற்கள் உள்ளன. அதன்பிறகு கிராஃபைட், மைகா உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன.
ஒருகாலத்தில் கனிமங்களை வெட்டியெடுத்து டாமின் நிறுவனமே விற்பனை செய்து வந்தது. இதன்காரணமாக அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது பெரும்பாலான கிரானைட் குவாரிகளில் வெட்டியெடுக்க தனியாருக்கு ஒப்பந்த முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது.
முறைகேடு நடந்த விதம்: டாமின் கிரானைட் குவாரிகள் இரண்டு வகைகளில் தனியாருக்கு ஒப்பந்தம் மூலம் அளிக்கப்படும், கற்களை எடுத்து டாமின் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொன்று, கற்களை எடுத்து தாங்களே விற்பனை செய்வது. வெட்டியெடுக்கப்படும் கற்களுக்கு முறைகேடான கணக்கு எழுதுவது போன்ற வகையில் இந்த முறைகேடு நடந்து வருகிறது.
இப்படி வெட்டியெடுக்க நவீன கருவிகள் தேவைப்படுகின்றன. இந்த கருவிகளை அரசு வாங்கித்தர தவறியதால், ஒப்பந்தம் எடுத்தவரிடமே கருவிகளை வாடகைக்கு வாங்கித்தான் டாமின் நிறுவனம் செயல்படுகிறது. இதனால் பெரும் செலவு ஏற்படுகிறது.
மேலும், டாமின் குவாரிகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலேயே தனியார் கிரானைட் நிறுவனங்கள் தங்கள் குவாரிகளை அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் டாமின் குவாரிகளில் இருந்து முறைகேடாக கற்களை வெட்டியெடுத்து தங்கள் குவாரிகளில் எடுக்கப்பட்டது போன்று கணக்கு எழுதி வருகின்றனர்.
இந்த முறைகேடுகள் அனைத்தும் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடப்பதாகவும், இதனை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும், மதுரை மட்டுமல்லாமல் விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளிலும் இதே நிலைமைதான் என்றும் டாமின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கனிம நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் கே. விஜயன் கூறியது: "டாமின் நிறுவனத்தில் கட்டாய ஆள்குறைப்பு செய்யப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சில புதிய ஊழியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் வாரிசு வேலை மூலம் பணியில் சேர்ந்தவர்கள். இப்போது டாமின் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
மேலும் டாமின் நிறுவனம் நவீன இயந்திரங்கள் இல்லாமல் தவிக்கிறது. இதனைப் பயன்படுத்தி, வாடகைக்கு இயந்திரங்கள் வழங்குபவர்கள், இயந்திரங்களை இயக்காமலேயே இயக்கியதாக கணக்கு எழுதுகின்றனர்.
எல்லாம் தனியாருக்கு... அதிகரித்துள்ள ஊழலால் டாமின் தள்ளாடும் நிலையில் உள்ளது. கிரானைட் முழுவதும் வெட்டியெடுக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே டாமின் நிறுவனத்திடம் உள்ளன. மற்ற குவாரிகள் அனைத்தும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கிரானைட் நிறுவனங்கள் அபார வளர்ச்சியடைந்துள்ளன. கிரானைட் குவாரிகள் மூலம் தனியார் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும்போது, டாமின் நிறுவனத்தாலும் லாபகரமாக செயல்படமுடியும். டாமின் நிறுவனத்தை மீட்டால், அரசுக்கு அன்னிய செலாவணி கிடைக்கும். இதற்கு முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டாமின் நிறுவனம் மீண்டும் லாபகரமாகச் செயல்படவேண்டும் என்றால், தனியார் ஒப்பந்த முறையில் குவாரிகள் நடத்த அனுமதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். டாமினுக்கு தேவையான ஆள்களை நியமித்து, நவீன இயந்திரங்கள் வாங்க வேண்டும். இந்த இயந்திரங்களை அரசே வாங்கித்தர வேண்டும். புவியியல் துறையுடன் இணைந்து டாமின் செயல்படவேண்டும்.
முறைகேட்டுக்கு துணைபோன அனைத்து அதிகாரிகளையும், இதுவரை ஒப்பந்த முறையில் குவாரிகளை நடத்தியவர்களையும் விசாரணைக்குள் கொண்டுவர வேண்டும்', என்றார் விஜயன்.
இது தொடர்பாக டாமின் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

Thursday, August 9, 2012

டெசோ மாநாடு - கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்


மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,
நான் ஈழத்திலிருந்து தமிழ் அகதி ஒருவன் எழுதுகின்றேன். எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் துன்பத்திலும்துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.
எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறதுதள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே!
தங்களுக்கு நிகர் தாங்களே தான்.
கந்தக வெடிப்பில் உடல் சிதறசெங்கழுநீர் வன்னி மண்ணில் காட்டாறாக ஓடஎம்மவர் உயிர்கள் இடம்பெயர்ந்து பறக்க - இந்த அவலங்கள் கண்டு துடிதுடித்தெழுந்து நீங்கள் சுழற்றிய வாளின் வீச்சு கண்டு திகைத்துத்தான் போய்விட்டோம் ஒரு போது.
உலகத்தமிழரின் தலைவனாக முடி தரித்துசெங்கோல் ஏந்தி அரியாசனத்தில் வீற்றிருக்க தங்களை விட்டால் யாருக்கு தகுதி இங்கு உண்டு.
காலைச் சிற்றுண்டிக்கும் மதியபோசனத்திற்கும் இடையே நீங்கள் இருந்த சாகும்வரை உண்ணாவிரதம்” சரித்திரத்தில்பிளாட்டினம்’ எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. எமது வரலாற்றாசிரியர்களின் எழுது கோலை சாணை” கொண்டு தீட்டி கூர்மையாக வைத்திருக்க வேண்டும். உங்களின் வரலாறு கூர்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முனை மழுங்கிய எழுத்தாணி;கள் தங்கள் பிளாட்டினக் காலவரலாற்றைச் சேதப்படுத்தி விடக் கூடாதல்லவாதமிழின உணர்வாளர்களுக்கு ஒரு முன்னோடி தாங்கள். திராவிட பாரம்பரியத்தின் பெருமையினையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முன்னோடிகளில் இன்றுவரை உயிரோடிருப்பவர் நீங்கள் மட்டும் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய எம் மொழியின் தொன்மைச்சிறப்புக்களை,அம்மொழியின் மூத்த குடிகளின் சீரார்ந்த  வாழ்வின் பண்பாடுகளை உங்கள் எழுத்து மூலமும் பேச்சுக்கள் மூலமும் முரசறைந்து நிறுவியவர் தாங்கள். தமிழுக்குள்ளே அதன் முறையான பிரயோகங்களிலே எத்துணை அழகும் இனிமையும் இருக்கிறது என்று எடுத்துக் காட்டியவர் தாங்கள்.
தமிழ் கொஞ்சும்;
தமிழ் ஆனந்தம் பாடும்;
தமிழ் காதல் செய்யும்;
தமிழ் கோபப்படும்;
தமிழ் இரங்கும்;;
பொங்கும்நெருப்பாய் மாறும்சுவாலையாய் எரிக்கும்எரிமலையாய் வெடிக்கும்தீமையைப் பொசுக்கும்.
இவற்றைத் தங்களின் தமிழ் பிரயோகங்களிலிருந்து நாமறிந்தது. தமிழின் பெயரால் கம்பனைஇளங்கோவைபாரதியை நாமறிந்ததை விட கருணாநிதியை நாம் அறிந்தது அதிகம்.
தந்தையின் கையைப் பிடித்து தளர் நடையில் ஆரம்பப்பள்ளி  சென்று ,’ எழுதிப் பழகும் காலத்திலே இலங்கை வானொலியில் மனோகாரா’ திரைப்படத்தின் வசனங்களைக் கேட்டவன் நான். அப்போது ஏதும் புரியாத போதும் தமிழின் மீது தீராக் காதல் கொண்ட எந்தையும் தாயும் மனோகரா திரை வசனத்தைச் சிம்மக் குரலோனின் கர்ச்சனையில்கேட்டு அதை சிலாகித்துப் பேசும் போது கருணாநிதி” எனும் பெயரை காதுகளில் வாங்கியவன் நான்.
காலவேகத்தில்விபரம் அறியும் வயதின்போது நானும்’ என்னைப் பெற்றவர்கள் போல் மெய்மறந்து நின்றது உண்டுதங்கள் வசனங்களைக் கேட்டு.
வெளிப்படையாகச் சொல்வதானால் தங்களது தமிழைக் கேட்டே தமிழ் மீது காதல்’ கொண்டவன் நான்.
தமிழுக்கும் தமிழருக்கும் ஒரே தலைவன் கருணாநிதி’ தான் என என்னளவில் நம்பவும்மற்றவர்க்கு நம்பிக்கையூட்டவும் என்னை முனையச் செய்தது தங்களது தமிழ் தான். தங்கள் மீது கொண்ட பற்றினால் தங்கள் கண்களை அலங்கரிக்கும்(?)விழிக்கண்ணாடி போன்றதொன்றை தந்தையைச் சிரமப்படுத்தி அங்காடிகளில் அலையவிட்டு வாங்கி வைத்திருந்தவன் நான்.
பெரியவனாகி திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றபோதும் - அந்தக் கண்ணாடி மட்டும் புது மெருகு மாறாமல் என் பொக்கிசப்பெட்டியில்பெறுமதியான பேழையொன்றில் தனி சாம்ராஜ்யத்தையே நடாத்திக்கொண்டிருந்தது.
எனது குழந்தைகளுக்குக் கூட அந்தக் விழிக்கண்ணாடியையும்தங்களது புகைப்படத்தையும்சந்தர்ப்பம் கிடைக்கும் போது வர்ணத்தொலைக்காட்சியில் (இலவசமாகக் கிடைத்தது அல்ல) வரும் தங்கள் பிரதிமைகளையும் காட்டி திரைப்படங்களையும் காட்டி கருணாநிதி’ புகழ்பாட தவறியவனல்ல நான்.
அந்த கறுப்புக்கண்ணாடி போர் இடப்பெயர்வுகளின் போது தொலைந்து போனது என் பொக்கிசங்களைப் போலவேஎனதும் என் இனத்தினதும் கனவுகள் போலவே...!!
எனது பொக்கிசங்கள் தொலைந்ததற்கும்எம் கனவுகள் அழிந்ததற்கும் இன்றுவரை இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன் - விழிக்கண்ணாடி தொலைத்ததற்கு அல்ல. தொலைந்தவற்றை இன்றும் தேடுகின்றேன். கறுப்புக்” கண்ணாடியையும் கூட. என்ன முரண்நகையாகத் தெரிகிறதா?
ஒருவேளை எனது தேடுதல் வேட்டையின் போது அந்தக் கண்ணாடி’ கண்டுபிடிக்கப்பட்டால்......... மீண்டும் பாதுகாக்க மாட்டேன். மாறாக என் காலில் போட்டு மிதித்து உடைப்பேன். உடைந்த அந்தத் துகள்களை ஒரு பொலித்தீன் பையிலிட்டு எனது வீட்டு வரவேற்பறையில் வைப்பேன்துரோகச்சின்னமாக.
ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை நிர்மூலமாக்கிய துரோகத்தின் அடையாளம் அது.
நம்பிய ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்தி குப்புறச் சாய்த்த சுயநல வெறியின் அடையாளம்! காப்பாற்றுங்கள்’ என அவலக் குரலெடுத்துக் கதறி அபயம் கேட்டு நீட்டிய கைகளை குறுகத் தறித்தெறிந்த அரசியற் துரோகத்தின் அடையாளம்!
அண்ணாவை விடராஜாஜியை விடகாமராஜரை விட உண்மையில் தாங்கள் பெரும் புத்திசாலி தான்.
பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். வங்கி இருப்பில் சேமிப்பேதும் இல்லாமல் செத்துத் தொலைத்தவர்கள் அவர்கள். கருணாநிதியின் சாதுரியம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்களது சந்ததியினர் இன்று கோடிகளில் புரண்டிருப்பார்கள்தங்களது சந்ததியினரைப் போலவே.
8ஆம் வகுப்புக் கல்வியையே இடைநடுவில் முறித்துக் கொண்டுதற்குறியாக இரயில் (அல்லது பேரூந்து) கட்டணத்தை மட்டுமே சட்டைப்பையில் கொண்டு, ‘பெரியாரின்’ முகாமுக்குத் தொண்டனாக வந்து, - இன்று பல்லாயிரம் கோடி ரூபா மோசடி ஊழலில் பெயர் அடிபடும் அளவுக்கு உயர்ந்து விட்ட உங்கள் தமிழ்ப்பணி” அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. உண்மையிலேயே தாங்கள் மேதாவி தான்.
நீங்கள் கொண்ட இலட்சியத்தை அடைந்து விட்டீர்கள் இனியுமென்ன நாடகம்இனியும் ஏன் வேசங்கள்உலகளந்த பெருமாளுக்கும்உலக நாயகனுக்கும் ஆகக்கூடியது பத்து அவதாரங்கள் தான். ஆனால் தங்களுக்கு….
எத்தனை முகங்கள்?
மாநில அரசியலில்மத்திய அரசியலில்குடும்ப அரசியலில்வர்த்தக அரசியலில்புலம்பெயர் ஈழத்தவர் அரசியலில்சினிமா அரசியலில்சுயமரியாதை அரசியலில்ஆன்மீக அரசியலில்சிறை அரசியலில்ஊழல் அரசியலில்ஊடக அரசியலில் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். போயின் பக்கங்களும் போதாதுஎனது ஞாபகசக்தியும் போதாது. இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடானமுரண்நகையுள்ள அவதாரங்கள் அவற்றுக்கு பூசிய அரிதாரங்கள்.
இந்த அரிதாரங்கள் நாட்பட்டுகலைந்து வழிந்து நாற்றமும் வீசத் தொடங்கியதின் பின்பும்மீண்டும் நீங்கள் கதாயுதத்துடன் மேடையேற இந்தத் தள்ளதா வயதிலும் நினைப்பது தான் சற்றும் இரசிக்க முடியாமல் உள்ளது.
உங்கள் அவதாரம் கலைந்து போனது ஈழத்தமிழனின் குருதியிலே’ என்பதை நாமுணர்ந்து பல காலமாகி விட்டது.
உங்கள் கூத்து மேடை சரிந்து போனது எங்களது சாவிலே’ என்பதைத் தாங்கள் உணர இன்னும் வெகுகாலம் பிடிக்குமோ?
விடுதலைப் புலிகளை ஆதரிக்கமாட்டேன்ஆனால் தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்” என்று தாங்கள் கூறியபோது,அதிலுள்ள முரண்நகையை தங்கள் மீது கொண்டிருந்த அபிமானம்எம் புலனுணர்வுக்கு மறைத்து விட்டது.
தமிழ்ச்செல்வனின் சாவிற்கு நீங்கள் வரைந்த கவியாஞ்சலிஅதற்கு நாம் இசைப்பாடல் வடிவத்தை ரி.எல்.மகாராஜன் குரலில் வழங்கிபட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கச் செய்து மெய்யுருகிக் கண்ணீர் விட்டோமே…. அப்பொழுதும் நாம் தங்களின் முடைநாற்ற அரிதாரப்பூச்சுக்களைக் கண்டுபிடிக்கவில்லை நாம்.
காலை உணவு அருந்தி விட்டுஅண்ணா சிலையடியில் திடீரென நீங்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்ஏற்கனவே எம் இதய வாயிலருகில் வீற்றிருந்த உங்களை இதய கர்ப்பக்கிரகத்துக்குள்ளே உங்களை குடியமரச் செய்தது. அந்தப்புரம்” உட்பட தங்களது சகல பரிவாரங்களும்  குளிரூட்டி பொருத்திய சொகுசு பெருவாகனத்துடன் தங்கள் சாவைக் காணக் கால்கடுக்கக் காத்திருக்கும் செய்தி எம்மை உருக வைத்தது.
எறிகணைகளுக்கும்விமானக்குண்டுகளுக்கும்சீறிவரும் கனரகத் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் அஞ்சி குழந்தை குட்டிகளோடு எம்முடன் இடம்பெயர்ந்து கூடவே வந்த ஆட்டுக்குட்டிநாய் போன்றவற்றையும் அருகிலே வைத்துக் கொண்டு பதுங்கு குழிக்குள் நாமிருந்த வேளைகாற்றிலே கலந்து வந்த செய்தி தான் தாங்கள் எடுத்த உண்ணாவிரத அவதாரம்.
சக்தியிழந்து செயலற்றிருந்த மின்கலங்களுக்கு பற்களால் கடித்தும்கற்களால் தட்டியும் அவற்றின் உருளை வடிவத்துக்கு நவீன சிற்பங்களைப் போல வினோதமான நெளிந்த வடிவங்கள் கொடுத்துசற்று உசுப்பி அவை மூலம் வானொலியில் வரும் தங்கள் செய்திக்காக செவிமடுத்துக் காத்திருந்தவேளை ஏதாவது நடக்கும்” “நல்ல செய்தி வரும்” “எம்மை காப்பார் உலகத் தமிழர் தலைவர்” என நம்பிக்கையுடன் நாம் காத்திருந்த வேளை....
வந்ததையா நற்செய்தி! காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடந்த மிகத் தீவிரமான சாகும் வரையான உண்ணாவிரதப் போருக்கு மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உருவிலே வந்தது தீர்வொன்று.
கனரக ஆயுதப்பாவனை நிறுத்தம்” “போர் நிறுத்தம்” “இனி ஈழத்தமிழர் வாழ்வில் விடிவு
தமிழக முதலமைச்சரின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு
பலவீனமான மின்கலத்தால் முனுமுனுப்பாகக் கேட்ட வானொலியின் அறிப்பில் கூட திடீரென சக்தி கூடியதான  உணர்வு எமக்கு வெற்றி....வெற்றி..... தமிழர் தலைவன் கருணாநிதி எம்மைக் காப்பாற்றி விட்டார்.
குதூகலத்துடன்  கூவியபடி குஞ்சு குருமான்களுடன் பதுங்குகுழியிலிருந்து  பாய்ந்து வெளியே வந்தோம். 
ஆடவேண்டும்...... பாடவேண்டும்...... மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள......
வந்ததையா எறிகணைகள்.....
கொள்ளை கொண்டு போனதையா எம்மவர் உயிர்களை.
தொடர்ந்தும் இந்திய வனொலியில்  கருணாநிதி ஈழத்தமிழரைக் காத்து அருள்பாலிக்க  வந்த தேவதை.  வெற்றி வாகை சூடி  ஈழத்தமிழர் தலையிலே முடி சூட வந்த கருணைக்கடல்.
இப்படியாக......... இப்படியாக......... தொடர் புகழாரங்கள்!
நாம் கண்ணீரில் மிதந்தோம்இந்த நயவஞ்சகத்தை எதிர்த்துக் கருணாநிதி எனும் வீரத்தலைவன் தன் போர்க்;கலத்தைத் தூக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தோம்.
அன்றைய தினம் மட்டும் காவு கொள்ளப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேலாகும். 
ஆனால் அவ்வளவு தான்.
நம்பிக்கை கானல் நீரானது. கருணாநிதியின் முடிவு - மத்திய அரசின் முடிவைச் சார்ந்ததே என்றானது. ஆவியே வெந்து போனது.
எம்மால் என்ன செய்ய முடியும்?
கருணாநிதி நினைத்திருந்தால்மத்திய அரசில் அவரது கட்சிக்கிருந்த பலத்தைக் கொண்டு ஈழத்தமிழரைக் காத்திருக்கலாம்.
அவர் தம் வாழ்வியல் உரிமைக்கான அரசியல் வேணவாவைப் பேணி இருக்கலாம். எம்மைக் காக்கும் கவசமாக தமிழ் நாட்டையே மாற்றி இருக்கலாம்.
எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. தமிழகம் தொப்புள் கொடி உறவு. கருணாநிதி அதன் முதலமைச்சர். அவரது தலைமையில் எம்மை மீட்க தமிழகம் திரளும். எம்மைக் காத்து அணைத்து ஆறுதல் சொல்ல ஓடோடி வருவார் உலகத் தமிழர் தலைவன்” என இன்னும் நம்பினோம். அவரது மௌனம்எம்மைக் காக்கும் இராஜதந்திரமாக இருக்கலாம் எனும் ஒர் நப்பாசை.
ஓடினோம்ஓடினோம்வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினோம்.” அந்த ஓரம் தான் முள்ளி வாய்க்கால் கடல் - ஒரம்’.பாராசக்தியின் பார்வதிக்காவது நியாயம் கேட்க குணசேகரன் என்ற அண்ணன் இருந்தான். அவன் பக்கம் பக்கமாக வசனம் பேச நீதிமன்றமும் இருந்தது. கேட்க நீதியரசரும் இருந்தார்.
எனினும் எமக்கு...?
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா…..  ‘செந்நீரால்;;’ காத்தோம்..... கருகத் திருவுளமோ….”
ஏக்கத்துடன் வங்கக்கடலின் வானம் தொடு எல்லையைஅந்த நீண்ட விளிம்பைப் பார்த்திருந்தோம். ஏமாற்றம்! எம்மைக் காக்க எவரும் வரவில்லை. எம் குரல் கேட்கவும் எந்த நீதிமன்றமும் தயாராக இருக்கவில்லை.
356 என்ற சட்டப் பிரிவின் மீதான பயமா இது?
கலைஞரே! உங்களது சிலவருட பதவி நாற்காலிகளைப்  பாதுகாப்பதற்காக ஒரு தேசிய இனத்தின் அழிவுக்குத் துணை போக உங்களால் எப்படி முடிந்தது?
அன்று பதவிகளைத் தூக்கி எறிந்து இந்திய அரசுக்குப் பாடம் புகட்டி எம்மைக் காத்திருந்தால்  இன்று நீர் அல்லவோ உலகத் தமிழர் தலைவர். இப்படி அவமானகரமான தோல்விகளையும் இனத்துரோகி என்ற அவப்பெயரையும் சந்திக்க நேர்ந்திராது அல்லவா!
ஆட்சிக் கதிரையை மட்டுமல்லஎதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதி நிலையையே இழக்க வேண்டிய அவலநிலை வந்திராது அல்லவா?
தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க என்ற புரட்சிக்கட்சிஇத்துணை தாழ் நிலைக்கு என்றுமே சென்றதில்லை.
தானாடாது விட்டாலும் தன் தசை ஆடுமாமே…’ வன்னிமண்ணின் இடப்பெயர்வு அவலங்கள் காணொளி இறுவெட்டுக்களாகத் தமிழ்நாட்டை அடைந்த போது தமிழகமே பொங்கி எழுந்ததாமே!
அப்போதும் கூட உங்கள் கண்ணில் கூட ஈரக்கசிவு ஏற்பட்டதாமே…?
அப்போதும் கூடத் தங்கள் கபட மூளை அந்த உணர்வெழுச்சிகளை உங்கள் குடும்பஅரசியல் நலன்களுக்கான முதலீடுகளாக்கிக் கொண்ட சாமர்த்தியம் வேறு எவருக்கு வரும்?
கல்விச்சமூகம்சினிமாத்துறைதொழில்துறைகள் எனப் பல்வேறு தரப்பட்டத் தமிழ்நாட்டு உறவுகளின் உண்மையான அக்கறையைக் கையாளஅவர்களின் பிரதிநிதியாக மீண்டும் ஒரு அரிதாரப்பூச்சு.
பதவி விலகல் கடித நாடகங்கள்.
கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்ட நாடகங்கள்.
இப்படி எத்தனை..... எத்தனை…..?
முத்துக்குமாரன் முதலானோரின் அக்கினிச் சங்கமங்கள் கூட உங்கள் அரசியல் கபட நாடகத்துக்கு உரமாக்கப்பட்டன. இத்தனை போராட்டங்களும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு விடிவினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக மத்திய அரசில் கருணாநிதியின் அரசியல் சார்ந்த சலுகைகளையே வென்றுகொடுத்தன. சில வருடங்கள் ஆட்சியையும் தாக்குப்பிடித்துத் தக்க வைக்க முடிந்தது.
தங்கள் நாடகங்கள் முடியுமுன்னே பூசிய அரிதாரப்பூச்சுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இன்று சொறிந்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள்.
கட்டபொம்மனுக்கு எட்டப்பன்! பண்டாரவன்னியனுக்குக் காக்கை வன்னியன்! ஈழத்தமிழருக்குக் கருணாநிதியா…?
எம்மை வீழ்த்தும் கூட்டுச்சதிக் கூட்டாளிகளில் தாங்களும் ஒருவன் என்பதை நாம் நன்கு அறிவோம்.
எனினும் அந்தச் சதி அம்பலமானதைப் பூசி மெழுகநீங்கள் சொன்ன காரணங்கள் இருக்கிறதேஅப்பப்பா…. பொய்யின் மொழிப்புலவர் தாங்கள்.
கனிமொழியைச் சிறைக்கூண்டுக்குள் சந்தித்தபோது நா தழுதழுத்ததாமேகண்ணரும் கசிந்ததாமே.
ஊழல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாக்களைக் கபளீகரம் செய்த குற்றச்சாட்டில் அடைக்கப்பட்ட கனிமொழியின் தந்தைக்கு மகளிருந்த கம்பிக்கூண்டு கண்ணீரை வரவழைத்தது என்றால்.....
இங்கே இந்த மண்ணிலே வாழும் உரிமையைக் கேட்டதால் கொத்துக் கொத்தாக மடிந்து போன பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்களில் என்ன வரும்…?
இதை உணராதவர் போல்ஒன்றுமே தெரியாதவர் போல், ‘ஈழத்தமிழர் வீழ்ச்சிக்குச் சகோதர இயக்க மோதல்களே காரணம்என நாம் எப்போதோ மறந்து போனவற்றை இன்று ஞாபகம் வைத்துப் பேசும் முன்னாள்முதல்வர் கருணாநிதி - அந்தச் சோற்றுக்குள்ளே தன் துரோகம் எனும் முழுப்பூசனியை மறைக்க நினைப்பது தான் வேடிக்கையானது.
இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின் அறிவிப்புகள்.
தமிழீழம்
ரெசோ
என்ன இவை....வரலாற்று நாடகங்களா..?
இருபத்தோராம் நூற்றாண்டில் மட்டுமல்ல் இனி வரப்போகும் சில நூற்றாண்டுகளுக்கும் இதுவே பெரும் நகைச்சுவையாக இருக்க முடியும்.
உண்ணாவிரத நாடகத்தைப் போல் ஒரு ரெசோ’ மாநாட்டு நாடகம். உச்சக்கட்டக் காட்சியாக தமிழீழத் தீர்மானம். பரபரப்பாக ஒத்திகை பார்க்கப்பட்ட இந்த நாடகம் எதை இலக்காகக் கொண்டது என்பதை யார் அறியாவிட்டாலும் ஈழத்தமிழர் நாம் அறிவோம். அதனால் நாம் பரபரப்படையவில்லை..... சிலிர்க்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.
உண்ணாவிரத” நாடகத்தில் வந்தது போலவே உச்சக்கட்டக் காட்சி. மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை!
அதே நாடகத்தில் வந்தது போலவே இறுதி முடிவு..... பிசுபிசுப்பு.....! தாங்கள் தமிழீழம் என்று முணுமுணுக்கும் போதே எமக்குப் புல்லரிப்பை ஊட்டவில்லை. மிகப்பெரும் கோமாளித்தனமாகவே தெரிந்தது.
முடிவு எப்படியிருக்கும் என்று புரிந்ததால் மயிர்க் கூச்செறிவு எதுவுமில்லை.
அதிலும் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால்;; ஈழத்தமிழர் மீள்குடியேற்றம்வாழ்வாதாரம் பற்றித் தாங்கள் பேசுவது! அக்கறை காட்டுவது! அது மட்டுமல்ல உங்களது நேர்மையை நிரூபிக்க எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் அழைத்திருப்பதாகச் சொன்னது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா கலைஞரே….? உங்களை விடப் பெரிய நடிகர்கள்எமது அரசியற் தலைவர்கள். அவர்கள் எம்மைக் கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது தெரியுமா….?
உங்களது மாநாட்டில் அவர்கள் பங்குபற்றுவது இருதரப்புக்கும் அவரவர் தரப்பு மக்களை ஏமாற்ற உதவக்கூடுமே தவிர எமது வாழ்வில் எந்த விடிவையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை.
நாமும் கட்டப்பட்டு கடலில் தான் போடப்பட்டுள்ளோம்..... எம்மால் கட்டுமரங்களாக மிதக்க முடியவில்லை. எந்தக் கட்டுமரங்களும் எம்மை கரைசேர்க்க வரவில்லை.
இதுவரை காலமும் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமக்காக தங்கள் கஜானா’ விலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்க மனம் வராதவர் நீங்கள். தமிழைச் செம்மொழியாக்கி விட்டுத் தமிழனைக் கொன்றொழித்தவர் நீங்கள். உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இதய சுத்தியுடன் வாருங்கள். எமது காயங்கள் ஆற்றமுடியாதவையானாலும் எம்மைத் தேற்றலாம்.
உங்கள் உண்மையான மனமாற்றம் எமது இனத்தின் மீளெழுச்சிக்குஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உதவுமேயாக இருந்தால் - கடந்தகாலத்தை மறக்க முடியாவிடினும் கூட மன்னிக்கவாவது செய்யும் மனிதத்துவம் இன்னும் எங்களிடம் இருக்கிறது.
தயவுசெய்து எம்மைப் பகடைகளாக்கி விளையாடாதீர்கள்.
ஏனெனில் நாம் மனிதர்கள்.
எங்கள் வாழ்வுரிமைக் கோசத்தை உங்கள் மூலதனமாக்காதீர்கள்.
ஏனெனில் அது எமது இனத்தின் இருப்பு.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால்......
எம்மை வாழ விடுங்கள்.

இவ்வண்ணம்
நேர்மையுடன்
ஈழத்தமிழ் அகதி.  

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...