மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களும் மிதக்கும் வெற்றுப் படகுகளும்: பூநகரான் குகதாசன்
“தெளிந்த நீரைக் கொண்ட ஊற்றுத் தான் முதலில் இறைக்கப்படும், உறுதியுடன் நேராக வளர்ந்த மரந்தான் முதலில் வெட்டப்படும்” இதன் படி இலட்சிய உறுதியுடைய பலமான கட்டுக் கோப்பைக் கொண்டிருந்த புலிகள் இயக்கம் வெட்டிச் சாய்க்கப்பட்டு விட்டது.
களத்திலோ தளத்திலோ போராட புலிகள் எவருமில்லை. வழி நடாத்த தளபதிகள் இல்லை. முகாங்களெதிலும் படைகளுமில்லை தலைவனும் இல்லை. ஈழப் போராட்டம் வெற்றுப் படகு போலாகிவிட்டது.
பல கப்பல்களைக் கொண்டிருந்த இயக்கத்தின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. இருந்தாலும் வெற்றுப் படகுகள் பல தாங்கள் போராட்டத்தை தொடர்வதாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருக்கின்றன. ஆக காகித ஓடப் பாட்டை அன்றெழுதிய கலைஞரின் டெல்லிக் கூட்டுத் தயாரிப்பே இந்த டெசோ மகாநாடாகும்.
1983 ஆடி அடியுடன் அரசிற்கு எதிராக போராடப் புறப்பட்ட இதர இயக்கங்கள் எல்லாம் தொடர்ந்து போராடாமலே அரசுடனே சேர்ந்து கொண்டன. அவை புலிகளுடன் தான் பின்னர் போராடிக் கொண்டிருந்தன. திரு பாலகுமாரனும் ஈரோஸ் இயக்கமும் தான் இதற்கு விதி விலக்கு. புலிகள் பலி கொள்ளப்பட்ட பின் எங்சியிருந்த இயக்கங்களும் சோர்ந்து போயின.
புலிகள் தான் தங்களை போராட விடாது தடுக்கிறார்கள் என்ற ஏனைய இயக்கத்தவர்கள் கூட இன்று புலியின் தேவையை உணர்கின்றனர். ஆம், ஈழப் போராட்டப் படகு இன்று வெறுமையாக்கப்பட்டு விட்டது.
தமிழ் ஈழ ஆன்மா மட்டும் சிலரின் சிந்தனைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அந்த உன்னத தமிழர் வாழ்வாதார இலட்சியத்தை மறக்க, கை விட முடியாது வெளிநாடுகளில் பலர் கொடிகளை ஏந்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களையே பேராசிரியர் பீரிஸ் தோல்வியை ஏற்றுக் கொள்ள இயலாத தமிழர்கள் என்று கேலி செய்துள்ளார். இருந்தும் உண்மையதைத் தெரிந்து கொண்டும், இந்தியாவுடன் சேர்ந்து கொண்டு அதோ! கொடி பறக்கிறது, புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்று தங்களது பழைய பரப்புரையை உலகில் தொடர்கின்றார்.
தமிழர்கள் எல்லாம் புலிகளோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் போராட்டம் என்றால் அது புலிகள் தான். அந்தளவு தீரத்துடன் அவர்கள் ஒவ்வொருவரும் போராரடினார்கள். ஒரு காலத்திற்கு பிற்பாடு மன உரம் மிக்கவர்கள் எல்லாம் அந்த இயக்கத்தில் தான் சேர்ந்தனரோ என்னமோ? ஆரம்பத்தில் கூட மனோ வைராக்கியம் மிக்கவர்களைத் தான் அந்த இயக்கமும் உள் வாங்கிக் கொண்டதே என்னமோ? போராட்டம் என்றால் அது புலிகள் தான்.
அதனாற் தான் இதே பீரீஸ் அவர்களுடன் சென்று பேச வேண்டியிருந்தது. உலகில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருபவை. உலக வரலாற்றின் கடிகார ஊசல் என்றும் வெற்றி தோல்வி என்ற இரு துருவங்களிற்கு இடையிலேயே அசைகிறது.
இந்த அச்சத்தினாலேயோ என்னமோ, இனியும் யாராவது புலிகளிற்கு மாறான நேர் எதிரான வழியிற் போராடினாற் கூட, அவர்களை புலி என்றே முத்திரை குத்துவே இவர்கள் தயாராக நிற்கிறார்கள். ஏனென்றால் புலி என்றால் பயங்கரவாதிகள் என்றே உலகத்திற்கு அவர்கள் உரைத்திருக்கிறார்கள்.
எனவே தான் அவர்கள் தமிழர் தரப்பு நியாயத்தை ஆதரித்த சில வெளிநாட்டவர்களைக் கூட வெள்ளைப் புலி என்றனர். புலி என்றால் இலகுவாக எவரையும் அடக்கலாம் தேவைப்பட்டால் அழிக்கலாம் அடித்துக் கூட அதைச் செய்யலாம். உலகம் அதனைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது.
இனியும், யாராவது உலகம் ஏற்கும் வழியில் ஜனநாயக வழியிற் போராடினாற் கூட அவர்களையும் புலிகள் என்றே இந்தியா கூடக் கூறும். ஏனென்றால் யாரையும் தடுத்து நிறுத்த, தண்டிக்க அவர்களிற்கு புலிகள் என்ற சொல் தேவை. எனவே தான் அது இல்லாத புலிகளின் மீதான தடையை விதித்துள்ளது.
இந்தத் தடையின் பொருள் என்னவெனில் யாரும் இனி தமிழர் உரிமைக்காக எங்கும் போராடக் கூடாது. ஆர்ப்பாட்டங்களை கூட்டங்களை மகாநாடுகளை நடாத்தினாலும் ஈழம் பற்றி மூச்சே விடக் கூடாது.
இது தான் பெரிய தேசமான மகா பாரதத்தின் புலி இயக்கத்தின் மீதான தடை. இது எதிர் காலத்துடனும் தொடர்புடையது. இந்த நிலையில் விடயம் நீதி மன்றத்திற்கு உயர்த்தப்பட்ட போது ஈழம் என்ற சொல்லை நீங்கள் உங்களிற்குள் அரசியல் நடாத்தப் பாவிக்கலாம் ஆனால் மத்திய அரசு ஒரு போதும் ஈழத்தை அனுமதியாது என்று மத்திய இந்திய அரசு ஈற்றில் மீண்டும் உரைத்துள்ளது.
இதன் பொருள் யாதெனில் ஈழ வேட்கை தமிழரிடமுண்டு. ஆனால் ஈழத்தை எங்களால் அனுமதிக்க இயலாது. இருந்தாலும் கொதிக்கும் தமிழர்களின் மனத் திருப்திக்காக, அவர்கள் அமைதியடைய, குழப்பங்கள் மற்றும் உண்மையான விடுதலைப் போராட்டங்கள் முளைப்பதைத் தவிர்க்க, யாராவது அரசியல்வாதிகள் ஈழம், ஈழ ஆதரவு, தமிழ், நாடு, அரசு என்று பெயர்களையும் கோஜங்களையும் போட்டு தங்கள் ஆதரவை பெருக்க, கூட்டம் சேர்க்க ஈழம் என்ற சொல்லைப் தாராமாகப் பாவிக்கலாம் என்று தான் இந்தியா கூறியுள்ளது.
கொதிக்கும் தமிழ் நெஞ்சங்களை அடக்கி சாந்தபப்படுத்தும் கலைஞரிற்கு மத்திய அரசு நன்றி கூடக் கூறலாம். இது தான் வெளிநாடுகளிலும் நடைபெறுகிறது. நாங்கள் புலிகளைத் தடை செய்துள்ளோம். ஆசைப்பட்டால் கொடிகளை நீங்கள் பிடிக்கலாம் ஆனால் புலித் தடை அது கேட்கும் பிரிவிணைத் தடைகள் போன்றன நீடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் உங்கள் ஆசையை விருப்பத்தை கருத்துக்களை வெளிக்காட்டி விட்டு நீங்கள் நிம்மதியாக வீடு சென்று உறங்கலாம் என்று தான் மேற்குலக அரசுகளும் உள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை அதுவும் புலிகள் தடையை நீடித்துள்ளது.
எங்களது தூதரகத்திற்கு முன்பாக யாரும் வந்து எப்படியும் எவ்வளவு காலமும் எத்தனை தடவைகள் எத்தனை ஆயிரம் பேர் வந்தும் ஆரப்பாட்டம் செய்யலாம். அது உங்கள் சுதந்திரம். ஆனால் நாங்கள் புலிகளைத் தடை செய்திருக்கிறோம். எனவே நீங்கள் தெருவிலேயே நின்று விட்டு நீங்கள் போகலாம். ஆனால் எதுவும் நடவாது என்று தான் அமெரிக்காவும் எண்ணுகிறது. இத்தகைய உண்மை நிலைமைகளை நாங்கள் உணர வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, உண்மையாக நிஜத்தில் ,ஈழப் போராட்டம் எதுவும் இன்று உலகில் எங்கும் யாராலும் முன்னெடுக்கப்படவில்லை. எந்த நாட்டு அரசையும் சந்தியாத சிந்திக்க வைக்காத வெற்று ஆர்ப்பாட்டங்களில் நாம் காலத்தை வீணடிக்கிறோம் என்பதே உண்மை.
எனவே தான் தமிழகத்திலாகட்டும் பிற வெளி நாடுகளிலாகட்டும் அர்த்தமற்று எதவித பெறுபேறுமின்றி தொடரும் ஆரப்பாட்டங்களை வெறுமையானவையாகவே கருத வேண்டியுள்ளது.
அதனாற் தான் அங்கென்று இங்கொன்றாக அவ்வப்போது கூட்டப்படும் ஈழப் போராட்டங்களை வெறும் வெற்றுப் படகுகள் என்கிறேன். எல்லாம் வெறும் பேச்சிற்கும் திருப்திக்கும் தமிழரை இந்தச் சொற்களால் வசப்படுத்தி கூட்டம் சேர்த்து தங்கள் அரசியலை தொடரவுமே ஈழக் கோஜ அரசியலை அநேகர் பாவிக்கின்றனர். சிலர் தெரிந்தும், பலர் தெரியாமலும் இந்தத் தவற்றைத் தொடர்கின்றனர்.
ஈழத்தை தேடும் தமிழகத் தமிழர்கள் கலைஞர் என்னமோ ஈழத் தமிழரிற்காகச் செய்கிறார் என்று நம்பி அமைதி அடைந்து ஈழத்தை நோக்கி ஒரு அடியைக் கூட உண்மையாக எடுத்து வைப்பதைத் தடுக்க மத்திய இந்திய அரசு மேற் கொள்ளும் தந்திரமாகவே இதனை நான் பார்க்கிறேன்.
அதாவது கலைஞரின் டெசோ மநாட்டைத் தடுத்தால், தமிழக மக்கள் சீமான் ,வை கோ போன்றவர்களின் பின்னால் சென்று குழப்பங்களையும் கலகங்களையும் விளைவிக்கலாம் என்ற அச்சத்தில் தான் இந்த டெசோ மாநாட்டை கலைஞர் நடத்த மத்திய அரசு தடை போடாது அனுமதியளித்துள்ளது.
இது ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் ஆடப்பட்ட ஒரு மாநில மத்திக் கூட்டு நாடகம். செல்வி ஜெயலலிதா இறுக்கமாகவும் ,விவேகமாகவும் இலங்கைப் பிரச்சனையைக் கையாள்வதால், குறிப்பாக சிறீ லங்கா சென்று வந்த இந்திய அதிகாரியைச் சந்திக்க மறுத்தமை மற்றும் இந்திய பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்காமை போன்ற காரணஙகளினால் விசனமடைந்துள்ள மத்திய அரசின் கபடச் செயல் இது.
இலங்கைத் தமிழர் விடயத்தில் எள்ளளவும் விட்டுக் கொடாமல் நடந்த ஜெயலலிதாவின் கையிலிருந்து தமிழர் விவகாரத்தை பறித்து கலைஞரிடம் தள்ளிவிட ஆடப்படும் ஆரியக் கூத்து இது. இதனை நாங்களும் புரியவில்லை அங்கே கொழும்பில் கலைஞரின் கொடும்பாவியை எரித்தவர்களும் புரியவில்லை.
தமிழராகிய நமது நோக்கமோ ஜெயா அம்மாவையும், அப்பா கருணாநிதியையும் உள்ளடக்கி உலகளாவிய ரீதியில் ஒரு பரந்து பட்ட டெசோ போன்ற ஒரு ஜனநாயக உலக தமிழ் வலைப்பின்னலை அமைப்பதாக இருக்க வேண்டும். முடிவெடுக்கும் அதிகாரங்களை புத்திஜீவிகளிடமும் விட்டு விட்டு இந்த இரண்டு தலைமைகளையும் வெளியேறாது பார்த்துக் கொண்டால் அது இன நலன் மிக்க நகர்வாக அமையலாம்.
இதனை மனதிற் கொண்டே, இங்கு கனடாவில் ராதிகா அவர்கள் கனடாப் பாராளுமன்றத்திற்கு தெரிவான போது உலகளாவிய தமிழர் ஜனநாயக வலைப்பின்னல் ஒன்றை வலியுறுத்தியிருந்தேன். அவ்வாறான ஒரு அமைப்பால் இலகுவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ நா வைச் சென்றடைய வைக்க இயலும் என்றே இன்றும் நம்புகிறேன்.
உண்மையான உறுதியான ஈழப் போராட்டம் என்பது புலிகளுடன் முள்ளி வாய்க்காலுள் ஆழத் தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. அதனை உறுதியற்று செய்த இயக்கங்களை இரண்டு அரசுகளும் உயிருடன் விட்டுள்ளன.
இலட்சியத்தை கை விடவே மாட்டோம் என்ற இயக்கத்தை இரணடு அரசுகளும் கூட்டுச் சேர்ந்து அழித்து விட்டன. அதற்காக அவை தொடர்ச்சியாக கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்து வந்தன. அரசியலாகவும் ஆசைக்காகவுமே தேவை என்பதாலுமே பலரும் ஈழப் போராட்டக் கப்பலை கடலில் விடுகின்றனர்.
அவை வெறும் தீர்மானங்கள் எழுதப்பட்ட காகித ஓடங்களாக, பலமானதாக இல்லாது போனாலும் உறுதியானதாக உண்மையானதாக இவை அமையாமையினாலேயே இவற்றை மிதக்கும் வெற்றுப்படகுகள் என்கிறேன். இந்தக் காகிதக் கப்பல்களை கடல் நடுவே விடுபவர்களிடமே எந்த நம்பிக்கையும் அறவே கிடையாது.
ஆனால் புலிகளிடம் அதிக நம்பிக்கை இருந்தது. அந்த எல்லை மீறிய அதீத அபார நம்பிக்கைகள் தமிழர் மனங்களில் மிகவும் ஆழமாகப் பதிந்து விட்டதானாலேயே புலிகள் வருவார்கள் என்று இன்னொரு சாரார் காத்துக் கொண்டு கரையில் நிற்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் விடும் காகித வெற்றுக் கப்பல்களே இந்த ஈழக் கோஜங்கள்.
இவை உண்மையும் உறுதியுமற்றவை என்றாலும் சிங்க அரசுகள் இவற்றை பெரிதாக்கி புலிகள் என்பர். இதன் மூலம் உலகத்திடமிருந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பை அனனியப்படுத்தவே சம்பந்தரது உருவத்தையும் சேர்த்து எரித்தனர்.
எனவே தான் சிறீ லங்கா தவிர்ந்த இந்தியா அடங்கலான அரசுகள் மறுக்க இயலாத வகையில் ஒரு உலகாளவிய தமிழர் ஜனநாயக அமைப்பின் தேவை உணரப்பட வேண்டியதாகிறது. அங்கு இயலுமான அளவு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஐ நா சாசனம் மற்றும் மனித உரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்வது பற்றி ஏற்கனவே உள்ள அமைப்புக்கள் சிந்தித்தால் அது இனப் பாதுகாப்பானதான மாற்ற மடையலாம்.
தமிழக உள்ளக கட்சி அரசியலைத் தாண்டி கலைஞர் மற்றும் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை பெயரளவிலாவது உள்ளடக்கிய ஒரு பொது தமிழர் ஜனநாயக அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தினாவது அதற்கு ஒரு பெறுமதியும் கணதியும் இருக்கும். இல்லாவிடின் திமுக அதிமுக போட்டியை மத்திய அரசே பாவித்து தனது தேவைகளை நிறை வேற்றிக் கொள்வது தொடரும்.
இதை விடுத்து, அங்கென்று இங்கொன்றாக வெற்று ஓடங்களை காட்சிக்கு மிதக்க விடுவதில் அர்த்தமில்லை. இதனை அறிஞர் கலைஞரே வருமாறு கூறியுள்ளார். அவர் டெசோ மாநாடு வெற்றி என அறிவித்துள்ளார்.
அங்கு நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒன்று கூட அமுலாகாத நிலையில் அவர் மாநாடு வெற்றி என்றால் அதன் பொருள் என்ன? தீர்மானம் நிறைவேறுமோ இல்லையோ மக்களை கூட்டி ஒரு மாநாடு நடாத்திவிட வேண்டுமஎன்பதிலேயே அவர் குறியாக இருந்தள்ளார் என்றே கணிக்க வேண்டியுள்ளது. ஜெயலலிதாவின் ஆதரவை குறைத்து விட வேண்டும் என்ற அந்த நோக்கம் நிறைவேறியுள்ளதால் அது தனக்கு வெற்றி என அறிவித்துள்ளார்.
அங்கு வநதிருந்த ஒரு பேச்சாளி 1944 இல் ஜே. ஆர் பிரதமாராக இருந்தார் என்று மேடையில் பேசினார். 13 வது திருத்தச் சட்டத்தின் வலுவின்மை பற்றி கருணாநிதியோ கனிமொழியோ அறிந்திருக்கவில்லை.
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரின் உரையைக் கூட யாரும் இவர்களிற்கு அனுப்பி வைக்கவில்லை. இதனாற் தான் ஒரு பொது உலக அமைப்பு வேண்டும் என்கிறேன். இந்தக் கனிமொழி 13 வது சட்டம் வலுவற்றது என்பதற்கு ஒரு காரணத்தையாவது கூறும்படி கேட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது என்றால் இவர்களால் எவ்வாறு சிக்கலான நமது தமிழர் பிரச்சைனயை புரிந்து கையாண்டு தீர்வைப் பெற்றுத் தர இயலும்?
இதில் அவ்வப்போது நடப்பவற்றை அங்காங்கே உலகெலாம் தெரிவிக்க ஒரு அமைப்பும் நம்மிடமும் இல்லை. உலகத் தமிழரிடையே ஒருங்கிணைப்பும் இல்லை. ஒன்றிற்கும் மற்றதிற்கும் தொடர்பும் இல்லை.
இது தீவிற்கு வெளியே ஒரு பாரிய ஜனநாயக வலைப்பின்னலின் அவசியத்தையும் தேவையையும் உணர்த்தி நிற்கின்றது எனலாம். இது கடினமாக போதும் சாத்தியமானதே. பண்டார வன்னியனின் கற்சிலைமடு வரை புத்தர் சிலை வைப்பது ஒரு திட்ட மிட்ட இன வரலாற்று ஆதார அழிப்பின் வெளிப்பாடே.
இதனை ஒரு முழுமையான இன அழிப்பெனலாம். பாலஸ்தீனம் அபகரிக்கப்பட்ட அதே பாணியில் தொடரும் நில இன அழிப்புக்களை தடுப்பது மிகவும் கடினம். அதற்காக எதையாவது செய்து பலனை பெற வேண்டுமானால் உலக அனவிலான ஜனநாயக மனித உரிமை விடயங்கள் மட்டும் முன் வைக்கப்பட்டு ஒரு உலகளாவிய தமிழர் அமைப்பு அதனை முன்னெடுக்க வேண்டும்.
இதற்கான மாற்றங்களையும் முயற்சிகளையும் வெளிநாடுகளில் உள்ள மிதவாத அமைப்புக்களே தொடங்க முடியும். இல்லாவிடின் ஆங்காங்கே தொடர்டபுகள் எதவுமற்ற வெற்றுப் படகுகளே மிதந்து கொண்டிருக்கும். அதை யாரும் மூழ்கடிக்கவும் முயலமாட்டார்கள் எனென்றால் அங்கு நிறைந்திருப்பது வெறுமை மட்டுமே. தமிழ் இனி மெல்ல அல்ல, விரைந்தே புலிகளின் கப்பல்கள் போல் மூழ்கடிக்கப்படும்.
Comments
Post a Comment